|
|
இருபதாம் நூற்றாண்டின் பரதநாட்டிய வளர்ச்சியில் பல்வேறு மரபுகள் முக்கியம் பெறுகின்றன. இன்று படித்த மத்தியதர வர்க்கத்தினரின் புலக்காட்சிக்கு மட்டுமே உரிய கலையாக்கமாக பரதம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் பரத நாட்டியத்தின் வரன்முறையான வளர்ச்சிக் கட்டங்களை நோக்கும் போது சில நபர்கள் பற்றிய கவனம் தவிர்க்க முடியாது. தஞ்சை நால்வர் என்ற அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வர் தமது முன்னோர்களில் இருந்து கலைமரபுகளை உள்வாங்கி கையளிப்புச் செய்துள்ளார்கள். இந்த மரபுவழி வரும் ஆடற் கலையின் ஒரு பரிமாணமாக வருபவர் தான் த. பாலசரஸ்வதி. இவரது நடனக்கலை பற்றிய தேடல் பரதநாட்டியம் பற்றிய தேடலாகவும் மலர்ச்சி பெறும். இருப்பினும் பாலசரஸ்வதி பற்றிய தேடல் இங்கு பதிவாகிறது. பாலசரஸ்வதியின் முன்னோர்கள் தஞ்சாவூரைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் தஞ்சை மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு சமஸ்தான வித்துவான்களாக இருந்து வந்தார்கள். பாலசரஸ்வதியின் தாயார் காலத்திலேயே இவர்களது குடும்பம் சென்னை நகரத்தில் வந்து குடியேறியிருந்தது.
பாலசரஸ்வதி சென்னையில் மே 13, 1918-ல் பிறந்தார். இவருடைய தகப்பனார் கோவிந்தராஜன், தாயார் ஜெயம்மாள். இவருக்கு நான்கு சகோதரர்கள். இவர்களது குடும்பம் முழுமையாக கலைக் குடும்பமாக இருந்தது. வாய்ப்பாட்டிசை, வாத்திய இசை, நாட்டியம் ஆகிய முன்றும் சேர்ந்ததே சங்கீதமென 'சங்கீத ரத்னாகரம்' போன்ற பழைய இசைநூல்கள் கூறும். சங்கீதத்தின் இம்மூன்று அம்சங்களையும் குடும்பச் சொத்தாகப் பெற்ற பாலசரஸ்வதி இவற்றில் இயற்கையான ஈடுபாடும் திறனும் பெற்றிருந்தார்.
இவருடைய பாட்டியின் பாட்டியான காமாட்சி அம்மாள் சமகாலத் தஞ்சை அரண்மனை நர்த்தகியாகவும், பாடகியாகவும் திகழ்ந்தார். பாட்டி தனம்மாள் வாய்ப் பாட்டிசையிலும் வீணையிலும் சிறந்து விளங்கினார். 'வீணை தனம்மாள்' என்று அவர் அழைக்கப்பட்டார். தாயார் ஜெயம்மாள் சிறந்த பாடகியாகத் திகழ்ந்ததோடு வீணை வாசிப்பவராகவும் பரதநாட்டியம் நன்கு தெரிந்தவராகவும் விளங்கினார். பரத நாட்டியத்தில் தேர்ச்சி மிக்கவராகத் தன் மகள் வளர வேண்டுமென விரும்பினார். இவரே பாலசரஸ்வதியின் நாட்டியப் பணிக்கு வித்திட்டவர். சிறுவயதிலேயே பாலசரஸ்வதி மனம் போன போக்காகத் தாம் பார்த்த நடனங்களை ஆடுவாராம். அக்காலத்திலேயே மைலாப்பூர் கௌரியம்மாள் பரதநாட்டியக் கலையிலேயே சிறந்து விளங்கினார். இவர் பாலசரஸ்வதியின் குடும்ப நண்பர். மூன்று வயதிலேயே இக்கலைஞரின் ஆடல் இவரை ஈர்க்கத் தொடங்கியது. அவர்போல் நடனம் ஆடுவாராம்.
பாலசரஸ்வதி முறையாக நடனப் பயிற்சி பெற ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் தாயார். தஞ்சாவூர் கந்தப்ப நட்டுவனார் என்ற விற்பன்னரிடம் பாலசரஸ்வதி பரத நாட்டியத்தில் பயிற்சிபெற ஏற்பாடு செய்தார். கந்தப்ப நட்டுவனாரின் தந்தையான நெல்லையப்ப நட்டுவனார் பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்று தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வரின் மருகர். அவர்கள் பேணிவந்த நாட்டியக் கலை மரபிலே நன்கு தோய்ந்தவர். இவரது மகன் கந்தப்பா இப்பாணியிலான நாட்டியக் கலையினை பாலசரஸ்வதிக்கு நன்கு புகட்டினார்.
கந்தப்பாவே பாலசரஸ்வதியின் முதல் குரு. காலையில் இவரிடம் நாட்டியம் கற்ற பாலசரஸ்வதி மாலையிலே தாயாரிடம் இசை பயின்றார். இரு கலைகளிளும் சமமான தேர்ச்சி பெற்றார். பாலசரஸ்வதிக்கு ஜெயம்மாள் தாய் மட்டுமன்று. முறையான குருவும் கூட. இதனால் பயிற்சிக் காலங்களில் தாய் மிகுந்த கண்டிப்புடன் நடந்துள்ளார். பாலசரஸ்வதி பரதநாட்டியம் கற்றுக் கொண்ட காலத்தில் அது தற்காலம் போல மக்களுக்கான கலையாகக் கருதப்படவில்லை. 'சதிர்' என்ற பெயரில் அழைத்து வந்தார்கள். பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணம் போன்ற நல்ல காரியங்கள், ஆலயத் திருவிழாக்கள் போன்றவற்றிலேயே சதிர்க் கச்சேரிகள் நடைபெறும். வருமானமும் அதிகம் இருக்காது. மேலும் ஒருவர் நாட்டியத்தைக் கற்று அரங்கேற்றுவது என்றால் அவ்வளவு எளிதல்ல. முதலில் நாட்டியம் கற்றவர் பல வித்வான்கள் முன் ஆடிக் காட்ட வேண்டும். அவர்கள் பார்த்து எல்லாம் முறையாக இருக்கிறது, இனி அரங்கேற்றம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்தால் தான் முடியும். இல்லாவிட்டால் மீண்டும் பயிற்சி பெற வேண்டியது தான். கலையில் வித்வான்களாக உள்ளவர்கள் சட்டென்று எதையும் கூறமாட்டார்கள். அரங்கேறக் கூடியவரை நன்கு பரிசோதித்து ஒரளவு கற்றது சுத்தமாக இருக்கிறது என்று தோன்றினால் தான் அனுமதி அளிப்பார்கள். இந்த அனுமதியைப் பெறுவது இலேசுப்பட்ட காரியமல்ல.
பாலசரஸ்வதிக்கும் இத்தகைய சோதனை கள் நடைபெற்றன. இவருடைய வீட்டுக்கு வரும் வித்வான்கள் முன் ஆடச்சொல்வார்கள். வித்வான்களும் இவருடைய ஆட்டத்தைப் பார்த்து அதில் உள்ள குறை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கூறுவார்கள். இவர்களுள் அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் அவர்களும் ஒருவர்.
பாலசரஸ்வதிக்கு ஏழு வயதான சமயம் அரங்கேற்றத்திற்குத் தகுதியானார். 1926ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் அரங்கேற்றம் நடைபெறுவதில்லை. மாறாக கோயில்களில் தான் அரங்கேற்றம் நடைபெறும். அந்த ஆலயமும் அவர்களுடைய குலதெய்வ மாகவோ, வழிபட்டு வரும் தெய்வமாகவோ இருக்க வேண்டும். இதன்படி பாலசரஸ்வதி குடும்பத்தாரது வழிபடும் தெய்வமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலிலே அரங்கேற்றம் நடைபெற்றது.
பாலசரஸ்வதி முறைப்படி கலையைக் கற்றுத் தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். பரநாட்டியக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். இவரது பெயர் பரதநாட்டியத்தில் நிலைபெறத் தொடங்கியது. தொடர்ந்து பரதக் கலையின் நுணுக்கங்களை ஆழ்ந்து கற்கத் தொடங்கினார். தினமும் சாதகம் செய்ததுடன் பரதக் கலையில் உள்ள நெளிவு சுளிவுகளையும் அறிந்து தெளிந்து கற்று வந்தார். இன்னும் இன்னும் கற்க விரும்பினார். தொடர்ந்து எல்லாப்பா நட்டுவனார், கந்தப்பா மகன் கணேசன் ஆகியோரிடம் நடனம் பயின்றார். சின்னையா நாயுடு, குச்சுப்படி வேதாந்தம் லட்சுமி நாராயண சாஸ்திரிகள் ஆகியோரிடம் முறையே பதம், வர்ணம் ஆகியவற்றிற்குக் கற்பனையாக அபிநயம் செய்வதைச் சிறப்பாகக் கற்றார். மேலும் மயிலாப்பூர் கௌரி அம்மாள் என்பவரிடம் சங்கீதமும் கற்று வந்தார். நாட்டியம், சங்கீதம் இரண்டையும் முறையாகக் கற்றுக் கொண்டதில் இத் துறைசார் புலமை, கலை மரபுகளை உள்வாங்கும் திறன்களையும் ஆற்றல்களையும் பெற்று வளர்த்து வந்தார். |
|
பாலசரஸ்வதி தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய மொழிகளைக் கற்று இசை, நாட்டியக் கலைகளின் நுட்பங்களை மேலும் ஆழ்ந்து புரிந்து வந்தார். படைப் பாக்கத்திறன்களுடன் கூடிய நிகழ்த்துக் கலை வடிவமாகவும் செழுமைப்படுத்துவதில் தனது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்தினார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பக்க வாத்தியக்காரர்களும் நட்டுவனாரும் நடன மாடுபவரின் பின்னால் நின்று கொண்டே வாசிக்க வேண்டும். இந்த முறை பால சரஸ்வதியின் தாயாருக்குப் பிடிக்கவில்லை. அவர் இந்த முறையை மாற்ற விரும்பினார். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்புகள் இருந்த போதிலும் பிறகு அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
பக்கவாத்தியக்காரர்களை உட்கார்ந்து வாசிக்கச் செய்தார். இதன் மூலம் பக்க வாத்தியக்காரர்களுக்கு கௌரவத்தை ஏற்படுத்தினார். மேலும் அக்காலத்தில் பக்கவாத்தியமாக தித்தி, கிளாரினட், மிருதங்கம் ஆகியவையே இருந்தன. இதிலும் மாறுதல்களை ஏற்படுத்தினார். தித்திக்குப் பதிலாக வயலின், ஆர்மோனியம், புல்லாங் குழல், கஞ்சிரா ஆகியவற்றைச் சேர்த்துப் பக்க வாத்தியங்களை விரிவு படுத்தினார். பரத நடனக் கச்சேரிக்கு ஆற்றுகை நிலையில் புதுப் பாணியை உருவாக்கினார். குறிப்பாக 'பாலசரஸ்வதி பாணி' என்று தனியே அடையாளம் காட்டக் கூடிய ஆற்றுகை நிலை மேற்கிளம்பத் தொடங்கிற்று.
தென் இந்திய நுண்கலைகளிலே பாவரசங்கள் பிரதான இடத்தை வகிப்பன. பாலசரஸ்வதியின் நாட்டிய நிகழ்ச்சிகளிலே பாவம் நன்கு சோபித்தது. இந்த மகோன்னத மான நடனமணிதான் அமரர் கல்கி படைத்த சிவகாமி என்ற மறக்க வொண்ணாப் பாத்திரத்துக்குத் தூண்டுகோல் என்பது குறிப்பிடத் தக்கது.
நாட்டியத்தில் சிருங்கார ரசம் கூடாது என்று சிலர் கருத்துரைத்தார்கள். ஆனால் பால சரஸ்வதி 'நாட்டியத்தில் சிருங்கார ரசம் இல்லாவிட்டால் அது ஒன்றுமேயில்லை. சிருங்கார ரசத்தில் தான் பாவங்களை நன்கு காட்ட முடியும். பக்தர்கள் பரந்தாமனை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் வைத்துக்கொண்டே பாடியிருக்கிறார்கள். கலையை தெய்வீகமாகக் கருதி அதே கண்களோடு பார்க்க வேண்டும். தவறான எண்ணத்துடன் அதைப் பார்க்கக் கூடாது' என்ற கருத்தை அப்போதே வெளிப் படுத்தினார்.
ஹஸ்தாபிநயம் இல்லாமலே சாகித்தியத்தின் முழுப் பாவத்தையும் முகத்தின் அபிநயம் மூலமே இவர் நன்கு விளக்க வல்லவர். இவரது நாட்டியத்திலேயே தூய்மையும் அங்க சுத்தமும் நன்கு வெளிப்பட்டன. இதைவிட இசைக் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந் தமையால் தாமே சிறப்பாகப் பாடி ஆடவும் வல்லவராக இருந்தார்.
பாலசரஸ்வரதி நந்தி பரதம், உரி பரதம், ராவண பரதம், அனுமத் பரதம், அர்ஜுன பரதம் ஆகிய ஐந்து வித பரத நாட்டியங்களையும் ஆடக்கூடியவர். அறுபத்து நான்கு அஸ்தங்களையும் பிடிக்கக் கூடியவர். இந்த நிலையை அவர் தம் ஆழ்ந்த அனுபவத்தாலும் சிறந்த சாதகத்தாலும் அடைந்திருந்தார். அனுபவம், சாதகம் ஆகியவற்றைப் போல பரதநாட்டியக் கலையின் மீது பக்தியும், கற்பனையும் மிகவும் முக்கியம். இந்த மூன்றும் பாலசரஸ்வதியிடம் நிரம்பியிருந்தன. கலையை பக்தியுடன் அனுசரித்தார். இவரிடம் ஆத்ம சிந்தனையும் கற்பனையும் அபரிமிதமாகவே இருந்தன. வழிவழிவந்த ஆடற்கலை மரபு களையும் இசைக்கலை மரபுகளையும் தன் காலத்தில் நிலவிய மனப்பாங்குகளையும் கருத்தியலையும் மீறிய கலையாக்கமாக மீள்கண்டுபிடிப்புச் செய்தமையில் பால சரஸ்வதியின் வகிபாகம் முக்கியமானது. நாட்டியத்தை எதிர்த்தோரும் இவரின் ஆடலைப் பார்த்த பின் தமது கருத்துகளை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு இவரது ஆடற்கலை புதுப்பரிமாணம் பெற்றிருந்தது.
'பாலசரஸ்வதி பாணி' என ஒன்றைத் தனியாக அடையாளம் காட்டுமளவுக்குச் சிறப்புகளும் நுட்பங்களும் வெளிப்பட்டன.
பாலசரஸ்வதி பரதக் கலையின் பரவுதலுக் குப் பலவழிகளிலும் பாடுபட்டார். தமிழகத் திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகள் சிலவற்றிலும் நாட்டியக் கச்சேரிகள் நிகழ்த்தினார். நாட்டியப் பயிற்சிக் கூடங்களை ஏற்படுத்தி நாட்டியப் பரம்பரை களை உருவாக்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் நாட்டியக் கச்சேரிகளை நடத்தினார்.
பரதக் கலையின் சிறப்புகள், இயல்புகள் இதில் தான் பெற்ற அனுபவங்களைப் பற்றிப் பல பேட்டிகளிலே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஆங்கில இதழ்களில் இவை வெளிவந்துள்ளன. தமது நாட்டிய நினைவுகள் பற்றித் தமிழிலே 1955ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரிலே எழுதினார். மேலும் சிறப்பாகச் சென்னைத் தமிழிசைச் சங்கத் திலே இவர் ஆற்றிய தலைமையுரையும் சென்னை சங்கீத வித்வத் சபையின் 47ஆம் ஆண்டு நிறைவு விழாவிலே ஆற்றிய ஏற்புரையும் நன்கு குறிப்பிடத்தக்கவை. இவற்றிலே இவரது நாட்டிய அனுபவங்களும் பரதக்கலை பற்றி இவர் கொண்டிருந்த கருத்துகளும் இலட்சியங்களும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
பேராசிரியர் வி. இராகவனுடன் சேர்ந்து பரதநாட்டியம் எனும் நூலை எழுதியுள்ளார். இந் நூலிலுள்ள நாட்டிய விளக்கப் படங்கள் பாலசரஸ்வதியினதும் அவரது மாணவி யினதுமே ஆகும். இந்நூல் சிறப்பாக பரதநாட்டியத்தின் கலையமைப்பு நூலாகவும் விமரிசன நூலாகவும் அமைந்துள்ளது. 'நாட்டியத்திலே சொற்களிலும் பார்க்கச் செய்முறையே பிரதானமாகும்' எனக் காளிதாசர் தமது 'மாளவிகாக்னி மித்ரம்' எனும் நாடகத்தில் கூறியுள்ளார். பால சரஸ்வதி நாட்டியச் செயல்முறையில் மட்டுமின்றி சாஸ்திரத் தேர்ச்சியும் அதனை விளக்கும் திறனும் உடையவர் என்பதற்கு இந்நூல் நல்ல எடுத்துக்காட்டாகும். நூலா சிரியர்கள் முன்னுரையிலே இது போன்ற இலக்கண நூல் இதுகாறும் (1959) வெளிவரவில்லை எனவும், ஒப்பியல் இலக்கண முறையினைப் பின்பற்றியே இந்நூலில் ஆங்காங்கே சுட்டிக் காட்டி யிருக்கிறோம் எனவும் குறிப் பிட்டுள்ளனர். இவரது பணிகளை கௌரவிக்கும் விதத்தில் பல்வேறு நிறுவனங்கள் பட்டங்கள் வழங்கி கௌரவித்தன. இந்திய அரசாங்கம் 'பத்ம பூஷண்' விருதை 1977இல் வழங்கி கௌர வித்தது. இது போல் பல பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. பிரபல திரைப்பட இயக்குனரும் கலைஞருமான சத்யஜித் ரே 1977ஆம் ஆண்டு பரதநாட்டியம் பற்றி ஆவணப்படம் தயாரித் தனர். அதற்கு பாலசரஸ்வதியின் உதவியை நாடிப் பெற்றார். அப்போது இவருக்கு ஐம்பத்தியெட்டு எனினும் களைப்பின்றி முக மலர்ச்சியுடனும் பாவரசங்கள் தோன்ற சிறப்பாக நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்தார்.
பரதத் கலை பற்றி தொடர்ந்து சிந்தித்து வந்த 'பாலா' 1984 மாசி 9ஆம் தேதி மறைந்தார். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் 'பரதநாட்டியம்' மறுமலர்ச்சி கண்டு வளர்ச்சி அடைந்துவர பாலசரஸ்வதியினூடு முகிழ்த் தெடுத்த 'பாணியும்' முக்கியமானது. ஆடற் கலை மரபுகளுள் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார்.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|