|
|
"தினமும் விளக்கேற்றினதும் கணக்கற்ற சிறுபிராணிகள் என் வீட்டினுட் பிரவேசிக்b கின்றன. பட்டாம்பூச்சிகளும் மெல்லிய தும்பிகளும் மின்சார விளக்குகளைச் சுற்றி மொய்க்கின்றன; சுவர்களில் களைப்பற்ற எறும்புகளும் தத்துக்கிளிகளும் ஊருகின்றன; வண்டுகள் சுழன்று சுழன்று எங்கும் பறந்து பின் 'பிங்' என்று விளக்குக் குடைகளில் மோதிக் கீழே விழுகின்றன. இவையெல்லாம் மழைக்காலத்தின் அறிகுறிகள். சிலவேளை களில், புதுமழையில் வீசும் மண்வாசனை படியுமுன், வீடெங்கும் ஈசற்படை வந்து கூடிவிடும். அப்பொழுதுகளில் நாங்கள் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் குடியிருப்போம். என் வீட்டைத் தேடிவரும் ஜந்துக்கள் அனைத்தும் சிறிதாக வும் பெரிதாகவும் இருப்பதில்லை. நேற்றிரவு சுமார் அரையடி நீளமுள்ள ஒரு தத்துக் கிளியை என் படுக்கையறையினின்றும் அப்புறப்படுத்தினேன்." (1940)
"காகங்கள் நமது தேசத்தில் மிகவும் சாதராணமாக இருப்பதால்தான் நாம் அவைகளைக் கவனிப்பதில்லை என்று சொல்ல முடியாது - சற்று அசாதாரண மாகவுள்ள பறவைகளையும் நாம் கவனிப்ப தில்லை. ஆனால் நம்மூர்க் காகங்களின் வாழ்க்கையை ஆராய்ந்து 'சாதாரணக் காக்கை அதன் சரித்திரம்' என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளது ஒர் அயல் நாட்டு இயற்கை நிபுணரே. இந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. டாம்ஸன் ஸிடன் என்ற வடஅமெரிக்க இயற்கை ஆராய்ச்சி நிபுணர் நமது தேசத்துக் காகங்களைப் பற்றி வெகு சுவாரஸ்யமான விதத்தில் எழுதியிருக்கிறார். அவரைப் போல் இயற்கை ஞானமுள்ளவர் அநேகர் இருந்ததில்லை. காகங்களிடும் பல சத்தங் களையும் கூர்ந்து அவைகளின் பாஷை யையே ஒருவாறாக அறிந்து அதை மேல்நாட்டு சங்கீத முறைப்படி ஸ்வரப் படுத்தியும் தந்திருக்கிறார். நான் இதுபோல் அதிசிரத்தையுடன் காகங்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அறிந்து கொள்ளவில்லை. அவைகளின் இருப்பும் போக்கும் அரை குறையாகவே எனக்குத் தெரியும்" (1940) "அணிலின் ஆங்கிலப்பெயர் 'நிழல்வால்' என்ற கிரீக் பதங்களிலிருந்து வந்தது என்று என் அகராதி சொல்லுகிறது. நிழல் போல் உருத் தெளிவில்லாத இந்த வால், அணிலின் வாழ்க்கைக்கு மிக அவசியமானது. எலி வாலுடன் இருந்தால் கிளைகள் மேல் தாவிப் பாய்ந்து வாயுவேகத்துடன் செல்லமுடியாது. அப்படிச் செல்லுகையில் மயிர் செறிந்த வால் அதன் உடல் கனத்திற்கு ஒருவாறு எதிர்ப்பாரமாக இருப்பதால் அணில் இலக்குப் பிசகிக் கீழே விழுவதில்லை. குழை மீதும், கிளைகள் வழியாகவும் காற்றுப்போல் சுழன்று செல்வதிலும், செங்குத்தான இடங்களில் விரைந்து தொத்தி ஏறுவதிலும் அணிற் பிள்ளைக்குள்ள திறமை மற்றப் பிராணிகளுக்குக் கிடையாது. சிறிய அணிற்குஞ்சு கூட ஆபத்து நெருங்கினால் மரத்தையோ சுவரையோதான் நாடும்." (1951)
"நிலக்கடலைப் பிண்ணாக்கு, கொள்ளு, கம்பு இவைகளை ஊறவைத்தும், கடலைப் பொட்டுவையும், உலர்ந்த அவரைக் கொடி, கருவேலங்காய் முதலியவைகளையும் ஆடுகளுக்குக் கொடுக்கலாம். வடித்த கஞ்சி, பழத்தோல், காய்கறித்தோல் இவைகளையும் தீனியுடன் சேர்க்கலாம். நானிருந்த ஊரில் அரிசித்தவிடு கிடையாது. கிடைத்த பொழுது வெந்நீருடன் கலந்து ஒரு தொட்டியில் கொட்டிக் காட்டினால் ஆடுகள் ஆவலுடன் குடிக்கும். தீனியுடன் சிறிது உப்பும் கலக்க வேண்டும். கறக்கும் ஆடுகளுக்கு மேற்கண்ட தீனியைப் போது மட்டும் கொடுக்காவிட்டால் பால்குன்றிவிடும். இவையாகாரம் எல்லா ஆடுகளுக்கும் அவசியம். சுத்தமான ஆகாரத்தைக் கண்டிப்பாக வேளா வேளைக்கு உதவுவதே ஆட்டுவளர்ப்புக்கு மிகவும் முக்கியமானது." (1951)
இவ்வாறு தமிழில் புதிய உரைநடை மரபு தோற்றம் பெற்றது. குறிப்பாக இயற்கை மற்றும் காட்டுயிர் பற்றி யாருமே அக்கறைப் படாத, சுற்றுச்சூழல் பேணல் பற்றிய விழிப்புணர்வு எதுவும் இல்லாத ஒரு காலத்தில் 'இயற்கையியல்' பற்றிய கட்டுரை களைத் தமிழில் எழுதிப் புதிய தடம் உருவாகக் காரணமாக இருந்தவர் மா.கிருஷ்ணன் (1912-1996).
தமிழின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர்களுள் ஒருவரான அ. மாதவையா தம்பதியின் எட்டுக் குழந்தைகளில் கடைசி யாக 30.06.1912 அன்று கிருஷ்ணன் பிறந்தார். 1931-ல் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தாவரவியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றபின் 1936-ல் சட்டப்படிப்பையும் முடித்தார். சிறுவயது முதல் எழுத்து, ஓவியம், புகைப்படக்கலை, வனவிலங்குகள், தாவரங் கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தையுடனும் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். இருவருக்கும் இடையே நிறைய கருத்துப் பரிமாற்றம் இடம்பெறும். ஆளுமைமிக்கவராவே கிருஷ்ணன் வளர்ந்து வந்தார்.
கிருஷ்ணன் 1937-42 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் வசித்தார். அப்பொழுது முதலில் ஒரு பதிப்பகத்திலும் பின்னர் சென்னை கலைப்பள்ளியிலும், அகில இந்திய வானொலியிலும் (மக்கள் தொடர்பு அலுவலர்) பணிபுரிந்தார். மேலும் சந்தூர் சமஸ்தானத்திலும் வேலை பார்த்தார். இக்காலங்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். குறிப்பாக 1930-களில் இவரது எழுத்துக்கள் தமிழிலேயே இருந்தன. கலைமகள், கல்கி உள்ளிட்ட இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம் பெற்றன. 1937-ல் 'மெட்ராஸ் மெயில்' பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார்.
1942-ல் கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகேயுள்ள சந்தூர் சமஸ்தானத்தில் வேலை கிடைத்தது. அங்கு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். பாறைக் குன்றுகளால் சூழப்பட்ட சந்தூர் பள்ளத்தாக்கின் நடுவே துங்கபத்திரை நதி ஓடியது. சுற்றியிருந்த காடுகளில் விலங்குகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வீட்டிலிருக்கும் வேளையில் ஆடு வளர்த்தார். பந்தயப் புறாக்களை வைத்திருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சந்தூர் சமஸ்தானம் சென்னை மாகாணத் துடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து அரசுப் பணியில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் கிருஷ்ணன் அதை ஏற்கவில்லை. எழுதுவது, புகைப்பட மெடுப்பது போன்ற தொழில்களைச் செய்து அவற்றின் மூலமே வாழ்க்கை நடத்த விருப்பம் கொண்டார். அவரது கலைத் தேடல் சுதந்திரமாகச் செயற்படவே விரும்பியது. இயற்கை சார்ந்த தேடல் ஆத்மார்த்தத் துடிப்பாக மாற்றம் கண்டது. இயற்கையியல் பற்றிய தத்துவார்த்தமான பிணைப்பு கிருஷ்ணனை உயிர்ப்புடன் இயங்க வைத்தது.
"இயற்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராயும்போது நாம் ஒரு புது உண்மை யினைக் கண்டடைகிறோம். இயற்கை என்பது ஒரு கட்டுப்பாடு. இச்சொல் எல்லா அர்த்ததிலும் எல்லாவித முழுமையுடனும் பயன்படுத்தப்படுகிறது."
"வெளி, காலம், சமுகம், உழைப்பு, பருவநிலை, உணவு, போக்குவரத்து, காட்டுயிர்கள், பௌதிக சக்திகள் முதலிய அனைத்துமே நமக்கு தினந்தோறும் எல்லையற்ற அர்த்தம் கொண்ட பாடங் களைத் தந்தபடியே உள்ளன. நமது புரிந்து கொள்ளுதலையும் தருக்கத்தையும் ஒரே சமயம் அவை வலுப்படுத்துகின்றன. இயற்கையிலுள்ள ஒவ்வொரு பொருளும் புரியவைக்கும் ஒரு பள்ளியாகும். அவற்றின் பருண்மை அல்லது தாக்குப்பிடிக்கும் தன்மை, அசைவின்மையில் முடிவின்றி நீடிக்கும் தன்மை, விரிவாக்கம், வடிவம், பகுபடும் இயல்பு முதலியவை பற்றிப் புரிய வைக்கும். இந்த அறிவானது இச்சூழலில் செயல்படத் தேவையான வசதியையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. கூட்டுவது, வகுப்பது, பெருக்குவது, அளவிடுவது, இணைத்துப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் அது இதைச் சாதிக்கிறது. அதே சமயம் தருக்கமானது இந்தப் பாடங்களையெல்லாம் தனது சிந்தனையுலகுக்கு மாற்றிக் கொண்டு, பொருட்களையும் மனதையும் இணைத்து உலகக் காட்சியை உருவாக்கிக் கொள்கிறது."
இவ்வாறு எமர்சன் (1803-1882) என்ற தத்துவவாதி குறிப்பிடுவதன் தாத்பரியத்தை கிருஷ்ணன் உள்வாங்கிச் செயல்பட்டார் என்றே கூற வேண்டும். இயற்கையை அறிதல், புரிந்து வாழுதல், நேசித்தல் என்னும் தொடருறு செயற்பாட்டின் இயங்கு தளமாக நாம் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதற்குக் கிருஷ்ணனின் 'இயற்கையியல் வாசிப்பு', சிந்தனை, கருத்தாக்கம், செய்யும் திறன் யாவும் தமிழுக்குப் புதிது. ஆனால் சமூகமயப்பட்ட இயற்கைசார் வாழ்வுக்கு இவை வெளிச்சம் பாய்ச்சுபவை. |
|
'த ஹிந்து', 'டைம்ஸ் ஆப் இந்தியா', 'இல்லஸ்டிரேடட் வீக்லி ஆப் இந்தியா' போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகளும் குறிப்புகளும் இடம்பெற்றன. அவை கிருஷ்ணன் எடுத்த புகைப்படங்களோடு இடம் பெற்றன. கிருஷ்ணன் கோட்டோவியம் வரைபவராக வும் இருந்தார். கட்டுரையுடன் அவர் வரைந்த கோட்டோவியம் ஒன்றும் இடம் பெற்றது.
இந்திய வனவிலங்கு வாரியத்தில் பல்லாண்டு களுக்கு மேலாக அங்கம் வகித்தார். 1968-ல் இந்திய நாட்டுப் பாலூட்டி களை பற்றி ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணனுக்கு ஜவாகர்லால் நேரு ஆய்வு நல்கை வழங்கப்பட்டது. 1954 முதல் 61 வரை வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்தில் இவரது காட்டுயிர்கள் குறித்த கட்டுரைகள் பல இடம்பெற்றன. கிருஷ்ணனுக்கு இருந்த கலைப்பாணி அவர் எழுதிய கட்டுரைகளில் ஆழமாக வெளியிடப் பட்டது. குறிப்பாக, சரியான தமிழ்ப் பெயர்களை தேர்ந் தெடுத்துப் பயன்படுத்தும் பாங்கு அவரது தனிச்சிறப்பு எனலாம்.
கல்கல்த்தாவிலிருந்து வெளியாகும் ஸ்டேட்ஸ்மென் இதழில் 'My country note book' (எனது கிராமந்தரக் குறிப்பேடு) என்ற மாதமிருமுறைத் தொடரை 1950 முதல் எழுதலானார். இத்தொடரின் கடைசிக் கட்டுரை அவர் இறந்த பிப்ரவரி 18, 1996 அன்று அதே இதழில் 'பிரத்யேகமாக இந்தியன்' என்ற தலைப்பில் வெளியானது. மிக அதிக காலம் வெளியான இந்தியப் பத்தி என்ற பெருமை இத்தொடருக்கு உண்டு. இது சுமார் 46 ஆண்டுகள் வெளிவந்த பத்தி. கிருஷ்ணன் என்ற இயற் பெயரிலும் கண்ணன் என்ற புனை பெயரிலும் கதைகள் எழுதி வந்துள்ளார். கதைகள் பெரும்பாலும் இயற்கையியல் சார்ந்த பின்புலத்தில் எழுதப்பட்டவை. மேலும் கிருஷ்ணனுக்குத் தமிழ் செவ் விலக்கியத்தில் நல்ல பயிற்சி உண்டு. இதனால் இலக்கியக் கட்டுரைகளும் பல எழுதி வந்துள்ளார். கிருஷ்ணனின் கதைகளைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள்தாம் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று ஊக்குவித்து வந்தவர்.
கலைமகள், கல்கி, கலைக் களஞ்சியம், விஞ்ஞானி, மஞ்சரி போன்றவற்றில் எழுதிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'மலைக்காலமும் குயிலோசையும்' எனும் தலைப்பிலான நூலொன்று காலச்சுவடு வெளியீடாக 2002-ல் வெளிவந்தது. இத் தொகுப்பு தியடோர் பாஸ்கரன் முயற்சியி னால் தமிழுக்குக் கிடைத்துள்ளது.
காட்டுயிர்கள் தாவரங்கள் பற்றி இடை யறாது மக்களிடையே அறிமுகப்படுத்திய வகையிலும் அவர்கள் அவற்றின் மீது நாட்டம் கொள்ளும் வகையிலும் இடைய றாது கிருஷ்ணன் மேற்கொண்ட பணி பெரியது. இதனால்தான் இந்திய மத்திய அரசு 1970-களில் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கழகம் தேர்ந்தெடுத்த 'உலக ஐந்நூற்றுவர்' என்ற தொகுப்பில் இடம்தந்து கௌரவிக்கப்பட்டார்.
இதுவரை கதிரேசன் செட்டியாரின் காதல் (1995), The Vedanthangal Sanctuary for water-Birds, 1960; Government of Madras, Jungle and Backyard (Publications Division, 1961); India's Wildlife 1959-1970 (Bombay Natural History Society, Bombay, 1975); Nights and Days; My Book of Indian Wildlife (Vikas, Delhi, 1985); Nature's Spokesman, (OUP, 2000) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
1940-களிலும் 1950-களிலும் எளிய தமிழில் கானுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதிச் சூழலியல் சார்ந்த கருதுகோள்களை அவர் விளக்க முற் பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு உலக அளவில்கூடத் தோன்றியிருக்கவில்லை. வேட்டை இலக்கியங்களைப் படித்து மகிழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அவருடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம் கண்டு கொள் ளாததற்கு இதுவும் ஒரு காரணம் மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும், புலி அழிவின் விளிம்பிலிருப்பது பற்றியும், இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்துப் பற்றியும் ஒரு தீர்க்கதரிசி போல் எழுதினார்" என்று தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுவதன் உண்மையை நாம் மறுக்க முடியாது. அது முற்றிலும் சரியான கணிப்பு.
அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் மா.கிருஷ்ணன்தான். இந்த மரபு தொடரப் படவேண்டும். இயற்கையியல் பற்றிய பிரக்ஞை மேலும் ஆழப்படுத்தப்பட வேண்டும்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|
|