|
|
தமிழகத்தின் சமூகப்பண்பாட்டு ஆய்வில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து, 'சமூகவரலாறு', 'பண் பாட்டு வரலாறு' ஆகியவற்றின் எழுத்தியலில் புதிய பார்வைக்குத் தடம் அமைத்துக் காட்டியவர்களுள் சாத்தான்குளம் அ. இராகவன் குறிப்பிடத்தக்கவர்.
இவர் சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகியவற்றின் தாக்கத்துக்கு உட்பட்டுத் தனித்தன்மை மிக்கவராகப் பரிணமித்தார். களப்பணியாளராகப் பின்னர் உருவெடுத்தார். தமிழர்கள் இனத்தாலும், மொழியாலும், பண்பாட்டாலும் நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டவர்கள். இதனை அறிவு பூர்வமாகவும் ஆய்வு பூர்வமாகவும் எடுத்துக்காட்டுவதற்காகவே அ. இராகவன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவழித்தார்.
இவர் கவிராயர் குடும்பத்தில் 1902 ஏப்ரல் 22 இல் பிறந்தார். ஆசிரியர் பயிற்சி பெற்று 1924 முதல் 1930 வரை சாத்தான் குளத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக் காலத்தில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்ற சமூக அரசியல் பண்பாட்டு மறுமலர்ச்சியில் தீவிர அக்கறை கொண்டவராகவும் வளர்ந்தார். இது இவருக்குள் கருத்துநிலைத் தேடலையும் உருவாக்கியது.
இக்காலங்களில் பெரியார், திரு.வி.க., கா. சுப்பிரமணிய பிள்ளை, பா. தாவூஷா போன்றவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். மேற்குறித்தவர்கள் அப்போது சமூக அரசியல் பண்பாட்டு விடயங்களில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள். பரந்த ஞானம் மிக்கவர்கள். இவர்களது புலமையும் இராகவனிடம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது.
இராகவன் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு வந்தார். சுயமரியாதைக் கொள்கை இயக்கவாதமாகவும் செயல்வாதமாகவும் மலர்ச்சி பெறுவதற்கு இவரும் துணை நின்றார். 1930ல் ஈரோட்டில் நிறுவப் பெற்ற பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தில் பொறுப்பாளராகப் பதவி வகித்தார். இவரது மேற்பார்வையில் குடியரசு பதிப்பகம் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.
அப்பொழுது சுயமரியாதை இயக்கத்துக்கான அரசியல் திட்டத்தை வகுக்கும் வகையில் ம. சிங்காரவேலரால் அனுப்பப்பட்ட திட்டத்தின் மீது விவாதம் மேற்கொள்ளப்பட்டது. சிங்காரவேலர் சுய மரியாதை இயக்கம் பொருளாதார அரசியல் துறைகளில் சோசலிசத்துக்காகப் பாடுபட வேண்டும் என்று கூறிவந்தார். அதன் அடிப்படையிலேயே அவரது திட்டமும் இருந்தது. இது தொடர்பான அக்கூட்டத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியம் இன்னது என்பதை தெளிவுபடுத்தி அதனையே குறிக்கோளாகக் கொண்டு இயக்கத்தை நடத்த வேண்டுமென்று கூறினார்.
அப்பொழுது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தினார்கள். அதில் அ. இராகவனும், ப. ஜீவானந்தமும் லட்சியமும் அரசியலும் சரியானவையே என்றும் அவற்றைத் தனித்தனியாக குறிக்க வேண்டும் என்றும் கூறினர். கடைசியில் லட்சியமும் திட்டமும் திருத்தங்களுடன் நிறைவேற்றப் பட்டன.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் இராகவனும் ஜீவானந்தமும் ஒருமித்த கருத்துக் கொண்டவர்களாகவே சுயமரியாதை இயக்கத்தில் அப்பொழுது தொழிற்பட்டார்கள். பின்னர் ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறி சுயமரியாதை சமதர்மக்கட்சியை தொடங்கிய பொழுது இராகவன் அவருடன் சென்றார். இவ்வியக்கத்தின் 'அறிவு' என்னும் இதழையும் பொறுப்பெடுத்து நடத்தினார்.
1937-இல் இராகவன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 1945-இல் மேதினம் குறித்து தமிழில் ஒரு சிறு நூலையும் எழுதி வெளியிட்டார்.
1947-இல் இந்தியாவுக்குக் கிடைத்த அரசியல் மாற்றத்துடன் இராகவனின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. தீவிர சமூக அரசியல் அக்கறை மிக்கவராக இருந்தவர் தனக்கான தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டினார். இதனால் இவர் கொழும்பு சென்று அங்கு சரஸ்வதி அழுத்தகம் என்ற அச்சகத்தைத் தொடங்கி வணிகத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். இதன் பின்னர் இராகவன் தமிழ்ப் பண்பாட்டு, சமூக வரலாற்றில் இணைபிரியாக் கூறாக இருப்பதைக் காணலாம்.
தமிழ்ச் சமூகம், அதன் தனித்துவ அடையாளங்கள் பற்றிய தேடலில் ஆர்வமிக்கவராக மாறினார். மேலை நாட்டினர் நிகழ்த்திய ஆய்வுகள் அவர்களது கோட்பாட்டு உருவாக்கத்துக்கும் புதிய உள்ளொளிகளை உருவாக்கவும் உதவின என்பது இன்றைய ஆய்வாளர்கள் கருத்து. ஆனால் தமிழர்களால் தமது 'தொடர்ச்சி' 'மரபு' 'தனித் தன்மை' 'அடையாளமீட்பு' ஆகியவற்றுக்காக அவர்கள் மேற்கொண்ட பயணம் தமிழர் நாகரிகம், வாழ்முறை, பண்பாடு, தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பு இவற்றைப் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தியது. |
|
இராகவன் கொழும்பில் இருக்கும் பொழுது ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி, காசி இந்தியப் பழங்காசு ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து வரலாறு தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம், தொடர்பான கற்றலும் தகவல் சேகரிப்பிலும் ஈடுபட்டார். 1960களில் இராகவன் பாளையங்கோட்டைக்குத் திரும்பி தமிழகப் பழம் நகரங்கள் தொடர்பான அகழ்வாய்வு விவரங்கள், சிந்துசமவெளி ஆய்வுகள் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபட்டார். அவை சார்ந்த புதிய விளக்கங்களுக்கு வந்து சேர்ந்தார். சிங்கப்பூர் 'தமிழ்முரசு' இதழில் இராகவன் தமது ஆய்வுகளைத் தொடராக எழுதி வந்தார். 'தமிழர் பண்பாட்டில் தாமரை', 'தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்' என்னும் இரண்டு தொடர்கள் அப் பத்திரிகையில் வெளிவந்தது.
தொல்பழங்காலம் தொடங்கி இன்றுவரை விளக்குகள் எப்படி மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருகின்றன. சடங்கு சார் நிகழ்வுகளில் விளக்கு பெறும் முக்கித்துவம் சமூக வளர்ச்சிக்கேற்ப விளக்குப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் என ஒரு பண்பாட்டுப் புதையலை வெளிக் கொணர்ந்தார். நமது பயன்பாட்டில் உள்ள சில பொருட்களுக்கான அர்த்தத்தை பண்பாட்டு காரணங்கள் மூலம் புரிந்து கொள்ள வேண்டுமெனக் கூறியது இவர் படைப்பு.
விளக்கு போன்றே மலர் தொடர்பான பண்பாடும் மனித வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது என்பதை 'தமிழர் பண்பாட்டில் தாமரை' என்ற தொடர் வெளிப்படுத்தியது. தமிழர் வாழ்க்கையில் மலர்கள் பெறுமிடம் சாதாரணமானது. ஆனால் ஒவ்வொரு மலருக்கும் சடங்குசார் நிலைகளில் அதிமுக்கியத்துவம் உண்டு. தமிழ் இலக்கியமும் வாழ்வியல் புலம் சார்ந்து மலர்களுக்கான முக்கியத்துவத்தை விரிவாகவே பேசுகின்றன. இந்த ரீதியில் தாமரை தமிழர்களின் பண்பாட்டுச் செயற்பாடுகளில் பெறும் இடத்தை மிகத் தெளிவாகப் பேசுகிறது.
இவ்விரு தொடர்களும் பின்னர் நூல்களாக வெளிவந்தன. இராகவனின் ஆய்வு அடுத்து 'தமிழ்நாட்டு அணிகலன்கள்' என்ற பரப்பில் குவிந்தது. தமிழர்கள் அணியும் அணிகலன்கள் பற்றிய ஆய்வு ஆண், பெண், குழந்தைகள் என உறவு முறை சார்ந்து விரிந்தது. வரலாற்று நிலை நின்று அணிகலன்கள் பற்றிய ஆய்வு சமூகவரலாற்று விடயமாகவும் விரிவு பெறும். பல்வேறு அணிகலன்களை எல்லாம் சேகரித்து வந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது. அணிகலன்களின் தயாரிப்பில் தொழிற்பட்ட எமது தொழில் நுட்பம், அறிவு எத்தகையது என்பதையும் இனங்காணவும் இந்த ஆய்வு உதவியது. இதற்கு கல்வெட்டுச் சான்றுகள், சிற்பநூல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகிய வற்றின் துணையோடு இவ்வாய்வை மேற்கொண்டார்.
இதுபோல் 'நம் நாட்டுக் கப்பற் கலை' என்ற நூல் மூலம் தமிழர்களின் உலகம் தழுவிய வணிகம் மற்றும் தமிழர்களின் தொழில் நுட்பம் ஆகியவற்றை வரலாற்று ரீதியாக நோக்குவதற்கான சான்றுகள் யாவற்றையும் திரட்டித்தருகிறார். 'கப்பல் கட்டும் பணி' தமிழர்களிடையே நீண்டகாலமாக இருந்து வருவது. ஆகவே கப்பற்கலை பற்றிய தேடல் தமிழர்களின் கைவினைக் கலைகளின் சிறப்பார்வம், அறிவுத்தொகுதி, தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களாகவும் விரிந்துள்ளது.
தமிழர் வரலாறு என்பது மன்னர்களின், போர்களின் வரலாறு மட்டுமல்ல. உண்மையில் மக்களின் வரலாறு என்பது அவர்களுடன் தொடர்புடைய வாழ்க்கையின் பேறுகளால், கண்டடைந்த கூறுகளின் தொகுப்பால் ஆனது. இதுவே உயிர்ப்புள்ள மக்களின் வரலாறு. 'இசையும் யாழும்' என்னும் நூல் தமிழிசை குறித்த வரலாறு நிலைப்பட்ட பார்வையை முன் வைக்கிறது. தமிழர்களின் இசை வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் நுட்பமாக முன்வைக்கிறது. அதுபோல் 'யாழ்' பற்றிய சிந்தனைகளையும் யாழ்க் கருவிக்கும் வீணைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் கூட விளக்குகிறது.
தொடர்ந்து இராகவன் 'தமிழக-சாவகக் கலைத்தொடர்புகள்', 'கோநகர் கொற்கை', 'ஆதிச்ச நல்லூரும் பொருநைநதி நாகரிகமும் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இது போல் 'தமிழ்நாட்டுப் படைக்கலன்கள்' 'தமிழ்நாட்டுக் காசுகள்', 'தமிழ்நாட்டு ஒவியம்', 'சிந்து வெளித் திராவிட நாகரிகம்', 'இறைவனின் எண் வகை வடிவங்கள்' உள்ளிட்டவை வெளிவரும் நூல்களென கோநகர் கொற்கை நூலின் உள் அட்டையில் உள்ளது. ஆனால் இன்றுவரை இவை வெளிவந்ததாகத் தெரியவில்லை.
தமிழ் தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கும் அவற்றில் இழையோடும் சிறப்புத் தன்மைக்கும் அடையாள மீட்புக்கும் அவற்றின் அரசியலுக்கும் உள்முகப்பட்ட பார்வையை அறிவுபூர்வமாக முன்வைக்கும் பாரிய பணியில் ஈடுபட்டவர் இராகவன். இவர் தமிழ் ஆய்வுலகில் இன்னும் முழுமையாக கண்டு கொள்ளப்படாதவராகவே உள்ளார். ஆனால் 'தமிழியல்' ஆய்வு பல்வேறு பரிமாணங்களில் ஒன்றை ஒன்று தழுவிச் செல்லும் பொழுது இராகவனின் ஆய்வு மூலகங்கள் புதிய வெளிச்சம் பாய்ச்சும். சமூகவரலாறு பண்பாட்டியல் ஆய்வு நோக்கில் சாத்தான்குளம் அ. இராகவன் முதன்மையானவர். முன்னோடியானவர்.
1981 மார்ச் 8-இல் இராகவன் காலமானார். ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள ஆய்வு மூலகங்கள் தமிழரின் அடையாள மீட்புக்குச் சிறந்த கருவிகள்.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|