|
|
|
தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தமிழறிஞர், இராம. பெரியகருப்பன் என்று அழைக்கப்படும் தமிழண்ணல். இவர் ஆகஸ்ட் 12, 1928 அன்று சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில், முத்துராமன் செட்டியார் - பார்வதி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். ராமசாமி செட்டியார்-கல்யாணி ஆச்சி குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். நெற்குப்பையில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் மேற்கல்வி கற்றார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொருளியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்ததும் தமிழண்ணல், காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1954-ல், தமிழண்ணலுக்கு சிந்தாமணியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்தனர். தமிழண்ணல் பதின்மூன்று ஆண்டுகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த நிலையில், மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றார். அங்கு மாணவர்களின் மனம் கவர்ந்த பேராசிரியராகத் திகழ்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில் 'சங்க இலக்கிய மரபுகள்' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பத்தாண்டுகள் அங்கு பணிபுரிந்த நிலையில், டாக்டர் மு.வ.வின் பரிந்துரையில், 1971ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல் துறைப் பேராசிரியர், தமிழ்ப் புல ஒருங்கிணைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழ்த் துறையின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைத்தார். இவர்தம் பணிக்காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சிறப்பு நிதியுதவித் துறையாக உயர்ந்தது. தமிழண்ணல் 1989ல் பணி ஓய்வு பெற்றார். தொடர்ந்து சிறப்புப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
தமிழண்ணல் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கினார். பல மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். மேனாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர்களும் அமைச்சர்களுமான முனைவர் தமிழ்க்குடிமகன், முனைவர் கா. காளிமுத்து போன்றோருக்கு ஆய்வு வழிகாட்டி தமிழண்ணல்தான். ஒப்பிலக்கியத் துறை முதன்முதலாகக் காமராசர் பல்கலையில் அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கான ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழண்ணல், தமிழ்ப் புலவர் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராக நீண்ட காலம் பணிபுரிந்தார். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சாகித்ய அகாதெமி உறுப்பினராகப் பல ஆண்டுகள் இருந்தார். ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றினார். தமிழக அரசு அமைத்த தமிழிலக்கிய சங்கப்பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
1981-82ல் தமிழண்ணல் பல்கலைக்கழக நல்கைக் குழுவால் தேசியப் பேராசிரியராக தேர்வு செயப்பட்டார். அதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார். சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
தமிழண்ணல் சிறந்த ஆய்வறிஞராகவும் படைப்பாசிரியராகவும் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். செட்டிநாட்டு வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட இவரது 'வாழ்வரசி' புதினமும், வினைக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட 'நச்சுவளையம்' நாவலும் முக்கியமானவை. தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை என்று பல பிரிவுகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கல்லூரி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இலக்கிய, இலக்கண நூல்களை, எளிய உரைகளை எழுதினார். தொல்காப்பியத்திற்கு இவர் எழுதிய உரை மாணவர்களுக்குப் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளுக்கு தமிழ் மரபு சார்ந்து எளிய உரையை எழுதினார்.
இவரது 'புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு' நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. சிங்கப்பூர் அரசுப் பள்ளிகளுக்காக தமிழ்ப் பாட நூல்களைத் தந்துள்ளார். தினமணி இதழில் இவர் எழுதிய 'உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்னும் தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இது பின்னர் நூலாகவும் வெளிவந்தது. ஆர். நாகசாமி எழுதிய 'The Mirror of Tamil and Sanskrit' என்ற நூலுக்கு எதிர்வினையாக இவர் இயற்றிய, 'இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்' நூல் வரவேற்பையும், விவாதத்தையும் பெற்றது. தமிழண்ணல் தனது வாழ்க்கை வரலாற்றை, 'மனத்துக்கு மனம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
தமிழண்ணல் குடியரசு தினத்தன்று புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டார். இவர் 'செல்வம்' என்ற தலைப்பில் பாடிய கவிதை, அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பட்டது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவரது நூலும் பரிசு பெற்றது. இவரது இலக்கிய, ஆய்வு முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் இவரைத் தேடி வந்தன. தமிழக அரசு, கலைமாமணி விருது, திரு.வி.க. விருது போன்ற விருதுகளை அளித்துச் சிறப்பித்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ச் செம்மல் விருது அளித்துப் பாராட்டியது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம், தமிழண்ணலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. மத்திய அரசு செம்மொழி அறிஞர் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழண்ணல், டிசம்பர் 29, 2015 அன்று காலமானார். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய இலக்கிய, இலக்கண வரலாற்று உரை நூல்கள் மாணவர்களுக்கு என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. |
|
பா.சு. ரமணன்
தமிழண்ணல் எழுதிய நூல்கள் மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ், வாழ்வரசி (புதினம்), நச்சுவளையம் (புதினம்), உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள், அகநானூற்றுக் காட்சிகள், இனிக்கும் இலக்கியம், தொல்காப்பியம் உரை, நன்னூல் உரை, அகப்பொருள் விளக்கம் உரை, புறப்பொருள் வெண்பாமாலை உரை, யாப்பருங்கலக் காரிகை உரை, தண்டியலங்காரம் உரை, சொல் புதிது சுவை புதிது, தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும், தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?, பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?, பிழை திருத்தும் மனப்பழக்கம், உரை விளக்கு, தமிழ் உயிருள்ள மொழி, தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள், தமிழ்த்தவம், திருக்குறள் நுண்பொருளுரை, தாலாட்டு, காதல் வாழ்வு, பிறைதொழும் பெண்கள், சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள், சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், புதியநோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ஒப்பிலக்கிய அறிமுகம், குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம், இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன, இனிய தமிழ்மொழியின் இருவகை வழக்குகள், உலகத் தமிழிலக்கிய வரலாறு, ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு, எழுச்சி தரும் எண்ணச்சிறகுகள், தமிழியல் ஆய்வு (இ.முத்தையாவுடன் இணைந்து எழுதிய நூல்), ஆய்வியல் அறிமுகம் (இலக்குமணனுடன் இணைந்து எழுதியது), மனத்துக்கு மனம் (சுய சரிதை)
(தகவல் உதவி: thamizhannal.org) |
|
|
|
|
|
|
|
|