|
|
இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆராய்ச்சி செல்நெறிப் போக்குகளை ஆற்றுப்படுத்தியவர்களுள், பேராசிரியர். வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அறிவியல் நோக்குவயப்பட்ட ஆராய்ச்சி முறைமைகள் சார்ந்த புலமைப் பரப்பையும் ஆராய்ச்சிப் பரப்பையும் தோற்றுவித்தவர்கள்.
இத்தகைய புலமையாளர்களின் 'அறிவு' 'ஆய்வு' பாரம்பரியங்களை உள்வாங்கிக் கொண்டு தமிழியல் ஆராய்ச்சியில் இன்னொரு மடைமாற்றம் ஏற்பட காரணமாக இருந்தவர் பேராசிரியர் நா. வான மாமலை (1917-1980). மார்க்சியக் கருத்து நிலை சார்ந்த வரன்முறையான ஆய்வுகள் பெருக தக்கப் பின்புலத்தை தமிழ்ச்சூழலில் உருவாக்கினார். கல்விப்புலம் சார்ந்து, கல்விப்புலம் சாராத என்ற நிலைகளைக் கடந்து ஆய்வுத்தாகம் உள்ள பலரும் ஒன்றுகூடி ஊட்டம் பெற்று ஆ¡ய்ச்சிகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத் தினார்.
1960களுக்கு பின்னர் தமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா. வானமாமலை என்ற பெயர் தாக்கம் நிறைந்த சமூகப்பிரக்ஞையுடன் தொழிற்படக்கூடிய இளம் ஆய்வாளர்களிடையே பெரிதும் ஈர்க்கக்கூடிய பெயராகவே இருந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்க தமிழ்மக்களின் சமூகவரலாற்றை பண்பாட்டை கலை இலக்கியங்களை வாழ்வியலை அறிவியல் முறை யிலான சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்யவும் விவாதிக்கவும் உரிய களங்களை நோக்கி கவனத் தைக் குவித்தார். இத்தகைய ஆய்வுக் களங்களில் ஈடுபடக்கூடிய மாணவர்களை ஆற்றுப்படுத்தியும் வந்தார்.
தமிழ்ச்சுழலில் எத்தனையோ பேராசிரியர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் சிலருக்குத்தான் அவரது பெயரைவிட பேராசிரியர் என்ற அடை அவருடைய பெயருக்கு மதிப்பையும் கெளரவத்தையும் வழங்கும். அத்தகையவர்களுள் ஒருவர்தான் நா. வானாமாலை.
''சோழப் பேரரசின் உத்தியோகப்பூர்வமான சன்னத்துப் பெற்ற கவிச்சக்கரவர்த்திகளான ஓட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் ஆகியோர்களின் பெயர்களுடனல்லாது, அப்பட்டத்தை உத்தியோகப் பூர்வமாகப் பெறாத கம்பனுடைய பெயருடனேயே கவிச்சக்கரவர்த்தி என்னும் விருது சேர்த்துப் பேசப்படுதல் போன்று நா. வானமாமலை அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களிலோ, பல்கலைக்கல்லூரிகளிலோ பேரா சிரியராக விளங்காவிடினும் 'பேராசிரியர்' என்ற அடை அவருடைய பெயருடன் மதிப்பார்த்தத்துடன் இணைக்கப் பெற்றுள்ளது'' என பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது.
வானாமலை நாங்குனேரியில் 7.12.1917இல் பிறந்தார். நிலம் சார்ந்து ஓரளவு வசதியடைந்த வைணவக் குடும்பம் அவருடையது. இளமைக் கால கல்வியை நான்குனேரியிலும் ஏர்வாடி என்ற சிற்றூரிலும் பெற்றார். அவரது உயர்நிலைப் படிப்பு த்¢ருநெல்வேலியில் தொடர்ந்தது. பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. இரசாயனப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை சைதாப்பேட்டை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி. என்ற பட்டப்படிப்பினையும் பெற்றார்.
மதுராந்தகத்தில் தற்காலிக ஆசிரியர் பதவி வேலை கிடைத்தது (1942). அதன் பின்னர் ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளியில் அவருக்கு நிரந்தர ஆசிரியர் பதவி கிடைத்தது. நான்குனேரி, கோயில்பட்டி, தென்காசி ஆகிய இடங்களில் 1948 ஆம் ஆண்டுவரை ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
தேசிய விடுதலையில் ஆர்வமும் சமூகவிழிப் புணர்வும் பெற்றவராகவே வளர்ந்து வந்தார். தமிழ் வைணவ இலக்கியங்களில் நல்ல தேர்ச்சியும் புலமையும் வாய்க்கப்பெற்றவராக இருந்தார். சமூக சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்கு ஆட்பட்டு இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளிலும் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கினார்.
சமத்துத்துவம் கோரிய பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு சமூகப்பேராளியாக தன்னை உருமாற்றினார். இடதுசாரித் தத்துவங்களை ஆழ்ந்து கற்று புலமை மிக்க சிந்தனைவாதியாக பரிணமித்தார்.
அந்தக் காலத்தில் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையை சமாளிக்க பேராசிரியர் ஒரு பதிப்பகம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல்வேறு நண்பர்களிடமிருந்து பணம் சேகரித்து 'பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்' என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் பல்வேறு முற்போக்கு இடதுசாரி நூல்கள் கிடைக்க வழிவகை செய்தார். இந்த அமைப்பு பின்னர் 'நெல்லை புத்தக நிலையம்' என்ற பெயரில் இயங்கி வந்தது.
1947களில் தொ.மு.சி. ரகுநாதன், தி.க. சிவ சங்கரன், அண்ணாச்சி சண்முகம்பிள்ளை ஆகியோ ருடன் இணைந்து நெல்லை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டு வந்தார். சமுதாயத்தில் மறுமலர்ச்சி சமூக சமத்துவம் உருவாக பல்வேறுபட்ட முயற்சிகளிலும் போராட்டங் களிலும் ஈடுபட்டு தன்னை புடம் போட்டு வளர்த்து வந்தார்.
தனது குறிக்கோள் சார்ந்த பணிகளுக்கு ஆசிரியப் பணி தடையாக இருந்ததை உணர்ந்தார். இதனால் தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி சுதந்திர சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் மாறினார். பொருளீட்டலுக்காக வேறு தொழில் தேடலானார். அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. இன்டர்மீடியட் போன்ற வகுப்புகளில் அரசுத் தேர்வுகளில் தேறிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முறையான அமைப்புக்கள் எதுவும் கிடை யாது. இந்தத் தனித் தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஒரு சுயவேலைக்காகவும் பாளையங் கோட்டையில் தனியார் பயிற்சி நிலையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இவருடன் கூட்டாக இருந்தவர் கே. சீனிவாசன் என்பவர்.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பின்னர் தக்கலை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் கிளைகள் உருவாக்கி செயற்பட்டது. 1962 வாக்கில் பேராசிரியருக்கும் சீனிவாசனுக்கும் இடையே ஒத்துப் போக முடியவில்லை. இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் பேராசிரியர் தனது பெயரிலேயே இந்தப் பயிற்சி நிலையத்தை 'வானமாமலை டூடோரியல் கல்லூரி' என்ற பெயரில் தனது இறுதிக்காலம் வரை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
1948ஆம் ஆண்டில் பொதுவுடைமைவாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றான நெல்லைச் சதிவழக்கில் பேராசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் பேராசிரியர் நெல்லை மாவட்டத்தில் பொதுவுடை மைக் கட்சியை ஒழுங்குபடுத்தி கட்டுவதில் தீவிரமாக உழைத்தார். அரசியலில் தீவிரமான ஈடுபாடு பேராசிரியரை பண்பட்ட மனிதராக்கியது.
1954க்குப் பின்னர் தத்துவம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் அதிகமாக அக்கறை கொண்டார். ஆழ்ந்து படித்தார், விவாதித்தார். கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். மார்க்சியத் தத்துவத்தை தமிழ்ச் சூழலில் பரப்புவதற்கு பேராசிரியரின் பங்களிப்பு தீவிரமாக இருந்தது. கட்சித் தோழர்களுக்கு மார்க்சியம் பற்றிய வகுப்புக்கள் எடுத்து வந்தார்.
மிகச் சாதாரண தொழிலாளர்கள் தொடங்கி படிப்பாளிகள் வரை பலருக்கு மார்க்சியம் பற்றிய வகுப்புகளை அவர்களுக்கு புரியும் வகையில் ஆழமாக தெளிவாக எடுத்துரைத்து வந்தார். இதற்காக அதிகமாகவே மூலநூல்களை கற்று வந்தார். மிக எளிமையான விளக்கங்கள் கொடுப்பார். தமிழ் கலாசாரப் பின்புலத்துடன் இணைத்து மார்க்சியம் கற்றுக் கொடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தினார்.
மேலும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு சமூகவரலாறு பற்றிய விஷயங்களில் அதிக அக்கறை கொள்ளத் தொடங்கினார். 'சக்தி' 'ஜனசக்தி', 'காந்தி', 'சரஸ்வதி' 'தாமரை' போன்ற இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.
1955ஆம் ஆண்டு மார்க்சிய அறிஞர் பி.சி. ஜோஷி தமிழகத்துக்கு வருகை தந்தார். அவரை பேராசிரியர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாட்டார் வழக் காற்றியல் பற்றி பேராசிரியரிடம் உரையாடினார். இத்துறை சார்ந்த அக்கறையை பேராசிரியரிடம் ஏற்படுத்தினார். நாட்டார் வழக்காற்றியல் துறையில் பேராசிரியர் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார்.
ஜோஷி சந்திப்புக்கு பின்னர் பேராசிரியர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்படுகிறது. நாட்டார் பாடல்களை நாட்டார் கதைகளை சேகரிக்கும் அரியமுயற்சியில் பேராசிரியர் முழு மூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். நாட்டார் பாடல்கள்/கதைகள் பற்றி தாமரை, சரஸ்வதி ஆகிய இதழ்களில் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். இந்த முயற்சி தீவிரமாகி நாட்டார் வழக்காற்றி யல்துறை வளர்ச்சியடைவதற்குரிய அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. 'தமிழ்நாட்டு பாமரர் பாடல்' என்ற தொகுப்பு 1960களில் வெளிவந்தது.
1960களில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் என்ற அமைப்பு தோன்றியது. இந்த அமைப்பின் செயற்பாடுகளிலும் பேராசிரியர் தன்னை இணைத் துக் கொண்டார். இந்த அமைப்பு மூலமும் நாட்டார் பாடல்களை சேகரிக்கும் பணியை தொடர்ந்தார். பலரை இம்முயற்சியில் ஈடுபடவும் தூண்டினார். 'கட்டபொம்மு கதை', 'தமிழர் நாட்டுப் பாடல்கள்' போன்ற நூல்களை வெளியிட்டு கல்விப் புலம் சார்ந்தவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஈடுபட வேண்டிய தேவையை முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
தொடர்ந்து நாட்டார் இலக்கியம் அல்லாத பிற விஷயங்களிலும் அக்கறையாக இருந்தார். குழந்தை இலக்கியம் அறிவியல் நூல்கள் போன்றவை வெளிவர வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்தார். ரப்பரின் கதை என்ற சிறுவர்களுக்கான நூலை எஸ். தோதாத்தரியுடன் இணைந்த எழுதி 1962இல் வெளியிட்டார். தொடர்ந்து இரும்பின் கதை, காகிதத்தின் கதை, பெட்ரோலியத்தின் கதை உள்ளிட்ட தொடர் நூல் வரிசைகளை எழுதி வெளியிட்டார்.
தமிழில் அறிவியல் உள்ளிட்ட எல்லா பாடங் களையும் கற்பிக்க முடியும் என நிரூபித்தார். இதற்காக நடைபெற்ற கருத்தரங்கில் 'தமிழில் முடியும்' என்ற நூலை பதிப்பாசிரியராக இருந்து 1966ல் வெளியிட்டார். வரலாறு, பொருளாதாரம், இரசா யனம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல்துறை தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றது. இரசாயனம் பற்றிய கட்டுரையை தானே எழுதியதுடன் நூலுக்கான முன்னுரையையும் பேராசிரியரே எழுதியிருந்தார்.
தமிழ்மொழி பற்றிய பிரக்ஞையும் மொழிக்கு அறிவுள்ள வளங்கள் வேண்டுமென்ற புரிதலும் வாய்க்கப் பெற்றவராகவே இருந்தார். ஆண்டு தோறும் தமது பிறந்தநாளை நெருக்கமான நண்பர்களோடு எளிமையாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணங்களில் எல்லாம் முழுக்க ஆய்வு, எழுத்து, அவைப் பற்றிய பேச்சு, விவாதம் என்றவாறுதான் இருக்கும். |
|
1967 டிச 7 இல் தமது 50ஆவது பிறந்தநாளில் நெல்லை ஆய்வுக்குழுவைத் தொடங்கினார். சுமார் பத்துப் பேர் கொண்ட குழு அது. ஆய்வுக் குழுவினருக்கு எந்த முன் தகுதியும் கல்வித்துறை அங்கீகார அடையாள வரையறையும் கிடையாது. சமூக அக்கறை சமூக பிரக்ஞை, அறிவியல் நோக்கு, படிப்பதில் ஆர்வம், ஆய்வில் ஈடுபாடு, விடாமுயற்சி, உழைப்பு, அக்கறை உடையோர் யாவரும் இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழுவின் முதல் கூட்டம் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு விமரிசனக் கூட்டமாக நடைபெற்றது. 'இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டில் இருந்து தமிழ் உலகம் எதிர்ப்பார்ப்பதென்ன' என்று ஆழமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது ஒரு சிறு நூலாகவும் பின்னர் வெளியிடப்பட்டது.
ஜூன் 1968இல் திருச்சியில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மூன்றாவது மாநாட்டில் ஆய்வரங்கப் பகுதியை பேராசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். அங்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வாசிக்கப்பட்டு விவாதிக்கப் பெற்றன. இந்த ஆய்வரங்க முறைமை பேராசிரியருக்கு பிடித்துப் போனது. இந்த ஆய்வுச்சூழல் நெல்லை ஆய்வுக் குழுவில் இடம்பெற தக்க பின்புலத்தை உருவாக்கி வளர்த்து வந்தார். நெல்லை ஆய்வுக்குழுவில் கட்டுரைகள் எழுதிப்படிப்பது விவாதிப்பது என்ற போக்கு ஆழமாக வேர்விட்டது.
கல்வி நிறுவனங்களைச் சாராமல் தமிழ் தமிழர் பற்றிய அறிவார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பல வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்தன. வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், பண் பாட்டியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சங்கமாக ஆய்வுச்சூழல் வளர்க்கப்பட வேண்டுமென்ற அக்கறை பரவலாகியது.
1969இல் 'ஆராய்ச்சி' என்ற ஆய்வுக் கட்டுரைகள் தாங்கிவரக்கூடிய இதழை தொடங்கினார். பல்வேறு வகைப்பட்ட அறிஞர்களின் கட்டுரைகளோடு நெல்லைக் குழுவினரின் கட்டுரைகளும் ஆராய்ச்சியில் வெளிவந்தன.
ஆராய்ச்சி முதலாவது இதழில் வெளிவந்த கட்டுரைகள் வருமாறு: நகராத்தார் வரலாறும் சிலப்பதிகாரக் கதையும் (ரகுநாதன்), தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள் (நா.வா), தமிழ் இலக்கியத்தில் மனுவின் கதை (டாக்டர் டி.வி. வீராசாமி), நாட்டுப் பாடல்களும் திருமண உறவுகளும் (ஆ. சிவசுப்பிரமணியன்), ஒரு பிராமி எழுத்துச் சாசனம் (மயிலை சீனி வேங்கடசாமி), இந்திய ஆன்மிகவாதம் - ஓர் அறிமுகம் (டாக்டர் தேவிபிரசாத் சட்டோபத்தியாயா), மறைந்து போன பழந்தமிழ் பாடல்கள், இன்றைய தமிழ் இலக்கியப் போக்கு (டாக்டர் இராமசுந்தரம்), பண்டைய தமிழகத்தின் போர்க்கருவிகள் (அ. இராகவன்).
''ஆராய்ச்சியை மட்டும் தலையாய பணியாகக் கொண்டு தமிழில் வெளிவரும் பத்திரிகை இது வொன்றே. பல பண்பாட்டுத் துறைகளிலும் ஆராய்ச்சி புரியும் வல்லுனர்களை அணுகி அவர்களது சிந்தனை முடிவுகளை வெளியிட்டு அறிவொளி பரப்ப முன்வந்துள்ள பத்திரிகை இதுவொன்றே. இதற்கு ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர் அனைவரும் ஆதரவ ளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப் பத்திரிகையை துவக்க முன்வந்தேன்'' என்று போராசிரியர் முதல் இதழ் தலையங்கத்தில் குறிப்பிடுகின்றார்.
ஆராய்ச்சி இதழ் தமிழக சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, அரசியல் வரலாறு உள்ளிட்ட மூலங்களைத் தேடி அறிவியல் கண்ணோட்டத்தில் தனது கட்டுரைகளை தாங்கி வெளிவந்தது. சமூகவியல் மானிடவியல், பண்பாட்டியல், பொருளா தாரம், தொல்லியல், கல்வெட்டியல், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆய்வுச் செல் நெறிகளை தமிழியல் உள்வாங்க வேண்டுமென்ற பேரார்வத்துடன் உழைத்து வந்தவர் அதற்கான அடித்தளம் தமிழில் உருவாக வழிகாட்டினார்.
1971-72ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தெ.பொ.மீ. நாவாவின் நாட்டார் கதைத் தொகுப்புகளை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மு கதையாடல், முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் கதை, கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை உள்ளிட்ட நூல்களை பல்கலைக்கழகம் வெளியிட்டது. 17ம் 18ம் நூற்றாண்டின் சமூகவரலாற்று ஆவணத் தன்மை வாய்ந்த நூல்கள் இவை என்பது குறிப்பிடத் தக்கது.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத்துறையில் பேராசிரியரின் ஆய்வு நோக்கு, ஆய்வு முறையியல் பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூகவரலாறு எழுதியல் பற்றிய தரவுக்கான, ஆவணங்களாக இவை எவ்வாறு மிளிரும் என்பதை ஆய்வாளர்கள் பலர் தக்கவாறு சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து பேராசிரியரை திராவிட மொழியியல் கழகம் சார்பில் தார்வார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராய் வாளராக நியமனம் பெறக் கூடிய வாய்ப்பு கிடைத் தது. இதற்கு பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் காரணமாக இருந்துள்ளார்.
ஆக கல்விப்புலம் சார்ந்த பெறுவளங்கள் பேராசிரியரின் ஆய்வுக்கும் புலமைக்கும் தக்க மரியாதை கொடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு என பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் நூல்கள் புலமையாளர்கள் மத்தியில் கவனயீர்ப்பை ஏற்படுத் தியது. குறிப்பாக 1960களுக்கு பின்னரான தமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா. வானமாமலையின் நோக்கும் போக்கும் ஆய்வுமுறைமை பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது. அவரைப் பின்பற்றும் பண்பாட்டு படையணி உருவாகவும் காரணமாயிற்று.
பேராசிரியரின் ஆய்வுச் சிரத்தை, ஆய்வு நோக்கு தமிழரின் ஆய்வுப் பரப்பை விசாலப்படுத்தி ஆழமாக் கும் நுண்திறன்களை வழங்கியுள்ளது. அவரது முன்முயற்சிகளை ஆய்வுத் தடங்களை தவிர்த்து தமிழியல் ஆய்வு முயற்சிகள் பயணப்பட முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. அவரது முயற்சியால், வழிகாட்டலால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி இதழ் தமிழியல் ஆராய்ச்சியில் தனக்கான மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக பல்துறை அறிவும் அறிவு நோக்கும் விசால மடையும் போது ஆய்வுகளின் தரம் எத்தகையதாக இருக்கும் என்பதை விடாது சுட்டிக்காட்டியமைதான் பேராசிரியரின் தனித்தன்மை.
சமூகம் சார்ந்துதான் ஆய்வுகள் இருக்கும் என்பதை ஒவ்வொரு கணமும் நிரூபித்துள்ளார். மக்கள் சார்ந்து ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களின் வரலாறுகள். எழுதப்பட வேண்டுமென்பதற்காகவே தனது அறிவையும் ஆய்வு முயற்சியினையும் செலவழித் துள்ளார். 2.2.1980 இல் பேராசிரியர் மறைந்தாலும் அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள ஆராய்ச்சி முறைமைகளுக்கான நியாயப்பாடு சமூகப் பொருத்தம் இன்றுவரை இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழியல் ஆராய்ச்சி அறிவியல் நோக்கு சார்ந்து சமூகவியல் மானிடவியல் நோக்கில் பயணமாக பேராசிரியர் நா. வானமாமலையின் ஆர்வமும் உழைப்பும் இன்றும் வேண்டப்படுகிறது.
பேராசிரியர் மறைவுக்கு பின்னர் 1980 செப் 13இல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியரது தமிழ்ப் பணி - ஆராய்ச்சியைப் பாராட்டி கெளரவிக்கும் விதத்தில் டி.லிட் (இலக்கிய கலாநிதி) பட்டம் வழங்கி சிறப்பித்தது.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|
|