'மல்லிகை என் மன்னன் மயங்கும்...', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...', 'யாரது, சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...', 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்...', 'மேகமே மேகமே... ' போன்ற காலத்திற்கும் நிலைத்திருக்கும் பாடல்களைத் தமிழ்த் திரையுலகிற்குத் தந்தவர் வாணி ஜெயராம். இயற்பெயர் கலைவாணி. இவர், வேலூரில், நவம்பர் 30, 1945 அன்று, துரைச்சாமி ஐயங்கார்-பத்மாவதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
வாணி, இளவயதிலேயே இசையார்வம் மிக்கவராக இருந்தார். ரங்கராமானு ஐயங்கார் என்ற ஆசானிடம் இசை கற்றார். கர்நாடக இசையைக் கடலுார் ஸ்ரீனிவாச ஐயங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கற்றார். வாணியின் முதல் கச்சேரி, அவரது எட்டாம் வயதில் நிகழ்ந்தது. அகில இந்திய வானொலியில் பாடினார். தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பாடி வந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராணி மேரி கல்லுாரியில் பயின்று பட்டம் பெற்றார். பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். 1969ல் ஜெயராமுடன் திருமணம் நிகழ்ந்தது. கலைவாணி, வாணி ஜெயராம் ஆனார். திருமணத்திற்குப் பின் கணவருடன் மும்பைக்குச் சென்று வசித்தார்.
மனைவியின் இசைத் திறமையை அறிந்த கணவர் ஜெயராம் அவரைப் பலவிதங்களில் ஊக்குவித்தார். வாணி ஜெயராம், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் ஹிந்துஸ்தானி இசை கற்க ஏற்பாடு செய்தார். இசை ஆர்வத்தால் வங்கிப் பணியில் இருந்து விலகினார் வாணி ஜெயராம். இசைக் கலைஞர்களிடமிருந்து தும்ரி, கஜல், பஜன் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். மும்பையில் ஏராளமாகக் கச்சேரிகளைச் செய்தார்.
ஹிந்தியில் இவரது முதல் பாடல் 1971ல், 'வசந்த் தேசாய்' இசையமைத்த 'குட்டி' படத்தில் இடம்பெற்ற 'போலே ரே பப்பி ஹரா'. அந்த முதல் பாடலே வாணி ஜெயராமிற்கு மிகப் பரவலான புகழைத் தேடித் தந்தது. கச்சேரி வாய்ப்புகளும் திரையிசை வாய்ப்புகளும் பெருகின. தமிழில் இவரது முதல் பாடல் சங்கர் கணேஷ் இசையமைத்த 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தில் இடம்பெற்ற 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடல். அவரது வித்தியாசமான குரலால் கவனிக்கப்பட்டார் வாணி ஜெயராம். தொடர்ந்து எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் 'தீர்க்க சுமங்கலி' படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலால் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றார். தமிழிலும் ஹிந்தியிலும் வாய்ப்புகள் பெருகின. சங்கர்கணேஷ், எம்.எஸ். விஸ்வநாதன் தொடங்கி கே.வி.மகாதேவன், ஜி.கே. வெங்கடேஷ், வி குமார், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன், ஏ.ஆர். ரஹ்மான், ரமேஷ் விநாயகம் எனப் பலரது இசையில் வாணி ஜெயராம் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் மிக அதிகப் பாடல்களைப் பாடினார். தமிழில் எஸ்.பி.பி.யுடன் இணைந்து அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார்.
'மீரா ஆஃப் மாடர்ன் இந்தியா' என்று போற்றப்பட்ட வாணி ஜெயராமின் குரல் பிசிறில்லாதது. கர்நாடக இசை, கஜல், ஹிந்துஸ்தானி, பக்தி இசை, துள்ளலோசைப் பாடல் என எல்லா வகைக்கும் பொருந்திப் போகக்கூடியது. அதனாலேயே அவருக்குப் பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் பெருகின. வாணி ஜெயராம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, அசாமி, துளு, வங்காளம் என 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திரையிசையில் அதிக மொழிகளில் பாடியவர் வாணிஜெயராம். இவரது பக்திப் பாடல்கள் பல தனி ஆல்பங்களாக வெளியாகியுள்ளன.
இவரது இசைப் பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகள் இவரைத் தேடி வந்தன. தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா அரசுகள் இவருக்கு மாநில விருதுகளை வழங்கிச் சிறப்பித்தன. தமிழக அரசு கலைமாமணி விருதளித்தது. தமிழக அரசின் எம்.எஸ். சுப்புலட்சுமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் பெற்றார். 'அபூர்வ ராகங்கள்' படத்தில் இடம்பெற்ற 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்', 'சங்கராபரணம்' படத்தின் 'மானஸ ஸஞ்சரரே', 'ஸ்வாதிகிரணம்' படத்தின் 'ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்' பாடல்களுக்காக இந்திய அரசின் தேசிய விருது மூன்று முறை இவருக்குக் கிடைத்தது. 2023-ம் ஆண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு வாணி ஜெயராம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
2018ல், கணவரை இழந்து சென்னயில் தனிமையில் வசித்து வந்த வாணி ஜெயராம், பிப்ரவரி 4, 2023-ல், வீட்டிற்குள் நேர்ந்த விபத்தில், தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
வாணி ஜெயராம் மறைந்தாலும் எங்கெங்கும் அவரது குரல் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. அது என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
வாணி ஜெயராமின் பாடல்களில் சில... மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - அபூர்வ ராகங்கள் தெய்வீக ராகம் - உல்லாச பறவைகள் ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சல் ஆடுகிறது அதோ வாராண்டி வாராண்டி - பொல்லாதவன் பாரதி கண்ணம்மா... - நினைத்தாலே இனிக்கும் நாதமெனும் கோவிலிலே - மன்மத லீலை நானே நானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன் நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி மேகமே மேகமே பால்நிலா தேயுதே - பாலைவனச்சோலை கவிதை கேளுங்கள் - புன்னகை மன்னன்
யூட்யூபில் கேட்க... மனதை இதமாக்கும் வாணி ஜெயராம் பாடல்கள்
Top 10 Melodies of Vani Jairam |