Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
முன்னோடி
கவியரசர் முடியரசன்
- பா.சு. ரமணன்|மே 2020|
Share:
"என் மூத்த வழிதோன்றல் முடியரசனே! எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்" இப்படிப் பாராட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

"மும்முடியை ஓர்தலையில் முடித்த முடியரசர்
எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்
தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்
தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார்"


இப்படி நெஞ்சாற வாழ்த்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவர்கள் மட்டுமல்ல; குன்றக்குடி அடிளார், சி.என். அண்ணாத்துரை, மு.கருணாநிதி, கா. அப்பாத்துரை உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டிருக்கும் முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர், ஜூலை 10, 1920 நாளன்று மதுரையிலுள்ள பெரியகுளத்தில், சுப்புராயலு - சீதாலெட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி பெரியகுளத்தில் கழிந்தது. தாய்மாமா துரைசாமி சிறந்த கவிஞர். அவர்மூலம் சிறுவயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் முடியரசனுக்குக் கைவந்தது. தொழில்நிமித்தம் குடும்பம் செட்டிநாட்டுப் பகுதியான வேந்தன்பட்டிக்குக் குடிபெயர்ந்தது. அவ்வூரிலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். உயர்கல்வியை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பயின்றார். பின் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 'பிரவேச பண்டிதர்' பட்டம் பெற்றார். தொடர்ந்து மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் 'வித்துவான்' வகுப்பில் சேர்ந்தார்.

கல்லூரிக்காலம் இவருக்கொரு பொற்காலமாக இருந்தது. ஆசிரியர்கள் தமிழறிவோடு இலக்கண, இலக்கிய அறிவையும் ஊட்டினர். பேச்சாற்றலும் நன்றாகப் பாடும் திறனும் இளமையிலேயே வாய்க்கப் பெற்றிருந்த முடியரசன் கல்லூரியில் பல நாடகங்களில் நடித்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவார் இவர். நாடக ஆர்வம் திரைப்படத்தின் மீது ஆர்வம் ஆனது. நிறையத் திரைப்படங்களைப் பார்த்ததால் கல்வியில் கவனம் குன்றியது. சாதி தொடர்பாக ஆசிரியர் ஒருவருடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. அதனால் 'வித்துவான்' தேர்வில் தேர்ச்சி அடைய இயலாமல் போனது. நாடக ஆர்வத்தால், கொல்லம் சென்று நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக்குழுவில் சேர்ந்து சில நாட்கள் பணியாற்றினார். உணவு ஒவ்வாமை காரணமாக குழுவிலிருந்து விலகி மீண்டும் மேலைச்சிவபுரிக்கு வந்தார். இலக்கிய, அரசியல் கூட்டங்களில் சிறப்புரையாற்றினார். பின் கல்வியைத் தொடரவேண்டி, வேறொரு கல்லூரியில் சேர்ந்து 'வித்துவான்' பட்டம் பெற்றார்.



முடியரசன் மிகுந்த தமிழ்ப்பற்றுக் கொண்டவர். தமிழ்தனை இகழ்ந்தவனைப் பெற்ற தாய் தடுத்தாலும் விடேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். சாதி பேதங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதே சமயம் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் ஆரம்பக் காலத்தில் இருந்தார். பாரம்பரியமான வைணவக் குடும்பம் இவருடையது என்றாலும் இவருக்கு முருகன்மீதும் மிகுந்த பக்தி இருந்தது. சிறுவயதிலேயே முருகன்மீது பல பக்திப் பாடல்கள் புனைந்து பாடினார். ஆனால், நாளடைவில் அண்ணா, பாரதிதாசன் போன்றோரின் பேச்சைக் கேட்டதுமுதல் பகுத்தறிவில் நாட்டம் ஏற்பட்டது. அதுவரை 'துரைராசு'வாக அறியப்பட்டவர், அதன் பின்னரே 'முடியரசன்' ஆனார். (துரை = அரசன்: ராசு = அரசன். அரசர்க்கு அரசன் = முடியரசன்) பெயர் மாற்றத்திற்கு சங்ககால மன்னர்கள்மீது இருந்த பிடிப்பும் ஓர் காரணமானது.

படிப்பை முடித்ததும் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் இரண்டாண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் பல இலக்கிய, அரசியல் கூட்டங்களில் சிறப்புரையாற்றினார். ஹிந்தி எதிர்ப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். ஹிந்தியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங்களில் பங்கேற்றதுடன், மாணவர்களிடமும் கருத்துப் பரப்பினார். ஓய்வுநேரத்தில் இதழ்களுக்குக் கட்டுரை, கவிதைகள் எழுதலானார். பாரதிதாசன், கம்பதாசன், கண்ணதாசன், வாணிதாசன், சுப்புரத்தினதாசன் (சுரதா) எனத் தங்கள் ஆசான்களுக்கும், தெய்வங்களுக்கும் அடியவர்களாகப் பல கவிஞர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் 'நாமார்க்கும் அடியவரல்லோம்' என்று தம்மை அடியவராக அல்லாமல் அரசனாக அறிவித்துக்கொண்டு கவிதை உலகில் நுழைந்தவர் முடியரசன் எனலாம். இவரது முதல் கவிதை "சாதி என்பது நமக்கு ஏனோ?" என்பது. இது அண்ணாவை ஆசிரியராகக் கொண்டிருந்த 'திராவிடநாடு' இதழில் வெளியானது. தொடர்ந்து பல கவிதைகள் அவ்விதழில் வெளியாகின. முதல் சிறுகதை 'கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி' போர்வாள் இதழில் வெளியானது. 'எக்கோவின் காதல்' என்ற கதை 'பிரசண்ட விகடன்' இதழில் வெளியானது.
நேரிய மொழி, பாங்கான சொற்கள், சீர்த்திருத்தக் கருத்துக்கள், தமிழ்ப்பற்று, இனிய மொழிநடை போன்றவற்றால் கவரப்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் இவரது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டனர். 'போர்வாள்', 'கதிரவன்', 'அழகு', 'முருகு', 'குயில்' போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின. அக்காலத்தின் பிரபல இலக்கிய சீர்த்திருத்த இதழான 'பொன்னி', இவரை 'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராக' அடையாளம் கண்டு, இவரது கவிதையை வெளியிட்டுச் சிறப்பித்தது.

1949ல், கலைச்செல்வியுடன் திருமணம் நிகழ்ந்தது. தமிழறிஞர் மயிலை சிவமுத்து அத்திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தினார். அது கலப்பு மணம் என்றாலும் காதல் மணம் அல்ல. இந்நிலையில், காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. 1949ல் அப்பணியில் சேர்ந்தார் முடியரசன். அது அவரது வாழ்வின் முக்கியமான காலகட்டம் ஆனது. கம்பனடிப் பொடி சா. கணேசன், வ.சுப. மாணிக்கம் போன்றோரது அறிமுகமும் நட்பும் கிடைத்தது. தனது பணியை பெருவிருப்புடன் செய்து வந்தவர், பணி ஓய்வு பெறும்வரை அப்பள்ளியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றினார். பல மாணாக்கர்களுக்குத் தமிழ்ப்பற்று வளரவும் காரணமானார்.

தாம் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொண்டது போலவே தம் மகவுகளுக்கும் குமுதம், பாரி, குமணன், அன்னம், செல்வம், அல்லி எனத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டினார். தம்மைப்போலவே, தம் மக்களுக்கும் கலப்புத் திருமணம் செய்துவைத்தார். இவருடைய அரும்பணியை, "சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை" என்று போற்றி வாழ்த்தினார் குன்றக்குடி அடிகளார்.



நாடெங்கும் பயணம் செய்து பேச்சரங்குகளில், கவியரங்குகளில் பங்கேற்றுத் தமிழுணர்வை ஊட்டினார். 'முடியரசன் கவிதைகள்', 'காவியப் பாவை', 'கவியரங்கில் முடியரசன்', 'பாடுங்குயில்', 'நெஞ்சு பொறுக்கவில்லையே', 'மனிதனைத் தேடுகின்றேன்', 'தமிழ் முழக்கம்', 'நெஞ்சிற் பூத்தவை', 'ஞாயிறும் திங்களும்', 'வள்ளுவர் கோட்டம்', 'புதியதொரு விதி செய்வோம்', 'தாய்மொழி காப்போம்', 'மனிதரைக் கண்டு கொண்டேன்' போன்றவை இவரது கவிதைத் தொகுதிகள். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'எக்கோவின் காதல்' என்ற தலைப்பில் நூலாகி உள்ளது. 'பூங்கொடி', 'வீரகாவியம்', 'ஊன்றுகோல்' போன்றவை இவரது காப்பிய நூல்களாகும். இவற்றில் 'பூங்கொடி' பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று. 'இளம்பெருவழுதி' என்பது கவிதை நாடகம். 'எப்படி வளரும் தமிழ்?', 'தமிழ் இலக்கணம்', 'பாடுங்குயில்கள்' போன்றவை கட்டுரைத் தொகுப்புகள். வள்ளல் வை.சு. சண்முகனார் பற்றி 'சீர்த்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார்' என்ற நூலை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை 'பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

'பூங்கொடி' பற்றி, தமிழறிஞர் கா. அப்பாத்துரை, "உலக மொழிக்காப்பியங்கள் மூன்றனுள் ஒன்றாக கருதப்பெறும் சிறப்புடையது இந்நூல்" என்கிறார். 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று பட்டம் அளித்துச் சிறப்பித்தார் அண்ணா. 1950ல், கோவையில் நிகழ்ந்த முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் இவர் பாடிய கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இவரது 'முடியரசன் கவிதைகள்' என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின் முதல்பரிசு கிடைத்தது. 'வீரகாவியம்' நூலுக்குத் தமிழக அரசின் சிறப்புப்பரிசு கிடைத்தது. 1987ல் தமிழக அரசின் பாவேந்தர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1988ல் கலைஞர் மு. கருணாநிதி, என்.டி. ராமராவ் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் இவருக்கு 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது. 'கவியரசு' என்னும் பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கினார். ஆசிரியப் பணிக்காகத் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருக்கிறார். இலக்கியப் பங்களிப்புகளுக்காக தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் தேடிவந்தது.

கடல் என்ற தலைப்பிலான கவிதையின் ஒரு பத்தி:
கற்றுணர்ந்த சான்றோரின் உள்ளம்போல்
கடலேநீ ஆழம் கொண்ட
பெற்றியுணர்ந் தாழிஎன்றார்; யாதும்மூர்
பிறரெல்லாம் கேளிர் என்ற
பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப்
பான்மையெனப் பரந்து நிற்கும்
ஒற்றுமையைக் கண்டன்றோ என்முன்னோர்
உனைப்பரவை என்று சொன்னார்.


இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளை சாகித்ய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பள்ளிப் பாட நூல்களிலும், சென்னை மாநிலக் கல்லூரி பாடத்திட்டத்திலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 1962ல் 'கண்ணாடி மாளிகை' என்ற படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால், திரையுலகம் இவரது கொள்கைகளுக்கு உகந்ததாக இல்லை என்பதாலும் அதன் பகட்டு, ஆடம்பரம் ஆகியவற்றின்மீது ஏற்பட்ட வெறுப்பாலும் இவர் அங்கே தொடரவில்லை.

தமிழ், தமிழர் உயர்வே தமது லட்சியம் என்று செயல்பட்ட இவர், டிசம்பர் 3, 1998 அன்று காலமானார். இவரது படைப்புகள் இவரது மறைவுக்குப்பின் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவரது நூல்கள் அனைத்தையும் 13 தொகுதிகளாக 'கவியரசர் முடியரசன் படைப்புகள்' என்னும் தலைப்பில் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய கவியரசர் முடியரசனுக்கு இது நூற்றாண்டு.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline