|
|
|
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்
என்ற நீதிநெறி விளக்கச் செய்யுளுக்கு வாழும் உதாரணம் கிருஷ்ணம்மாள்ஜெகன்னாதன். ஸ்வீடன் நாட்டால் வழங்கப்படும், நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் "வாழ்வுரிமை விருது" பெற்றிருக்கும் இவரது சாதனை மகுடத்தில், சமீபத்திய சிறகாக இந்திய அரசு 'பத்மபூஷண்' வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவர் 1986ம் ஆண்டிலேயே பத்மஸ்ரீ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை மக்களின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் இவர், ஜூன் 16, 1926 அன்று, திண்டுக்கல் மாவட்டம் அய்யன்கோட்டையில், ராமசாமி-நாகம்மை இணையருக்கு மகளாகப் பிறந்தார். பெரிய குடும்பம். தந்தை குறுவிவசாயி. சிறிது நிலம் வைத்திருந்தார். அந்த வருமானத்தில், வறிய சூழலில் கிருஷ்ணம்மாளின் குழந்தைப்பருவம் கழிந்தது. கிருஷ்ணம்மாளுடன் பிறந்தவர்கள் 12 பேர். அதில் 6 பேர் சிறுவயதிலேயே இறந்து போயினர். தாயும், தந்தையுடன் வயலுக்குச் சென்று உழைத்தார். கூலி வேலை செய்தார். ஆனாலும் வருமானம் போதவில்லை. தந்தையிடம் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் இருந்தது. அவர்களுக்குச் சிறுதானியக் கஞ்சியும், களியுமே அன்றாட உணவு. பொங்கல் மற்றும் திருவிழாக் காலத்தில் மட்டுமே அரிசிச் சோறு.
கல்வி பட்டிவீரன் பட்டி ஆரம்பப் பாடசாலையில் தொடக்கக் கல்வி பயின்றார். மேல்நிலைப் படிப்பு மதுரையில். ஆர்வமும், திறனும் கொண்ட கிருஷ்ணம்மாளுக்கு ஆசிரியர்கள் அன்பு காட்டினர். மேல்நிலைக் கல்வியை முடித்ததும் பிரபல டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவரும், சுந்தரம் ஐயங்காரின் மகளுமான சமூக சேவகர் டாக்டர் சௌந்தரம்மாளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது குடும்பப் பின்னணியையும். திறமையையும் ஆர்வத்தையும் அறிந்துகொண்ட சௌந்தரம்மாள், இவரைத் தனது மகள்போலப் பாவித்து ஊக்குவித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படிக்கவைத்தார். ஆர்வத்துடன் பயின்று பட்டம் பெற்றார் கிருஷ்ணம்மாள். மதுரை மாவட்டத்தின் முதல் பிற்பட்ட இனப் பட்டதாரி கிருஷணம்மாள்தான். தமிழகத்தின் முதல் பிற்பட்ட இனப் பட்டதாரியாகவும் இவரே கருதப்படுகிறார்.
தமிழக முதல்வருடன் கிருஷ்ணம்மாள்
காந்தியுடன்... சௌந்தரம்மாளின் அரவணைப்பில் வளர்ந்த கிருஷ்ணம்மாளுக்கு அவரே வழிகாட்டியாகவும் இருந்தார். அக்கிரமங்களை எதிர்க்கவும், அதை எதிர்த்து உறுதியுடன் வலிமையாகப் போராடவும் சௌந்தரம்மாளிடம் இருந்து கற்றுக்கொண்டார். அவருடன் இணைந்து சமூகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் மதுரை வந்த காந்திஜியிடம், கிருஷ்ணம்மாளைத் தன் வளர்ப்பு மகள் என்று அறிமுகப்படுத்திய சௌந்தரம்மாள், காந்தியுடனான சுற்றுப் பயணத்திலும் அவரது உதவியாளராகப் பங்குகொள்ள ஏற்பாடு செய்தார். காந்தியின் சகமனிதர் மீதான அன்பும், எளிய, தாழ்த்தப்பட்ட மக்களிடம் அவர் காட்டிய கருணையும் கிருஷ்ணம்மாளை வியக்க வைத்தன. காந்தியம் அவரை ஈர்த்தது. 1948ல் காந்தி கிராம ஆசிரமம் உருவானது. கிருஷ்ணம்மாள் அதன் செயலாளர் ஆனார். கூடவே அங்குள்ள பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
திருமணமும் சேவையும் சிறந்த காந்தியவாதியும் சமூக சேவகருமானஜெகன்னாதனை இவர் சந்தித்தார். எளிமையும், அன்பும், அடக்கமும் கொண்டிருந்தஜெகன்னாதனுக்கு இவர்மீது காதல் அரும்பியது. சௌந்தரம்மாள் உள்ளிட்டோரும் அதற்கு ஆதரவு தரவே, கிருஷ்ணணம்மாளும் உடன்பட்டார். ஆனால்,ஜெகன்னாதன் வீட்டார் சாதிப் பிரச்சனை காரணமாக ஒப்புக் கொள்ளவில்லை. மிகக் கடுமையாக அவர்கள் எதிர்த்ததால், கிருஷ்ணம்மாளும்ஜெகன்னாதனும், 1950 ஜூலை 6ம் தேதி மதுரையில் காந்திய சேவகர்கள் முன்னிலையில், எளிமையாக மாலைமாற்றி மணந்து கொண்டனர்.
இல்லற வாழ்விலும் சமூக சேவையே இவர்களது முதன்மைப் பணியானது. வினோபாவின் பூமிதான இயக்கம் கிருஷ்ணம்மாள் -ஜெகன்னாதன் இருவரையும் கவர்ந்தது. மணமான சிறிது நாட்களிலேயே வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பங்குகொள்ள உத்திரப்பிரதேசம் சென்றார்ஜெகன்னாதன். கிருஷ்ணம்மாள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயின்றார். டாக்டர் சௌந்தரம்மாள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். பட்டப்படிப்பில் சிறப்பாகத் தேர்ந்தார் கிருஷ்ணம்மாள்.
கணவரின் பிரிவால் வாடினாலும் இவர் பின்னர் அவருடன் தானும் இணைந்து வினோபாவின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தைக்கு பூமிகுமார் என்று பெயரிட்டு வாழ்த்தினார் வினோபா. தொடர்ந்து கணவர், கைக்குழந்தையுடன் கிராமம் கிராமமாக நடைப்பயணம் சென்று பூமிதான இயக்கத்துக்குப் பாடுபட்டார் கிருஷ்ணம்மாள்.
ஜெகந்நாதன் வடநாட்டில் பூமிதான இயக்கத்துக்காக உழைத்து வந்த நிலையில், அந்த இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தனி ஒருவராக முன்னெடுத்தார் கிருஷ்ணம்மாள். எங்கு ஏழைகள் பாதிக்கப்பட்டாலும் அங்கு முதல் ஆளாகச் சென்று நின்றார். சர்வோதய இயக்கத்தினருடன் இணைந்து சமூகப்பணிகளை மேற்கொண்டார்.
கணவர் ஜெகன்னாதன், கிருஷ்ணம்மாள்
நில உச்சவரம்புச் சட்டம் இந்நிலையில் நில உச்சவரம்புச் சட்டத்தை அரசு கொண்டுவந்தது. அதன்மூலம் தனிநபரின் நில உடைமைக்கு அரசு உச்சவரம்பு நிர்ணயித்தது. அதற்கு மேற்பட்ட உபரி நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தை அச்சட்டம் வழங்கியது. அதனால், பெருமளவு நிலம் வைத்திருந்த பண்ணையார்களும் ஜமீந்தார்களும் பதறினர். உடனடியாக நிலத்தை பினாமியாக நெருக்கமான உறவினர் பெயர்களில் எழுதி வைத்தனர். அவ்வாறு எழுதியும் எஞ்சிய நிலத்தைப் பலர் தங்கள் வேலையாட்களின் பெயரில் (அவர்களுக்குத் தெரியாமலேயே) எழுதி வைத்தனர். பாதுகாப்பிற்காக அரசியல் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சொகுசாக வாழ்ந்தனர். சிலர் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி அதன்மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இப்படியாக நிலம் அவர்கள் கையை விட்டுப் போகாமலேயே இருந்தது. சட்டத்தால் ஏழைகளுக்கு அதிகப் பயன் விளையவில்லை. |
|
நிலமீட்புப் போராளி வலிவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரும்நிலக்கிழார் ஒருவர் இப்படித் தான் அனுபவித்துக் கொண்டிருந்த கோவில் நிலம் உட்படப் பல நிலப்பகுதிகளை பினாமி பெயருக்கு மாற்றிச் சொகுசு வாழ்க்கை நடத்திவந்தார். இதையறிந்த கிருஷ்ணம்மாள் அந்த ஊருக்குச் சென்றார். முதல் அடியாக, அவ்வூரில் பாலர் பள்ளி ஒன்றை ஏற்படுத்திக் குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறந்தார். மெல்ல மெல்லப் பெற்றோர்களின் அறிவுக் கண்களையும் திறந்தார். நிலக்கிழாரின் அக்கிரமங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார். பரம்பரை பரம்பரையாக அவரது நிலங்களில் அடிமைகள்போல் வேலை செய்யும் அவர்களுக்கே சட்டப்படி அவை சொந்தம் என்றும், அவர்கள் பெயரில் அந்த நிலங்கள் பண்ணையாரால், அவர்களுக்கே தெரியாமல் பினாமியாக எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றும் புரியவைத்தார். மக்களை ஒன்றுதிரட்டி நிலமீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் நடந்த அந்தப் போராட்டத்தில் அவர் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டார். அவரது குடிசை பிய்த்தெறியப்பட்டது, அதற்குத் தீ வைக்கப்பட்டது, அவர்மீது வன்முறை ஏவப்பட்டது, குண்டர்களால் மிரட்டப்பட்டார். எல்லாவற்றையும் உறுதியோடு எதிர்கொண்டார்.
கணவர்ஜெகன்னாதனும் மனைவியின் அறப்போராட்டதில் துணைநின்றார். நீண்ட நாட்களுக்குப் பின் போராட்டம் வென்றது. யார் பெயரில் நிலம் இருந்ததோ அவரவருக்கே நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சுமார் 1,100 ஏக்கர் நிலம் ஏழைகள் கைகளுக்கு மாறின. அதுமுதல் "நிலமீட்புப் போராளி"யாகப் பெரிதும் அறியப்படலானார் கிருஷ்ணம்மாள்.
சத்யமேவ ஜயதே கோணியம்பட்டியில் கடனைக் கொடுத்து நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு கொடுமை செய்துவந்தார் ஒருவர். கிருஷ்ணம்மாள் அங்கு சென்று நிலைமையை ஆராய்ந்தார். அந்த ஊர் மக்கள் நிலக்கிழாருக்கு அஞ்சி வாழ்ந்தனர். கொடுத்த கடனுக்காக நிலத்தை எழுதிக் கொடுத்துவிட்டு அடிமை வேலை செய்துவந்தனர். அவர்களை ஒன்று திரட்டும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர்கள் பெற்ற அனைத்துக் கடனையும் கிருஷ்ணம்மாளே அடைத்து அவர்களது நிலத்தை மீட்க முன்வந்தார். ஆனால் நிலக்கிழார் அதை ஏற்கவில்லை. தன்னிடம் நிலத்தை விற்கவந்தவரே வந்து கேட்டால்தான் தரமுடியும் என்றார். மக்களோ அஞ்சினர். நிலத்தை மீட்க முன்வரவில்லை. கிருஷ்ணம்மாளின் போராட்டம் தொடர்ந்தது.
பல மாதங்களுக்குப் பின் இளைஞர் ஒருவர் கடனை அடைத்து நிலத்தை மீட்க முன்வந்தார். கிருஷ்ணம்மாள் அவருக்குத் தேவையான தொகையை அளித்தார். ஆனால் அந்த இளைஞர் நிலக்கிழாரைச் சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். பழி கிருஷ்ணம்மாள் மீது விழுந்தது. மக்கள் ஒன்று திரண்டு அவரை எதிர்த்தனர்.
நிலைமையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணம்மாள், மனம் தளரவில்லை. தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். நாளடைவில் மக்கள் உண்மையை உணர்ந்தனர். கிருஷ்ணம்மாளின் பின் ஒன்று திரண்டு நிலக்கிழாருக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். நீண்ட போராட்டத்தின் இறுதியில் "சத்யமேவ ஜயதே" என்பதற்கேற்ப அறம் ஜெயித்தது. அவர்கள் நிலம் திருப்பித் தரப்பட்டது.
இப்படிச் செல்லுமிடமெல்லாம் சத்தியாக்கிரகம், போராட்டம் என்று காந்தியின் அகிம்சா வழியிலேயே போராடி ஏழைகளின் வாழ்வுயர வழிகாட்டினார் கிருஷ்ணம்மாள். அதுபோல, 1957ல் நிகழ்ந்த முதுகுளத்தூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை அளித்து ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தி, அவர்கள் பழைய நிலைமையை அடையும்வரை உதவினார்.
கீழ்வெண்மணியில்... இக்காலகட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் நிலக்கிழாரால் மிகப்பெரிய வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. பிற்பட்ட ஏழைகள் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். செய்தி அறிந்த கிருஷ்ணம்மாள் துடித்துப் போனார். திருநெல்வேலியில் இருந்த அவர், சமூக சேவையில் ஈடுபாடுடைய குன்றக்குடி அடிகளாரைத் தொடர்புகொண்டார். அடிகளார்ஜெகன்னாதனுடன் குன்றக்குடிக்கு வருமாறும் மூவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்டு கீழ்வெண்மணி சென்ற கிருஷ்ணம்மாள் அங்கிருந்த அவலநிலையைக் கண்டு மனம் கொதித்தார். ஏழைகள் அங்கே உணவின்றித் தவித்தனர். முதலில் குழந்தைகளுக்குப் பால் பவுடர் அளித்துப் பசியாற்றிய கிருஷ்ணம்மாள், அரிசி, துணிமணி போன்றவற்றையும் அளித்தார். தொண்டர்களுடன் அங்கேயே தங்கி அம்மக்கள் மனதளவிலும், உடலளவிலும் மீண்டு வரும்வரை பணிகளைத் தொடர்ந்தார். குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பது, பாய் முடைதல், தையல் போன்ற சிறு தொழில்களைப் பெண்கள் செய்யக் கைத்தொழில் பயிற்சியும் அளித்தார்.
பாதிக்கப்பட்ட 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலத்தை அளிக்க அரசின்மூலம் கடும் அழுத்தம் தந்தார். மூன்று ஆண்டுகள் வரை அங்கேயே தங்கி இந்த முயற்சிகளில் ஈடுபட்டார். இறுதியில் நிலம் அந்த மக்களின் கைக்கு வந்தது. பின்னரே அங்கிருந்து கிளம்பினார்.
கிருஷ்ணம்மாள் நிலமீட்புப் போராளி - The Color of Freedom
பீஹாரிலும்... தமிழகம் முழுவதும் பயணித்துப் போராட்டத்தை முன்னெடுத்தார் கிருஷ்ணம்மாள். ஆனால், இவரது போராட்டக்களம் தமிழகத்தோடு நின்றுவிடவில்லை. அது இந்தியாவெங்கும் விரிந்தது.
பீஹாரில் மடாதிபதி ஒருவர் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோதமாக அபகரித்து வைத்திருந்தார். அந்நிலத்தின் உரிமையாளரான ஏழைகளைத் தனது அடிமைபோல் நடத்திவந்தார். இதனை அறிந்த கிருஷ்ணம்மாள், கணவர்ஜெகன்னாதனோடு பீஹாருக்குப் புறப்பட்டார். அங்குள்ள மக்களை ஒன்றுதிரட்டி அந்த மோசடி மனிதருக்கு எதிராகப் போராடத் தொடங்கினார். பல எதிர்ப்புகளுக்குப் பின் அவர்களது போராட்டம் வென்றது. சுமார் 23,000 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன.
உழுபவனுக்கே நிலம் சர்வோதய இயக்கத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியேறிய கிருஷ்ணம்மாள் -ஜெகன்னாதன் இணையர் 'Land For Tillers' என்ற அமைப்பைத் தொடங்கினர். நிலமற்ற ஏழைகளுக்கு அரசிடமிருந்தும் நில உரிமையாளர்களிடம் இருந்தும் நிலத்தைப் (போராடியாவது) பெற்று, அதை அவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கியப் பணி. இப்படி தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணம்மாள்ஜெகன்னாதன்.
கணவரின் மறைவு கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் இணையருக்கு வயது ஒரு தடையாக இல்லை. இறால் பண்ணைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் அதை எதிர்த்து தீவிரமாகப் போராடினார்ஜெகன்னாதன். அப்போது அவருக்கு வயது 85. கிருஷ்ணம்மாள் அவருக்கு உறுதுணையாக இருந்தார். தொடர்ந்த போராட்டங்கள், சிறைவாசம், கொடுமைகள் போன்றவற்றால்ஜெகன்னாதனின் ஒரு கண் பாதிக்கப்பட்டது. செவித்திறன் பழுதானது என்றாலும் அவர் உழைக்க அஞ்சவில்லை. தொடர்ந்து களச்செயல்பாட்டில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். உடல் நலிவுற்று, 99 வயதில், 2013ல்ஜெகன்னாதன் காலமானார். அது கிருஷ்ணம்மாளுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் தொடர் சமூகச் செயல்பாட்டால் அதிலிருந்து மீண்டார். முன்னிலும் தீவிரமாகக் களப்பணியாற்றினார். நிலமீட்பு. ஏழை மக்கள் வாழ்க்கை உயர்வு. அவர்களது கல்வி, கிராமப் பொருளாதார முன்னேற்றம் இவற்றிற்கு மேலும் தீவிரமாக உழைக்கத் துவங்கினார்.
குடிசை வீடுகளை, ஓட்டுவிட்டுகளாக, கல் வீடுகளாக மாற்றுவதில் முனைப்புக் காட்டினார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்கும் பணியில் இறங்கினார். எழைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், சொந்தத் தொழில் செய்யவும், உயர்கல்வி கற்கவும் பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். தான் தானமாகப் பெற்ற 10,000 ஏக்கர் விளைநிலத்தை ஏழைகளுக்கே பகிர்ந்துகொடுத்தார்.
இவரது சேவைகளைப் பாராட்டிப் பல விருதுகள் தேடிவந்தன. 'மாற்று நோபெல் பரிசு' எனக் கருதப்படும் Right Livelihood award என்ற ஸ்வீடன் நாட்டின் விருதைப் பெற்றவர், அந்தப் பெரும் பரிசுத்தொகையை எளியவர்கள் வசிக்க வீடுகட்டித் தர அளித்துவிட்டார். 'இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க்' என்ற பட்டமும் இவரைத் தேடிவந்தது. சியாட்டில் பல்கலைக்கழகம் வழங்கிய OPUS விருது, தமிழக அரசின் அம்பேத்கர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, காந்திகிராமம் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், சிறந்த பெண்மணி விருது, சாதனையாளர் விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது எனப் பல கௌரவங்களைப் பெற்றுள்ள இவருக்கு, இந்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் கொடுத்துச் சிறப்பித்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த லாரா கோப்பா (Laura Coppo) கிருஷ்ணம்மாள் மற்றும்ஜெகன்னாதனை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். அது, 'The Color of Freedom' என்ற தலைப்பில் அது நூலாக வெளியானது. கிருஷ்ணம்மாளின் மகன் பூமிகுமார், மகள் சத்யா இருவருமே மருத்துவர்கள்.
குடிசைகளற்ற தமிழகம் மற்றும் இந்தியாவே இவரது தற்போதைய கனவு, லட்சியம் எல்லாம். அதற்காகவே உழைத்து வருகிறார். ஒரு உண்மையான சமூகப் போராளியின் வாழ்வும் அணுகுமுறையும் எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதற்கான நேரடிச் சான்று கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனின் வாழ்க்கை.
பாசு.ரமணன் |
|
|
|
|
|
|
|
|