Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2018|
Share:
"ஏரிக்கரையின் மேல போறவளே பெண்மயிலே..", "மணப்பாறை மாடுகட்டி...", "மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா...", "சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா", "அசைந்தாடும் தென்றலே நீ தூது செல்லாயோ", "நிலவோடு வான்முகில் விளையாடுதே", "பாட்டும் நானே...", "மன்னவன் வந்தானடி...", "ஒருநாள் போதுமா...", "பார்த்தேன் சிரித்தேன்", "சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா", "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.." போன்ற காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களைத் தந்தவர் கிருஷ்ணன்கோவில் வெங்கடாசலம் மகாதேவன் என்னும் கே.வி. மகாதேவன். இவர் மார்ச் 14, 1918 அன்று, நாகர்கோவில் அருகில் உள்ள கிருஷ்ணன்கோவில் என்னும் சிற்றூரில், வெங்கடாசல பாகவதர் - லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை கோட்டுவாத்தியம் வாசிப்பதில் சிறந்தவர். தாத்தா ராம பாகவதரும் கர்நாடக இசையில் தேர்ந்தவர். திருவனந்தபுரம் அரசவையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர். மகாதேவனுக்கும் இசை ஆர்வம் முகிழ்த்ததில் வியப்பென்ன? தந்தையிடமும், தாத்தாவிடமும் ஆரம்பத்தில் இசை பயின்றபின் பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் இசைக்கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அங்கரை விஸ்வநாத பாகவதரிடம் குருகுலவாசம் செய்து கர்நாடக இசையை நன்கு கற்றுத் தேர்ந்தார். குருவுடன் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். கூடவே நாடகத்தில் ஆர்வம் உண்டானது. சிறார்களைக் கொண்டு நடத்தப்பெற்ற ஸ்ரீ பாலகந்தர்வ கானசபாவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மகாதேவனுக்கு இனிய குரல் இருந்தது. மென்மையான உடலமைப்பின் காரணமாகப் பெண்வேடம்தான் கிடைத்தது என்றாலும் ஆர்வத்துடன் நடித்தார். சுமார் பத்தாண்டுக் காலம் நாடகங்களில் நடிகராக, பாடகராக, பின்பாட்டுப் பாடுபவராக, இசையமைப்பாளராக வாழ்க்கை தொடர்ந்தது. ஆனால் ஒரு கால கட்டத்தில் உரிமையாளர்களால் நாடக சபாவைத் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது. அதனால் வேறு வேலை தேடவேண்டி வந்தது. உணவுக்குப் பிரச்சனை இல்லாத ஹோட்டல் தொழிலாளி பணியை ஏற்றார். சர்வராகப் பணியாற்றிக் கொண்டே வேறு சில நாடகக் குழுக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியும் வந்தார்.

Click Here Enlargeஇவரது திறமையையும், நாடக, திரைப்பட ஆர்வத்தையும் முழுக்க உணர்ந்திருந்த நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு, வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவிற்கு இவரைப் பரிந்துரைத்தார். அங்கு சில ஆண்டுக் காலம் துணைநடிகராக நடித்தார். அங்கே இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணத்துடன் நட்பு ஏற்பட்டது. மகாதேவனின் பாடும் திறமையையும் இசையமைக்கும் திறமையையும் நன்கறிந்த டி.ஏ. கல்யாணம் அவரை உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்த 'மனோன்மணி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கல்யாணத்திற்குக் கிடைத்தது. இசை உதவி: மகாதேவன். அப்படத்தில் பி.யு. சின்னப்பா பாடிய "மோகனாங்க வதனி" என்ற பாடலுக்கு மகாதேவனே இசை அமைத்தார். அதுவே அவரது முதல் திரைப்படப் பாடல். அப்பாடலைக் கேட்ட பி.யு. சின்னப்பா இவரைப் பாராட்டியதுடன், படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸில் நிரந்தர இசையமைப்பாளராக அமர்த்திக்கொள்ள அதன் அதிபர் டி.ஆர். சுந்தரத்திற்குப் பரிந்துரைத்தார். சின்னப்பா அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டிவிடுபவர் அல்ல; சிபாரிசு செய்பவரும் அல்ல. உண்மையான திறமை இருப்பவர்க்கே சின்னப்பாவின் ஆதரவு இருக்கும் என்பதால் சுந்தரமும் மகாதேவனைத் தனது திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். அது மகாதேவனின் வாழ்வில் முக்கிய திருப்புமுனை. மாதச்சம்பளம் நூறு ரூபாய். அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை. அதுமுதல் இசையமைப்பாளராக கே.வி. மகாதேவனின் வாழ்வு தொடங்கியது. அப்போது மகாதேவனுக்கு வயது 24தான். தொடர்ந்து டி.ஏ. கல்யாணத்துடன் இணைந்து 'மாயஜோதி', 'சிவலிங்க சாட்சி' போன்ற படங்களுக்கு இசையமைத்தார். ஸ்ரீ பால கந்தர்வ கானசபாவின் 'அக்னி புராண மகிமை' நாடகம் திரைப்படமானது. ச.து.சு. யோகியார் அப்படத்தின் இயக்குநர். டி.ஏ. கல்யாணம் இசையமைப்பாளர். கே.வி. மகாதேவன் அப்படத்தின் பல பாடல்களுக்கு இசையமைத்தார். அப்படம் வெளியாகி நன்கு ஓடியது. தொடர்ந்து கல்யாணத்திற்குப் பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. உதவியாளராக மகாதேவனின் பயணம் தொடர்ந்தது.

Click Here Enlargeபின்னர் கல்யாணத்திடமிருந்து விலகிய மகாதேவன் எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களிடமும் சிலகாலம் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றினார். எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிக்காக வாசித்த அனுபவமும் உண்டு. மகாதேவனுக்குத் தனித்து இசையமைக்கும் வாய்ப்புகள் வரத் துவங்கின. 'பக்த ஹனுமான்', 'நல்ல காலம்', 'மதன மோகினி' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 1945ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸின் 'பர்மா ராணி' இவரது பேர் சொல்லும் படமாக அமைந்தது.

அந்தக் காலத்தில் ஜி. ராமநாதன் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். அவரைத் தனது குருஸ்தானத்தில் வைத்து மதித்தார் மகாதேவன். அவருடன் சேர்ந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறார். ஜி. ராமநாதனைப் போலவே கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்தார். அதேசமயம் காலமாற்றத்திற்கேற்ப மெல்லிசை, துள்ளலிசைப் பாடல்களுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். "ஜி.ஆர். பாணி" என்பது போல "மகாதேவன் பாணி" என்பதும் பிரசித்தமானது. மிகக்குறைந்த இசைக் கருவிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய 'ஹிட்' பாடல்களைக் கொடுத்தவர் என்று மகாதேவனைச் சொல்லலாம். டி.கே. புகழேந்தி இவரது உதவியாளராகச் சேர்ந்தது முதல் இவரது இசைப்பயணம் மேலும் புகழுடன் தொடர்ந்தது. மகாதேவன் இசையமைத்த முதல் எம்.ஜி.ஆர். படம் 'குமாரி'. தொடர்ந்து பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு இசையமைத்து அவற்றின் வெற்றிக்குக் காரணமானார். குறிப்பாக சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த படங்கள் பலவற்றிற்கும் இசை மகாதேவன்தான். 'தாய் சொல்லைத் தட்டாதே'. 'தாயைக் காத்த தனயன்' போன்ற படங்கள் தொடங்கி, 'அடிமைப்பெண்', 'நல்ல நேரம்', 'பல்லாண்டு வாழ்க' வரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'திருவிளையாடல்', 'கந்தன் கருணை', 'சரஸ்வதி சபதம்', 'தில்லானா மோகனாம்பாள்', 'குங்குமம்', 'இருவர் உள்ளம்', 'வசந்த மாளிகை' என நடிகர்திலகம் சிவாஜிக்கும் தனது இசையமைப்பின் மூலம் ஏராளமான வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார்.

Click Here Enlargeபி.யு. சின்னப்பா, எம்.கே.டி. பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், டி.ஏ. பெரிய நாயகி, டி.வி. ரத்தினம் என அந்தக் காலத்து ஜாம்பவான்கள் தொடங்கி டி.எம்.எஸ்., கண்டசாலா, பி.பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலாவுடன் மட்டுமல்லாது எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், எல்.ஆர். ஈஸ்வரி என மூன்றாம் தலைமுறைப் பாடகர்களுடனும் அவரது இசைப்பயணம் தொடர்ந்தது. 'ஆயிரம் நிலவே வா' பாடலின் மூலம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் மகாதேவன் தான். (படம்: அடிமைப்பெண்) லூர்து மேரி ஈஸ்வரியை எல்.ஆர். ஈஸ்வரியாகப் பெயர் சூட்டி முதன்முதலில் பின்னணிப் பாடகியாக தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகம் செய்தவரும் இவரே (படம்: நல்ல இடத்து சம்பந்தம்). ஜெயலலிதாவை முதன்முதலாகச் சொந்தக் குரலில் "அம்மா என்றால் அன்பு" என்ற பாடலைப் பாடவைத்தவரும் மகாதேவனே! 'பாட்டுக்கு மெட்டு' என்பதே மகாதேவனின் கொள்கை. பாடல் வரிகள் இசையமைப்புக்குப் பொருந்தி வராவிட்டால் பாடலாசிரியரை அழைத்துப் பாடல் வரிகளை மாற்றச் சொல்லமாட்டார். மாறாக, அப்பாடல் வரிகளை பாடகரைக் கொண்டு விருத்தமாகப் பாட வைத்துவிடுவார். பல பழைய படங்களில் இவரது இந்தப் பாணியைப் பார்க்கலாம். இதுவே பிற்காலத்தில் பாடலுடன் வசனங்களும், உரையாடல்களும் கலந்து இடம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இசையமைப்பதற்கு அரிதான கர்நாடக ராகங்களைத் திரையிசையில் கொண்டு வந்தவர் மகாதேவன். கர்நாடக சங்கீதத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் என்றாலும், நாட்டுப்புற இசை, மெல்லிசை போன்றவற்றிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். "எலந்தப் பழம்..", "மாமா மாமா..." போன்ற பாடல்கள் அதற்குச் சான்று. 'டவுன்பஸ்', 'முதலாளி', 'மக்களைப் பெற்ற மகராசி' போன்ற பல படங்களின் வெற்றிக்கு இவரது இசை உதவியிருக்கிறது.

கண்ணதாசன் மகாதேவனுக்கு மிகவும் பிடித்த கவிஞர். கண்ணதாசனும் இவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். "ஒரு கட்டுரையைக் கொடுத்தால் கூட அதற்கு ஒரு அழகிய இசைவடிவம் கொடுத்து விடுவார்" என்பது மகாதேவன் பற்றிய கண்ணதாசனின் கருத்து. அதே சமயம் வாலி, நா. காமராசன், பூவை. செங்குட்டுவன், புலமைப்பித்தன் எனப் பல பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் மகாதேவன். "திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்" (பூவை. செங்குட்டுவன்)., "ஒன்றே குலம்என்று பாடுவோம்" (புலமைப்பித்தன்), "போய்வா நதியலையே..".

Click Here Enlargeமகாதேவன் பல்வேறு இடர்களை எதிர்கொண்டே உயர்நிலையை அடைந்தார். இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில், "நான் மெட்ராஸ்லே பல ஓட்டல்களில் சர்வராக்கூட வேலை செய்திருக்கேன். அந்த நாள்லே ஹார்பருக்குப் பக்கத்திலிருந்து அரை நிஜார், பனியனோடு சைக்கிள்லே தினமும் சூளைக்குப் போவேன். லாரி சம்பந்தமா ஏதோ சீட்டு கொடுப்பாங்க. அதைக் கொண்டு போய்க் கொடுக்கணும்! மெஸஞ்சர் மாதிரி வேலை. அந்த நாளிலே கிராமபோன் ரிக்கார்டு எடுக்க டைமிங் வாத்தியம்கூட வாசிச்சிருக்கேன். அதுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு பக்கத்துக்கு எனக்குப் பத்தணாவோ பன்னிரண்டணாவோ தருவாங்க! இதையெல்லாம் சொல்ல நான் வெட்கப்படவே மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்து பணம் சம்பாதிச்சாலும், அதிலே தப்பு இல்லை. எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிகளிலே வாசிச்சிருக்கேன். வேல் பிக்சர்ஸ்லே துணை நடிகனா மாசம் 15 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். நாடகங்களிலே ஸ்த்ரீபார்ட் போட்டிருக்கேன்! கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியிருக்கேன்" என்று கூறியிருக்கிறார்.

ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில் சிறப்பாக இசையமைத்தவராக மகாதேவன் போற்றப்படுகிறார். இவரது திரையிசைச் சாதனைகளுக்காக 'திரையிசைத் திலகம்', 'இசைச் சக்கரவர்த்தி', 'ஸ்வரப்பிரம்மம்' என்று பல பட்டங்களும் விருதுகளும் தேடிவந்தன. 'கந்தன் கருணை' படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருது கிடைத்தது. 1967ல் முதன்முதலில் சிறந்த இசையமைப்பாளருக்கான அந்த விருதை, முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் பெற்ற இசையமைப்பாளரும் மகாதேவனே! தொடர்ந்து 'அடிமைப்பெண்' படத்திற்காகத் தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதும் இவருக்குக் கிடைத்தது. 1980ல் 'சங்கராபரணம்' படத்திற்காகத் தேசிய விருது இவருக்குக் கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளருக்கான 'ஃபிலிம்பேர்' விருது, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது உள்படப் பல விருதுகளையும் கௌரவங்களையும் மகாதேவன் பெற்றுள்ளார்.

Click Here Enlarge1942ல் மனோன்மணியில் துவங்கிய இவரது இசைப்பயணம் 1992ல் முடிவுற்றது. 1990ல் 'முருகனே துணை' என்ற படத்துடன் தனது இசையமைப்புப் பணியை நிறுத்திக்கொண்டார் மகாதேவன். நீண்ட 50 ஆண்டு இசைப்பயணத்தில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 1500க்கு மேல் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் மட்டும் 218 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 'மதனமோகினி' திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மேலும் சில படங்களிலும் பின்னணி பாடியுள்ளார். இவரது இசையமைப்பில் இவரது குருநாதர் ஜி. ராமநாதன் பாடியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. 'அல்லிபெற்ற பிள்ளை' என்ற படத்தில் "எஜமான் பெற்ற செல்வமே" என்று 'குதிரை' பாடுவதாக வரும் பாடலை மூத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் பாடியது மகாதேவனின் மீது அவர் கொண்ட அன்பிற்கும் மதிப்பிற்கும் சான்றாகும். அவர் பாடிய முதல் பாடலும் அதுதான்.

இசையையே உயிர்மூச்சாகக் கொண்ட மகாதேவன் ஜூன் 21, 2001 அன்று காலமானார். மகாதேவன் மறைந்தாலும், "அமுதும் தேனும் எதற்கு", "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா", "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா", "ஆசையே அலைபோலே", "கங்கைக் கரைத் தோட்டம்", "கலைமகள் கைப்பொருளே", "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை", "சங்கரா...", "பூந்தேனில் கலந்து", "சொர்க்கத்தின் திறப்பு விழா" போன்ற பாடல்கள் என்றும் அவர் பெருமையை இசைத்தபடி இருக்கும்.

இவ்வாண்டு (2018) அவரது நூற்றாண்டு திரையிசை ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline