Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
Tamil Unicode / English Search
முன்னோடி
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2018|
Share:
அக்காலத்தின் மிகச்சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவர் அவர். அவர் பாடப்போகிறார் என்றாலே அரங்குகள் நிரம்பி வழியும். சக கலைஞர்கள் உட்படப் பிரபலங்கள் பலரும் முன் வரிசையில் அமர்ந்து பாடலைக் கேட்பர். ஒருமுறை அவர் பாடியிருந்த "எவரனி" என்ற கீர்த்தனையின் இசைத்தட்டு வெளியாக இருந்தது. அதற்கான ஒப்பந்தத்தை அவர் முடித்திருந்தார். இசைத்தட்டு வெளியிடும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் சில இசைத்தட்டுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இசைத்தட்டைக் கேட்டதும் திகைத்துப் போய்விட்டார். அவர் சமீபத்தில் பாடிய அதே 'எவரனி' கீர்த்தனையை, அவரைவிட மிக அழகாக, அற்புதமாக, உள்ளத்தை உருக்கும் விதத்தில் பாடியிருந்தார் இன்னொரு கலைஞர்.

கம்பீரமான அந்தக் கலைஞரின் குரலையும், அதன் பாவத்தையும், இசையையும் கேட்டு மயங்கிய இவர், தான் பாடி ஒலிப்பதிவு செய்திருந்த இசைத்தட்டு வெளிவராமல் உடனடியாக நிறுத்திவிட்டார். அதற்காகத் தான் பெற்ற முன்பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டார். தன் பாடல் வெளியானால், அது அந்த இசைக்கலைஞரின் குரலோடு ஒப்பு நோக்கப்படும், அது அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கருதியே அவ்வாறு செய்தார்.

அந்தக் கீர்த்தனையைத் தன்னைவிடச் சிறப்பாகப் பாடியிருந்த அந்தப் பாடகரை நேரில் சந்தித்து, "நல்லவேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகத் துறைக்குள் நுழையாமல் சங்கீதத் துறைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ கடையைக் கட்டியிருப்போம். என்ன அற்புதமான சாரீரம் உங்களுக்கு" என்று வியந்து பாராட்டினார்.

அவரால் அப்படிப் பாராட்டப் பெற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா. இப்படிப் பெருந்தன்மையுடன் சக கலைஞரை மனமுவந்து பாராட்டியவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். இவர், 1876ம் வருடம் நவம்பர் மாதம் பதினைந்தாம் நாள் திருநெல்வேலியை அடுத்த ஹரிகேசநல்லூர் என்ற ஊரில் லிங்கமையர் - ஆனந்தவல்லி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தாய்வழித் தாத்தாவின் முத்துசுப்பிரமணியன் என்ற பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. முத்தையா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அவ்வூரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். எட்டு வயது நடக்கும்போது தந்தையை இழந்தார். மாமா லக்ஷ்மணசூரி இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ் மற்றும் வடமொழியில் தேர்ந்த அறிஞரான லக்ஷ்மணசூரி, இளவயது முத்தையாவுக்குத் தாமறிந்திருந்த சாத்திரங்கள் அனைத்தையும் போதித்தார். சமஸ்கிருதம், வேதாந்தம், இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் மாமாவிடம் கற்றார் முத்தையா. தக்க காலத்தில் அவருக்கு உபநயனமும் செய்விக்கப்பட்டது. சாத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் பயிலலாம்; ஆனால், வேதத்தைச் சிறுவயதிலேயே கற்பதுதான் சிறந்தது என்று கருதிய லக்ஷ்மணசூரி, முத்தையாவை திருவையாற்றில் முத்து கனபாடிகள் நடத்திவந்த பாடசாலையில் சேர்த்தார். உரிய காலத்தில் 'க்ரமம்' வரை கற்றுத் தேர்ந்தார்.

வேத பாடசாலைக்கு எதிரே சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சத்குரு தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சாம்பசிவ ஐயர் இசை வகுப்புகள் நடத்திவந்தார். வேதத்தோடு நாதமும் சிறுவனான முத்தையாவைக் கவர்ந்தது. ஐயரின் சீடராகச் சேர்ந்தார். முத்தையாவின் மேதைமையையும், எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலையும் சோதித்தறிந்த சாம்பசிவ ஐயர், தாமறிந்த அனைத்தையும் சீடருக்குக் கற்பித்தார். இசை நுணுக்கங்களைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தார் முத்தையா. கேட்டோர் மெய்மறந்து அமர்ந்துவிடுமளவுக்கு இனிமையான குரல் வளம் அவருக்கு அமைந்திருந்தது. குருவுடன் சென்னை உட்படப் பல இடங்களுக்குச் சென்று வந்தார். கிட்டத்தட்ட பத்து வருடம் குருகுலவாசம் செய்தார். திடீரென குரு சாம்பசிவ ஐயர் காலமானதால், ஆதரிப்பார் யாருமின்றிச் சோகத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பினார். மாமன் மகளான சிவகாமியை மணந்தார். தினந்தோறும் அசுர சாதகம் செய்து வந்தார்.

விடியற்காலையில் எழுவார். காலைக் கடன்களை முடிப்பார். கோயில் மண்டபத்திற்குச் சென்று சாதகம் செய்வார். அவர் குரலைக் கேட்டே ஊர் கண்விழிக்கும். அவரது திறமை பலருக்கும் தெரிய வந்தது. ராமநாதபுரம் அரசர், எட்டயபுரம் ஜமீந்தார் உள்ளிட்ட பலர் இவரது கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து ஆதரித்தனர். தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். ரசிகர்களால் அன்போடு 'முத்தையா பாகவதர்' என்று அழைக்கப்பட்டார். தானே பல கீர்த்தனைகளை இயற்றும் வல்லமை இவருக்கு இருந்தது.

ஒரு சமயம் மைசூர் சமஸ்தானத்தில் நாகசுர வித்வான் பொன்னையா பிள்ளை, முத்தையா பாகவதரின் கீர்த்தனை ஒன்றை வாசித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் கிருஷ்ணராஜ உடையார், அதனை இயற்றியது யார் என்று வினவினார். முத்தையா பாகவதர் என்று அறிந்ததும் அவரைச் சந்திக்க ஆவல் கொண்டார். பொன்னையா பிள்ளையும், பாகவதர் மன்னரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

தனக்குச் சரியாக பாகவதருக்கும் ஆசனம் அளித்து கௌரவித்த மன்னர் பாடுமாறு சொன்னார். பாகவதர் பாடினார். அது கேட்டு மன்னர் மனம் மகிழ்ந்தார். பாகவதர் பாடப்பாட நெகிழ்ந்தார். உள்ளம் உருகினார். கண் கலங்கினார். பாகவதர் பாடி முடித்ததும் அவருக்குப் பொன்னாடை போர்த்தி 'காயக சிகாமணி' என்ற பட்டத்தை அளித்தார். அத்துடன், பொன், பொருள், ஆடைகள், ரத்தினத் தோடா, ரத்தினப் பதக்கம் ஆகியவை வழங்கி மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்தார். அதுமுதல் மைசூரில் பாகவதரின் வாழ்க்கை தொடர்ந்தது. கன்னட மொழியை வெகுவிரைவில் கற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று சாமுண்டி மலைக்குச் சென்று தேவியைத் தரிசித்து வருவார். அப்போது அவரே பூஜை செய்ததுடன் பல்வேறு கீர்த்தனைகளையும் இயற்றிப் பாடுவார். மைசூரில் வாழ்ந்த காலத்தில் ஒரு சமயம் தம் குலகுருவான சிருங்கேரி ஆச்சாரியாரைத் தரிசிக்கச் சென்ற பாகவதர், அவர்முன் தான் இயற்றிய 'சிவ அஷ்டோத்திர' கீர்த்தனைகளை பக்தியுடன் பாடி, குருவிடமிருந்து மரகதலிங்கத்தைப் பரிசாகப் பெற்றார்.

ஒரு சமயம் மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜ உடையாருக்கு உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாகி விட்டார். அரண்மனை வைத்தியர்கள் கைவிட்டு விட்டனர். தகவல் அறிந்த பாகவதர் ஓடோடி வந்தார். மன்னரின் நிலை கண்டு மனம் உருகி, சாமுண்டீஸ்வரி அம்பாள் மீது நிரோஷ்டமாக (உதடுகள் ஒட்டாமல் வார்த்தைகளை அமைத்துப் பாடுவது) "சாஜ ராஜ ராதிதே..." என்ற பாடலைப் பாடி வேண்டுகோள் வைத்தார். மன்னரும் பிழைத்துக்கொண்டார். அந்த அளவுக்கு தெய்வீக ஆற்றல் மிக்கவராக இருந்தார் பாகவதர். ஸ்ரீ சாமுண்டேஸ்வரி மீது இவர் இயற்றிய 'ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அஷ்டோத்திர கீர்த்தனைகள்' மிகவும் புகழ்பெற்றதாகும். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரே இரவில் இயற்றப்பட்ட நூறு பாடல்களாகும் இவை.
நாளடைவில் இவருக்குத் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு அங்கு சென்ற பாகவதர், மிகச் சிறப்பாகப் பாடி மன்னரின் மனம் கவர்ந்தார். 'அரசவைக் கவிஞர்' என்ற அங்கீகாரம் அங்கும் இவருக்குக் கிடைத்தது. மன்னர் ஸ்ரீ சித்திரைத் திருநாள் மகாராஜா ஸ்ரீபாலராம வர்மா, ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மகாராஜா இயற்றிய பல கீர்த்தனைகளை ஸ்வரஸ்தானங்களுடன் அச்சிட்டு வெளியிடுமாறு பாகவதவரிடம் வேண்டிக்கொண்டார். பாகவதரும் அப்பணியைத் திறம்படச் செய்து முடித்தார். மேலும் ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் பெயரில் அமைந்த இசைக்கல்லூரிக்கு முதல்வராகவும் முத்தையா பாகவதரை நியமித்தார் மன்னர். பாகவதர் அதனை ஏற்று, மிகச் சிறப்பாகப் பணிபுரியத் தொடங்கினார்.

ஒரு சமயம் முத்தையா பாகவதர், தஞ்சாவூர் சென்றிருந்தபோது கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் ஹரிகதையைக் கேட்க நேர்ந்தது. தாமும் அதுபோல ஹரிகதை செய்ய ஆவல் கொண்டார். அப்போது தஞ்சாவூரில் வசித்து வந்த தமது மாமா லக்ஷ்மணசூரியிடமிருந்து அதன் நுணுக்கங்களைப் பயின்றார். 1907ல் சென்னைக்கு வந்தபோது ஹரிகதா வித்வான் ஸ்ரீ பட்ஜியைச் சந்தித்து அவரிடமிருந்து மகாராஷ்டிர பாணி ஹரிகதாவைக் கற்றார். ஹரிகதை நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பாடல்களே அப்போது அதிகம் பாடப்பட்டன. பாகதவர் தாமே பல தமிழ்ப் பாடல்களை, கதைகளை இயற்றி, அவற்றைத் தனது நிகழ்ச்சிகளில் பாடினார். ரசிகர்களிடம் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இவரது 'தியாகராஜ ராமாயணம்' என்ற ஹரிகதை அக்காலத்து வித்வான்கள் பலராலும் பாரட்டப்பட்ட ஒன்றாகும். இசையும் கதையும் விரவி மிக அற்புதமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார் பாகவதர். புதிய பாணிகளைப் பின்பற்றிக் கதை சொல்வது, புதிதாகப் பாடல்களைப் புனைந்து பாடி இரண்டையும் கலந்து சொல்வது எனப் பல்வேறு உத்திகளை இவர் ஹரிகதையில் கையாண்டார். இவரது 'வள்ளி பரிணயம்' மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். செட்டிநாட்டுப் பகுதியில் ஒலித்த குரல்களில் இவர் குரலே முதன்மையானது.

மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசின் சார்பில், இசை பயிலும் மாணவர்முதல் வித்வான்கள்வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் 'ஸங்கீதகல்பத்ருமம்' என்ற நூலை இவர் இயற்றினார். இவரது ஐம்பதாண்டுகால இசையுலக அனுபவம் மற்றும் உழைப்பின் விளைவே இந்த நூல். இந்நூலைப் பற்றி பாகவதர், "இதில் ஸங்கீதம் உண்டான விதத்தையும், ஸங்கீதத்தின் பெருமை, ஸங்கீதத்தைப் பிரசாரம் செய்தவர்கள், ஸங்கீத லக்ஷணம், அதன் உட்பிரிவு இவைகளையும் முதலில் சேர்த்திருக்கிறேன். சரீரத்தின் உற்பத்தி, நாதம் உண்டாகும் தத்வம், நாதத்தின் லக்ஷணம், நாதம் - பிரம்மம் இவற்றின் ஒற்றுமை, நாதம் - சூரியன் இவைகளின் ஒற்றுமை, நாதத்தின் உட்பிரிவு, நாதத்தின் பெருமை, நாதத்தை உபாஸிப்பதால் ஏற்படும் பயன், நாதோபாஸிகளின் சிறப்பு இவை நாதப் பிரகரணத்தில் கூறப்பட்டுள்ளன" என்கிறார்.

பாகவதருக்கு முருகன்மீது மிகுந்த பக்தி. ஹரிகேசநல்லூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவைச் சிறப்பாக நடத்தி வந்தார். "வள்ளி நாயகனே.." உள்பட பல கீர்த்தனைகளை முருகன் மீது இயற்றியிருக்கிறார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த "ஹிமகிரி தனயே" என்ற இவருடைய பாடலை ஜி.என்.பி. மேடைதோறும் பாடிப் பிரபலப்படுத்தினார். மதுரை மணி ஐயர் பாடிப் பிரபலமான "இங்க்லீஷ் நோட்" முத்தையா பாகவதரால் இயற்றப்பட்டதுதான். கர்நாடக சங்கீத மேடைகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும், நாடகங்களிலும் இவரது பாடல்கள், கீர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டன. இவரது பாடல்களில் பல கிராமஃபோன் தட்டாகவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. மகாகவி பாரதியையும் முத்தையா பாகவதர் சந்தித்திருக்கிறார். "ஜெயமுண்டு பயமில்லை" என்ற பாடலை பாரதியே பாடக் கேட்டு ரசித்திருக்கிறார் பாகவதர்.

இசை வளர்க்கும் முயற்சியாக 1924ம் ஆண்டில் மதுரையில் இசைப்பள்ளி ஒன்றைத் துவக்கினார் பாகவதர். தென்தமிழ்நாட்டில் தோன்றிய முதல் இசைப்பள்ளி அதுதான். அப்பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவரை முதல்வராக நியமித்தார். இவர், பிரபல மிருதங்க வித்வான் முருகபூபதியின் மூத்த சகோதரர். இந்தப் பள்ளியில்தான் மதுரை மணி ஐயர் இசை பயின்றார். திரு டி.என். சேஷகோபாலன் இசை பயின்றதும் இங்குதான். இவ்வாறு பல இசைக்கலைஞர்களை உருவாக்கினார் முத்தையா பாகவதர். மியூசிக் அகாதமியின் தலைவராகவும் சங்கீத கலாசாலைத் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். "பசுபதிப்ரியா", "புதமனோகரி", "நிரோஷ்டா" என்று பல புதிய ராகங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி எனப் பல மொழிகளிலும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பல பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இன்றும் இசைநிகழ்ச்சிகளில் கலைஞர்களால் பாடப்படுபவை. வர்ணங்கள், ராகமாலிகைகள், தில்லானாக்கள் எனப் பல அவற்றில் அடக்கம்.

பாகவதர் சிறந்த கலைஞர், ஆராய்ச்சியாளர், சங்கீத விற்பன்னர் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவரும்கூட. திருவாங்கூர் சர்வகலாசாலை இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. மன்னர்களின் அன்பைப் பெற்ற இவர் ஜமீன்தார்களிடமிருந்தும் பல சிறப்புகளை, கௌரவங்களை, பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இவரது சேவையைப் பாராட்டி 1930ம் ஆண்டில் இவருக்குச் 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டது. மிகப்பெரிய வாக்கேயக்காரர் ஆன புகழ்பெற்ற மைசூர் வாசுதேவாச்சாரியார் கன்னட மொழியில் தாம் எழுதிய நூலில் பாகவதருடைய திறமையைப் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

வாழ்வாங்கு வாழ்ந்த முத்தையா பாகவதர் மைசூர் மன்னரின் அழைப்பை ஏற்று மைசூருக்குச் சென்றார். அங்கிருந்தபோதே நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பலனின்றி மைசூரிலேயே ஜூன் 30, 1945 நாளன்று காலமானார்.

தமிழக இசைவாணர்கள் மறக்கக்கூடாத ஒரு முன்னோடி 'காயக சிகாமணி' முத்தையா பாகவதர்.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline