Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
முன்னோடி
ருக்மணி லட்சுமிபதி
- பா.சு. ரமணன்|ஏப்ரல் 2018|
Share:
அது 1930ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ம் தேதி. வேதாரண்யம் கடற்கரையில் மக்கள் கூட்டம். ராஜாஜி தலைமை. உடன் மட்டப்பாறை வெங்கட்ராமையா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ஓ.வி. அளகேசன், ஆர். வெங்கட்ராமன், ஏ.என். சிவராமன் உள்ளிட்ட பலரும் அங்கே இருக்கின்றனர். காய்ச்சிய உப்பை அவர்கள் ஆங்காங்கே குவித்து வைக்கிறார்கள். மகளிருக்குத் தலைமையேற்று வந்திருந்த அந்தப் பெண்மணியும் தன் பங்கிற்குக் காய்ச்சிய உப்பைக் குவித்து வைக்கிறார். சடாரென்று விழுகிறது அவரது தோளில் ஓர் அடி. தடையை மீறி உப்புக் காய்ச்சியவர்களை லத்தியால் காய்ச்சி எடுக்கிறது காவல்துறை. அலுங்கவில்லை. குலுங்கவில்லை. சரமாரியான அடிகளுக்கு அணுவளவும் சோரவில்லை அந்தப் பெண். இரு கைகளாலும் உப்புக் குவியலை அணைத்துக் கொண்டு அப்படியே அதன் மீது சாய்ந்து படுத்துவிட்டார். அவ்வளவு எளிதில் காவலர்களால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. காவலர்களின் பெரும் முயற்சிக்குப் பின் போராட்டம் ஒடுக்கப்படுகிறது. ராஜாஜி உட்படப் பலரும் கைது செய்யப்படுகின்றனர். அந்தப் பெண்மணியும்தான். அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகச் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணி அவர்தான். தமிழகத்தில் சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண் அரசியல் கைதியும் அவர்தான். அவர், ருக்மணி லட்சுமிபதி.

சீனிவாசராவ் - சூடாமணி தம்பதியினருக்கு, டிசம்பர் 6, 1892ம் நாள், சென்னையில் பிறந்தார் ருக்மணி. தந்தைக்குப் பூர்வீகம் கோல்கொண்டா. பாரம்பரியமான விவசாயக் குடும்பம் என்றாலும் அவர்கள் வெகுகாலத்துக்கு முன்பே சென்னைக்கு வந்துவிட்டனர். எழும்பூர் மாநிலப் பெண்கள் பள்ளியில் பயின்றார் ருக்மணி. இசையும் கற்றுக் கொண்டார். அக்காலத்தில் பால்ய விவாகம் சகஜம் என்பதால் பெற்றோர், 9 வயது ருக்மணிக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். ருக்மணி எதிர்த்தார். குடும்ப நண்பர் வீரேசலிங்கம் பந்துலுவின் முயற்சியால் திருமண முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கற்க அனுமதிக்கப்பட்டார் ருக்மணி. அதனால் உறவுகள் இவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்தன என்றாலும் மனம்தளராமல் இருந்தார் தந்தை. ருக்மணி பள்ளி இறுதி வகுப்பை முடித்த நிலையில் தந்தை சீனிவாசராவ் திடீரெனக் காலமானார். தடுமாறிய குடும்பத்தைக் காக்கும் பொறுப்பை உறவினர் நெமிலி பட்டாபிராம ராவ் ஏற்றுக்கொண்டார். அவரது ஆதரவில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து பயின்றார் ருக்மணி.

ருக்மணிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையின் புகழ்பெற்ற டாக்டரான ஆசந்தா லட்சுமிபதியிடம் சிகிச்சை பெற்று வந்தார். லட்சுமிபதி மிகவும் இனியவர். சிறந்த தேச பக்தர். ஆயுர்வேதத்திலும் நிபுணரான அவர் அது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார். தொடர் சந்திப்பில் அவரிடம் தனது மனதைப் பறிகொடுத்தார் ருக்மணி. மனைவியை இழந்த, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான லட்சுமிபதிமீது இவருக்கு ஏற்பட்ட காதலை இருவீட்டாரும் எதிர்த்தனர். ஆனால், ருக்மணி உறுதியாக இருந்தார். இறுதியில் உறவுகள் சம்மதத்துடன் இருவருக்கும் 1911ம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.

Click Here Enlargeதிருமணத்திற்குப் பின்னரும் கல்வியைத் தொடர்ந்தார் ருக்மணி. சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பயின்றார். அப்போது அவருக்கு ஆசிரியராக இருந்த ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி பல விதங்களிலும் ருக்மணியை ஊக்குவித்தார். தத்துவப்பாடம் போதித்த ஆசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ருக்மணிக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். கணவர் லட்சுமிபதி காந்திய சிந்தனை கொண்டவர். எப்போதும் கதராடை அணிபவர். இவர்களின் தாக்கத்தால் சுதந்திரச் சிந்தனை ருக்மணிக்குள் சுடர்விடத் தொடங்கியது. பி.ஏ. பட்டம் பெற்றதும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆனால், கருத்தரித்ததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர இயலவில்லை. செப்டம்பர் 22, 1914 அன்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அன்றுதான் சென்னையில் எம்டன் குண்டுபோட்ட நாள். ஆகவே எம்டனின் வீரத்தைப் போற்றும் வகையிலும் தனக்கு மிகவும் பிடித்த தன் தந்தையின் நினைவாகவும் குழந்தைக்கு எம்டன் சீனிவாசன் என்று பெயரிட்டு வளர்த்தார். ஒரு வயதான நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் குழந்தை சீனிவாசன் மறைந்தான். அந்தச் சோகம் பாதித்தாலும் மனதைத் தளரவிடாமல் சமூகப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த சமூகக் கொடுமைகளைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார் ருக்மணி. கணவரது துணையுடன் சமூகப்பணிகளில் ஈடுபட்டார். பால்ய விவாகம், மதுவிலக்கு, தீண்டாமை, தேவதாசி முறை போன்றவற்றைப் பற்றித் தீவிரமாக எழுதவும் கூட்டங்களில் பேசவும் துவங்கினார். தன்னைப் போன்ற பிற சமூகப் போராளிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பல கூட்டங்களில் மதுவுக்கு எதிராகவும், பெண்களின் மீதான கொடுமைகளுக்கு எதிராகவும் சொற்பொழிவாற்றினார். திருவல்லிக்கேணியில் கதர்த் துணி விற்பனை நிலையம் ஒன்றைத் துவக்கி நடத்தினார். பெண்ணுரிமை, பெண்கள் மேம்பாடு பற்றி அக்காலத்தில் உரத்து ஒலித்த குரல் இவருடையது. 1919ல் ‘பாரதி மகிளா மண்டல்’ சங்க இயக்கத்துடன் இணைந்து, பெண்களுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டார்.

1926ல் பாரிஸில் நடந்த அகில உலகப் பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் கலந்து கொண்டார். பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று அங்கு வாதிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள சமூக நிலையைக் கண்டறிந்தார். தமிழகம் திரும்பிய இவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்பினர் ஆனார். காங்கிரஸின் சார்பில் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியும் நேருவும் இவரை மிகவும் கவர்ந்த தேசத் தலைவர்களாயினர். நேருவின் வேண்டுகோளுக்கிணங்க, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறுவர்களுக்காக ‘வானர சேனை’ என்ற அமைப்பை நிர்மாணித்து மாணவர்களை வழிநடத்தினார். இவரது சேவையை மெச்சி காங்கிரஸ் தலைமை இவரை மகளிர் பிரிவுச் செயலாளராக நியமித்தது.

1929ல் சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். திரளான பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை வகித்து கமிஷனுக்குக் கறுப்புக் கொடி காட்டினார். தொடர்ந்து லாகூர் காங்கிரஸிலும் பங்குகொண்டு எழுச்சியுரையாற்றினார். தேவதாசி முறை ஒழிப்பில் இவர் மிகவும் உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் தொடர்ந்து உழைத்தார். மாற்றத்தை வெளியில் ஏற்படுத்துவது மட்டுமல்ல; ஒவ்வொருவரும் தனது வீட்டினுள்ளும் அதைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தனது வீட்டில் சமையல் வேலைக்கு நியமித்தார். அவரைத் தங்களுள் ஒருவராக நடத்தினார்.
1930ல் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. தொடர்ந்து மதுரையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு, சுதந்திரதின மாநாடு போன்றவற்றைச் சிறப்பாக நடத்தினார். நாடெங்கும் வெகு தீவிரமாக நடைபெற்றுவந்த சுதேசிப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சென்னையில், “அந்நியத்துணியை பகிஷ்கரிப்போம்” என்று உரத்த குரலில் திரளான பெண்கள் கூட்டத்துடன் ஊர்வலமாகச் சென்று அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தார். அதனால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையிலடைக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் கள்ளுக்கடை மறியல், சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்று மீண்டார்.

அக்காலத்தில் தேச விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்களுள், போராடியவர்களுள் ருக்மணி லட்சுமிபதி முக்கியமானவர். 1933ல் சென்னை வந்திருந்த காந்திஜியைச் சந்தித்தார் ருக்மணி. ஹரிஜன சேவைக்காக நிதி வேண்டிய காந்திஜியை ஆதரித்து தன் கை வளையல்களைக் கழற்றித் தந்தார். அதற்காகக் காந்திஜியின் பாராட்டுதல்களைப் பெற்றார். 1934ல் சென்னை மேல்சபை உறுப்பினரானார். 1937ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். சென்னை மாகாண சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக வரலாற்றில் இப்பதவிக்குத் தேர்வான முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார் என்பதற்காகவும் தனிநபர் சத்தியாகிரகத்தை மேற்கொண்டதற்காகவும் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒராண்டுக்கால சிறைக்குப் பின் விடுதலையானார். 1936ல் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இவர் தலைமையில்தான் நடந்தது. 1936 முதல் 1941 வரை சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் பெருத்த பாராட்டுக்களைப் பெற்றன. நாட்டுக்குப் பாடுபட்டதுடன் வீட்டிலும் தனது இல்லறக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். தனது மகள் இந்திராவை பிரபல நரம்பியல் மருத்துவர் டாக்டர் பி. ராமமூர்த்திக்கு மணம் செய்து கொடுத்தார்.

1946ல், தேர்தலில் வென்று பிரகாசம் முதலமைச்சர் ஆனார். ருக்மணி சுகாதாரத் துறை அமைச்சரானார். அந்த வகையில் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் ருக்மணி லட்சுமிபதிதான். இந்தியாவில், சுதந்திரத்திற்கு முன்பாக அமைச்சர் பதவி வகித்த ஒரே பெண்மணியும் ருக்மணிதான். அக்காலத்தில் அரசின் உயர்பதவிகளில் வெள்ளையர்களை நியமிப்பதே வழக்கமாக இருந்தது. அப்போது சர்ஜன் ஜெனரலாக ஓர் ஐரோப்பியர் இருந்தார். ருக்மணி அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, இந்தியர் ஒருவரை நியமித்தார். இந்திய அரசுப்பணிகளில் இந்தியர்களையே நியமிப்பது என்பதை அரசின் கொள்கையாக மாற்ற ஆவன செய்தார். கொசுவை ஒழிக்கும் திட்டமான ‘மலேரியா ஒழிப்பு இயக்கம்’ என்பதை முதன்முதலில் துவக்கியதும் ருக்மணிதான். தனது பதவிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை ருக்மணி லட்சுமிபதி முன்னெடுத்தார். கணவர் டாக்டர் லட்சுமிபதியும் பலவிதங்களில் இவருக்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தனர்.

தனது இறுதிக்காலம் வரை தேசநலன், சமூக மேம்பாடு ஆகியவற்றிற்காகப் பாடுபட்ட ருக்மணி லட்சுமிபதி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 6, 1951 நாளன்று காலமானார். சென்னை எழும்பூரில் இருக்கும் மார்ஷல் சாலை, இவரது நினைவாக ருக்மணி லட்சுமிபதி சாலையானது. 1977ல் இவரது நினைவாக இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுக் கௌரவித்தது.

முதல் அரசியல் பெண் சிறைக்கைதி, முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினர், முதல் பெண் சபாநாயகர், முதல் பெண் அமைச்சர் எனப் பல பொறுப்புக்களை வகித்த முன்னோடிப் பெண்மணி ருக்மணி லட்சுமிபதி. இவர் தமிழக வரலாற்றில் என்றும் மறவாமல் நினைக்கப்பட வேண்டியவர்.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline