|
|
|
|
இந்திய வரலாறு, வட இந்தியாவை மையப்படுத்தி மட்டுமே எழுதப்பட்டு வந்த காலத்தில், தென்னிந்திய வரலாற்றை முதன்மைப்படுத்தி ஆய்வுகளைச் செய்த முன்னோடி அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்கார். இவர், 1863ல் தஞ்சையை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் பயின்ற பின் பாபநாசத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தார். திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், வடமொழி எனப் பன்மொழி வல்லுநராக இருந்த இவர், ராஜமுந்திரியில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அங்கு ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்தார். ஆங்கிலத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி நூல் ஒன்றையும் படைத்தார். தெலுங்கு மொழி மாணவர்கள் கற்பதற்காக 'Longman's Arithmethikkulu' என்ற நூலை எழுதினார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெலுங்கு பாடத்திட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பெற்றார்.
இந்தக் காலகட்டத்தில் இந்தியத் தத்துவங்களின் மீது அவரது ஆர்வம் திரும்பியது. 1909ல் 'Outlines of Indian philosophy' என்ற நூலை வெளியிட்டார். இந்தியத் தத்துவங்களின் கூறுகளைப் பற்றிய அறிமுக நூலான அதை தியாசபிகல் சொசைட்டி வெளியிட்டது. தொடர்ந்து 'Death Or Life: A Plea for the Vernaculars' என்ற ஆய்வுநூலை வெளியிட்டார். இந்திய வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினால் அதனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். "Life in Ancient India in the Age of the Mantras" என்ற நூலை 1912ல் வெளியிட்டார். பண்டைய இந்தியாவில் 'மந்திரங்கள்' என்பவை எப்படி மக்கள் வாழ்வியலில் தாக்கம் செலுத்தின என்பது பற்றி அந்த நூலில் அவர் ஆய்ந்திருந்தார். குறிப்பாக ரிக்வேத சம்ஹிதையில் "ஆரிய" என்ற சொல் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பதையும், "ஆரிய" என்பது ஓர் இனத்தைக் குறிக்கவில்லை என்பதையும் அவர் சான்றாதாரங்களுடன் அதில் மெய்ப்பித்தார். "தாஸ", "தாஸ்யூ" என்பதான உண்மை விளக்கங்களையும் அவர் அதில் குறித்துள்ளார். அந்நூலுக்கான வரவேற்பு அவரை மேலும் ஆய்வு செய்ய ஊக்குவித்தது. அதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் வட இந்தியாவை மையப்படுத்தியே இருப்பதைக் கண்ட ஐயங்கார், தென்னிந்திய வரலாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கிய ஆதாரங்கள், களப்பணிகள் மூலமாக தனது ஆய்விற்குத் தேவையான தரவுகளைத் திரட்டினார். பின்னர் அவற்றை முழுமைப்படுத்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களாக வெளியிடத் துவங்கினார்.
"பல்லவர்கள் சரிதம்" என்பது அவரது முக்கியமான நூல்களுள் ஒன்றாகும். 1920ம் ஆண்டில் வெளியான அந்நூல், பல்லவர்கள் யார் என்பதுபற்றிக் கூறும் மிக விரிவான ஆய்வு நூலாகும். அந்நூலில் பல்லவர்கள் "குறும்பர்கள்" என்ற சிலரது கருத்தை மறுத்து, பல்லவர்களே ஆரியப் பண்பாட்டினை தென்னிந்தியாவில் பரவ உதவினர் என்ற வாதத்தை முன்வைக்கிறார். நூல்கள் தவிர பல இதழ்களிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பல நல்ல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். "Pre Aryan Tamil Culture" என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் நிகழ்த்திய சொற்பொழிவு குறிப்பிடத்தகுந்தது. அறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்ட இச்சொற்பொழிவு பின்னர் நூலாகவும் வெளிவந்து இவருக்குப் புகழ் சேர்த்தது. சீனிவாச ஐயங்கார் எழுதிய நூல்களில் "The Stone Age in India" என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இந்நூலில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மக்களின் தொழில், வாழ்க்கைமுறையை ஒட்டி நிலங்களை ஐவகையாகப் பிரித்திருந்தனர் என்பதையும், அந்நிலப்பரப்பில் வளர்ச்சியடைந்த தொழில்கள், மாந்தர்கள் பற்றிய குறிப்பினை முதன்முதலில் அளித்தது தமிழில் மட்டும்தான் என்பதையும் அவர் பதிவு செய்திருந்தார். அடுத்து இவர் எழுதிய முக்கியமான நூல் "History of the Tamils from the earliest to 600 A.D." என்பது. ஆங்கிலத்தில் வெளியான இந்நூலை, வி. கனகசபைப் பிள்ளை எழுதிய தமிழ் வரலாற்று ஆய்வு நூலைத் தொடர்ந்து, தமிழில் வெளியான மிக முக்கியமான வரலாற்றாய்வு நூல் என்று மதிப்பிடலாம். இந்த நூலின் மூலம் இவரது ஆராய்ச்சி அறிவையும், அறிவியல், வரலாற்று ஆய்வு நெறிமுறைகளையும், நுண்மாண் நுழைபுலத்தையும் அக்கால அறிஞர்கள் உணர்ந்தனர்.
சீனிவாச ஐயங்காரின் ஆய்வு முடிவுகள் பலவும் சிந்திக்கத்தகுந்தவை. பல இடங்களுக்கும் நேரில் சென்று அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட இவர், புதிய கற்காலத்தைச் சேர்ந்த மண் தாழிகள் (முதுமக்கள் தாழிகள்) பலவற்றைக் கண்டறிந்தார். தென்னிந்தியாவில்தான் முதன்முதலில் இரும்பும் அதன் பயனும் கண்டறியப்பட்டது என்பது இவரது ஆய்வு முடிவுகளுள் ஒன்று. பழங்காலக் கல்வெட்டுக்கள், மலைகளில், குகைகளில் காணக் கிடைக்கும் அக்கால எழுத்தாதாரங்கள் மூலம், அம்மலையைக் கெல்லி அதில் எழுத்தைப் பொறிக்க, அம்மலையினும் கடினமான ஓர் உலோகத்தை மனிதன் பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதுவே இரும்பு என்பது இவரது கருத்து. "இர்" என்ற மூலச் சொல்லிலிருந்தே 'இரும்பு' தோன்றியது என்கிறார் அவர். 'செம்பு' என்பது 'செம் - சிவப்பு' என்பதிலிருந்து வந்தது என்கிறார். "கற்காலத்தில் இந்தியா" என்ற தனது நூலில் மனிதனின் தோற்ற வரலாற்றை டார்வினின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாய் வைத்து ஆராய்வதை விட மானிடவியலின் அடிப்படையில் மனிதனின் தோற்றத்தை ஆய்வு செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆதிமனிதன் தோன்றிய இடம் எதுவாக இருக்கும் என்ற வினாவிற்கு இவர், "தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகமாக புதிய, கற்கால மனிதனின் ஈமச்சடங்கு எச்சங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால் மாந்தன் இம்மாவட்டத்தில்தான் பழைய கற்காலம் முதல் தற்காலம் வரை வசித்து வருகிறான்" என்ற கருத்தைத் தெரிவிக்கிறார். |
|
மேலும் மனிதனின் மொழி பற்றிக் கூறும்போது, "தொடக்க காலத்தில் மனிதனின் மொழி 'ஹோலோஃப்ரஸ்டிக்' (Holophrastic) ஆக இருந்தது. அதாவது ஒரு வார்த்தையே முழுப் பொருளைத் தரும் வாக்கியமாக அல்லது சொற்றொடராக இருக்கும். அத்தகைய மொழி தென்னமெரிக்கப் பழங்குடி மக்களிடையே நிலவுகிறது. அத்தகைய வடிவப் பேச்சு மொழி தற்கால இந்தியாவில் காணவில்லை" என்ற தன் முடிவையும் தெரிவிப்பது சிந்திக்கத் தகுந்தது. மொழிபற்றி அவர், "தற்கால இந்தியாவின் பேச்சு மொழிகள் அனைத்தும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை; இந்திய-ஜெர்மானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல" என்கிறார்.
"இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே" என்ற கருத்துக் கொண்டவர் ஐயங்கார். "ஆரியர் என்று தனித்து ஓர் இனம் இல்லை; தென்னகத்திலிருந்து வட இந்தியாவிற்குச் சென்றவர்களே பின்னர் ஆரியர்" ஆனார்கள் என்பது இவரது முக்கியமான ஆய்வுமுடிவு. தமிழர்களின் நாகரிகம் மிகப் பழமையான நாகரிகம் என்றும், அவர்கள் வட இந்தியாவுக்கு அப்பாலும் பல வெளிநாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் கொண்டிருந்தனர் என்றும், மெசபடோமியா கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். தமிழகம் ரோம் நகரத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை 1940களில் அரிக்கமேட்டில் நிகழ்ந்த அகழாய்வு உறுதி செய்தது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பிற நாட்டவருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இலக்கியச் சான்றுகள் மூலம் நிறுவியுள்ளார் ஐயங்கார்.
"Stories from Indian History, Past in the present", "Systems of Hindu Philosophy", "A Short History of India", "தேவி மான்மியம்" (தத்துவம்), "காயத்ரி" (தத்துவம்), புதிய இந்து தேச சரித்திரம், இயற்கை பொருட்டுக் கட்டுரைகள் என ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 16 நூல்களை அவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய வரலாற்றாய்வு நூல்கள், தமிழில் அதுவரை நிலவி வந்த வரலாற்றாய்வின் போக்கையே மாற்றின எனக் கூறின் அது மிகையல்ல. "தொல்காப்பியம் கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளுக்குள் தோன்றிய இலக்கண நூல்; 'சங்கம்' என்ற ஒன்று அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை; வேளாண் மரபினரே சோழர்கள்; மலையில் வாழ்ந்து வந்த குறவர்களே சேரர்கள்; கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த பரதவர்களே பாண்டியர்கள். கல்லாக இறுகிவிட்ட நத்தையின் புதைபடிவமே 'சாளக்கிராமக் கல்' என்பன போன்ற இவரது ஆய்வு முடிவுகள் சிந்திக்க மட்டுமல்லாமல் பெரும் விவாதத்திற்கும் வழிவகுப்பன.
இவரது வரலாற்றய்வுத் திறனைக் கண்ட சென்னைப் பல்கலைக்கழகம் 1928ல் இவரை, வரலாற்றுத் துறையின் இணைப்பேராசிரியராக நியமனம் செய்தது. இரு ஆண்டுகள் பணியாற்றிய இவரை, ராஜா சர். அண்ணாமலை செட்டியார் தமது அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வரலாற்றுத் துறைத் தலைவராக நியமித்தார். பல ஆய்வு மாணவர்களை ஊக்குவித்த சீனிவாச ஐயங்கார். அங்கு பணியாற்றியபோது எழுதிய நூலே "போஜராஜன்" என்பது. அதுவே அவரது இறுதி நூலானது. 1931ல் உடல் நலிவுற்று அவர் காலமானார். அவரது மறைவிற்குப் பின் வெளியான அந்நூலுக்கு பிரபல கவிஞரும், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளருமான 'கதே' முன்னுரை வழங்கியிருந்தார். "Advanced History of India" என்ற அதுவரை அச்சடிக்கப்படாத ஐயங்காரின் ஆய்வு நூல் அவரது மறைவிற்குப் பின் 1942ல் வெளியானது. தமிழ்மண் பதிப்பகம் இவரது "History of the Tamils from the earliest to 600 A.D." என்ற ஆங்கில நூலை, "தமிழர் வரலாறு கி.பி. 600 வரை" என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. கே.கே. பிள்ளை, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்ற பிற்கால வரலாற்றாய்வு அறிஞர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இவர். தமிழின வரலாற்றை, மொழியின் மேன்மையை, இலக்கியத்தின் சிறப்பை, பண்பாட்டின் பெருமையை தமிழர் மட்டுமல்லாது பிற மொழியினரும், உலக மக்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஆதாரங்களுடன் எடுத்துரைத்த பெருமை பி.டி. சீனிவாச ஐயங்காரையே சாரும்.
(தகவல் ஆதாரம்: தமிழர் வரலாற்று வரைவியலின் முன்னோடி - பி.டி.சீனிவாச ஐயங்கார், பு.ஏ.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|