Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
மதுரை மணி ஐயர்
- பா.சு. ரமணன்|ஆகஸ்டு 2012|
Share:
இசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். 'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு அக்டோபர் 25, 1912 அன்று பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தந்தை இசை ஆர்வலர். அக்காலத்தின் பிரபல இசைமேதை புஷ்பவனத்தின் சகோதரர். அதனால் இசைஞானம் மணி ஐயருக்குக் குடும்பச் சொத்து. சிற்றப்பா புஷ்பவனம், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்தவர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர். அவருடைய மாணவரான ராஜம் பாகவதரிடம் சேர்ந்து இசை பயில ஆரம்பித்தார் மணி. ராஜம் பாகவதரின் வீட்டின் ஒரு பகுதியிலேயே வாடகைக்குக் குடியமர்ந்தது மணியின் குடும்பம். அவரிடம் பெற்ற பயிற்சியைத் தொடர்ந்து மணியின் இசைஞானம் பெருகவேண்டும் என்று தந்தை நினைத்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயத்தில் மணியைச் சேர்த்தார். ராஜம் பாகவதரும் அங்கேயே ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

மணி ஐயரின் முதல் கச்சேரி 12ம் வயதில், நத்தம் சீதாராம ஐயர் (வயலின்), ராஜகோபால ஐயர் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசிக்க, ராமநாதபுரத்தில் உள்ள அலவாக்கோட்டை ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரங்கேறியது. நல்ல வரவேற்பு. சிறுசிறு வாய்ப்புகள் வரத் துவங்கின. 1925ல் தேவகோட்டையில் காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் முன்பு பாடினார் மணி ஐயர். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. பெரியவரது ஆசி மற்றும் பாராட்டுக்களுடன் தங்கப்பதக்கமும், பட்டு அங்கவஸ்திரமும் தந்து கௌரவிக்கப் பெற்றார். கச்சேரி வாய்ப்புகள் பெருகின. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். தாம் கச்சேரிகள் செய்ததோடு, அப்போதைய ஜாம்பவான்களின் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். 1927ல் சென்னையில் சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவில் தந்தை ராமசுவாமி ஐயர், 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி ஓர் விரிவுரை ஆற்றினார். தொடர்ந்து மணி ஐயரின் கச்சேரியும் நடந்தது. அது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

அக்காலத்தில் ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர். அவர் வழியைப் பின்பற்றினார் மதுரை மணி ஐயர். ராக பாவத்தாலும், கல்பனா ஸ்வரத்தாலும், நிரவல்களாலும் பாடல்களுக்குப் புத்துயிரூட்டினார். 'நாத தனுமனிஸம்', 'சக்கனி ராஜ', 'மா ஜானகி', 'காணக் கண் கோடி வேண்டும்', 'கா வா வா', 'தாயே யசோதா', 'எப்ப வருவாரோ', 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' போன்ற பாடல்கள் அவரது குரலில் மேலும் மெருகேறின. குறிப்பாக 'கந்தன் கருணை புரியும் வடிவேல்' பாடலை அவர் பாடும் அழகே அலாதி; உள்ளத்தை உருக்கிக் கண்களில் நீரை வரவழைப்பது என்பது அக்கால ரசிகர்களின் கருத்து. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஷ் நோட்டுகளைப் பாடி பிரபலமடையச் செய்ததும் மணி ஐயர்தான். மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடும் வல்லமை பெற்ற மணி ஐயர் சாருகேசி, நளினகாந்தி, லதாங்கி, ஹம்சநந்தினி, ரஞ்சனி, சரசாங்கி போன்ற பல ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப்படுத்தினார். தமது பெரும்பாலான கச்சேரிகளில் முத்துசாமி தீக்ஷிதரின் நவக்கிரஹக் கிருதிகளைப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மைசூர் சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ பிள்ளை, பாலக்காடு மணி, பழனி சுப்ரமணிய பிள்ளை, முருகபூபதி எனப் புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் பலரும் மணி ஐயருக்கு பக்கம் வாசித்துள்ளனர்.

கல்வியிலும் மணி ஐயருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. பள்ளி சென்று முறையாகக் கல்வி பயில இயலாத காரணத்தால், ஆசிரியர் ஒருவரை வரவழைத்து அவர் மூலம் ஆங்கிலக் கல்வி பயின்று தேர்ந்தார். இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. ஜானகிராமன் போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் அவர் நட்புக் கொண்டிருந்தார்.

மணி ஐயரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெருமைக்குச் சான்று. ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் சென்னைக்கு வந்திருந்தார். ஒருநாள் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக மயிலாப்பூர் வீதி வழியாக வந்து கொண்டிருந்தவர், அருகில்தான் மணி ஐயரின் வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவர் வீட்டு வாசலில் நின்று விட்டார். பெரியவர் வாசலில் நிற்பதை அறிந்த உறவினர்கள் அனைவரும் வந்து மஹாபெரியவரை வணங்கி தரிசனம் பெற்றுச் சென்றனர். ஆனால் மணி ஐயர் வரவில்லை.
"ஏன் மணியைக் காணோம், கூப்பிடு அவனை" என்றார் மகா பெரியவர்.

மணி ஐயரின் உதவியாளரும் சகோதரியின் கணவருமான வேம்பு தயங்கியபடியே, "அவர் மடியாக உங்களை தரிசனம் செய்ய, இன்னும் ஸ்நானம் செய்யவில்லை" என்றார்.

"மடியாவது ஒண்ணாவது. அவனுக்கு சங்கீதம்தான் எல்லாம். கூப்பிடு அவனை" என்றார் பெரியவர்.

வேம்பு உள்ளே போய்த் தகவல் சொல்ல, ஓடோடி வந்து பெரியவருக்குப் பாத நமஸ்காரம் செய்தார் மணி. உடனே தம் கழுத்தில் இருந்த ரோஜா மாலையைக் கழற்றி மணியின் கழுத்தில் போட்ட மஹா பெரியவர், "டேய், உனக்கு சங்கீதம்தான் மடி, ஆசாரம், பூஜை எல்லாம்" என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

மற்றொரு சமயம் மணி ஐயரின் கச்சேரியைக் கேட்டு ரசித்த மகா பெரியவர், இரவு வெகு நேரமாகி விட்டதால் பூட்டியிருந்த கடையைத் திறக்கச் செய்து, பட்டாடை வாங்கிவரச் செய்து அதை மணிக்கு அளித்து ஆசி கூறினார்.

சபாக்களில் மட்டுமல்லாது, கோயில்கள், திருமணங்கள் எனப் பலவற்றிலும் கச்சேரிகள் செய்தார் மணி ஐயர். இவற்றோடு தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் நடத்திய சங்கர ஜயந்தி, கொத்தமங்கலம் சுப்பு நடத்திய புரட்டாசி சனிக்கிழமைக் கச்சேரி போன்றவற்றிலும் கலந்து கொண்டார். ஒருசமயம் நாகப்பட்டினத்தில் நீண்ட நாட்களாக மழையே இல்லை. அந்த ஊர் பிரபல மனிதர் வீட்டுத் திருமணத்தில் மணி ஐயரைப் பாட அழைத்திருந்தனர். அவரும் சில கீர்த்தனைகளைப் பாடி விட்டு பின்னர் மேக ரஞ்சனி ராகத்தைப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சில்லென்று காற்று வீச ஆரம்பித்தது. தூரத்தில் எங்கோ இடிமுழக்கம் கேட்டது. சற்று நேரத்தில் சாரலாக விழுந்த மழை அடுத்துத் தீவிரமானது. சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடியே இசைப் பொழிவை ரசித்தனர் மக்கள்.

அவரைத் தேடி விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. 1944ல் தஞ்சை சமஸ்தானத்தினர் இவருக்கு 'கான கலாதர' என்ற பட்டமளித்தனர். 1960ல் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி கிடைத்தது. ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. 1962ல் தமிழ் இசைச் சங்கம் இவருக்கு "இசைப் பேரறிஞர்" என்ற பட்டத்தை அளித்தது. கொச்சி மகாராஜா தங்கத் தோடா அளித்தார். வானொலியில் தேசிய சங்கீத சம்மேளனம், அகில இந்திய இசை நிகழ்ச்சி என பலவற்றில் பாடியிருக்கிறார். இவருடைய ராகம்-தானம்-பல்லவியைக் கேட்பதற்கென்றே அக்காலத்தில் வானொலி முன் ரசிகர் கூட்டம் தவம் இருந்தது. இவை தவிர அவர் பாடி பல இசைத் தட்டுகளும் வெளியாகியுள்ளன.

இசை என்பது மக்களை இன்பப்படுத்துவதற்கும், அவர்கள் மனதை பக்குவப்படுத்தி மேன்மையுறச் செய்வதற்கும் ஓர் கருவி என்பது மணி ஐயரின் கருத்து. அதனாலேயே மங்களகரமான வார்த்தைகளைக் கொண்ட கீர்த்தனைகளையும், மகிழ்ச்சி தரும் ராகங்களையும் மட்டுமே பாடி வந்தார். எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பாடல்களை அவர் கச்சேரிகளில் பாடியதில்லை. இசையும் தமிழுமாக வாழ்ந்த அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி மகனும் சீடருமான டி.வி. சங்கரநாராயணனையே மகனாகப் பாவித்து வளர்த்தார். மணி ஐயர் ஜூன் 8, 1968 அன்று காலமானார். அவருடைய சாகித்யங்கள் உயிர்ப்புடன் விளங்கி என்றும் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அவரது நூற்றாண்டு விழா கர்நாடக இசை ரசிகர்களால் உலகமெங்கும் தற்போது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

(தகவல் உதவி: சு.ரா. எழுதிய இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்)

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline