Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
முன்னோடி
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
- பா.சு. ரமணன்|பிப்ரவரி 2012|
Share:
தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்றோர் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. இவர் 1906ல், தஞ்சாவூரில், சுப்ரமண்ய பிள்ளை-குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவ்வூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். ராஜமாணிக்கத்தின் தந்தை கான்ஸ்டபிளாகப் பணியாற்றினார். அதனால் அவருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு. சுற்று வட்டாரத்தில் எந்த நாடகம் நடந்தாலும் போய்ப் பார்ப்பது அவரது வழக்கம். தந்தையோடு ராஜமாணிக்கமும் அவரது சகோதரர் கோவிந்தராஜ பிள்ளையும் உடன் செல்வர். நாடகமும், கூத்தும், பாடல்களும், வண்ண வண்ண ஆடை அலங்காரங்களும் ராஜமாணிக்கத்தின் உள்ளத்தைக் கவர்ந்தன. கற்பதைவிட நாடகத்தையே மனம் விரும்பியது. அதனால் நாடகப் பயிற்சிக்காக ஹார்மோனியம் நடராசப் பிள்ளை கம்பெனியில் சேர்க்கப்பட்டார். சில காலம் அங்கு இருந்தவர், பின்னர் அக்காலத்தின் புகழ்பெற்ற ஜகந்நாத ஐயர் நாடகக் குழுவில் சேர்ந்தார். அதில் ஐந்து வயதுக்கு மேல் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். அதனால் அது “பாய்ஸ் கம்பெனி” என்று அறியப்பட்டது. அக்காலத்தின் புகழ்பெற்ற சாரங்கபாணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் அதில் நடித்துக் கொண்டிருந்தனர். அங்கு நாடக நுணுக்கங்களைப் பயின்று தேர்ந்தார் ராஜமாணிக்கம் பிள்ளை.

அக்காலத்தில் கந்தசாமி முதலியார் கம்பெனி, வாணி விலாச சபா, எஃப்.ஜி. நடேசய்யர் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை கம்பெனி, மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா, கன்னையா கம்பெனி, ஸ்ரீ ராம பால கான வினோத சபா போன்றவை புகழ் பெற்றிருந்தன. அவற்றில் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், காளி என்.ரத்தினம், பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.வி.மணி, டி.பி.ராஜலட்சுமி, எஸ்.டி.சுப்புலட்சுமி, ரத்னா பாய், சரஸ்வதி பாய் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்களது நாடகங்களைப் பார்த்தும், ஜகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் பவளக் கொடி, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் நடித்தும் அனுபவம் பெற்றார் ராஜமாணிக்கம் பிள்ளை. ஆயினும் அக்காலத்தில் நாடகக் குழுவினரிடையே போட்டி அதிகமிருந்ததால் ஜகந்நாத ஐயர் குழுவினருக்கு போதிய வாய்ப்போ வருமானமோ கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த சிரமப்பட்டனர். அவர்களில் ஒரு சிலர் அந்த நாடகக் குழுவிலிருந்து வெளியேறினர். அவர்களை ஒருங்கிணைத்த ராஜமாணிக்கம் பிள்ளை, அவர்களைப் பங்குதாரராகச் சேர்த்து நகை, கடுக்கன், மோதிரம் போன்றவற்றை விற்று வந்த பணத்தை மூலதனமாக வைத்து 1924ம் ஆண்டில் ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தார். அதற்கு 'ஸ்ரீ தேவி பாலவிநோத சபா' என்று பெயர் சூட்டினார். முதல் நாடகத்தைத் தஞ்சையில் அரங்கேற்றினார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து திருச்சிக்குச் சென்றும் நாடகம் போட்டார். அங்கும் நல்ல வரவேற்பு. திருப்பூரில் நடத்திய நாடகத்தையும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர். பிள்ளையின் நாடகக் குழுவுக்கு ஆதரவு பெருகியதால் நடிகர்கள் பலரும் அவரது குழுவில் சேர்ந்து பணியாற்ற விழைந்தனர்.

சில ஆண்டுகளிலேயே 60க்கும் மேற்பட்ட நாடக உறுப்பினர்களைக் கொண்டதாக அவரது குழு வளர்ந்தது. நாற்பது பேர் நடிகர்களாகவும் பிறர் பின்பாட்டு, அரங்க அமைப்பு, இசை போன்ற பணிகளைச் செய்பவராகவும் இருந்தனர். பிள்ளையின் நாடகக் குழு ஸ்பெஷல் நாடகக் குழு ஆனது. ஊர் ஊராய்ச் சென்று நாடகம் போட்டனர். புராணக் நாடகங்கள் போடுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார் பிள்ளை. வெறும் வசனங்களை மட்டும் மேடையில் ஒப்பித்துப் போகும் நாடகமாக அல்லாமல் காட்சிக்கும் கருத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார். அதற்காக முயன்று மேடையில் பல தந்திரக் காட்சிகளைப் பிறர் வியக்கும் வண்ணம் அரங்கேற்றி வெற்றி பெற்றார். கிருஷ்ணலீலா, தசாவதாரம், சம்பூர்ண ராமாயணம், ஏசுநாதர், குமார விஜயம், சக்திலீலா, ஞானசௌந்தரி முதலான புராண நாடகங்களும் அதில் இடம் பெற்ற தந்திரக் காட்சிகளும் நாடெங்கும் பேசப்பட்டன. நாடகங்களுக்குப் பெரும் கூட்டம் வந்தது.

'குமார விஜயம்' நாடகத்தில் முருகனின் பிறப்பை, ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதாகக் காட்டியதும், வள்ளியை மிரட்ட விநாயகர் யானை வடிவில் வரும் காட்சியில், நிஜ யானையைப் போன்ற பொம்மையை மேடைக்கு வரவழைத்ததும் பார்வையாளர்களுக்கு பிரமிப்பைத் தந்தது. 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் குழந்தை கிருஷ்ணனைக் கூடையில் வைத்துக் கொண்டு வசுதேவர் மழையில் நடந்து போவதையும், அந்தக் குழந்தைக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பதையும் மேடையில் காட்டி மக்களை அதிசயிக்க வைத்தார். அதே நாடகத்தில் யமுனை நதி பிளந்து வழிவிடுவதையும், அந்நீரில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 'தசாவதாரம்' நாடகத்தில் சிறைக்காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பது, கதவு தானாகத் திறந்து கொள்வது; 'ஏசுநாதர்' நாடகத்தில் கல்லறையிலிருந்து ஏசு உயிர்த்தெழுவது போன்ற காட்சிகளைக் கண்ட மக்கள் பிரமிப்பின் உச்சிக்கே சென்றனர். தொடர்ந்து, சிறந்த ராம பக்தரான 'சமர்த்த ராமதாஸ்' கதையை நாடகமாக்கினார் பிள்ளை. அதில் ராமதாஸரைச் சிறையிலிட்டு வாட்டும் 'நவாப்' ஆக அவர் நடித்திருந்தார். பாத்திரத்தோடு ஒன்றி அவர் நடித்த நடிப்பால் கவரப்பட்ட மக்கள் அவரை 'நவாப்' என்ற பட்டத்துடன் 'நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை' என்று அழைக்க ஆரம்பித்தனர். பின்னர் அதுவே 'நவாப்' என்றால் ராஜமாணிக்கம் பிள்ளையை மட்டுமே குறிக்குமளவுக்கு நிலைத்தது. 1935ல் 'பக்த ராமதாஸ்' ஜூபிடர் சோமுவின் தயாரிப்பில் முருகதாஸாவின் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எம்.என்.நம்பியார் உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர்.
தேச பக்தியும், தெய்வ பக்தியும் ராஜமாணிக்கம் பிள்ளையின் இரண்டு கண்களாக இருந்தன. ஒழுக்க சீலரான அவர், தம் நாடகக் குழுவில் இருந்தவர்களையும் அவ்வாறே நடக்குமாறு பயிற்றுவித்தார். பெண்களுக்கு அவரது நாடகக் குழுவில் இடமில்லை. அத்துடன் நேரக் கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைத் தம் கலைஞர்களிடம் வலியுறுத்தினார். அவர்களுக்கு நடிப்போடு இசை, நடனம், வாள் சண்டை முதலானவற்றிலும் பயிற்சி அளித்தார். எம்.என். நம்பியார், டி.கே.எஸ். நடராஜன், கே.எஸ். கோபால கிருஷ்ணன், கே.டி. சீனிவாசன், டி.கே. பாலசந்திரன் போன்ற பலர் இத்தகைய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் நேரடியாகப் பயின்று வளர்ந்தவர்களே! மிகுந்த தேசப்பற்று கொண்ட பிள்ளை, புராண நாடகங்களின் இடையிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வசனங்கள், பாடல்கள் இருக்குமாறு நாடகங்களை வடிவமைத்தார். 1934ம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தபோது அவரைத் தனது நாடகம் பார்க்க வருமாறு அழைத்தார். பிள்ளையின் அழைப்பை ஏற்றார் காந்திஜி. மகாத்மாவின் முன்னிலையில் 'நந்தனார்' நாடகம் நடந்தது. வசூல் தொகை முழுவதையும் சுதந்திரப் போராட்டத்திற்காக காந்திஜியிடம் அளித்துக் குழுவினர் ஆசி பெற்றனர். தொடர்ந்து 'இன்பசாகரன்' என்ற நாடகத்தை அரங்கேற்றினார் பிள்ளை. தமிழகம் முழுதும் நல்ல ஆதரவுடன் நடந்த அந்த நாடகம், சென்னையில் மட்டும் 178 நாட்கள் தொடர்ந்து நடந்ததாகக் குறிப்பிடுகிறார் முக்தா சீனிவாசன், தனது 'இணையற்ற சாதனையாளர்கள்' நூலில். அந்த நாடகம் பின்னர் அதே பெயரில் திரைப்படமானது. ஹிந்தியில் 'பிரேம் சாகர்' என்ற பெயரிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

1936ல் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு அங்கயற்கண்ணி அம்மையுடன் திருமணம் நிகழ்ந்தது. நன்மகவும் வாய்த்தது. தேவி பக்தரான பிள்ளை தமது மகவிற்கு தேவி பாதன் என்று பெயர் சூட்டினார். நாடகப் பணியை முன்னிலும் தீவிரமாகத் தொடர்ந்தார். நாடக வளர்ச்சியோடு தமிழக மக்களிடையே பக்தி வளர்ச்சிக்கும் அவர் மிக முக்கிய காரணமாக அமைந்தார். சுவாமி ஐயப்பன் வரலாற்றை முதன்முதலில் நாடகமாகப் போட்டவரும், ஐயன் புகழைத் தமிழகமெங்கும் நாடகம் மூலம் பரப்பியவரும் ராஜமாணிக்கம் பிள்ளைதான். இந்த நாடகம் நடத்தியபோது ஐயப்பன் ஊர்வலத்தையும் பஜனையையும் நடத்தியது அக்காலத்து மக்களின் நினைவுகளில் நீங்காத ஒன்று. 'சுவாமி ஐயப்பன்' நாடகத்தில் மேடையில் புலியும் புலிக்குட்டிகளும் தோன்றும் காட்சி அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. தந்திரக் காட்சிகளுக்காக இவரது பல நாடகங்கள் ஆயிரம் முறைக்கு மேல் அரங்கேறின. ராஜமாணிக்கம் பிள்ளையும் 'நாடகச் சக்கரவர்த்தி' என்று அழைக்கப் பெற்றார். ஒருமுறை சென்னையில் பிள்ளையின் சம்பூர்ண ராமாயண நாடகம் நடந்தபோது, தம்முடைய ஒளவையார் திரைப்படத்தை அப்போது வெளியிட்டால் கூட்டம் வராது எனக் கருதி, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அப்படத்தை வெளியிடாமல் நிறுத்திவைத்திருந்தார் என்று ஒரு கருத்துண்டு. நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ராமாயண நாடகம் நடந்த இடத்திற்கு அக்காலத்தில் 'ராமாயணம் ஸ்டாப்' என்ற பெயர் ஏற்பட்டதிலிருந்தே இவரது நாடகத்துக்கு இருந்த செல்வாக்கை உணர்ந்து கொள்ளலாம்.

நாளடைவில் திரைப்படங்களின் செல்வாக்கால் நாடகங்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. சமூகக் கதைகளுக்குக் கிட்டிய வரவேற்பு புராண நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை. பிள்ளையின் நாடகத்தில் நடித்த பலரும் திரைத்துறை நோக்கிச் சென்றதாலும், நாடக நடிகர்கள் பலர் உடல்நலக் குறைவுற்றதாலும் ராஜமாணிக்கம் பிள்ளையால் முன்புபோல் நாடகம் நடத்த இயலவில்லை. ஒருமுறை ஏற்பட்ட கடும் புயல், மழை காரணமாக நாடகக் கம்பெனிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சிறிது சிறிதாக நாடகக் கம்பெனி சரிவை நோக்கிச் சென்றது. மகன் தேவி பாதன் நிலைமையைச் சீராக்கக் கடுமையாக உழைத்தும் அது பலனைத் தரவில்லை. நாடக உலகில் 'நவாப்' ஆக வாழ்ந்தவர் நிஜ உலகில் வறுமையின் பிடியில் சிக்கினார். மன நிம்மதிக்காகக் காசி யாத்திரை மேற்கொண்டார். எஞ்சிய வாழ்நாளை அமைதியாக ஸ்ரீரங்கத்தில் கழித்த அவர் 1974ம் ஆண்டு காலமானார்.

நாடகக் கலையின் வரலாற்றில் தனித்த ஒரு முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தந்திரக் காட்சிகளையே பின்னர் ஆர்.எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி போன்றோர் நவீன வடிவத்தில் மேடையேற்றினர். தமிழ் நாடக வரலாற்றில் ஒரு முன்னோடிக் கலைஞர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பது மறுக்க முடியாத உண்மை.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline