|
|
தமிழ் உணர்வும் தமிழ்ப் பிரக்ஞையும் உந்தப் பெற்று தமிழ்மக்கள் விடுதலை பெற சுதந்திரத் தமிழ்நாடு வேண்டுமென்ற வேட்கையுடன் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவர் சி.பா. ஆதித்தனார்.
1942 இல் 'தமிழன்' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். முதல் இதழில் 'நமது நோக்கம்' என்னும் தலைப்பில் "தமிழ் பெரிது, தமிழ் இனம் பெரிது, தமிழ்நாடு பெரிது என்பது நமது கொள்கை. தமிழ் இசை இவற்றை வளர்க்க வேண்டும் என்பது நமது கொள்கை. நாலுகோடித் தமிழ் மக்களுக்கும் தகுந்த சம்பளத்தில் வேலை கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்பது நமது கொள்கை. இந்நாட்டில் ''ஏழையில்லை, பிச்சைக்காரன் இல்லை'' என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும் என்பது நமது கொள்கை."
"தமிழ் இனம் ஒன்று என்று நாம் நம்புகிறோம். இளந்தமிழர்களுக்குள் ஒற்றுமை, ஊக்கம், வீரம் உண்டாக வேண்டும் என்று நாம் சொல்லு கிறோம். தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்கள் படும் துன்பம் தொலைய வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம்."
"அந்நியர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பது நமது நோக்கம். துண்டுபட்டுக்கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபட வேண்டும் என்பது நமது நோக்கம். தமிழர்கள்கூடி ஏற்படுத்தும் அரசு, வளர்ந்து பிறநாட்டாரும் மதிக்கும் ஒரு வல்லரசாக வேண்டும் என்பது நமது நோக்கம்."
மேற்குறிப்பிட்ட கொள்கைகளையும், நோக்கங்களையும் ஆதரிக்கும் கட்சி எதுவா யிருந்தாலும் சரி, அதை நாம் ஆதரிக்கிறோம். தமிழனுக்குத் தொண்டு செய்ய முன்வரு வோருக்கு நாம் தொண்டு செய்யத் தயாராய் இருக்கிறோம். அந்நியருக்கு பணி செய் வோருக்கு நாம் பணி செய்ய மாட்டோம் என்பது உறுதி.
இவ்வாறு மிகத் தெளிவாக தனது நோக்கம், கொள்கை, செயற்பாடு என்னவென்பதை ஆதித்தனார் குறிப்பிட்டார். இதனோடு தொழிற்பட்ட ''தமிழ்ப்பிரக்ஞை''யே ஆதித்தனார் என்னும் ஆளுமை தமிழ்ச்சூழலில் இயங்கும் முறைமையை வழிநடத்தியது.
கல்வியில் சட்டத்துறையில் பாரிஸ்டராக இருப்பினும் பத்திரிகைத் துறையிலேயே தனது வேட்கையை ஆர்வத்தை பூர்த்தி செய்ய முடியும் எனக்கருதினார். இதனாலேயே விடாப்பிடியாக தெளிவுடன் பத்திரிகைத் துறையில் ஒரு புதிய சகாப்தம் தோன்றுவதற்கு காரணமானார்.
தேசிய அளவில் ஏற்பட்ட தேசிய உணர்ச்சியும் சுதந்திர தாகமும் அந்நிய ஆதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும் பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் சூழலில்தான் ஆதித்தனார் பொதுவாழ்வில் நுழைகின்றார். 1942 வெள்ளையனே வெளியேறு என்ற பெரும் போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கினார். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு சுதந்திரத் தமிழ்நாடு முயற்சி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இவரது கட்சியான தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டை நிறுத்தி வைத்தார்.
சமூக, அரசியல் அக்கறையும் விடுதலையின் அவசியமும் தமிழின் அரசியல் செயற்பாட்டை அக்கால கட்டத்தேவை கருதி நிறுத்தி வைத்தார் என்பது புலனாகிறது. ஆனால் பத்திரிகைத் துறையில் அதன் பிரவாகம் பிறீட்டுக் கிளம்ப முயற்சி செய்தார்.
'தமிழன்' தொடங்கிய உடனேயே தினசரிப் பத்திரிகை தொடங்குவதற்கான ஆர்வமும் அவரிடம் இருந்தது. 1942 நவம்பர் 1 இல் இருந்து 'தந்தி' எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். இந்தப் பெயரைக்கூட வாசகர்கள்தான் சூட்டினார்கள். பொதுவில் பத்திரிகைக்கு பெயர் வைப்பதில் ஒர் கொள்கையைக் கடைப்பிடித்தார். அதாவது அந்தப் பெயர் இரண்டு, மூன்று எழுத்துக்குள் இருக்க வேண்டும். மக்கள் எளிதில் சொல்லக்கூடிய பெயராகவும் இருக்க வேண்டுமெனவும் எதிர்பார்த்தார்.
இலண்டனில் வெளிவரும் 'டெய்லி மிரர்' எனும் தினசரிப் பத்திரிகையைத் தான் தந்தி பின்பற்றியது. குறிப்பாக செய்திப் பத்திரிகையில் தந்தி ஒரு புதிய பரிமாணம் ஏற்படுத்த முயற்சி செய்தது. மதுரையில் தொடங்கிய தந்தி விற்பனையில் ஒரு சகாப்தத்தை ஆரம்பித்தது. பத்திரிகையின் நுணுக்கங்களை தெளிவாக அறிந்து தமிழில் சாதனை காண ஆதித்தனார் அரும்பாடுபட்டு உழைத்தார்.
தந்தி நிறுவனத்தின் மாலைப்பதிப்பாக மாலைமுரசு, வார இதழாக ராணி போன்ற பத்திரிகைகளையும் ஆரம்பித்தார். 1947ல் சேலத்தில் 'தினத்தாள்' 1948இல் திருச்சியில் தினத்தூது, அதே ஆண்டு சென்னையில் தினத்தந்தி என்று பதிப்புக்களை விரிவுபடுத்திக் கொண்டே போனார்.
'தமிழன்' முதல் இதழில் 'நமது நோக்கம்' என்ற அறிவிப்பு தினத்தந்தியில் தொடருமென்ற அடிப்படையில் வடிவமைத்து செயற்பட்டார். ஆம்! தமிழ் தமிழர் என்ற உணர்வுகளைத் தூண்டும் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டார்.
ஆரம்பத்தில் வெளிவந்த பத்திரிகைகள் ஆங்கிலம் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பரிச்சயம் கொண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையிலே அவற்றின் பத்திரிகை நடை இருந்தது. ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு பரந்த வாசகப் பரப்பை இலக்காக கொண்டு தினத்தந்தி வெளியிடப்பட்டது. தமிழைக்கூட சரியாகப் படித்திராத பெரும்பான்மை மக்கள்திரள் படிக்கும் விதமாக தமிழ்ப் பத்திரிகை இருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் - எளிய சாதாரண தமிழர்கள் - தமிழை வாசிக்கக் கற்றுக் கொண்டார்கள்.
தினத்தந்தி நாளிதழ் மூலமே வெகுசனவாசிப்பு தமிழ்நாட்டில் முதன்முதலாக பரவலாக வளரத் தொடங்கியது. புதிதாக வளர்ந்துவரும் எழுத்தறிவுடையோருக்கு எழுதப்படும் தமிழ் மொழி நடை எத்தகையதாக இருத்தல் வேண்டுமென்பதற்கான நியமங்களை தினத் தந்தி ஏற்படுத்திற்று. மக்களை மருட்டும் பண்டிதத்தனத்தையும் படாடோபமான சொற் சிலம்பத்தையும் மாற்றி எளிய தமிழில் ஆதித்தனார் பத்திரிகைகளை வெளியிட்டார். இதனால் பல லட்சம் வாசகர்கள் பெருகி னார்கள். |
|
"ஒரு மாபெரும் கட்சி சாதிக்கக்கூடிய சாதனையை ஆதித்தனார் ஒரு தனி மனிதராக நின்று 'தினத்தந்தி' வாயிலாக சாதித்திருக்கிறார். நாடு சுதந்திரம் பெறுகிற நிலையில் அவர் 'தந்தி'யைத் தொடங்கினார். நாடு சுதந்திரம் பெற்றபொழுது வயது வந்தோருக்கெல்லாம் வாக்குரிமை கிடைத்தது. அந்த நேரத்தில் சமானியமான எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கு விஷயஞானம் - நாட்டு நடப்புத் தெரியாத நிலையில் அவர்களுக்கு வாக்குரிமை என்றால் அதனால் பல கேடுகள் விளையக் கூடுமென்று பல அறிஞர்கள், வாக்குரிமை கொடுக்கக்கூடாது என்றும் எதிர்த்தார்கள். ஆனால் ஆதித்தனார் செய்த இதழ் தொண்டு, விஷயஞானம் இல்லாத வாக்காளர்களுக்கும் விஷயஞானத்தை வளர்த்துக் கொடுத்து, மக்களாட்சி வளர்ச்சிக்கு மகத்தான பணி செய்திருக்கிறது."
இவ்வாறு ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) தினத்தந்தி ஆதித்தனார் குறித்து தனது கணிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இது மிகச் சரியானது. அக்காலகட்ட பின்புலத்தில் வைத்து நோக்கும் போதுதான் இதனை சரிவர புரிந்து கொள்ள முடியும்.
தமிழகச் சூழலில் வாசிப்பு கலாசாரம் அடிநிலை மக்கள் வரையில் படர தினத்தந்தி உதவியிருக்கிறது. எளிய தமிழில் செய்திகளைக் கொடுப்பதில் தினத்தந்தி ஒரு புதிய நடைமுறையையே ஏற்படுத்தியது.
நல்லமொழி வளர்ச்சியை விரும்புகிற அறிஞர்கள் தினத்தந்தி தமிழ் இன்னும் கொஞ்சம் வளமாக இருக்கலாமே என்று எண்ணுவது உண்டு. சாமானிய மக்களிடமும் தமிழ் உயர வேண்டுமானால், முதலில் அந்த மக்கள் இருக்கிற இடத்திற்கு தமிழ்போக வேண்டும், அப்பொழுதுதான் அவர்களிடத்தில் தமிழை உயர்த்த முடியும் என்று பரிதிமாற் கலைஞர் கூறியிருக்கிறார். "மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நாம் போயாக வேண்டும். அவர்களை மேலே கொண்டு வருவதற்கு அதுதான் ஒரே வழி. வேறுவழி கிடையாது. கிராமப்புறத்து உழவன் கூட நல்ல முறையில் புரிந்து கொள்ளும் முறையிலே செய்திகளை அமைத்து, கவர்ச்சியான தலைப்புகளுடன் தினத்தந்தி கொடுத்து வருகிறது."
இத்தகைய கொடுப்பினைக்கு, ஆதித்தனா ரிடம் இருந்த தெளிவான நோக்கம்தான் அடிப்படையாக இருந்தது. மேலும் தமிழ்ப்பற்று காரணமாக பிறமொழிச் சொற்களை கலக்காது தமிழ் எழுதப்பட வேண்டுமெனவும் விரும்பினார். புஷ்பம் என்பதற்கு பதில் பூ என்று எழுதினால் எல்லோருக்கும் புரியும். பட்சி என்பதை பறவை என்று எழுதலாம் அதைவிட 'குருவி' என்று எழுதுவது எல்லோருக்கும் புரியக்கூடியது. இதுபோல் இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுதினால் போதும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வந்தார். ''புற்றரை' என்று எழுதுவதுதான் இலக்கணம். ஆனால் இன்று எல்லோரும் 'புல்தரை' என்றுதான் எழுதுகிறோம். இதுதான் படிக்க சுலபம்.
இவ்வாறு 'மொழிநடை' பற்றிய சிந்தனை யையும், நடைமுறை சார்ந்த அனுபவ நிலையில் மொழியை எல்லோருக்குமாக சனநாயக மயப்படுத்தும் பார்வை ஆதித்தனாரிடம் இருந்தது.
பேச்சுத் தமிழ் எந்தளவிற்கு வளர்ந்து கொண்டு வருகிறதோ அந்தளவிற்கு தினத்தந்தியின் தமிழும் வளர வேண்டுமெனவும் விரும்பினார். அதற்காகவே தன்னளவில் ஒரு வாசகனாகவும் இருந்து விழிப்புடன் வழிநடத்தினார்.
ஆக உச்சரிப்புக்கு எளிதான சொற்கள், தொடர்கள் கூட்டுத் தொடர்களாகவே இருக்கக்கூடாது. நிறுத்தல் குறிகளை மிகுதியாகப் பயன்படுத்த அறிவுறுத்தினார். மிகச் சிறிய பத்திகளே அமைய வேண்டும். 5 செ.மீ. க்கு மேல் பத்திகள் அமையக்கூடாது என்றார். செய்தி வெளியிடுதலில் பரபரப்புத் தன்மையை பெரிதும் பயன்படுத்த வேண்டும் என்றார். தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் ஆதித்தனாரின் இவ்வகைச் செயற்பாடுகள் வெகுசன வாசிப்பு பரவலுக்கும் அடிப்படையாக அமைந்தது.
தமிழ்ப் பத்திரிகைகளின் வளர்ச்சியின் வரலாற்று நோக்கில் ஆதித்தனாரின் வருகை, அவரது செயற்பாடுகள் 1930 களுக்கு பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டு வந்த சமூக மாறுதல்களுடன் தொடர்புபடுத்தித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
சொந்த முயற்சியால் எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள், ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்ற சிறு தொழிலில் ஈடுபடுவோர் எனப் பலரும் தினத்தந்தியை வாசித்தார்கள். இவ்வாறு வளர்ச்சியடையும் வாசிப்புக் கலாசாரம் உருவாவதற்கு ஆதித்தனாரின் சிந்தனையும் நோக்கமும் செயற்பாடும் அமைந்திருந்தன.
தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில சாதாரண மக்கள் நிலை நின்ற வாசிப்பு மட்டத்தை அதிகரித்த பாங்கு ஆதித்தனாரின் முன்முயற்சி யினாலேயே சாத்தியப்பட்டது. தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் ஆதித்தனார் சாதனைகள் ஒரு சகாப்த தோற்றுவிப்புக்கு மடைமாற்றத் துக்கு காரணமாயிற்று. தமிழ்ப்பத்திரிகைகளின் வரலாற்றில் ஆதித்தனாருக்கு ஓர் நிலையான இடமுண்டு. தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|