கிறிஸ்துமஸ் மரம்
|
|
|
சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளையின் தேர்ந்த கையில் மணிக்குத் தொண்ணூறு மைல் வேகத்தில் அது வழுக்கிக்கொண்டு போகிறது. மகள் அவ்வப்போது திரும்பிக் கொரிக்க ஏதானும் கொடுத்து வருகிறாள். பெயரனுக்கும் பெயர்த்திக்கும் பாட்டி செல்லம். அவளோடு சோளப்பொறியைப் பங்கு போட்டுக் கொண்டு தாங்கள் ரசித்த காட்சிகளை விமர்சித்து வருகிறார்கள்.
இந்தக் கலி·போர்னியாதான் எவ்வளவு அழகு! திரும்புகிற இடமெல்லாம் மலைகள். ஏரிகள், காடுகள், பூங்காக்கள். அலைவீசும் நீலக்கடல். இதமான வெய்யில். தழுவும் காற்று. சொர்க்க சுகத்துக்கு வேறு என்ன வேண்டும்!
சாலையின் இடதுபுறம் தலைக்குமேல் ஒளிரும் நீலப்பலகைகளில் பாதைகள் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டே வருகிறேன். ஒரு பள்ளத்தாக்கில் கார் இறங்கி ஏறும்போது பின்னால் வரும் கார் விளக்குகளின் வெண்மை ஒளியும் எதிர்ப் புறம் போகும் கார் விளக்குகளின் பின்னே தெரியும் சிவப்பு ஒளியும் ஒரு பாதி கெம்புக்கற்களும் இன்னொரு பாதி முத்துக்களும் பதித்த அட்டிகை போல அழகாகத் தெரிகின்றது. இடதுபுறத்தில் கொஞ்ச தூரத்தில் கடற்கரை. அருகே தீப்பெட்டி போன்ற அழகான சிறு வீடுகள். சான் டியாகோவிலிருந்து ஐம்பத்து மூன்று மைல் வந்தாயிற்று.
ஓஷன்ஸைட் நகரைத் தாண்டுகிறோம். சாலை ஓரத்தில் மான் படம் வரைந்த ஒரு கம்பம். இங்கு மான்கள் கடப்பதால் வாகனங்கள் மெதுவாகச் செல்ல எச்சரிக்கை.
அட, இது என்ன? ஒரு ஆண், பெண், குழந்தை அவசரமாக ஓடும் சித்திரப் பலகை?
மகள் விளக்குகிறாள். "இங்கிருந்து மெக்ஸிகோ எல்லை ரொம்பக் கிட்டே இருக்கிறது. அங்கே பிழைப்புக்கு வழி இல்லாத ஏழை எளிய மக்களில் சிலர் இங்கே எல்லையைக் கடந்து யு.எஸ்ஸில் குடும்பத்தோடு புகுந்து விடுகிறார்கள். சட்ட விரோதமான எல்லை மீறல்தான். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகி வேகச்சாலையில் வரும் வாகனங்கள் அவர்கள் மேல் மோதக் கூடாது என்று அந்த எச்சரிக்கைப் பலகைகளை வைத்திருக்கிறார்கள்."
இந்த மெக்ஸிகோ மக்கள்தான் எவ்வளவு கடுமையான உழைப்பாளிகள்! தோட்ட வேலை, கார் ரிப்பேர், வீட்டு வேலை எதுவானாலும் குறைந்த கூலிக்கே, நம்பகமாகச் செய்கிறார்கள்.அவர்கள் நடத்தும் சலூன்களில் முடிவெட்டக் கட்டணம் கூடக் குறைவாகவே இருக்கும். பெரிய குடும்பங்கள். ஒவ்வொருவரும் கொஞ்சம் சம்பாதித்தாலும் சிறிய வீடுகளில் எளிமையான குடித்தனம் நடத்தப் போதும். அநேகமாக யாருக்கும் ஆங்கிலம் பேச வருவதில்லை. ஸ்பானிஷ் மொழிதான்.
பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்ததில் நேரம் போனது தெரியவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் வந்தாயிற்று. ஒரு சிறு தெருவில் நுழைந்து டிரா·பிக் சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். சாலை ஓரத்திலிருந்து ஒரு பூச்சாடியில் பூங்கொத்துகளை எடுத்து வந்த ஓர் இளைஞன் கார்க் கண்ணாடிப் பக்கம் வந்து நிற்கிறான். மாப்பிள்ளை கண்ணாடியைக் கீழே இறக்குகிறார். "இதோ பாருங்கள். இவன் கூட ஒரு மெக்ஸிகன் தான்" என்கிறார்.
இருபது வயது இருக்கும் இளைஞன். கருத்துச் சுருண்ட தலை முடி. துறுதுறுப்பான கண்கள். புன்னகை சிந்தும் முகம். பார்த்தால் பளிச்சென்று இருக்கிறான். நிறையப் பூங்கொத்துகளை என் புறம் நீட்டுகிறான். ஸ்பானிஷ் மொழியில் என்னமோ சொல்கிறான். "என்ன சொல்கிறான் இவன்?" என்கிறேன். மாப்பிள்ளை அவனிடம் பேசுகிறார். "பூங்கொத்து ஐந்து டாலராம். வேண்டுமா என்று கேட்கிறான்".
மாப்பிள்ளை சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் மனது சென்னைக்குத் தாவுகிறது. அன்று வாணி மஹாலில் ஒரு கச்சேரி கேட்க மகன் காரில் அழைத்துப் போகிறான். தானியங்கி சிக்னலில் வழக்கம் போலச் சிவப்பு விளக்கு. பையன் ஆத்திரத்தோடு கார் எஞ்சினை அணைக்கிறான். "சனியன்... எப்பவும் இப்படித்தான் கழுத்தறுக்கும்..." அவனுக்கு ஆ·பீஸில் ஏதோ தகராறு. எரிச்சல்.
கார்க் கண்ணாடியை யாரோ தட்டு கிறார்கள். பரட்டைத்தலையோடும், கிழிந்த சீட்டிப் பாவாடையோடும் ஒரு பத்து வயதுப் பெண். தோளில் இரண்டு வயதுச் சவலைக் குழந்தை ஒன்று தூங்குகிறது. ஒரு நசுங்கிய குவளையால் வயிற்றைத் தட்டிவிட்டு நீட்டுகிறது. "ஐயா.. தருமம் செய்யுங்கையா.. குளந்தை மொவத்தைப் பாருங்க. மூணு நாளாப் பட்டினி."
"அடச் சே" என்று வெடிக்கிறான் பையன். "ஒண்ணும் கெடயாது. எங்கேயானும் போய் விளுந்து சாவு. இங்கே நின்னே வண்டி ஏதானும் அடிச்சிரும். நானே மோதுவேன். போலிஸ்லே மாட்டணுமேன்னு பாக்கறேன். பீடை.. போய்த் தொலை."
நான் பர்ஸைத் திறந்து ஏதோ பணம் எடுப்பதற்குள் சிக்னல் மாறுகிறது. சர்ரென்று காரைக் கிளப்புகிறான். அந்தப் பெண் சோகம் ததும்பும் முகத்தோடு நடைபாதைக்கு ஓடுகிறாள். இது சென்னையல்ல. லாஸ் ஏஞ்சலஸ். மெக்ஸிகனின் புன்னகை பூத்த முகம் கண்முன்னே. பூங்கொத்து வாங்கப் பணப்பையைத் திறந்து ஐந்து டாலர் எடுக்கிறேன். ஐந்தை மனது நாற்பத்து ஆறால் உடனே பெருக்குகிறது. என்ன செய்ய? பழக்க தோஷம்! |
|
அவன் குனிந்து சிரித்தவாறு ஒரே ஒரு கொத்தை எடுத்துத் தருகிறான். "என்ன இது?" என்று பிரமிக்கிறேன். மாப்பிள்ளை சிரிக்கிறார்.
"சாடியில் இருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பான் என்று நினைத்தீர்களோ? எல்லாம் இப்படி விற்றால்தான் அவன் குடும்பத்துக்கு இன்றைக்குச் சோறு."
பச்சை விளக்கு இன்னும் வரவில்லை. நல்லவேளையாகப் பின்னால் கார்கள் எதுவும் இல்லை.
"அவன் பெயர் என்ன என்று கேளுங்கள். அப்பா, அம்மா, பெண்டாட்டி குழந்தைகள் இருக்காமா?" என்கிறேன்.
முன்பின் தெரியாத அவன்மேல் ஒரு பாசம் எழுகிறது.
பேசிவிட்டுச் சொல்கிறார். "அவன் பெயர் ஸான்ட்ரோவாம். வந்து மூணு மாசம் ஆச்சு. அப்பா அம்மா காலராவில் போய் விட்டார்களாம். தனியாக நடந்தே வந்து உள்ளே புகுந்திருக்கிறான். கல்யாணம் ஆகவில்லை. ஏற்கனவே இரண்டு குழந்தைகளோடு உள்ள ஒருத்தியோடு குடித்தனம். பகலில் ஏதானும் வேலை கிடைச்சால் செய்துவிட்டு இரவில் இப்படிப் பூ விற்கிறான். பிழைத்தாகணுமே!"
திடீரென்று பச்சை விளக்கு சிக்னல் தெரிகிறது. 'சர்ர்ர்...'ரென்று ஓசையுடன் ஒரு மோட்டார் பைக் எங்கள் பின்னாலிருந்து வந்து ஸான்ட்ரோவை உரசிக் கீழே வீழ்த்துகிறது. பூச்சாடியை மண்ணில் தள்ளி உடைத்து, பூங்கொத்துகளை மண்ணோடு மண்ணாய்ச் சிதைத்துவிட்டு விரைகிறது. கீழே விழுந்தவன் ஏதோ முனகிக் கொண்டே எழுந்திருக்கிறான். முழங்காலில் கிழிந்து போன கால்சராயில் ஒட்டிய புழுதியைத் தட்டி விட்டுச் சிராய்த்த கையைச் சட்டையில் துடைத்துக் கொள்கிறான். நல்ல வேளை! உயிர் தப்பி விட்டான். நாங்கள் சிறிது நேரம் விக்கித்துப் போய் அமர்ந்திருக்கிறோம். இன்று அவன் குடும்பம் பட்டினிதானா?
பர்ஸிலிருந்து இருபது டாலர் நோட் ஒன்றை உருவுகிறேன். மாப்பிள்ளையிடம் தருகிறேன். "அவனிடம் தாருங்கள், பாவம்" என்கிறேன். கொடுக்கப் போன அவரைத் தடுத்து அவன் ஏதோ சொல்கிறான். என்னைப் பார்த்துச் சிரித்தபடி கை அசைத்து எதிர்ப் புறத்து நடைபாதையில் ஏறி நடந்து போகிறான்.
"அவன் பிச்சை வாங்க மாட்டானாம்!" என்கிறார் மாப்பிள்ளை. "'பரவாயில்லை. தாங்க்ஸ். நாளைக்குக் காலையில் வேறு புதிதாகப் பூப்பறித்துக் கொண்டால் போயிற்று' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்."
ராஜரங்கன் |
|
|
More
கிறிஸ்துமஸ் மரம்
|
|
|
|
|
|
|