விலைகூடின பொருள்
|
|
|
நான் 11 வயதுச் சிறுவனாக இருந்த பொழுது கேட்டு பயந்த கதை. இப்பொழுது நினைத்துப் பார்த்தா சிரிப்பாய் வருகிறது. எங்கள் கிராமத்தில் அக்காமார்கள் எங்களுக்கெல்லாம் சாயங்கால வேளையில கதை சொல்வாங்க. அப்படிக் கேட்டதுதான் இந்தக் கதையும்.
அந்தக் காலத்தில் எங்க ஊர்ல சங்கரக்கா சங்கரக்கான்னு ஒரு அம்மா இருந்தாங்களாம். நிறைய நகை போட்டுக்கிட்டு வசதியா வாழ்ந்தாங்க. அந்தம்மாளுடைய கணவர் இறந்துபோன பிறகு எல்லா நகைகளையும் பெட்டியில வச்சிருந்து, யாராவது ஏழைப் பெண்கள் இரவல் கேட்டால் மொத்த நகையையும் பையோடு தூக்கிக் கொடுத்து அனுப்புவாங்களாம். இப்படி இரவல் வாங்குகிற பெண்கள் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பளீரென்று தெரிவார்களாம்.
இந்த நகைகளைப் போட்டுக் கொள்கிற பெண்களின் பளீர் அழகைப் பார்த்து ஒரு பேய் தானும் அந்த நகைகளைப் பூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததாம். ஒருநாள் ஒரு ஏழைப்பெண் சங்கரக்காவிடம் வந்து "நாளைக் காலையில் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்குப் போகணும். அதிகாலையில் சீக்கிரமாய் வந்து நகைகளை வாங்கிக்கட்டுமா?" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு சங்கரக்கா "சரி வா தருகிறேன்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
நமது நகைப் பைத்தியப் பேய் இதை ஒட்டுக்கேட்டுவிட்டதாம். அந்தப் பேய் அன்று நள்ளிரவு தாண்டியதும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு சங்கரக்கா வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி, முன்தினம் வந்த பெண்மணியின் குரல் போல தனது குரலை மாற்றிக் கூப்பிட்டு நகையைக் கேட்டிருக்கிறது. சங்கரக்காவும் நகைப்பையைக் கொண்டு வந்து கொடுக்க, பேய் முகத்தைத் திருப்பிக் கொண்டு அதை வாங்கிக் கொண்டது. பின்னர் "போயிட்டு வரேன்" என்று மெதுவாகச் சொல்லிவிட்டு வேகமாக நடந்து நேராகப் பேய்க் கிணற்றின் தரையிலிருக்கும் உடைமரத்தின் அடியில் சென்று எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு கிணற்றிற்குள் சென்றுவிட்டது.
சிறிது நேரம் கழித்து உண்மையான ஏழைப் பெண் வந்து சங்கரக்காளிடம் நகையைக் கேட்க சங்கரக்கா ''அடிப்பாவிப் பெண்ணே! இப்பதானே வந்து வாங்கிட்டுப் போன? மறுபடியும் வந்து நிற்கிறியே" என்று கேட்டிருக்காங்க. சிறிது நேரத்தில் செய்தி ஊர் முழுவதும் பரவிடுச்சு. ஊரில் மிகவும் தைரியசாலியான பஞ்சவர்ணம் என்ற பெண்மணியின் காதுகளை எட்டியிருக்கிறது.
அந்தப் பெண் சங்கரக்காளிடம் வந்து ''இது அந்த உடைமரத்துப் பேயோட வேலையாத்தானிருக்கும். அதை எப்படியாவது கண்டுபிடித்து நகைகளை மீட்டுத்தருகிறேன்'' என்று தைரியம் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே அன்று இரவு ஊர்க்கோடியில் நின்று தூரத்திலிருக்கும் பேய்க் கிணற்றைக் கண்காணித்திருக்கிறார். நள்ளிரவு தாண்டியதும் எல்லா நகைகளையும் அணிந்த பேய் முன்னால் வர மற்றப் பேய்கள் எல்லாம் அதன் பின்னால் வந்து உடைமரத்தின் அடியில் வட்டமாக நின்று கொண்டு ஒரு பேய் மாற்றி இன்னொரு பேயாக நகை அணிந்து ''சங்கரக்கா தாலியும் காப்பும் எனக்குச் செத்த, உனக்குச் செத்த'' என்று பாடி ஆடியிருக்கிறார்கள். 'செத்த'ன்னா தப்பா நெனக்காதீங்க, கொஞ்சநேரம்னு அர்த்தம். |
|
பஞ்சவர்ணம் மறுநாள் இரவு உடம்பெல்லாம் அடுப்புக் கரியை நன்கு பூசி மேலும் கருமையாக்கிய பின் முகத்தில் சுண்ணாம்பினால் கோரமாய் வரைந்து, தலையைப் பெரிதாய் விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு பேயைப் போல வேஷம் போட்டுக்கொண்டாள். துணிச்சலுடன் பேய்க் கிணற்றின் பக்கத்தில் போய் நின்றிருக்கிறார். நடுநிசியானவுடன் எல்லாப் பேய்களும் கூட்டமாக கிணற்றிலிருந்து வெளிவந்தன. அவை பஞ்சவர்ணத்தைக் கண்டதும் ஏதோ ஒரு புதிய பேய் என்று நினைத்து அவரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு உடைமரத்தினடியில் வட்டமாய் நின்று நகை மாற்றி ஆட ஆரம்பித்தது.
நகைகளை அணிந்து கொள்ளப் பஞ்சவர்ணத்தின் முறை வந்தவுடன் கவனமாக எல்லா நகைகளையும் அணிந்து கொண்ட பின் சடேரெனத் திரும்பி "அடிசெருப்பால... எடு விளக்குமாற்ற'' என்று கத்திச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்னாலே பேய்க்கெல்லாம் பயமாம்.
இதைக் கேட்ட எல்லாப் பேய்களும் 'தொபீர் தொபீர்' என்று கிணற்றில் குதித்து மறையவும் பஞ்சவர்ணம் ஒரே ஓட்டமாய் திரும்பிப் பார்க்காமல் வந்து சங்கரக்காவிடம் எல்லா நகைகளையும் சேர்த்துவிட்டாராம்.
ஊர் முழுவதும் பஞ்சவர்ணத்தை மிகவும் பாராட்டினார்கள் என்று அக்காமார்கள் கதையை முடித்தார்கள். என்ன, கேட்டு நீங்களும் நடுங்கிப் போய்ட்டீங்களா?
எஸ். மோகன்ராஜ் |
|
|
More
விலைகூடின பொருள்
|
|
|
|
|
|
|