Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வன்மமும் மென்மையும்
- பி. கிருஷ்ணமூர்த்தி|ஜூன் 2024|
Share:
தினசரி காலை சுற்றுகளில் வந்த டாக்டர் அமிர்தவல்லி, என்னைப் பரிசோதித்து விட்டு அன்று மதியமே வீட்டிற்குப் போகலாம் என்று கூறினார். அரசாங்க மருத்துவ மனையில் பிரசவத்துக்காக ஒரு வாரத்திற்கு முன் வந்த நான், சில நாட்களில், பத்து மாதச் சுமையை இறக்கி, தாயும் சேயுமாக தனித்தனியாக மூச்சுவிடும் நிலையில் இன்று பரந்த வெளியுலகில் சஞ்சாரம் செய்யப் போவது எனக்கு ஒரு கேள்விக் குறியாக இருந்தது.

முக்கியமாக, கூட இருக்கும் மிகவும் இளம்பிஞ்சுப் பாவ மூட்டையுடன் நான் எப்படி வாழப்போகிறேன் என்ற எண்ணம் என்னை வாட்டியது. காதல் வெறியில் பெற்ற உறவுகளை உதறிவிட்டு விக்ரமின் வார்த்தைகளை வாக்குறுதிகளாக நம்பி, மணமாகாமலே அவனுடன் வாழ்ந்த சில மாதங்களில், நிலை தடுமாறி ஓர் இரவு நாங்கள் செய்த தவற்றினால் நான் தாய்மை அடைந்தேன். இதை அறிந்த விக்ரம் என்னிடம் வித்தியாசமாகவும் அலட்சியமாகவும் பழக ஆரம்பித்தான். வெளிநாட்டில் வேலைக்குப் போவதாகச் சொல்லி, என்னை விட்டுவிட்டுப் போய்விட்டான்.

பாவச்சின்னமாக என்னுள் வளர்ந்த சிசுவை, பாசச்சுமையாக நினைத்த எனக்கு, எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் அதனுடன் எப்படி வாழப்போகிறேன் என்ற நினைவில் குழம்பிப் போயிருந்தேன். அப்பொழுதுதான் சிறிது தூரத்திலிருந்த ரயில் நிலையம் என் கண்களில் பட்டது. என் உள்மனதில் என்னுடைய பாவச்சுமைக்கு ஏதோ ஒரு தீர்வு கிடைத்தது போன்ற உணர்வில் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன். அங்கு காலி ரயில் பெட்டிகளின் வரிசை எனக்குச் சாதகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆள் நடமாட்டமும் அங்கில்லாததால் ஒரு படுக்கும் வசதிகொண்ட பெட்டியின் உள்ளே, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த என் பாசச்சுமையைப் படுக்க வைத்தேன். யாரும் பார்க்குமுன்னே, கீழே இறங்கி மறைவாக நின்று சிறிது நேரம் அந்த ரயில் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கையிலிருந்த சுமையை இறக்கிவிட்டாலும், மனதில் இருந்து அந்தச் சுமையை இறக்க முடியவில்லையே! கண்கள் கண்ணீர் சொரிய, யாரிடம் எப்படி என் குழந்தை சேரப்போகிறதோ என்ற ஆவலும் ஆதங்கமும் மனதை வாட்ட, அந்த ரயில் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. என் உடம்பெல்லாம் வியர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, நடுத்தர வயதினர் ஒருவர் அந்தப் பெட்டியின் பக்கம் வந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கு யாரும் இல்லததால், எங்காவது பக்கத்தில் சென்றிருப்பார்களோ என்று எண்ணிச் சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு, முடிவில் குழந்தையைத் தானே எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

பத்துமாதம் சுமந்த பிள்ளை வெளி உலகத்திற்கு வந்தவுடன், அதனுடன் என் பந்தம் முடிந்தது என்ற முடிவில், ஆண்டவன் அருளால் யாரிடமோ நன்றாக வளரும் என்ற நம்பிக்கையில் மனதைத் தேற்றிக் கொண்டு, எதிர்கால சுதந்திர சுயநல வாழ்விற்கு வழி என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

எதிரே ஓர் அரசியல் கட்சியின் மகளிர் ஊர்வலம் என் கண்களில் பட, கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொண்டேன். என் குரல்வளம் நன்றாக இருந்ததால், நான் எழுப்பிய கோஷங்கள் அந்த ஊர்வலத்தின் தலைவியையும் மற்றவர்களின் கவனத்தையும் மிகவும் கவர்ந்தது. ஊர்வல முடிவில் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவி, தனியாக என்னை அழைத்து என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டு என்னை அலுவலகத்திலேயே தங்க அனுமதித்தாள். சேர்ந்த சில மாதங்களிலேயே என் பேச்சுத் திறனுக்காக கட்சியின் பிரச்சார மேடைகளில் என்னை முக்கிய பேச்சாளராக்கி, கட்சியில் என்னை ஆய்வாளராக உயர்த்தினார்கள். என் பேச்சுக்காகவே என் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒரு தொகுதியில் இடைக்காலத் தேர்தலில் கட்சியின் வேட்பாரளாக என்னை நிறுத்தியதில், என்னுடைய சுயநல வாழ்வின் லட்சியத்தை நெருங்கிவிட்டதாக பெருமிதம் அடைந்தேன். ஆனால் விக்ரமினால் ஏற்பட்ட ஏமாற்றமும் களங்கமும் நிழலாக என்னைத் தொடர்ந்தன. சில இரவுகளில் என் குழந்தையின் நினைவும் என் கண்களை ஈரமாக்கி மனதில் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது.

வேட்பாளராக நான் பக்கத்து ஊருக்குச் சென்று, வீடு வீடாக என் கட்சிக்கு ஓட்டுக் கேட்டபோது, ஒரு பெரிய வீட்டில் என்னை பார்த்த சம்பவம் என் தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. அங்கு நான் சந்தித்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, தான் குழந்தையுடன் தனியாக இருப்பதையும், சுவரில் தொங்கிய படத்தில் இருந்தவரை அவள் கணவர் ஷியாம் என்றும், ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதையும் சொல்லி முடித்தாள். என் அதிர்ச்சிக்குக் காரணம் அந்தப் படத்தில் இருந்தது என்னை ஏமாற்றி ஒரு குழந்தையையும் கொடுத்த அதே விக்ரம், தன் பெயரை மாற்றிக்கொண்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அங்கிருந்து நகர்ந்தேன். இந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக மீள முடியாமல் தவித்தேன்.

பருவ உணர்ச்சிகளால் ஈர்க்கபட்டு, பெற்று வளர்த்த பெற்றோரை உதறிவிட்டு, ஏமாற்றும் ஓர் ஆணுக்கு அறியாமையில் அடிமையாகி, அந்த சங்கமத்தின் சின்னமான ஓர் உயிரை, சமூக நெருக்கடிகளுக்கு பயந்தும், எதிர்காலச் சுயநல வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் உலகத்திற்கு தாரை வார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். விக்ரம் ஊரிலிருந்து வந்து என்னை முறைப்படி என்றாவது திருமணம் செய்து கொள்வான் என ஆவலுடன் கர்ப்பிணியாய்க் காத்திருந்த எனக்கு, பெயர் மாற்றம் செய்துகொண்டு வசதியான ஒரு குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு என் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

அவன் சுயரூபம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் என் சுமையை உலகிற்கு வராமல் உடனேயே கலைத்திருப்பேன். இதை எண்ணி எண்ணி ஆண் ஆதிக்கதின் மேல் என் மனதில் ஒரு வன்மம் வளர்ந்து, பெண்களின் உரிமைகளுக்குப் போராட ஆரம்பித்தேன். என் அரசியல் பிரவேசம் இதற்குக் கைகொடுக்க, என் மனதில் வன்மம் ஒரு விஸ்வரூபம் எடுத்தது. என் மேடைப் பேச்சுக்களிலும் அது ஓரளவு வெளிப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் கட்சியின் ஆண்வர்க்கம் இதை எதிர்த்தாலும், மகளிரணித் தலைவி என்ற முறையிலும் தாய்க்குலத்தின் ஆதரவும் எனக்குப் பக்கபலமாக இருந்தன. கட்சி உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தில் அவர் மகளின் வாழ்க்கை ஆண் ஆதிக்கத்தினால் கேள்விக் குறியானதில் என்னிடம் முறையிட்டார். என் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையின் உதவியுடன் அவள் திரும்பவும் கணவனுடன் வாழ வழி செய்தேன். என்னுள் வளர்ந்த அந்த வன்மம், ஆண்களின் சிறு தவறுளைக்கூட மன்னிக்க மறுத்துவிட்டது. வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறி உயர்ந்தாலும், விக்ரம் செய்த நம்பிக்கைத் துரோகத்தால் விலைமதிக்க முடியாத என் பெற்றோரின் பந்தத்தை நான் நிரந்தரமாக இழந்து இருக்கிறேன்.

என் கட்சி என்னை ஒரு கல்வி மந்திரி ஆக்கி, பொறுப்புகளை அதிகமாக்கியது. அந்த முறையில் ஒருநாள் என்னை பாரதியார் கலைக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்க அழைத்தார்கள். நானும் அதை ஏற்று, வருவதாகக் கூறினேன். ஆண்டு விழாவில் இறைவணக்கம் முடிந்து பேச்சாளர்களுக்குப் பிறகு நானும் பேசிவிட்டு, தொடரப் போகும், கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க இருக்கையில் அமர்ந்தேன். நடன நிகழ்ச்சிகளுக்குப் பின் பாட்டுப் போட்டி நடந்தது.

முதலில் பார்வையற்ற மாணவன் ஒருவன் பாட வந்தான். அவனைக் கூட்டி வந்த ஆசிரியர் அவனை ராஜு என்று அறிமுகம் செய்தார். அவன் பாடிய 'நல்லதோர் வீணை செய்து' என்ற பாரதியார் பாட்டு மெய்மறக்கச் செய்து கண்ணீரை வரவழைத்தது. அவ்வளவு அழகாகப் பாடினான். முடிவில் முதல் பரிசு அவனுக்கு என்ற அறிவிப்பில் கைதட்டி மகிழாதவர்களே இல்லை.

அவன் பார்வையற்றவன் என்பதையும் மீறி, எனக்கு வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு பந்தத்தை என்னுள் உணர்ந்தேன். அந்த உணர்வு அவனுக்குக் கண் பார்வை பெற எதாவது உதவி செய்யத் தூண்டியது. அவனுக்குப் பரிசு அளிக்க மேடைக்குச் சென்றேன். அவனுடன் அந்த ஆசிரியரும் இருந்தார்.. அவரிடம் அவனைப் பற்றிய விவரங்களை கேட்டபொழுது என் தலையே சுற்றியது. அவன் ஒரு அநாதை என்றும், இருபது வருடத்திற்கு முன், பிறந்த குழந்தையாக காலி ரயில் பெட்டி ஒன்றில், யாரோ விட்டுச் செல்ல, அந்த வழியாக வந்த நான், அதை எடுத்து வளர்த்தேன். ஆனால் அக்குழந்தைக்கு கண் பார்வை பிறவியிலேயே போய்விட்டது. டாக்டர்கள் பார்த்து, கர்ப்ப காலத்தில் தாயானவள் சரியாக குழந்தையை கவனிக்காததாலும் அல்லது பெற்றோரின் குடும்ப 'ஜீன்ஸ்' காரணமாகவும் இது நடந்திருக்கலாம் என்று கூறிவிட்டனர். இதைக் கேட்டவுடன் என் மனதில் எரிமலை வெடிப்பது போன்ற உணர்வு.

என் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மனதிற்குள்ளேயே அழுதேன். அவன் பராமரிப்பிற்காகப் பையிலிருந்த காசோலையை எடுத்து, அவன் பெயருக்கு ரூபாய் 50 லட்சம் என்று எழுதி அந்த ஆசிரியரிடம் கொடுத்தேன். சிறிது நேர மெளனத்திற்கு பிறகு என்னைத் தனியாக கூட்டி சென்று, அவர் கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் சரமாரியாக பல கூரான கத்திகள் குத்துவது போல இருந்தன. "இந்த உதவி அவனுக்குத் தேவைப்படாது. ஒரு வாரமாக அவன் காய்ச்சலில் அவதிப்பட்டு மோசமாகி, பிறகு டாக்டர்கள் பரிசோதனையில், அவனுக்குப் புற்றுநோய் இருப்பதாகவும் இன்னும் மூன்று மாதமே அவன் உயிர் வாழ்வான் என்றும் கூறினர். இந்த உதவியைப் பள்ளியின் புதுக் கட்டிடத்திற்கு அவன் பெயரில் நன்கொடையாகக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்..

என் சுயநல வாழ்விற்காக, சுமந்த பந்தத்தை உதறிவிட்டு வந்தவளுக்கு, ஆண்டவன் கொடுத்த தண்டனை - மரணத்திற்குக் காத்திருக்கும் பார்வையற்ற என் மகனை அடையாளம் காட்டிப் பரிசு கொடுக்க வைத்ததுதான். இந்த பந்தத்தின் கதாநாயகன் விக்ரமுக்கும் ஆண்டவன் சாலை விபத்தின் மரணம் மூலம் தண்டித்து விட்டான். என் சுயநல வாழ்வில் நான் அடைந்த பெரிய வெற்றி எல்லாம் என் குடும்ப வாழ்க்கையில் நான் கண்ட தோல்வியை ஈடுகட்ட முடியாது.

என் வன்மம் நிறைந்த மனதும் மென்மை ஆகிவிட்டதாக நான் உணர்கிறேன்.
பி. கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஜெர்சி
Share: 




© Copyright 2020 Tamilonline