Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2024 Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | பொது | சிறுகதை | சின்னக்கதை
Tamil Unicode / English Search
சிறுகதை
நிரஞ்சனா
- மருங்கர்|மே 2024|
Share:
மினியாபோலிஸ் செயின்ட்பால் விமான நிலையம். மனோஜ் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். பல வருடங்களுக்குப் பிறகு, சான் டியாகோவில் உள்ள தனது நீண்ட கால நண்பர்களை நேரில் பார்க்கப் போவதை நினைத்து அவனுக்குள் உற்சாகம் குமிழ்த்தது!

"மனோஜ், ஜெகனுக்கு ஃப்ளைட் ஏறிட்டோம் என்று சொல்றியா?" என்று சொன்னபடியே ரேணுகா கைப் பையை வைக்கும் பெட்டிக் கதவை மூடிவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

"சொல்லிட்டேன்" என்றான் மனோஜ்.

"நம்ம பசங்க?"

"பெரியவனுக்கு நாளைக் காலையில 8 மணிக்கு ஃப்ளைட், சின்னவளுக்கு 10 மணிக்கு. ஈவென்ட் சாயங்காலம் 6 மணிக்குதானே, வந்துடுவாங்க" என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டான். அவர்கள் எம்ட்டி நெஸ்டர்ஸ். பிள்ளைகள் வளர்ந்து, வீட்டைவிட்டு வெளியேறி ஒரு சில வருடங்கள் ஆகிவிட்டன. பெரியவன் கலிஃபோர்னியாவிலும், சிறியவள் நியூயார்க் நகரத்திலும் படிக்கிறார்கள். தனிக்காட்டு ராஜா என்று சொல்லமுடியாது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும்!

★★★★★


சான் டியாகோ. ஜெகன் வீடு.

"டேய் ராபர்ட் சொல்லுடா, என்ன விஷயம், மூணு தடவை கால் பண்ணி இருக்க, எவரிதிங் ஓகே?"

"ஜெகன், பிரச்சனைடா" ராபர்ட்டின் குரலில் இருந்த கவலையை ஜெகனால் உணர முடிந்தது.

"பார்ட்டி ஆர்டர் செய்வதில் ஏதாவது?" என்று சொல்லும் பொழுதே ராபர்ட் "டேய், இது மனோஜ் சம்பந்தப்பட்டது" என்று சொல்லிவிட்டு, பிரச்சனையை விவரிக்க ஆரம்பித்தான். அதைக் கேட்டு ஜெகன் பதற்றமடைந்தான்.

"அவன் வானத்திலே பறந்துகிட்டு இருக்கான். நத்திங் டூயிங்! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே."

"என்ன கிண்டலா, அவன் ஃபேமிலியோட வராண்டா" என்று சற்றுக் கோபமாக ராபர்ட் சொன்னான்.

"கூல் டவுன் டா, என்ன செய்யலாமுன்னு பார்க்கிறேன்" என்று சொன்னாலும், இதை எப்படிக் கையாள்வது என்று ஜெகனுக்குத் தெரியவில்லை.

★★★★★


விமானம் வானில் ஏறியது. கீழே தரையில் கட்டிடங்கள். லெகோ பிளாக் போலத் தோன்றின. பஞ்சு மேகங்களைத் துளைத்து விமானம் மெல்ல மெல்ல மேலே ஏறியது. மேகங்களுக்கு மேலே, உலகம் அமைதி மற்றும் அழகின் சாம்ராஜ்யமாக மாறியது. சூரியன் சிவப்பு ஒளியில் கேபினைக் குளிப்பாட்டினான். பஞ்சு மிட்டாய்போல மேகங்கள் நகர்ந்து செல்வதைப் பார்த்து மனோஜ் மனம் சற்று இளகியது. ஜன்னலுக்கு வெளியே முடிவில்லாமல் செல்லும் வானம் அவனது எண்ண அலைகளைத் தன்னுள் இழுத்தது.



மனோஜ், ஜெகன் மற்றும் ராபர்ட் கல்லூரிக் கால நண்பர்கள். கிட்டத்தட்ட சமகாலத்தில் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆனவர்கள். அடிக்கடி பார்க்க நேரம் இருப்பதில்லை. ராபர்ட் மற்றும் அவனது துணைவி ஜான்சியின் இருபத்தைந்தாவது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாட சான் டியாகோவிற்கு இந்தப் பயணம்.

★★★★★


சான் டியாகோ. ஜெகனின் வீடு.

"மனோஜ், நல்லா சாப்பிட்டயா? காலேஜ் டேஸ்ல சுலபமா 2 பிளேட் பிரியாணி சாப்பிடுவே, இப்ப என்னடா கால் பிளேட்டுக்கே திணர்றே?"

"வயசு ஆயிடுச்சு இல்ல!" சோகமாகச் சொன்னான் மனோஜ்.

ஜெகன் சுற்றிப் பார்த்தான், யாரும் இல்லை.

"டேய், உன்கிட்ட தனியாப் பேசணும். இரு வரேன்."

சமையலறையில் இருந்த அவர்களது துணைவியரிடம் ஏதோ சாக்குச் சொல்லி, அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஓர் அமைதியான ஓசையுடன், மாடல் ஒய் டெஸ்லா கராஜிலிருந்து வெளியேறிப் பிரதான சாலைக்கு வந்ததும், "டேய் எதுக்குடா அவசர, அவசரமா கூட்டிட்டு வந்த, என்ன விஷயம்?" என்று பதட்டமாகக் கேட்டான் மனோஜ்.

"மனோஜ், நான் சொல்லற விஷயத்தைக் கேட்டு ரொம்ப டென்ஷன் ஆகாதே, இதைப்பற்றி எனக்கும், ராபர்ட்டுக்கும் முன்னாடியே தெரியாது. நீ ஃப்ளைட்ல ஏறினதுக்கு அப்புறம்தான் தெரியும்" என்று இழுத்தான்.

"டேய்!, ரொம்ப டென்ஷன் பண்ணாத. டக்குனு விஷயத்தைச் சொல்லு."

"உனக்கு நம்ம காலேஜ் மேட் இந்துமதி ஞாபகம் இருக்கு இல்ல?"

அந்தப் பெயரைக் கேட்டவுடன், மனோஜ் முகம் வெளிறியது, வயிற்றில் புளியைக் கரைத்தது.

"டேய், என்ன சொல்லற?" என்று தடுமாறியவாறு கேட்டான்.

"ராபர்ட் பொண்ணும், இந்துமதி மருமகளும் சமீபத்திய நண்பர்கள் போல. இந்துமதி பையன் வீட்டுக்கு ஷார்ட் ட்ரிப்ல யூ.எஸ். வந்திருக்கா. எப்படியோ இந்துமதியும், ராபர்ட்டும் ஒரே காலேஜ்ன்னு நேற்றைக்குதான் ராபர்ட் பொண்ணுக்குத் தெரிய வந்திருக்கு. அதனால.." அவன் சொல்லி முடிக்கும் முன்

"டேய், ரேணுகாவுக்கு இந்த விஷயம் பற்றி ஒண்ணும் தெரியாதுடா" என்று சொல்லிவிட்டு, அருகில் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ‘மடக், மடக்’ என்று குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்

"இந்துமதிக்கு நாம வருவது தெரியுமா?" எனச் சங்கடத்துடன் கேட்டாள்.

"தெரியும் போல, ராபர்ட் பொண்ணு சொல்லிட்டா."

"அப்ப வரமாட்டா, இல்ல?" சற்று நம்பிக்கையுடன் கேட்டான் மனோஜ்.

"டோன்ட் திங்க் சோ!" இழுத்தான் ஜெகன்.

மனோஜ் பின்தலையைக் காரின் குஷன்மீது மோதிக் கொண்டான்.

"டேய், பார்த்துடா! டேக் இட் ஈஸி டா. கிஃப்ட் வாங்குற இடம் வந்துருச்சு நீ வரியா, இல்ல..."

"எனக்குக் கொஞ்சம் மனசு சரியில்லை. நீ மட்டும் போயிட்டு வாடா" என்று சொல்லிவிட்டு டெஸ்லாவில் ஏதோ ஒரு பாட்டை அழுத்தி விட்டான்.

நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை

இந்தப் பாடலைக் கேட்கக் கேட்க அவனது பழைய நினைவுகள், தனது சிறகை மெல்ல விரித்து, அவனை முன்னோக்கி, இல்லை பின்னோக்கித் தள்ளியது.

★★★★★


பொறியியல் கல்லூரி, இசைக்கூடம். இன்னும் ஒரு மாதத்தில் கல்லூரிகளுக்கிடையிலான இசைவிழா. ‘காதலன்’ படம் வந்த நேரம். மனோஜ் சில நண்பர்களுடன், "முக்காலா முக்காபலா" பாடலை மேடை வடிவில் கொண்டுவர எங்கெங்கு எடிட் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

"மச்சி, கடைசியில் பிரபுதேவா டான்ஸ் சீக்வன்ஸ் வரும் இல்ல, அதை நம்ம ராபர்ட்டை ஆட வெச்சிடலாம்."

"அதெல்லாம் சரி. லேடி சிங்கருக்கு என்ன செய்யப் போறே? எப்போவும் பாடற ராதா, அன்னைக்கு ஊர்ல இல்ல. இப்ப என்ன செய்யப் போறோம்?" என்று கவலையுடன் கேட்டான் டிரம்ஸ் மணி.

"லேடீஸ் வாய்ஸ் இல்லாத பாட்டு ஏதாவது.." என்று இழுத்தான் கிட்டார் கண்ணன்.

"டேய், போங்கடா, இந்தப் பாட்டுக்கு எவ்வளவு போட்டி தெரியுமா? இந்தப் பாட்டுக்கு 12 காலேஜ் ட்ரை பண்ணி இருக்கு போல, நமக்குக் கிடைச்சது எவ்வளவு பெரிய விஷயம். ராபர்ட் ஏதோ ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லிட்டு போயிருக்கான், பார்ப்போம் என்னன்னு?" என்று அவன் சொல்லி முடிக்கும் முன் "மனோஜ்!" என்று ஒரு குரல். ராபர்ட் பக்கத்தில் ஒரு பெண், இல்லை, தேவதை!

"இவங்கதான் இந்துமதி, ட்ரிபிள்இ படிக்கிறாங்க. நல்லாப் பாடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். இவங்களுக்கும் நம்ம குரூப்ல பாடுறதுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு" என்றான் ராபர்ட். அவன் சொல்வது ஒன்றும் யார் காதிலும் விழுந்தது போலத் தெரியவில்லை.



என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்

என்ற பாடல்தான் மனோஜ் மனதில் ஓடியது. பக்கத்தில் இருந்த நண்பன்

"டேய்! நம்ம பாடப் போறது முக்காலா, முக்காபலா, நீ என்ன பாட்டை மாத்துற?" என அவன் காதைக் கடித்தான்.

"நான் மனசுக்குள்ளத்தானே பாடினேன்?" என நெளிந்தான் மனோஜ்.

"அந்தப் பொண்ணு காதிலேயே விழுந்தாலும் விழுந்திருக்கும்" என்று சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தான் டிரம்ஸ் மணி.

அவள் மாநிறம்தான், ஆனால் நல்ல லட்சணம். கிட்டத்தட்ட நடிகை மாதவி போன்று முகச்சாயல். சற்றுப் பருமனான உடல். ஆனாலும், அவளது உயரம் அதைக் காட்டிக் கொடுக்காது. சுருள் முடி. மஞ்சள் நிறப் பாவாடை, பழுப்பு நிற அரை சேலை. அதற்குப் பொருந்தும் வகையில் இளமஞ்சளில் தோடும் கை வளைவியும்!

பக்கத்தில் இருந்த ஒரு பையன் அவனை நறுக்கென்று கிள்ளினான். கனவு உலகத்தில் இருந்து வெளியே வந்த மனோஜ். அவளைப் பார்த்து

"நாம எடுத்துக்கிட்டு இருக்கிற பாட்டை, சுவர்ணலதா பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்க. சுவர்ணலதா பாட்டு ஒண்ணு பாடறீங்களா?"

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

அதைக் கேட்டதும், மெய்மறந்து போனார்கள். அவர்கள் இயல்பு நிலைக்கு வரச் சில நிமிடங்கள் ஆயின. மனோஜ் சுதாரித்துக்கொண்டு

"சூப்பருங்க, கப் நமக்குத்தான். நாம பிராக்டிஸ் ஆரம்பிக்கலாம்" என்றான்.

இசை விழாவில் மனோஜ், இந்துமதி குரல், ராபர்ட் பிரபுதேவா மூவிஸ் அரங்கத்தைக் களேபரப்படுத்தியது. மனோஜ் முதல் பரிசை மட்டும் வெல்லவில்லை, இந்துமதியின் காதலையும்தான்!

★★★★★


சட்டென்று மனோஜின் முகத்தில் வெம்மையான காற்று மோதியது. டெஸ்லாவின் கதவை திறந்தவாறு "நல்ல தூக்கம் போல, என்னடா, பழைய இனிமையான நினைவுகள் போல?" என்றான் ஜெகன்.

பதில் ஒன்றுமில்லை

"கிளம்பலாமா?" எனக் கேட்டான் ஜெகன். மீண்டும் அமைதி. சில நிமிடங்களுக்கு அங்கு மௌனம் நிலவியது. ஜெகன் டெஸ்லாவை ஓட்டத் தொடங்கினான். சட்டென்று மனோஜ் ஜெகனைப் பார்த்து "நான் தப்புப் பண்ணிட்டேன் டா. இந்துமதி என்னைவிட படிப்புல, மியூசிக்ல, சமயோஜித புத்தில எல்லாத்லயும் டாப்! அத என்னால ஈசியா ஒத்துக்க முடியல. அப்ப என் மைண்ட்செட் அப்படி. கேம்பஸ் இன்டர்வியூவில, முதல் கம்பனியிலேயே செலக்ட் ஆயிட்டா. அதுவும் குரூப் இன்டர்வியூல கலக்கினா! பொறாமைல நான் அவளைப் பாராட்டவே இல்லை. அவள் வெறுப்பாயிட்டா. தன்னோட துணையோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படறவன்தான் உண்மையான லவ்வர் என்று சொல்லிவிட்டு பிரேக் அப் ஆயிட்டா. அப்ப சோஷியல் மீடியா எல்லாம் இல்ல. சுத்தமாக காண்டாக்ட் இல்ல. இப்ப நான் அவள்கிட்ட மன்னிப்பு கேட்கணும்டா" என்று சொல்லும்பொழுது மனோஜ் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதை ஜெகன் கண்டான்.

மறுநாள் ராபர்ட் வீடு. பஃபே வகை உணவு. மனோஜ் வீட்டின் பின்பக்கத்தில் உணவு வகைகளைச் சீரமைத்துக் கொண்டிருந்தான்.

"டேய் மனோஜ்" என்று கூப்பிட்டுக் கொண்டே அவர் அருகில் வந்து "இந்துமதி வந்துட்டடா!" என்று காதைக் கடித்தான் ஜெகன். திடீரென்று மனோஜுக்கு ஒரு பதற்றம்.

"நான் இன்னும் ரெடி ஆகல" என்று சொல்லிக்கொண்டே, யார் கண்ணிலும் படாமல் ராபர்ட் வீட்டு மாடியில் இருந்த கெஸ்ட் பெட்ரூமுக்கு ஓடினான்.

சிறிது நேரம் கழிந்தது. குளியல் அறைக் கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்துக் கொண்டான். தொப்பையை பிளேசர் வைத்து மறைக்க முயற்சித்தான். பின்வழுக்கை தெரியாமல் இருக்க முடியை பின்பக்கம் கோதினான். இதற்கு மேல் சரி செய்ய முடியாது என்பதை உணர்ந்து, கீழே போக முடிவெடுத்தான்.

வீட்டின் பின்பக்கத்தில் அனைவரும் இருந்தனர். அவனைப் பார்த்ததும்,

"மனோஜ் கடைசியா வந்துட்டாண்டா!" என்று ஒரே குரலில் கத்தினார்கள்.

ஜெகன் மற்றும் ராபர்ட், மனோஜையும் இந்துமதியையும் அங்கிருந்த மேடைக்கு அழைத்துச் சென்றனர். மனோஜ் இந்துமதியைப் பார்த்ததும் திகைத்துப் போனான். ‘வயது என்பது ஒரு எண்ணைத் தவிர வேறில்லை’ எங்கோ படித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆங்காங்கே நரை, சற்று முகச் சுருக்கம். ஆனால் அவள் அழகு இன்னும் அவளை விட்டு விலகவில்லை.

ராபர்ட் அவர்களது கைகளில் மைக்கைச் சொருகினான்.

"டி.ஜே. லெட்ஸ் பிலே முக்காலா, முக்காபலா பி.ஜி.எம்" என்று கத்தினான். அவர்கள் இருவரும் பாட, ராபர்ட் பிரபுதேவா ஸ்டெப்ஸ்களை ஆட முயற்சித்தான். சிறிது நேரத்தில் பஃபே ஸ்டார்ட் ஆனது. மனோஜின் பெண் இன்னும் வரவில்லை. இந்துமதி கணவர் அவளுடன் யூ.ஸ். வரவில்லை மனோஜ் மற்றும் இந்துமதி அவர்களது மற்ற குடும்ப உறவுகளை பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்..

மனோஜ் இந்துமதி மகனிடம் ஏதோ சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான். அங்கு வந்த, இந்துமதி மகனின் மனைவி "உங்க அம்மாவை நம்ம வீட்டுல கூப்பிடற செல்லப் பெயரைச் சொல்லி ஒருத்தர் கிட்ட அறிமுகப் படுத்தினேன். அவங்க போனதும். இந்துமதின்னு அறிமுகப்படுத்து என்று சொன்னாங்க, ஏன் தெரியலை?" எனக் கேட்டாள்.

"அம்மா சொன்னா ஏதாவது காரணம் இருக்கும். அவங்க சொன்னபடி செய்" என்றான். அப்பொழுதுதான் மனோஜுக்கு ஒரு விஷயம் உரைத்தது. சற்றுப் பதட்டமானான்!

அந்த சமயத்தில், இந்துமதி தனியாக இருப்பதைக் கவனித்து, அவளிடம் பேச இதுதான் சரியான சமயம் என்று நினைத்து, அவள் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான். சிறிது நேரம் பொது விஷயங்களைப் பேசிய பிறகு "இந்துமதி, நான் பண்ண ஒரு பெரிய தவறுக்காக உங்கிட்ட மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். அது என்னன்னா.." என்று அவன் சொல்லத் தொடங்கும் பொழுது,

"மனோஜ், நான் உன் வைஃப் கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப, உங்கிட்ட ஒரு பெரிய சேஞ்ச் வந்து இருக்கிறதைப் புரிஞ்சுகிட்டேன். திறந்த மனப்பான்மை இல்லாதனாலே நமக்குள்ள பிரச்சனை வந்தது. ஆனால் இன்னிக்கு நீ வேலை பார்க்கும் இடத்திலேயும், வீட்டிலேயும் நீ இருக்கிற விதம் பத்தி உன் ஒய்ஃப் பெருமையாகப் பேசினாங்க. மாற்றமாயிரு, பீ த செஞ்ச் என்று நாம் கேள்விப்பட்டதில்லையா. நீ மாறிட்டே! மன்னிப்பு எதுக்கு கேட்கணும்? எனக்கு ரொம்ப சந்தோஷம்!" என்று அவள் சொல்லும் பொழுது விழியோரத்தில் வந்த கண்ணீரைக் காட்டிக் கொள்ளாமல் ஏதோ சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் நிரஞ்சனா. ஆம், கல்லூரி நாட்களில் அவளது செல்லப் பெயர் நிரஞ்சனா! அவளது மிக நெருங்கிய சொந்தங்களுக்கும், மனோஜுக்கும் மட்டுமே தெரிந்தப் பெயர்!

மனோஜின் முதுகை யாரோ தொட்டது போல இருந்தது. "அப்பா" என்று கூப்பிட்டது அந்தப் பரிச்சயமான குரல். அது வேறு யாருமில்லை, மனோஜின் மகள் நிரஞ்சனா!
மருங்கர்,
மின்னசோட்டா
Share: 




© Copyright 2020 Tamilonline