|
|
|
"உழைச்சுப் பிழைக்க ஆயிரம் வழியிருந்தும் இப்படி குளிர்லயும் பனிலயும் உட்கார்ந்து காசு கேட்குறதும் ஒரு பிழைப்பு. ம்ம்..." அந்தப் பேரங்காடிக்குள் நுழையும் வழிநெடுக அமர்ந்திருந்தவர்களைக் கண்ட பிரசன்னா, மெல்லிய முணுமுணுப்புடன் வாகனத்தை உள்ளே செலுத்தினான்
"ஊரை ஏமாத்த ஆளுக்கொரு தட்டி வேற. பரிதாபம் சம்பாதிக்க காட்டுற மும்முரத்தை வேலை செஞ்சு வாழறதுல காட்டலாம்ல?" அவனது பொருமலை ஆமோதிப்பது போல "ப்ச்" என்றாள் அருகிலிருந்த லதா.
"இதுல குழந்தைங்க வேற. பார்க்கவே பாவமா இருக்கு. நிறுத்த முடியுதா பாருங்களேன். கைல இருக்குற சில்லறையைக் கொடுக்கலாம்."
"பின்னாடி வண்டி வருதுமா. நிறுத்த முடியாது. பாவமா இருக்கா? எனக்கு கோபம்தான் வருது. பாவம் பார்த்து உன்னை மாதிரி சிலர் கொடுக்குறதாலதான் 'ஹோம்லெஸ்', 'ஹெல்ப்லெஸ்'னு போர்டு வச்சுட்டு நோகாம சம்பாதிக்க முடியுது. இப்படி வாங்குறதைக் கொண்டு ஏதாவது உருப்படியா செய்வாங்கனு நினைக்குற? தண்ணிக்கும் சப்ஸ்டன்ஸுக்கும்தான் எல்லாம் போகும்."
"எல்லாரையும் அப்படிச் சொல்ல முடியுமா? வேலை செய்ய விசா இல்லாதவங்க, அகதியா வர்றவங்கனு பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ? இதுல போலீஸ் வேற வந்து அப்பப்ப விரட்டிட்டே இருக்காங்க" தன் உடலுக்குப் பொருந்தாத பெரிய ஜெர்கினை அணிந்தபடி தன் அம்மா அருகில், அது அந்தக் குழந்தையின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும், அமர்ந்திருந்த பால்யம் வழிந்த அம்முகத்தைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சொன்னாள் லதா.
"உழைக்கணும்னு மனசு இருந்தா வழி தன்னால் கிடைக்கும். இதெல்லாம் சும்மா ஜால்ஜாப்பு. ஏன் கவர்ன்மென்ட்டே ஷெல்டர் கட்டி வச்சிருக்காங்களே. அங்க போய் இருக்கலாம் தானே" நிறுத்துமிடத்தில் காரைச் சொருகிய பிரசன்னாவின் குரலில் தீவிரம் ஏறுவதை உணர்ந்தாள் லதா. இது வழக்கமான ஒன்றுதான். அவனது கோபம் ஆதங்கத்தின் விளைவு என்று புரிந்தாலும் அவனது விடாத வாதிடல் அவளுக்கு ஆயாசம் தரும் ஒன்று .
"ஓகே கூல் கூல்... இப்ப நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க?" என்றபடி காரில் இருந்து இறங்கினாள்.
"டென்சன் ஆகல. பச்சைக் குழந்தைகளை இப்படி தெருவுல உட்கார்த்தி வச்சிருக்கறதை பார்த்தா பகபகன்னு கோபம் வருது" என்ற பிரசன்னா, "சரி விடு. அது அவங்க பாடு. இதெல்லாம் யோசிச்சா நம்ம நிம்மதிதான் கெட்டுப் போகும்" தன் பார்வையை வலுவில் திருப்பிக்கொண்டு லதாவைத் தொடர்ந்தான்.
உள்ளே சென்று தங்களுக்கான கார்டை எடுத்த லதா "பத்தே நிமிஷம் தான். சுத்திட்டே இருக்காதே" என்ற குரல் வந்ததில் திரும்பி முறைத்தாள்.
"ஆமா, இங்க கிரிவலம் வரணும்னு எனக்கு ஆசை. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு பக்கம் வச்சிருக்கான். ஒண்ணை விட்டாலும் இவ்ளோ தூரம் திரும்ப வரணும். அப்படி அலைய வைக்கட்டுமா?"
"வேணாம் தாயே! நீ கிரிவலமே வா!"
"அந்த பயம் இருக்கட்டும்" சிரித்துக்கொண்டே உள்ளே சென்றவர்கள் வாரத்துக்குத் தேவையான மளிகை, பால் என்று நிரப்ப ஆரம்பித்தார்கள். அது ஒரு ஆசிய மார்க்கெட். சமயத்தில் இந்தியக் கடைகளில் கிடைக்காத கீரை வகைகள், நாட்டுக் கறிகாய்கள் கூட இங்கிருக்கும் என்பதால் தூரம் அதிகம் என்றாலும் வாரம் ஒருமுறை இங்கு அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார்கள்.
"நீங்க சுரைக்காயும் சேப்பங்கிழங்கையும் எடுங்க. அட. இங்க பாருங்க முருங்கைக்கீரை கூட ஃப்ரெஷா இருக்கு. எடுக்கவா ? ஆனா வேலை வாங்கும்."
"உனக்கேன் கவலை, எடுபிடி நான் இருக்கும்போது?"
"ம்ம்க்கும்…"
"அடிப்பாவி. டக்குனு ம்க்கும்ன்னுட்ட. எவ்ளோ வேலை செஞ்சு தரேன் உனக்கு"
"நல்ல சாப்பாடு வேணும்னா செஞ்சுதான் ஆகணும் பாஸ்."
"அது சரி!"
பேச்சும் சிரிப்புமாக பில் கவுண்டருக்கு வந்து சேர, வரிசையில் இவர்களுக்கு முன்னிருந்த பெண் இவர்களைக் கண்டு சிரித்தார். இவர்களும் "ஹாய்" என்றபடி புன்னகையைப் பரிமாறி கொண்டார்கள்.
"இந்த நாள் எப்படி இருந்தது?" என்று அவர் கேட்க, "நலம். உங்களுக்கு?" என்ற பொதுவான உரையாடல் சில நிமிடங்களுக்கு. நெடுநாள் பழகியது போன்ற அவர் சிரிப்பும் பேச்சும் ஆதுரமாகத் தோன்றியது.
"இதைச் சமைப்பீங்களா?" என்றார் அவர், லதா தன் கூடையில் இருந்து எடுத்து வைத்ததைக் கண்டு. சீக்கிரம் கெட்டு விடாமல் இருக்க இறுக்கமான பிளாஸ்டிக் தாள் சுற்றி வைத்திருந்த வாழைப்பூ அது.
"ஓ சமைப்போமே. ஒவ்வொரு இதழா எடுத்துட்டு உள்ள இருக்குற மடலை சுத்தம் பண்ணி சமைப்போம்" லதா ஆங்கிலத்தில் சொல்ல, "நான் ஒருமுறை பிலிப்பைன்ஸல சாப்பிட்டு இருக்கேன்" என்று அவர் விவரிக்கத் தொடங்கி விட்டார்.
"இவ சொல்ற மாதிரியும் சமைக்கலாம். இல்ல மாவுல தோய்ச்சு வடை மாதிரியும் சாப்பிடலாம்." பிரசன்னா இடைபுக, அந்த பெண் "இஸ் இட்?" என்றபடி கண்கள் விரிய சமையல் குறிப்பு கேட்க ஆரம்பித்திருந்தார்.
"ரொம்ப ஸ்பைசியா இருக்குமோ? ஆனா எனக்கு காரம் பிடிக்கும்" அவர் நாக்கைச் சப்புக்கொட்டி காண்பிக்க, அதற்குள் அவருடைய பொருட்கள் பில்லாகி இருந்தன. பணத்தைச் செலுத்தியவர் அப்போதும் புறப்படாமல் நின்று அரட்டை அடிக்க, இவர்களது பொருட்களும் விலைபோடப்பட்டு காகித பைக்குள் அடைக்கலமாகின.
சமையல் குறிப்பையும் அதன் ருசியையும் சொல்லும் ஆர்வத்தில் பிரசன்னா வடை சட்டிக்குள்ளேயே விழுந்து விட்டதைக் கண்டு சிரித்த லதா, தன் கார்டை எடுப்பதற்குள்ளாக, அப்பெண்மணி தன் கையில் இருந்த ஐம்பது டாலர் தாள் ஒன்றை எடுத்து நீட்டி இருந்தார், "இவர்களுக்கு நான் கொடுக்கிறேன்" என்று.
லதாவுக்கும் பிரசன்னாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை. புரிந்த நொடி அவரது கையை விலக்க முயன்ற லதா, "இல்ல இல்ல. ப்ளீஸ்" என்று தன் கார்டை நீட்ட, பிரசன்னாவும் அதையே சொல்லி அந்த நோட்டை பில் போடும் பெண்ணிடம் இருந்து வாங்குவதற்கு பிரயத்தனமானான்.
"இல்லை. நான் கொடுக்கிறேன்" என்று அவர் வலுவில் நிற்க, பிரசன்னா நோட்டை பிடுங்குவதற்குள் "நான் கரன்சியை ஸ்கேன் செய்து விட்டேனே" என்றது பில் கவுண்டரில் இருந்த பெண். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள் தங்கள் வாலட்டுகளில் தேட ,சோதனை போல இருவரிடமும் கையிருப்பு நோட்டுகளாக இல்லை.
"தயவு செய்து வேண்டாம். உங்க அன்பே போதும்"
"இல்லை. நான் அன்போடு கொடுக்கிறேன். மறுக்காதீர்கள் ப்ளீஸ்" என்றவர், கீழ் ஆசிய பாணியில் குனிந்து வணங்கி விடைபெற, இருவரும் மலங்க மலங்க விழித்து நின்றனர்.
"என்னங்க இது, இவங்க ஏன் நமக்குக் கொடுக்கணும்?"
"அதுதான் எனக்கும் புரியல. நீங்க எதுக்கு பணத்தை அதுக்குள்ள ஸ்கேன் பண்ணீங்க?" பிரசன்னாவின் கேள்விக்கு கவுண்டரில் இருந்தவள் அசடு வழியச் சிரித்தாள். அவளுமே பணம் நீட்டியதும் இயந்திர கதியில் வாங்கி ஸ்கேன் செய்திருந்தாள்.
"இப்ப என்ன பண்றது?"
"இருங்க. அவங்க கார்ல ஏறுறதுக்குள்ள வேற ஏதாவது பொருள் வாங்கி தரலாம்" இருவரும் மீண்டும் கடைக்குள் ஓடி, அங்குமிங்கும் தேடி, கைக்கு அகப்பட்ட கெட்டில் ஒன்றை எடுத்து முன்பக்கம் வந்தார்கள். கண்ணாடி வழியே அவர் காரில் ஏறுவது கண்ட பிரசன்னா அந்தப் பொருளுக்கு பில் கூட போடாமல் அசுர வேகத்தில் ஓடினான். இங்கு நடப்பதை ஏற்கனவே பார்த்திருந்த செக்யூரிட்டியும் அவனைத் தடுக்கவில்லை.
"நான் பணம் செலுத்துகிறேன்" என்று லதா அங்கேயே நின்று விட, காருக்கு ஓடியவன், அவர் பாணியிலேயே குனிந்து வணங்கி அவர் மறுக்க மறுக்க பின்னிருக்கையில் கெட்டில் டப்பாவை வைத்துவிட்டு, விடைபெற்று உள்ளே வந்தான்.
"நல்லவேளை கிளம்பறதுக்குள்ள போனீங்களே"
"வேண்டவே வேண்டாம்னாங்க. தயவு செஞ்சு வாங்கிக்குங்க, இது எங்க சந்தோஷத்துக்குனு வற்புறுத்தி வச்சிட்டு வந்தேன்" இருவரின் மனமும் ஒரே கணத்தில் நெகிழ்ந்தும் பாரமாகவும் உணர்ந்தன.
யார் இந்தப் பெண்மணி? எதற்காக தங்கள் பொருட்களுக்கு அவர் பணம் தர வேண்டும்? அவருடைய உடைந்த ஆங்கிலமும், உடையும், தோற்றமும் பார்க்க மிக மிக எளிய மனிதியாகத் தானே தெரிகிறார்.
தங்களுக்காகச் செலவழித்த இந்த இருபத்தி ஐந்து டாலர் அவருடைய ஓரிரு மணி நேர உழைப்புக்கான ஊதியமாக இருக்கலாம். இல்லை சோசியல் செக்யூரிட்டி மூலம் உதவித்தொகை வாங்குபவராக இருக்கலாம். இல்லை, சட்ட விதிகளுக்கு வெளியே வேலை செய்து பணம் ஈட்டுபவராக….
சரி, தோற்றத்தை வைத்து யாரையும் எடையிடக்கூடாது தான். வசதியானவராகவே இருக்கட்டுமே. எதற்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்குத் தர வேண்டும்?
"அந்த அம்மாவுக்கு நம்மை பார்க்க அவங்க பசங்க ஞாபகம் வந்திருக்குமோ?"
"இருக்கலாம். வயசானவங்க தான். நாம ஆசையா எக்ஸ்பிளைன் பண்ணது டச் பண்ணிடுச்சோ?"
"ஒருவேளை நம்மைப் பார்க்க பரிதாபமா இருந்ததா? நல்லாதானே டிரெஸ் பண்ணியிருக்கோம்" லதாவின் கேள்வியில் இருவருக்குமே சிரிப்பு வந்தது.
"என்னவோ நமக்கு வாங்கித் தரணும்னு அவங்களுக்குத் தோணியிருக்கு. எவ்ளோ நல்ல மனசு பாருங்களேன்" இருவருக்கும் பேசிப் பேசி மாளவே இல்லை. அந்தக் கணம் ஏதோ தேவகணம் போல சர்ரியலாக இருந்தது. முன்பின் பார்த்திராத அம்முதிய பெண்ணின் உயரிய பண்பு தங்கள் இருவரையும் ஆகர்ஷிப்பது போல, இந்த நாளே அழகானது போல, பிரகாசமானது போல ஒரு நிறைவுணர்வு!
மீண்டும் கவுண்டரில் நின்று அந்த கெட்டிலுக்கு பணம் செலுத்திவிட்டு வெளியேறியவர்களிடம் "யூ ஆர் அமேசிங். நீ ஓடின வேகத்தைப் பார்த்து நான் பயந்துட்டேன்" என்றார் செக்யூரிட்டி சிரிப்புடன்.
"பதிலுக்கு நாமும் ஏதாவது வாங்கித் தரணும் இல்ல, நம்ம சந்தோஷத்துக்கு" அவரிடம் சொன்ன பிரசன்னா, வெளியே வந்ததும் காருக்கு நடக்காமல் அந்த அங்காடி அருகே இருந்த பேக்கரியை நோக்கி நடந்தான். உள்ளே நுழைந்தவன் வரிசையாக பிரெட் பொட்டலங்களையும், வாழைப்பழங்களையும் எடுக்க, லதாவுக்குப் புரிந்தது. சிரித்துக் கொண்டே அவனருகில் சென்றவள், "என்ன, Generosity is infectious ஆ?"என்றாள்.
"ம்ம்.. Generosity is contagiousனு சரியாதான் சொல்லியிருக்காங்க. என்னவோ மனசை ஒரு மாதிரியாக்கிட்டு போயிட்டாங்க அந்தம்மா. சாப்பிட வாங்கி கொடுத்துடலாம். வேஸ்ட் பண்ண மாட்டாங்க தானே?"
"வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறது தான் முக்கியம். அதை அவங்க என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சா இந்த நிமிஷ சந்தோஷம் கெட்டுப் போயிடும். அதுவும் கொடுக்கணும்னு நினைச்ச நிமிஷம் கொடுத்துடணுமாம். இல்ல, நம்ம புத்தி வழக்கம் போல லாஜிக் பேச ஆரம்பிச்சுடும்" சொல்லிக்கொண்டே லதா அவனைத் தொடர, கையில் இருந்த உணவுப் பண்டங்களுடன் இருவரும் ஹோம்லெஸ் மக்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். |
|
ஹேமா ஜெய், யூடா |
|
|
|
|
|
|
|