|
|
|
"என்ன துரைசாமி, இந்த மீடியா கம்பெனி ஆரம்பிச்சு ஆறு மாசம் ஓடிப் போச்சு . இன்னும் ஒரு வீடியோவுக்குக் கூட 1 மில்லியன் ஹிட்ஸ் வரல?" என்று கோபமாய்க் கேட்டார் 'கொ.வே. மீடியா' வின் நிர்வாக அதிகாரி கொன்றைவேந்தன்.
"இல்லை சார்.." இழுத்தார் சமூக ஊடகத் தலைவர் துரைசாமி.
"நான் இந்த நிறுவனத்தை சமூக சேவைக்காக நடத்தவில்லை. எனக்கு லாபம் தேவை. ஐ நீட் துட்டு! இனி உங்களை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை . நானே களத்துல இறங்குறேன். வேலை செய்யறவங்களை மூன்று டீமா பிரிக்கிறேன். டீம் ஒண்ணுல அல்ட்ரா மாடர்னா இருக்கற 5 பொண்ணுங்களைப் போடுங்க. பெண்களின் அந்தரங்கப் பிரச்சனைகளை அலசி பேசச் சொல்லுங்க. அடுத்த 2 வாரத்துக்குத் தலைப்புகள் இதுல இருக்கு" என்று சொல்லிவிட்டு ஒரு பேப்பரைக் கொடுத்தார். பார்த்ததும் சற்று ஆடிப்போனார் துரைசாமி!
"நீங்க டார்கெட் செய்ற ஆடியன்ஸ் லேடீஸ் என்றால், நீங்க கொடுத்து இருக்கிற டாப்பிக்ஸ் அவங்களுக்கு பிடிக்காது சார். "
யோவ் , யாருய்யா நீ! நான் டார்கெட் செய்யறதே பசங்க குரூப். இந்த மாதிரி டாப்பிக்ஸ் யார் பேசுவாங்கன்னு காத்துகிட்டு இருங்காங்க. கருத்து சொல்றதுக்கின்னே ஒரு குரூப் இருக்கு. ஹிட்ஸ் எப்படி எகிறுதுன்னு மட்டும் பாரு."
அது தொழில் தர்மம் இல்லை என்று தெரிந்தாலும், வீட்டுக்கடன் அவர் கண்முன் வந்து நின்றது. அவர் ஒன்றும் சொல்லவில்லை.
"இரண்டாவது டீமை ஆன்மீக விஷயத்துல ஃபோகஸ் பண்ண சொல்லுங்க. ஒரு திசை திருப்பல்தான். மூன்றாவது டீமைத் திரைப்பட சம்பந்தமான பேட்டி எடுக்குறதுல போடுங்க." என்றார்.
ஒரு மாதத்தில் கிட்டத்திட்ட நான்கு லட்சம் ஹிட்ஸ் கிடைத்தது. கலாச்சாரம் கெடுவதாகப் பெரிசுகள் கத்தினாலும், ரகசியமாகப் பலரும் பார்த்து ரசித்தனர். ஆனால் அவர் எதிர்பார்த்த 1 மில்லியன் ஹிட்ஸ் இன்னும் வரவில்லை!
அன்று புதன்கிழமை. துரைசாமியை தனது அறைக்கு வரும்படி சொன்னார் .
"வர வெள்ளிக்கிழமை, நடிகை சாருவோட நேரடி நிகழ்ச்சி" என்றார் கொன்றைவேந்தன்.
"சார், அவுங்க இன்டர்வியூக்கு எல்லாம் வர மாட்டாங்களே ?" என்று நம்பமுடியமால் கேட்டார் துரைசாமி .
"ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும் . ஒரு பெரிய தொகை பேசி இருக்கேன்" என்று சொல்லிக்கொண்டே கைவிரல்களைக் காண்பித்தார். துரைசாமி வாயைப் பிளந்தார்.
"எலிப்பொறி! எமோஷன்ஸ்தான் இவங்களைப் பிடிக்க, நாம வைக்குற பொறி. ஆன்லைன் ரியாலிட்டி ஷோவுல சாருவை யாராலையும் அழ வைக்க முடியவில்லை. நான் அவளைப் பொறியில மாட்டி வைக்க எந்த மாதிரியான கேள்வியெல்லாம் கேட்கணுமுன்னு, இதுல எழுதி இருக்கேன். நீதான் தொகுப்பாளர்" என்று சொல்லிவிட்டுப் பேப்பரை துரைசாமியிடம் கொடுத்தார்.
அன்று வெள்ளிக்கிழமை. நேரலைப் பேட்டி நாள்.
துரைசாமி எளிமையான, லகுவான கேள்விகளுடன் தொடங்கினார். கொன்றைவேந்தன் துரைசாமியைப் பார்த்து, ஆறாவது கேள்வியைக் கேட்கும்படி சைகை காண்பித்தார். லிவிங் டுகெதர் பற்றிய கேள்வி. துரைசாமி சற்று நெளிந்தார். கொன்றைவேந்தன் அவரைப் பார்த்து முறைக்கவே வேறு வழியில்லாமல் கேட்டார் .
சாரு சற்றும் சங்கடப்படாமல் பதில் சொன்னாள். அவள் பதிலுக்கு ஏற்றாற்போல் ஏழாவது கேள்வியைக் கேட்கும்படி சைகை செய்தார் . தரமான பதிலால் அவரது முகத்தில் சாயம் பூசினாள்.
கேள்வி பன்னிரண்டு கேட்குமாறு சொன்னார். அது அவளுக்கும், இயக்குனருக்கும் இடையே நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது. அதற்குப் பிறகு, அவளுக்கு ஆறு மாதம் எந்த சான்ஸும் வரவில்லை. தனது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தாள் . தான் சற்றுப் பொறுமையாக நடந்துகொண்டு இருக்கலாம் என்று சொன்னாள்.
"என்ன இந்த எலி எதுக்கும் மாட்ட மாட்டிங்குது!" கொன்றைவேந்தன் கேமராமேன் காதைக் கடித்தார்.
"எத்தனை நாள் எங்களை அலைய விட்டிருப்ப, உனக்கு ஒருத்தி வைக்குறா ஆப்பு!" என்று மனதிற்குள் சந்தோசப் பட்டுக் கொண்டார் கேமராமேன்.
"இயக்கனர் தனக்கு செய்த அநியாயத்தை நினைத்து நடிகை சாரு கதறல்! நடந்தது என்ன? சாரு விளக்கம்."
"கல்யாணம் செய்யாமல் வாழ்ந்தால் தப்பா என்ன? சாருவின் கோபம்."
இப்படி யெல்லாம் அவளது அழுகையையும், கோபத்தையும் டேக் செய்து பல லட்சம் வியூஸ் பெறுவதே அவர் திட்டம்.
அவர் பருப்பு ஒன்றும் வேகவில்லை!
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிபுணர் அவர் அருகில் வந்து "சார், கவுண்ட் எகிறுது, இப்பவே 2 லட்சம் ஆன்லைன் வியூவர்ஸ் இருக்காங்க!" என்று சொன்னவுடன், இன்னும் குஷியாகி கேள்விகளை முடுக்கிவிட்டார்.
சாரு எதற்கும் சளைக்காமல் பொறுமையாக , மனதில் பட்டதை தெளிவாகச் சொன்னாள். அவள் எந்தச் சமயத்திலும் உணர்ச்சிவசப் படவோ, கோபப்படவோ இல்லை.
கொன்றைவேந்தன் பிரம்மாஸ்திரம் உபயோகிக்கும் தருணம் என்று நினைத்து பூஜ்யம் என்று சைகை காண்பித்தார். "பாடி ஷேமிங்" பற்றிய கேள்வி. சாருவுக்கு சற்றுப் பருமனான உடலமைப்பு! சமூக ஊடகங்களில் வந்த நிறைய மீம்ஸ் மற்றும் சக நடிகைகள் செய்த கிண்டல்களை வைத்து ஒரு கேள்வி கேட்டார் துரைசாமி.
சாரு சற்றும் கலங்கமால், "நீங்கள் இந்த கேள்வி கேட்டதில் மகிழ்ச்சி" என்றாள். கொன்றைவேந்தன் அதிர்ச்சி அடைந்தார்!
"பாடி பாசிட்டிவிட்டி ரொம்ப முக்கியம். நான் மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். ஐ லவ் மை பாடி! கடந்த மாதம் லடாக்கில் இந்தியாவிலே மிகக் கடினமான மலை ஒன்றில் ஏறினேன். என்னாலே எதுவும் செய்ய முடியாம இருந்தால் தான், நான் வெட்கப்படணும். என்னை கேலி செய்யறவங்களாலே ஒரு மைல்கூட ஓட முடியாது. நான் யாருக்கும், எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று தீர்க்கமாக பதில் சொன்னாள்.
துரைசாமி, கொன்றைவேந்தன் இருவரும் வாயடைத்து நின்றார்கள்.
"எனி மோர் கொஸ்டின்ஸ்?" என்றாள் கூலாகச் சாரு. அமைதி!
கேமரா அருகிலிருந்த கொன்றைவேந்தனைப் பார்த்தவாறே சாரு
"இன்னைக்கு பேப்பர், டி.வி. போல சமூக ஊடகவியலுக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கு. எங்களை அழ இல்ல, கோபப்பட வைச்சுதான் பார்வையாளர்களை அதிகரிக்கணும் என்று இல்லை. நல்ல தரமான பேட்டியால கூட ஹிட்ஸ் வரும். நல்ல விஷயங்களை ஆதரிக்கிறவங்க இன்னும் இருங்காங்க. என்னைக் கூப்பிட்டதுக்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பேட்டியை முடித்துக் கொண்டாள்.
கொன்றைவேந்தன் எல்லா எலிகளும் பொறியில் சிக்குவதில்லை. புத்திசாலி எலிகளும் உண்டு என்று புரிந்துகொண்டார்.
சில நாட்களில் சாருவின் பேட்டி சமூக ஊடகங்களில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்டு ஒரு மில்லியன் ஹிட்ஸை லகுவாகக் கடந்தது! |
|
மருங்கர் |
|
|
|
|
|
|
|