Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர்கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
கைவிடவில்லை!
- உமா ஹைமவதி ராமன்|நவம்பர் 2023|
Share:
மதுரை வி.டி.எஸ் நகர் கோவில். பிள்ளையார், ஹனுமான், நவக்கிரக சன்னிதிகளைச் சுற்றிவிட்டு நேராக கோதண்டராமர் சன்னதியில் போய் அமர்ந்தாள் விஜயா. தனக்குத் தெரிந்த பிரபந்தங்களைப் பாடிவிட்டு, பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். கோவிலுக்கு மிக அருகில் ராஜம் ரோடில்தான் வீடு. வந்தவுடன் 108 ஸ்ரீராமஜெயம் எழுதிவிட்டுச் சாப்பாட்டை முடித்தாள்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். மூத்தவள் சுலோசனா பதினோராம் வகுப்பு. அடுத்து மகன்கள், இரட்டையர். ஆறாம் வகுப்பு. கணவர் ராமசாமிக்கு மருந்துக் கம்பெனியில் ஏரியா மேனேஜர் வேலை. வெளியூர் சென்றிருந்தார். அன்று திரும்பும் தினம்தான்.

சாப்பிட்ட களைப்பில் சிறிது நேரம் தலை சாய்க்கலாம் என்று நினைத்த விஜயா, பூகம்பம் ஒன்று தன் வீட்டிலேயே மையம் கொள்ளப் போகிறது என்பதைச் சிறிதும் அறியவில்லை.

வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் கணவராகத்தான் இருக்கும் என்று கதவைத் திறந்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். கணவர் அருகில் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் நின்றிருந்தாள்.

"என்னன்னா!" என்று விஜயா அலறியதைக் கேட்டு வீட்டின் உரிமையாளர் மூர்த்தி மாமா, மாமி, எதிர்வீட்டு லலிதா அனைவரும் ஓடி வந்தனர். பார்த்தவுடன் அனைவருக்கும் விஷயம் புரிந்தது. "என்னவோய் ராமசாமி! உமக்கு இது அடுக்குமா? இந்த வயசுல உமக்கு ரெண்டாம் கல்யாணம் தேவையா? மொதப் பொண்டாட்டி குழந்தைகள் எல்லாம் இருக்கறச்ச, இப்படி ஒரு அநியாயம் யாரேனும் பண்ணுவாளா? கலிகாலம் ஓய், கலிகாலம். விஜயா மாமி முகத்துக்காகப் பாக்கறேன். இல்லைன்னா உம்மை இப்பவே காலி பண்ணச் சொல்லிடுவேன்" என்றார். பெண்கள் எல்லாம் விஜயாவுக்கு எப்படி என்ன சொல்வதென்றே தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்தனர்.

ராமசாமியோ அவருடன் வந்தவளோ வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அழுத வண்ணம் இருந்தாள் விஜயா. அவ்வளவு துக்கத்திலும் "வந்தவாளை ஒரு வாய் சாப்பிடச் சொல்லுங்கோ" என்றாள்.

மாலை 4.30 மணி. குழந்தைகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பினர். வாசலில் அப்பாவுடைய செருப்பைப் பார்த்த சிறுவர்கள் "டேய் ! அப்பா வந்தாச்சுடா" என்று கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தனர். தலையில் கையை வைத்துக்கொண்டு அழுது அழுது வீங்கிய முகத்துடன் இருந்த அம்மாவிடம் சென்ற சுலோசனா "தலையில கைய வச்சுண்டு ஏம்மா அழுதுண்டிருக்க?" எனக் கேட்க "ஆமாண்டி நம்ம கப்பல் கவுந்துடுத்து குடியே முழுகிப் போச்சுடி சுலோசனா! உங்கப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கார். அந்த பவிஷ அங்க பாரு" என்று கூறிவிட்டு மேலும் விம்மினாள். குழந்தைகள் மூவரும் பயத்தில் பேதலித்துப் போயினர்.

விஜயாவின் அண்ணன் இருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடைத் தெருவில் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் நடத்தி வந்தனர். தம்பிக்கு பம்பாயில் வேலை கிடைத்து ஒரு வாரம் முன்புதான் சென்றிருந்தான். நாத்தனார்கள் மதுரையிலேயே வாசம். அனைவருக்கும் கடிதம் எழுதி வரவழைத்தாள் விஜயா.

"என்ன அத்திம்பேர் இப்படி பண்ணிட்டேளே, நியாயமா?" என்று விஜயாவின் அண்ணன்கள் கேட்க, "அவ இனிமே இங்கதான் இருப்பா" என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் ராமசாமி. வந்த பெண்ணோ யார் என்ன கேட்டாலும் அழுகை ஒன்றையே பதிலாகத் தந்தாள். அவள் உடுத்தியிருந்த பாவாடை சட்டை தாவணியைத் தவிர அவளிடம் ஒரு செட் ஸ்கூல் யூனிஃபார்ம், ஒரு பையில் பள்ளிப் புத்தகங்கள் இவைதான் இருந்தன.

அந்தப் பெண் மெல்ல மெல்ல வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தாள். சமையலில் அசத்தினாள். ஆனால் யாரும் அவளிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. வந்த ஒரு மாதத்திற்குள் அவளுக்கு வாந்தி மயக்கம் வரவே, விஜயா அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அடுத்த பேரிடி விஜயாவின் தலையில் இறங்கியது. அந்தப் பெண் கர்ப்பமாகி இருந்தாள்.

வீடு திரும்பிய விஜயா நேராகக் கோவிலுக்குச் சென்று இறைவனிடம் அழுது புலம்பினாள். தன் விதியை நொந்துகொண்டாள்.

விஜயாவுக்கு கார்த்திகைச் சீர் வைக்க வருவதாக அண்ணன்கள் கடிதம் எழுதியிருந்தனர். "நேக்கு இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல்" என அரற்றினாள் விஜயா.

அன்று காலை சமையலை முடித்துவிட்டு அந்தப் பெண், வீட்டின் உரிமையாளர் மூர்த்தி மாமா போர்ஷனுக்குச் சென்று இளைப்பாறினாள். அண்ணன்மார் வரும் நேரத்தில் அவள் அங்கு இருக்க வேண்டாம் என்று விஜயாவின் யோசனை. கர்ப்பவதிக்கு வேளா வேளைக்குச் சாப்பாடு கொடுக்க மறக்கவில்லை விஜயா. அவளிடம் பேசவில்லை என்றாலும், யாரும் வெறுப்பை உமிழவில்லை.

ராமர் கோவிலுக்குச் சென்று வந்த சுலோசனா அம்மாவிடம் "நம்பி மாமா பொங்கல் பிரசாதம் குடுத்தாரும்மா. கோதண்டராமர் அம்மாவை ஒருநாளும் கைவிடமாட்டாருன்னு சொன்னாரம்மா" என்று கூறி அம்மாவுக்கு கொஞ்சம் பொங்கல் கொடுத்து விட்டு, அந்தப் பெண்ணைத் தேடிச்சென்று அவளுக்கும் கொடுத்தாள். வாங்கிக் கொண்டு முதன்முறையாக "தேங்க்ஸ்" என்று வாயைத் திறந்து பேசினாள் அவள்.

அண்ணன்களுடன் பம்பாயிலிருந்து விஜயாவின் தம்பியும் வந்திருந்தான். உள்ளூர் நாத்தனார்களும் ஆஜர்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தம்பி "அக்கா சாப்பாடு சூப்பரா இருக்கே, யாருக்கா சமையல்?" என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டே கேட்க, அந்தச் சமயம் அப்பாவின் கண் ஜாடையைப் பார்த்த சுலோசனா, அந்தப் பெண்ணை உள்ளே அழைத்து வந்தாள்.

"மாலதி, நீயா?" என்று அலறிய தம்பியிடம் "டேய் கோதண்டம்! என்னடா சொல்ற? இவள உனக்குத் தெரியுமா?" என்று கேள்விமேல் கேள்வி கேட்டாள் விஜயா. தலையைக் கவிழ்ந்து கொண்ட தம்பியை "சொல்லுடா உண்மையைச் சொல்லுடா" என அதட்டினர் அண்ணன்மார்.

"அத்திம்பேர் தன் கம்பெனியில் வேலை வாங்கித் தந்தப்புறம் உசிலம்பட்டி போனேன். அங்க இவா ஆத்து மெஸ்லதான் சாப்பிடுவேன். ஒருதரம் இவா அம்மா அப்பா பக்கத்துல‌ வத்தலக்குண்டு போயிருந்தா. இவள தொடப்போறச்ச தாலி கட்டாம தொடக்கூடாதுன்னுட்டா. அங்க தாயார் படத்துக்கு மஞ்சக் கிழங்கு தாலி மாட்டியிருந்தா. அத இவ கழுத்தில கட்டிட்டேன். தயவுசெய்து மன்னிச்சிடுங்கோ" என்றான்.

பிறகு தொடர்ந்த ராமசாமி, "உசிலம்பட்டியில அந்த ஒரு மெஸ்தான். நான் போனதடவ அங்க போனப்போ, இந்தக் குழந்தை அழுதுண்டிருந்தா. விசாரிச்சதுல காரணம் நம்ம கோதண்டம்தான் என்று தெரிஞ்சது. அதான் நம்ம ஆத்துக்கு அழைச்சுண்டு வந்தேன். கோதண்டம் வாயால எல்லா உண்மையும் தெரியட்டும்னுட்டு பேசாம இருந்தேன். நீங்க வரதா லெட்டர் போட்ட உடனே, அவனையும் பம்பாயிலிருந்து வரவழைச்சேன்" என்று முடித்தார் ராமசாமி.

"அப்பா கோதண்டராமா! நீ என்னைக் கைவிடலையப்பா!" என்று இறைவனுக்கு நன்றி கூறினாள் விஜயா.
உமா ஹைமவதி ராமன்,
கோயம்புத்தூர்
Share: 
© Copyright 2020 Tamilonline