அழுகை வரவில்லை
|
|
|
|
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக ஆரம்பித்தாள். மேற்கொண்டு அம்மா மீனாட்சி சமையலை முடித்து, சிற்றுண்டியையும் தயார் செய்துவிடுவாள். அம்மா இருவருக்கும் மதிய உணவைக் கட்டி முடித்து சிற்றுண்டிக்கு அழைத்தாள்.
இன்றைய முதல் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. ஆடிப்பாடி அசைந்து வந்து மேஜையில் அமர்ந்த நந்து, "என்ன பாட்டி, தினமும் இட்லி தோசையே போட்டு அறுக்கறீங்க. ஒரே சட்னி, பொடி கூட்டணி. அம்மா நான் காலேஜ் கேன்டீனிலேயே சாப்டுக்கறேன்" என எழுந்துவிட்டான். "ஏன், துரைக்கு இட்லி, தோசை நாக்கில் இறங்காதோ? வார இறுதியில் நன்றாகச் செய்து போடறேன், இப்ப இதைச் சாப்பிட்டுக் கிளம்பு" என்றபடி, இரண்டு இட்லியை விழுங்கி, தண்ணீரைக் குடித்துக் கிளம்பினாள் சுதாமணி.
"ஸ்கூல் பையனாட்டம் சோத்து மூட்டை கட்டிக்கிட்டு காலேஜ் போவது நான் ஒருத்தனாகத்தான் இருக்கும். அம்மா ஆபீசில் உள்ளவங்க பிள்ளைகளே அவனவனும் பல்சர், ஹோண்டானு பறக்கறாங்க. எனக்கு இந்த ஹெர்குலிஸ்தான் விதிச்சிருக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க" என முணுமுணுத்தபடி சைக்கிளில் கிளம்பினான் நந்து. அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் எண்ணங்கள் வேறெங்கோ செல்ல, 'அதே சொற்கள், அதே பிடிவாதம், சரித்திரம் திரும்பிவிடுமோ?' என்ற கவலை. சிற்றுண்டி சாப்பிடவோ மீதி அடுப்படி வேலைகளைக் கவனிக்கவோ ஓடவில்லை.
★★★★★
மூன்று பிள்ளைகளின் பெற்றோர் மீனாட்சி சாம்பு தம்பதி. படித்துப் பட்டம் வாங்கி அரசுப்பணியிலிருந்த மகள் சுதாமணிக்குத் திருமணம் செய்விக்க எண்ணி, வலை வீசியதில் அமைந்த வரன்தான் தீனா. தனியார் நிறுவன வேலை, தாயார் மட்டும்தான். நல்லபடியாகத் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே நந்து பிறந்தான். தீனாவின் கணக்கு போகப்போகத் தெரியவந்தது. மனைவியின் அரசுப்பணியைக் கற்பக விருட்சமாக நினைத்தான் அவன். அவளது பதவியின்மூலம் வசதி வாய்ப்புகளை அனுபவித்து, முடிந்தால் வீடு, வாசல் என்று முன்னேற வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால், சம்பளத்தைத் தவிர எதையும் மனதாலும் எண்ணாத அவளது நேர்மையும், எதற்கும் வளைந்து கொடுக்காத குணமும் அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தன. அவ்வப் பொழுது தனது எரிச்சலைக் கொட் டித் தீர்த்துவிடுவான்.
சுதாமணி எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டாள். சில சமயம் பொறுக்கமுடியாமல் "இப்ப நமக்கு என்ன குறை? இருவருக்கும் நல்ல சம்பளம். கௌரவமாகக் குடும்பம் நடத்தி, நன்றாகச் சேமிக்கவும் செய்றோம். இதற்குமேல் என்ன வேண்டும்? கண்டபடி ஆசையை வளர்த்துக்கொண்டு நிம்மதியைக் கெடுத்துக்கணுமா?" என்று ஒரேயடியாக அடக்கிவிடுவாள்.
ஏதோ கொஞ்சம் சபலப்படுகிறான், மாறிவிடுவான் என்று அலட்சியமாகத்தான் இருந்தாள் சுதாமணி. ஆனால், அவனது கணக்கு வேறுமாதிரி இருந்திருக்கிறது. அவளது அலுவலகத்துக்கே கரும்புள்ளிகளான இரு ஊழியர்கள் துணையோடு, சுதாமணியின் கோப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் 'கை நீட்டிவிட்டான்'! விஷயம் விபரீதமாகுமுன் அவள் கவனத்துக்கு வரவே தடுத்து நிறுத்தி, மனுதாரர்களின் நியாயமான கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றிவிட்டாள். அவனோ சிறிதும் அலட்டிக்கொள்ளாது மேலும் ஓரிருமுறை அவ்வித முயற்சிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவன் செயலைக் கண்டித்தாலும் "அங்கங்கு மனைவிகள்தான் அரசுவேலையில் இருந்துகொண்டு மேல்வரும்படியில் நகைநட்டு, வீடு என்று கணவன்மார்களைத் துளைத்தெடுப்பார்கள். நீ ஒருத்திதான், கவர்மெண்டையே சுத்தப்படுத்த வந்ததுபோல இந்தப் பிச்சைக் காசுக்காக ஊரைக் கூட்டுகிறாய். ஏன், உன் சக ஊழியர்களே ரெண்டு பேர் டபுள்பெட் ரூம் ஃப்ளாட் புக் பண்ணியிருக்காங்க. தனக்காவும்
தெரியாது, சொன்னாலும் புரியாத வெட்டிப்பிடிவாதம் எதற்கும் உதவாது" என்று உபதேசம் வேறு செய்தான்.
வீட்டில் அடிக்கடி புயலும் பூகம்பமும் வெடிக்க, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து "உங்களால் எனக்குப் பெயர் கெட்டு, சிறைவாசம் ஏற்படும் போலிருக்கு. நீங்களும் திருந்துவதாக இல்லை" என்று சட்டத்தை நாடி இரண்டு வயதுக் குழந்தை நந்துவுடன் பிரிந்துவிட்டாள். உடன் பிறந்தவர்கள் "நீ கொஞ்சம் கண்டும் காணாததுபோல் இருந்திருக்கலாம். குடும்பத்துக்காகத்தானே செய்தார்!" என்று இவளையே விமர்சித்தனர். ஆனால் பெற்றவர்கள் மட்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தனர். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அப்பாவின் காலம் முடிந்துவிட்டது. சுதாமணியும் பதவி உயர்வுடன் மாற்றலாகி இந்த ஊரில் வந்து நிலைத்து, இதோ, பதினெட்டு வயது நந்து கல்லூரிக்குள் நுழைந்துவிட்டான்.
★★★★★
மாலை வீடு திரும்பிய மகளிடம் "சுதா, நந்து பாவம், சின்னப்பையன். கூடப் படிக்கும் பசங்களைப்போல் இருக்கணும்னு ஆசை இருக்காதா? நீயும் ரொம்பக் கண்டிப்புக் காட்டாமல் அவனுக்குச் சின்னச் சின்ன சலுகைகள் கொடுக்கலாம். என்ன, கேன்டீனில் சாப்பிடணும், எப்பவாவது சிநேகிதர்களுடன் சினிமா போகணும் என்பதெல்லாம் இந்த வயதில் இருப்பதுதானே. காலேஜ் காலம் என்றாலே பசங்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம், நட்பு வட்டம் என்றெல்லாம் அனுபவிக்கத் தோணும். சிறிது காலம் போனால் தன்னாலே பொறுப்பு வந்துடும். எங்கு விட்டுப் பிடிக்கணும், எங்கு இழுத்துப் பிடிக்கணும்னு உனக்குத் தெரியாததா?" என்று யதேச்சையாகக் கூறினாள் மீனாட்சி. சுதாமணிக்கும் நியாயமாகவே பட்டது. வாரம் இரண்டு நாள் கேன்டீன் டிபன்; பாக்கெட் மணி உயர்வு என்று அம்மா அனுமதித்ததில் நந்துவுக்கு மகா மகிழ்ச்சி. அவ்வப்பொழுது நண்பர்களுடன் திரைப்படம் போகவும் அனுமதி கிடைத்ததில் அவனது பழைய கோபதாபங்கள் குறைந்துவிட்டன. சில மாதங்கள் இப்படிக் கழிந்தன. |
|
"அம்மா, என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேர் தேக்கடி ட்ரிப் பிளான் பண்ணிருக்காங்க, நாலு நாள்தான், நானும் போகட்டுமா?" என்று கேட்டான் நந்து. "நாம்தான் லீவில் கொடைக்கானல் போகப் போறோமே. இப்போது இது எதற்கு?" எனக் கேட்டாள் சுதாமணி. "இல்லம்மா, ஃப்ரெண்ட்ஸோட போறது ஜாலியா இருக்கும். வேணுமானால் கிறிஸ்துமஸ் லீவில் கொடைக்கானல் போகலாமே" என்று கெஞ்சவே "சரி. த்ரில் அது இதுன்னு அலைந்து கண்டபடி ஆறு, அருவின்னு குளிச்சு ஏதாவது ஆகாமல் ஜாக்கிரதையா போய் வரணும்" என்று வழியனுப்பினாள்.
அவன் கிளம்பி ஒருநாள்கூட ஆகவில்லை. "அது ஒண்ணு இல் லாதது வீடே வெறிச்சுனு இருக்கு. சும்மா ஹாலில் டிவி பார்த்துண்டோ, ஏதாவது படிச்சிண்டோ இருந்தால்கூட வீடே நிறைஞ்சிருக்கும்" என்று அங்கலாய்த்தாள் மீனாட்சி. முதல்நாள் இவ்விதம் நகர, அலுவலகத்திலிருந்து சுதாமணி வந்ததுமே ஏதோ சாப்பிட்டோமென்று பெயர் செய்துவிட்டு விளக்கை அணைத்துப் படுக்கப் போய்விட்டனர் தாயும் மகளும்.
யாரோ அழைப்பு மணியை விடாது அடிக்கும் ஓசை. "அம்மா, பாட்டி" என்று அழைக்கும் நந்துவின் குரல். 'அதே நினைவாக இருப்பதால் தூக்கத்திலும் அவன் அழைப்பது போலவே இருக்கிறது போலும்' என எண்ணி எழுந்து மணியைப் பார்த்தாள் சுதாமணி. நள்ளிரவைக் கடந்திருந்தது நேரம். திரும்பவும் மணிச் சத்தம்; குரலில் மிகப் பதற்றத்துடன் நந்துவின் அழைப்பு. அவசரமாகச் சென்று கதவைத் திறந்தாள். உடலெல்லாம் வியர்த்து, வெளிறிய முகத்துடன் நின்றவனைக் கண்டதும் அவனது பதற்றம் அவளையும் தொற்றிக்கொள்ள, "என்ன ஆச்சுப்பா? ஏன் இப்படி நடுங்குகிறது உடம்பெல்லாம்? உள்ளே வா, எதுவானாலும் நிதானமாகப் பேசலாம்" என அணைத்தவாறு உள்ளே அழைத்து வந்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.
"நீங்கள் இன்றுதான் தேக்கடி போய்ச் சேர்ந்திருப்பீர்கள் என்று இருந்தேன். அதற்குள் ஏன் திரும்பிவிட்டாய்? யாருக்காவது உடம்பு ஏதாவது?" என்று கவலையுடன் கேட்டாள்ள். இதற்குள் பேச்சரவம் கேட்டு எழுந்து வந்த மீனாட்சி "பாவம், குழந்தை, என்ன ஆச்சோ, மிரண்டுபோய் வந்திருக்கான், எப்ப சாப்பிட்டதோ என்னவோ ஏதாவது சாப்பிடக் கொடு. அப்புறம் விசாரிக்கலாம்" என்று தானே சமையலறைக்குப் போய் தயிரும் சாதமுமாகக் கலந்து எடுத்துவந்து ஊட்ட ஆரம்பித்துவிட்டாள்.
உணவு உள்ளிறங்கியது. சற்று சகஜ நிலைக்கு வந்ததும் நந்து பேசினான். "அம்மா, நான் இந்த ஃப்ரெண்ட்ஸைப் புரிஞ்சுக்காம இருந்துட்டேன். கல்லூரியில் அவர்களின் முகமே வேறு. தேக்கடிக்குப் போனதுமே அவர்கள் நடத்தை மாறிவிட்டது. லாட்ஜ் அறையைத்தேடி வந்த தரகர் ஒருவனிடம் எதையெதையோ வாங்கி வரச் சொன்னதுடன் அவனிடம் கிசுகிசுவென்று எதையோ சொல்லிப் பணம் கொடுத்தனர்.
புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த என்னை லாட்ஜின் மேனேஜர் தனியாக அழைத்து, "தம்பி, உங்களைப் பார்த்தால் அப்பாவியா இருக்கீங்க; இவனுக அடிக்கடி இங்கே வந்து ஆட்டம் போடுறவங்க; பிடிபட்டாலும், பெத்தவங்க பெரிய இடமானதால தப்பிச்சுடுவாங்க. இவனுக சிநேகம் எப்படி பிடிச்சீங்க? நல்லபடியா தப்பிச்சுப் போயிடுங்க" என்று அறிவுரை கூறினார். அவர்களுடன் உணவுண்ண வெளியே போகாமல் நான் வயிற்றுவலி என்று லாட்ஜிலேயே தங்கிவிட்டு, கிடைத்த பேருந்துகளில் மாறி, மாறிப் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன். இந்த அனுபவம் ஆயுளுக்கும் எனக்கு நல்ல பாடமாகிவிட்டது. இனி நானுண்டு, என் படிப்புண்டு என்று இருப்பேன்" என்று கூறிவிட்டு ரூமுக்குப் போனான்.
கடுமையான வெயிலில் விழுந்து கருகவிருந்து, தப்பிவந்த நந்து, நிழலின் அருமையை, குளிர்ந்த உறவுகளின் பாசத்தில் உணர்ந்துவிட்டான்.
மறுநாள் காலையில் இட்லியை ரசித்து உண்டு, பாட்டி கட்டிக் கொடுத்த லஞ்ச் பாக்ஸுடன் சந்தோஷமாகக் கல்லூரிக்குச் சென்றான் நந்து.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே |
|
|
More
அழுகை வரவில்லை
|
|
|
|
|
|
|
|