Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
உன்னத உறவு
பிரார்த்தனை
- அனுஷா|ஏப்ரல் 2020|
Share:
இரவுப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள் மாலா. மூன்றே நாளில் திரும்பிவிடலாம் என்றாலும் குலதெய்வக் கோவிலுக்குச் செல்வதால் அதற்கென்று பிரத்தியேகமான பொருட்களைப் பார்த்துப் பார்த்து எடுத்து வைக்க வேண்டியிருந்தது. இரண்டு சின்னப் பெட்டிகளில் பொருட்களை எடுத்து வைக்கையில் சட்டென்று அந்தக் கவர் நினைவுக்கு வந்தது. பீரோவின் ஓரமாக, பத்திரமாக வைத்திருந்த அந்தக் கவரை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமான அதை மறந்துவிடப் போகிறேன்... எடுத்து வைத்துக்கொண்டு விடலாம் என்று நினைத்து பீரோவின் லாக்கரைத் திறந்து வலது ஓரமாக வைத்திருந்த அந்தச் சிறு கவரை எடுத்தாள்.

அன்றைக்கு அவசரத்துக்கு இந்தச் சின்னக் கவர்தான் கிடைத்தது. அதில் அவசர அவசரமாக நூற்றியோரு ரூபாயைத் திணித்து... சுவாமி படத்தின் முன்னால் வைத்துப் பிரார்த்தனை செய்து.... அப்பப்பா... அந்த நாளை நினைத்தாலே இன்னமும் உடம்பு பதறித்தான் போகிறது.

மாலா கைப்பையை எடுத்து உள்ளே அந்த சின்னக் கவரை வைத்துக்கொண்டே, அடுத்த அறையில் தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்த அருண்மீது பார்வையை ஓட்டினாள்.

பாவம் குழந்தை. மூன்று வாரத்துக்கு முன்னால் உடம்புக்கு வந்து எப்படிக் கஷ்டப்பட்டுவிட்டான். நாலே நாள் அடித்த காய்ச்சலில் ஒரு பத்து வயதுக் குழந்தை அப்படித் துவண்டுபோய்... சாதாரண நிலைக்குத் திரும்புவானா என்று பீதியைக் கொடுப்பதுபோல!

மாலா உடம்பைக் குலுக்கிக் கொண்டாள்... வேண்டாம், திரும்பவும் அதை நினைத்து அரளக்கூடாது. நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றுமில்லாமல் சீக்கிரமே எல்லாம் சரியானது. இரண்டு நாளாக ஸ்கூலுக்குக்கூட போக ஆரம்பித்துவிட்டான். அதை நினைத்துச் சந்தோஷப்பட வேண்டும். எல்லாம் அந்தக் குலதெய்வம் யோகநரசிம்மர் செய்த அருள். அவரை உடனே வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ததன் பலன்.
நாளை மறுநாள் அருணின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அன்று குல தெய்வத்தைத் தரிசித்தால் என்ன என்று தோன்றவும் அதற்கு ஏற்றாற்போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, கோவிலிலும் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்து, மூன்று நாளுக்கு ஆபிஸிலும் ஸ்கூலிலும் லீவு சொல்லி... இதோ, இன்றிரவு பத்து மணி ரயிலில் புறப்படப் போகிறார்கள்.

சட்டென்று கோயில் மூலவருக்குச் சார்த்தப் பிரத்தியேகமாய் ஆர்டர் செய்திருந்த வஸ்திரம் நினைவுக்கு வந்தது. அந்தக் குறிப்பிட்ட கடையில் வஸ்திரம் நேற்று கிடைக்காததால் அவர்களே இன்று எப்படியேனும் அவர்களது தலைமையகத்தில் இருந்து வரவழைத்துக் கொடுப்பதாக உறுதியளித்தது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து கடைக்கு ஃபோன் செய்தாள். அவர்களும் அப்போதுதான் அந்த வஸ்திரம் வந்து சேர்ந்ததாகச் சொன்னார்கள். நிம்மதியாக இருந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்து வஸ்திரத்தை வாங்கிக் கொள்வதாக அவர்களுக்குத் தெரிவித்துவிட்டு ஃபோனை வைக்கையில் வாசலில் அழைப்பு மணி.

எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். அடுத்த அப்பார்ட்மெண்ட் மாமி சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

"உட்காருங்க மாமி.."

"உட்கார நேரம் இல்லைம்மா... ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லத்தான் வந்தேன்... நாளைக்கு நம்ம சந்தியாவுக்கு நிச்சயம் பண்றதா இருக்கோம்."

"நாளைக்கேவா... வாட் எ ப்ளெஸன்ட் சர்ப்ரைஸ்... இரண்டு நாள் முன்னாடிகூட உங்களைப் பார்த்தேன். ஒண்ணுமே..."

"எங்களுக்குமே பிளெஸன்ட் சர்ப்ரைஸ்தான். அந்த மும்பை வரன் பத்தி உன்கிட்ட சொல்லி இருந்தேன் இல்லையா? அவன், அவன் அப்பா, அம்மா திடீர்னு இங்க வரோம்னு சொன்னா. சந்தியாவும் லீவுல இங்கே இருந்ததுனால சரின்னு சொன்னோம். ஏற்கனவே மெயில், ஃபோனுன்னு அவாளுக்குள்ளே நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கு. முக்கியமா, அந்தப் பையனோட ஃபேமிலி எங்களுக்கெல்லாம் ஏதோ தூரத்து உறவாம். அம்மாதான் கண்டுபிடிச்சு சொன்னா. கண்ணை மூடிண்டு பெண் கொடுக்கலாம்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டா. பெண், பையன் ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சு. அதானே முக்கியம். பையன் அடுத்த வாரம் யூ.எஸ். போறானாம். அதனால நிச்சயம் மட்டும் இப்ப வச்சிக்கலாமான்னு கேட்டா. சரின்னு தோணித்து. நாளைக்கு நல்ல நாளா இருக்கு. நம்ம கம்யூனிட்டி ஹால்லதான் ஃபங்க்ஷன். ரொம்ப நெருக்கமானவங்களை மட்டும் கூப்பிட்டு, சாயங்காலம் பங்க்ஷன். சுந்தர்கிட்டயும் சொல்லிடு. இரண்டு பேரும் வந்திடுங்கோ. குழந்தை அருண் எப்படி இருக்கான்? நான் கிளம்பறேன்மா. நேரம் ஆயிடுத்து."

"சரி மாமி. ஆனா நாங்க இன்னி ராத்திரி திருநெல்வேலி போறோம். வர மூணுநாள் ஆயிடும். கிராமத்திலே எங்க குலதெய்வம் கோயிலுக்கு குழந்தை உடம்பு சரியாகணும்னு வேண்டிட்டு இருந்தேன்."

"அதனால என்ன. அதுவும் ரொம்ப முக்கியம்தானே. நாளைக்கு இல்லாட்டா என்ன. கல்யாணத்துக்கு ஜாம்ஜாம்னு வந்து கலந்துக்குங்கோ."

மாமி கிளம்பிச் சென்றதும் அருணைக் கூப்பிட்டு ஆப்பிளைச் சாப்பிடச் சொன்னாள். ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்தாள். "இதைக் குடி மா. நாம ரெண்டு பேரும் ஆர்.எஸ்.புரம் போயிட்டு வந்திடலாம்..."

அருண் அதைக் குடிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் கைபேசி ஒலித்தது. சுந்தர்தான் கூப்பிட்டான்.

"எல்லாம் பேக் பண்ணிட்டேன் அந்த வஸ்திரம் வாங்கத்தான் இப்போ..."

"சாரி டு இன்டரப்ட் மாலா... நம்ம ட்ரிப்பை இப்ப கேன்சல் பண்ணனும் போல இருக்கு."

"என்ன!"

"கொஞ்சம் கூலா கேளு மாலா. எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. எங்க ஆஃபீஸ் டெல்லி இன்ஸ்பெக்‌ஷன் டீம் இப்பப் பார்த்து இங்கே வராங்க. எங்களுக்கு இப்பத்தான் தகவல் கிடைச்சது. ப்யூர்லி என் டிபார்ட்மெண்ட் ரிலேட்டட் விஷயங்கள். நான் இல்லாம முடியாது. அதுவும் ஏற்கனவே ரவியும், ஜோசஃபும் லீவுல போயிட்டாங்க. எல்லாம் நான்தான். நான் இருந்தே ஆகணும். இப்ப இந்த ட்ரிப்பைக் கேன்சல் பண்ணிட்டு, இன்னும் கொஞ்ச நாளில் போகலாம். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்."

மாலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன இப்படிச் சொல்கிறான். அருண் பிறந்தநாள் அன்று பிரார்த்தனை செலுத்தினால் நல்லது என்றுதானே திட்டம். கடவுளே இது என்ன இப்படி!

"ரயில் டிக்கெட்டைக் கேன்சல் பண்ணிட்டேன் மாலா. நீ கோயில் குருக்களைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிடு. அப்புறம் இன்னிக்கு ராத்திரி நான் வர லேட்டாகும்.. பை."

மாலாவுக்கு பிரமை பிடித்ததுபோல இருந்தது. கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"அம்மா ஹார்லிக்ஸ் குடிச்சிட்டேன்மா" என்ற சொன்ன அருணைப் பார்க்கையில் மனதில் ஏற்பட்ட வேதனையைக் கஷ்டப்பட்டு விழுங்கினாள். குழந்தை ஒரு கண்டத்தில் இருந்து மீண்டிருக்கிறான். அதற்கு அருள்செய்த தெய்வத்திற்கு நன்றி சொல்லலாம். அதுவும் வாகாக அவனது பிறந்த நாளும் வருகிறது. அன்றைய தினத்தில் அங்கே இருந்து, பிரார்த்தனை பண்ணி அதற்கென்று எடுத்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்திவிட்டு வருவது முறையாக இருக்கும் என்று நினைத்தால்... இது என்ன இப்படி ஒரு தடங்கல். கடவுளே! அதனால் ஏதாவது பாதகம்... குழந்தைக்கு - மனம் கிடந்து தவித்தது.

"அம்மா கடைக்குப் போகணும்னு சொன்னியே..."

அருண் கூப்பிடவும் சட்டென்று தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். கொஞ்சநேரம் வெளியே போய் வந்தால் மனதைத் திசை திருப்பலாம். மேலும் அந்தக் கடைக்கு வருவதாக வேறு சொல்லிவிட்டோம். கைப்பையை எடுத்துக் கொண்டாள். அருணோடு நடந்தவாறு பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து காரில் ஏறினாள்.

கடைக்குச் சென்று வஸ்திரத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். அதுதான் எவ்வளவு அழகாக, வசீகரமாக, கொஞ்சம் தெய்வத்தன்மையோடு இருக்கிறது என்று தோன்றினாலும், இதை எப்போது, எப்படி நான் அங்கே சமர்ப்பிக்கப் போகிறேன். குழந்தை பிறந்த நட்சத்திரம் அன்று கொடுத்தால் எவ்வளவு நன்றாக, நிறைவாக இருக்கும் என்ற எண்ணமும் ஓடியது.

கடையின் படிக்கட்டில் இறங்கி நடைபாதை வழியாகக் காரைப் பார்த்து நடந்தாள். சக்கரம் பொருத்தப்பட்ட கட்டைப் பலகையில் உட்கார்ந்து கொண்டு, கையால் தள்ளி உருட்டிக் கொண்டே இவர்களை நோக்கி வந்தான் அவன். அண்ணாந்து பார்த்து சிநேகிதமாகச் சிரித்து, கைகளை உயர்த்தினான். கைகளில் விரல்கள் இல்லை. கால்கள் சூம்பிக் கிடந்தன.

அப்போது மாலாவின் கைபேசி ஒலித்தது அவள் எடுத்துப் பார்த்தாள். சென்னையிலிருந்து அம்மா கூப்பிட்டாள். மாலா ஒதுங்கி நின்று அம்மாவுடன் பேசினாள்.

"இன்னிக்குத் திருநெல்வேலி போறதாச் சொன்னியே. அதான். எல்லாம் பேக் பண்ணியாச்சான்னு..." அம்மா பேசிக் கொண்டிருக்கையிலேயே அருண் மாலாவின் கைகளைப் பிடித்து இழுப்பதுபோலச் செய்யவும் அவள் சட்டென்று அவனைப் பார்த்தாள். "இரு பாட்டியோட பேசறேன்..."

"இல்லம்மா... பிளான் என்ன ஆச்சுன்னா..." என்று அவள் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள். திரும்பவும் அருண் கையைப் பற்றி இழுத்தான்.

"அம்மா.. பாவம்மா. கால் இல்லே. சரியா நடக்க முடியாது பாவம்மா. ஏதாவது..." என்று அருண் கெஞ்சினான். அவள் அம்மாவுக்குப் பதில் சொல்லிக்கொண்டே கைப்பையை அருணிடம் கொடுத்து, 'ஏதேனும் காசு எடுத்துக் கொடு' என்று சைகை காட்டினாள்.

அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும் அம்மா ஆறுதல் சொன்னாள். "ஆபீஸில் வேலை வந்தால் என்ன பண்ணமுடியும் சொல்லு. அவர் வேலை அப்படி. இன்னொரு நாள் பார்த்துப் போயிட்டு வாங்கோ. அவ்ளோதானே" என்றவள், "தெய்வக்கடன் நூற்றாண்டுன்னு சொல்லுவா. பிரார்த்தனையை எப்ப வேணா செய்யலாம்" என்றாள்.

அம்மா சொன்னாலும் மனம் சமாதானமடைய மறுத்தது. குழந்தையின் ஜன்ம நட்சத்திரத்தில் அந்தக் கோவிலுக்குப் போய், அவசர அவசரமாக வேண்டிக்கொண்டு அன்று எடுத்துவைத்த அந்த 101 ரூபாயைச் செலுத்தினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!

அருணின் கையைப் பற்றிக்கொண்டு திரும்பி நடக்கையில், கைப்பை ஜிப்பை அவன் சரிவர மூடாதது தெரிந்தது.

ஜிப்பை மூட எத்தனிக்கையில், அந்த கிழிந்த சின்னக் காகிதம் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. இந்தக் கவர் ஏன் இப்படி நீட்டிக் கொண்டு... ஓ காட்! அருண் இதைத் தொட்டானா?

"அருண் இந்தக் கவரை எடுத்துப் பார்த்தியா?"

"ஆமாம்மா. அந்த ஆளுக்கு எதுனாச்சும் கொடுக்கப் பார்த்தேனா. இதுதான் சட்டுனு கைல கிடைச்சது. உள்ளே இருந்த பைசாவை... நீதானே எதனாச்சும் எடுத்துக் கொடுக்கச் சொன்னே.. அதான்..."

கடவுளே! மாலாவுக்குத் திரும்பவும் அதிர்ச்சி. உள்ளே பர்சில் இருந்த காசை எடுப்பதை விட்டு, அவசரத்தில் நான் திணித்த இந்தக் கவரை, அதுவும் அந்தப் பிரார்த்தனைப் பணத்தையா. கடவுளே. இன்றைக்கு ஏன் இப்படி எல்லாம் தப்புத் தப்பாய்...

"நரசிம்மா.. இப்படி ரோடை கிராஸ் பண்ண ட்ரை பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அங்கே பிளாட்பாரத்திலேயே..."

அங்கே நின்றிருந்த டிராஃபிக் போலீஸ்காரர் அந்த மனிதரைப் பார்த்துச் சொல்கையில், வேறு எதுவும் காதில் விழவில்லை.

அவர் சொன்ன அந்த 'நரசிம்மா' என்ற வார்த்தை மட்டும் தெளிவாகக் காதில்பட்டு... சக்கரக் கட்டையைக் கரங்களால் உருட்டிக்கொண்டே பாதை ஓரத்திற்குச் செல்லும் அவனைக் காண்கையில் அவளுக்கு ஏதோ ஒன்று புரிவதுபோல் இருந்தது.

அனுஷா,
சான்ஹோசே, கலிஃபோர்னியா
More

உன்னத உறவு
Share: 




© Copyright 2020 Tamilonline