Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
நோன்பு!
அன்னையர் தின ஆச்சரியம்
கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி
- கிமூ|மே 2020|
Share:
(இது ஒரு நகைச்சுவைக் கதை. எனினும் இதைப் படிக்குமுன் நாம் கொரோனா வைரஸினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு நொடி அஞ்சலி செலுத்துவோம்.)

எம்பேரு குப்புசாமிங்க. இங்க சில்லிக்கண்ணு வேலியா என்னமோ சொல்றாங்களே அங்க சான் ஜோஸ்னு ஒரு ஊர்ல இருக்குற என்ற மவனூட்டுக்கு வந்திருக்கேனுங்க. என்ற மவன் ஜீவாவும் ஒரு நல்ல ஸோலிக்கு போயிட்டு சௌகர்யமாத்தான் இருக்கான். ஆனா இந்த ஊர்ல பாருங்க எப்ப பார்த்தாலும் ஒரே ஓட்டம். கோழி கூப்பிட எழுந்திருச்சு விசுக் விசுக்குன்னு தலைல தண்ணி ஊத்திக்கிட்டு ஏதோ சாப்பிட்டோம்னு பேர் பண்ணிப்போட்டு ஓடறாங்க. அம்மணியும் ஸோலிக்குப் போகுது. பசங்க ரெண்டு. அவிய நம்மகிட்ட ஒட்டியும், ஒட்டாமலும் இருக்காங்க. அவிய பின்னாடி ஓடி ஓடி பள்ளிக்கூடத்துக்கு கிளப்பறக்குள்ள தல சுத்தி கருகும்முன்னு இருளோன்னு போயிடுது. தெனமும் ஒரே ரவுசுதான். இவிய ஆபீசுக்கு காரோட்டி போவறத்துக்கு ஒரு மணி நேரம், வரதுக்கு ஒரு மணி நேரம்.

அம்மணி திலுப்பி ஊட்டுக்கு வந்துபோட்டு சமைச்சு போடறதுக்குள்ள பசியில நம்பட காது கிளிஞ்சு போவுது. பொழுதாண்ட வந்தாத்தான் பரவாயில்ல. இவிய ராவோடதானே வராங்க.

அதென்னமோ தெரியல பக்கத்தூட்ல ஒரு தெலுங்காரவுக புருஷனும் பொண்டாட்டியும் எப்பப்பாரு ஊட்லயே ஒக்காந்துகிட்டு வேல பாக்குறாங்க. அதுமாற நீயும் பாக்கப்படாதானு எம்மவன்கிட்ட கேட்டனுங்க. "ஐயா, உங்களுக்கென்ன தெரியும். எங்க கம்பெனில ஒரு மணி நேரம் லேட்டா போனாலே மேல, கீழ பாக்குறாங்க. எல்லாம் நம்ம பசங்க வேலை. இந்தூரு கல்ச்சரையே மாத்திப் போட்டாங்க"ங்கறான். நான் எப்பவும் சாமிகிட்ட வேண்டிக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். என்ற பையனுக்கும், பாப்பாவுக்கும் அக்கடான்னு உக்கார கொஞ்சம் நேரம் கிடைக்கோணும்.

கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு குடுக்கும்னு சொல்லுவாங்களே, அது மாதர, இப்ப இந்த கொரோனா வைரஸ் பிரச்சினயினால ஒட்டு மொத்தமா எல்லாரையுமே ஊட்டோட கெட அப்படின்னு சொல்லிப்போட்டாங்க. அப்பா சாமி, உனக்கு ஒரு பெரிய கும்புடு. நாலு பேரு அங்க இங்க செத்தாலும் இவிய மாதிரி ஆளுங்களுக்கு ஒரு சின்ன வரம் கொடுத்தய்யா அப்பிடின்னு ஒரு நன்றி சொன்னேன். இவிய வூட்டுல எல்லாரும் ஓட்டுக்கா ஒரே எடத்துல இருந்து நான் பார்த்ததே இல்லை. நெம்ப சந்தோஷமாயிருச்சு.

ஆனா பாருங்க, சாமி ஒரு குசும்பக்காரருங்கோ! இவிக எப்ப வூட்டுலேர்ந்து ஸோலி பாக்க ஆரம்பிச்சாங்களோ அப்போதிலிருந்து ஒரே கூச்சல், கும்மாளந்தான். கான்பரன்சு காலுன்னு சொல்லிப்போட்டு ஜீவா ஒரு பக்கம், பாப்பா ஒரு பக்கம் தஸ் புஸ்ஸுன்னு ஏதோ இங்கிலீசுல அடிச்சு உடறாங்க. பசங்களும் காதுல கம்மல் மாதரி இஸ்ஸ்பீக்கர் மாட்டிகிட்டு கையில ஒரு டப்பி கணக்கா மிசினை வச்சுக்குட்டு கேம்பு விளையாட ஆரம்பிச்சுடறாங்க. நடுவுல நம்ம சிக்கிட்டு கெரகம் ஒரு எளவும் புரியாம கேனையனாட்டம் கேட்டுக்கிட்டு இருக்க வேண்டியிருக்குது. டீவியப் போட்டா பசங்க 'தாத்தா, சவுண்டு கொறைங்க'ன்னு கத்தறாங்க. இருக்குற புத்தகமெல்லாம் ரெண்டு தடவை படிச்சாச்சு.

அப்பாடான்னு சத்த கண் அசந்தா பசங்க வந்து 'தாத்தா, கொஞ்சம் தோசை சுட்டு குடு'ன்னு உசுப்புராங்க. 'ஏன்டா, ஆத்தாள கேக்க வேண்டியதுதானே?' அப்பிடின்னா சிரிச்சுப்புட்டு "ஆத்தா, கொறட்ட அடுத்தூருக்கே கேக்குது" அப்பிடிங்கறாங்க. இத்தன கலகத்துல வூட்டுல நடுகாண்ட படுத்துக்குட்டு ஆத்தா அமர்க்களமா எப்பிடித்தான் தூங்குதோ அந்த வீரபாண்டிக்குத்தான் வெளிச்சம். தெனமும் பசங்க கைல நாந்தான் மாட்டுறேன்.
ஒருநாள் வெள்ளிக்கிழமையா இருக்குதே வேட்டி கட்டலாமேன்னு ஜீவாகிட்ட சொன்னேன். எப்பப்பாரு என்னடா கொழாயீன்னு நல்லா பேசிப்போட்டேன். அவனும் "சரி, குடு கெரகம் கட்டறேன்"னு சொல்லிப்போட்டு கட்டிக்கிட்டான். அது என்னவோ அவன் தலைவிதி, வீடியோ கால் பேசிட்டு இருக்கையிலே, ஒரு தடவ எழுந்திருக்கும் போது வேட்டி நாற்காலில மாட்டிக்கிச்சு. அவன் பாட்டுக்கு நடந்து பாத் ரூம்பு போய் பார்த்தா வேட்டி காணல. அப்பிடியே அவமானத்துல ஆடி போய்ட்டான். அய்யயோ, என்னோட ஆபீசுல எல்லாரும் என்ன இந்த கோலத்துல பாத்துருப்பாங்களேன்னு நெம்ப சங்கடப் பட்டுப் போய்ட்டான். நல்ல வேளை வேட்டி கட்டரயில "என்னடா இது சிலுக்கு மாதிரி ஜட்டி போட்டுருக்க. வேட்டிக்கு இதெல்லாம் ஒத்து வாராது, அண்ட்ராயரை போட்டுக்கோ"ன்னு கொடுத்தது நல்லாப் போயிடுச்சு. ஆபீசுல எல்லாரும் இவன் ஏதோ அரை டவுசர் போட்டுருக்கான்னு நினைச்சுட்டாங்க. இல்லேன்னா ஒரே கந்தரகோளம் ஆயிபோயிருக்கும். ஆண்டவன் புண்ணியத்துல அவன் தப்பிச்சான். அவன்கிட்டேருந்து நான் தப்பிச்சேன்!

ஜீவா ஊருல யோகாசனமெல்லாம் செஞ்சுட்டு இருந்தான். ஒடம்பு வெடுக்குன்னு இருக்கும். இப்ப தொப்ப தாங்கல. சென போட்ட மாடு மாதிரி இருக்கான். "ஏன்டா, கான்பரன்சு கால்ல கேட்டுகிட்டுதான இருக்க. அப்பிடியே யோகாசனம் பண்ணிகிட்டே கேளேன்" அப்பிடின்னு சொன்னேன். அவன் அதுவும் சரிதான்னுட்டு ஆசனம் பண்ணிகிட்டே கால் கேட்டிருக்கிட்டு இருந்தான். அதுபாருங்க என் கண்ணே பட்டுப்போச்சு. அவன் தலைகீழா சிரசாசனம் செய்துட்டு இருக்கும்போது கரிக்கிட்டா அவனை ஒரு கேள்வி கேட்டுப்போட்டாங்க. அவன் விசுக்குன்னு திலும்பி பதில் சொல்லப்போக அவன் கழுத்து நல்ல சுளுக்கிப் போச்சு. அவன் பண்ண தப்புக்கு பாப்பா என்ன நல்லா பேசிடுச்சு. ஐயா, உங்களுக்கு அறிவிருக்கான்னு கேட்டுருச்சு. ஒரு நல்ல ஐடியா கொடுத்துபோட்டு பேச்சு வேற வாங்கிக் கட்டிக்கிட்டேன்.

ஒருநாள் நான் மாடிலே இருந்தேன். கீழேயிருந்து ஒரே கூச்சல். காது குடுத்துக் கேட்டா எனக்கு தூக்கிவாரிப் போட்டுது. பேராண்டி சொல்றான் "ரெண்டு நிமிஷம் குடுங்கம்மா. நான் செத்துடுவேன்". அவிக அம்மா "டேய், நீ சீக்கிரம் செத்து தொலைடா. அடுத்த ஸோலி பாக்க வேண்டாமா?" அப்பிடின்னு அசால்ட்டா சொல்லுது. என்னடா கெரகம்னுட்டு அடி கீது பட்ருச்சோன்னு அலறிக்கிட்டு ஓடிப்போய் பாத்தா பையன் வீடியோ கேம்பு விளையாடிட்டு இருக்கு. கேம்புல அடிக்கடி சாவாங்க போல. அட இதுதானா அப்பாடான்னு அப்புறம்தான் போன மூச்சு திரும்பி வந்தது. இப்பிடி சாவு கருமாதின்னு என்ன விளையாட்டோ தெரியல இப்பெல்லாம். இந்தூர்ல யாரும் ஊட்டுக்கு புறகாண்ட ஒடிப்பிடிச்சு விளையாடற மாதிரியே தெரியல. இப்ப வேற இந்த கொரோனக்காக அடைஞ்சு கெடக்கறாங்க பசங்க.

இப்பிடியே சொல்லிகிட்டே போவலாம் இந்த கொரோனா கந்தரகோளத்த. ஆனா பாருங்க இதுல சில நல்ல விஷயமும் உண்டு. ஜீவாவும், பாப்பாவும் மூச்சுக்கு மூச்சு "பசங்களா, கைய நல்ல கழுவுங்க. பொறங்கையில சனியன். அது போகிற மாதர நல்ல தேச்சு கழுவுங்க", "சாப்பிடறதுக்கு முன்னால சாமி கும்புட்டுட்டு சாப்பிடுங்க", "பாத்திரம் கழுவறதுக்கு ஆத்தாளுக்கு ஒரு கை குடுங்க" அப்பிடி இப்பிடின்னு ஜீவாளோட ஆத்தா சொன்ன டயலாக்கெல்லாம் இப்ப கொளந்தைகளுக்கு சொல்றாங்க. ஜீவா பிள்ளையா இருக்கறப்ப என் பொண்டாட்டி காண்டாமிருகம் மாதிரி கத்தினாலும் காதுல போட்டுக்காம போய்கிட்டே இருப்பான். இப்ப ஆத்தா சொல்லுதான் வேதமா தெனைக்கும் ஒலிக்குது. அதுதானோ என்னவோ ஆத்தா குறட்டை விடறப்பவும் ஏதோ எகத்தாளமா சிரிக்கிற மாதிரியே இருக்குது.

கிமூ
More

நோன்பு!
அன்னையர் தின ஆச்சரியம்
Share: 




© Copyright 2020 Tamilonline