Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
நீங்களுமா!
உயிர் தழைக்கும் மண்
- பானுமதி பார்த்தசாரதி|ஜூன் 2019|
Share:
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து நிலைகுலைந்து நின்றார். சூல்கொண்ட நங்கைபோல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள், பரிதாபமாக நசுங்கிக் கீழே சரிந்து கிடந்தன. எல்லையில் காவல்காக்கும் ராணுவ வீரர்கள்போல் வரிசையாக நின்ற முப்பது வருடத் தென்னை மரங்கள்கூட எதிரிகள் குண்டுவெடிப்பில் மாண்டவர்போல் புயலால் அடிபட்டு வீழ்ந்து கிடந்தன. வாழை மரங்களைக் கேட்கவே வேண்டாம்! இலைகள் கிழிந்து வேரோடு சாய்ந்திருந்தன.

வயல் வரப்பின்மேல் செய்வதறியாது, கண்களில் நீர் கசிய அமர்ந்துகொண்டு வாழையிலைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் முத்தையா. காலையில் எதுவுமே சாப்பிடாமல் வீட்டிலிருந்து கிளம்பிய கணவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையே என்று அவர் மனைவி கண்ணகி ஒரு பித்தளைத் தூக்கில் பழையசோறும், சின்ன வெங்காயமும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

"எவ்வளவு நஷ்டம்! பண நஷ்டத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தையைப்போல் தொட்டுத் தொட்டு வளர்த்தேன், அந்த வாழை மரங்களையும், நெற் கதிர்களையும். தினந்தினம் தென்னை மரங்களை அண்ணாந்துப் பார்த்துப் பெருமிதம் அடைவேன். தாய் கண்ணே குழந்தைக்கு திருஷ்டி என்பார்கள். அதுபோல் மொத்தமாக எல்லாத்தையும் இந்தப் புயல் நாசம் செய்துவிட்டதே" என்று புலம்பினார்.

"என்னங்க! விழுந்த தென்னை மரங்களை மறுபடியும் நிமிர்த்தி நட்டு, அவற்றிற்கு உயிர் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! இவ்வளவு பெரிய புயலை ஏதாவது ஒரு ராக்கெட் விட்டு, அதன் வேகத்தைக் குறைக்கலாம். இல்லை அப்படியே கடலுக்குத் திருப்பலாம்" என்றாள் கண்ணகி.

"நானே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீ வேற கேலி செய்கிறாயே" நொந்துகொண்டார் முத்தையா.

"கேலி செய்யவில்லை. மனதிலிருந்த ஆற்றாமையை வெளிப்படுத்தினேன். ஊருக்கு அடுத்தது நமக்கு. நாம் என்ன செய்யமுடியும்? இதையே பார்த்துக் கொண்டிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். வீட்டுக்குப் போய் மேற்கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கலாம்" என்று கணவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்.

எங்கும் தொலைபேசித் தொடர்பும் இல்லை, மின் இணைப்பும் இல்லை.

ஒரு மாதம் கழித்து, அவர்களின் ஒரே மகன் செல்வம் பெற்றோரைப் பார்க்க ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தான். மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் பெங்களூரில் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்து விட்டுப் பெற்றோரிடம் வந்தான்.

"மருமகளையும் பேரக் குழந்தைகளையும் கண்ணில் காட்டிவிட்டுப் பிறகு பெங்களூருக்குப் போயிருக்கலாம்" என்றாள் கண்ணகி.

"இங்கே மின்சாரம் இல்லை. ஏஸி இல்லாமல் தூங்கமாட்டார்கள்.

சுத்தமான தண்ணீர் கிடையாது. இன்ஃபெக்‌ஷன் ஏதாவது வந்து உடம்பு கெட்டு விடும். பத்து நாள்தான் விடுப்பு. அதனால்தான்" என்றான் செல்வம்.

"நீயாவது வந்தாயே! அதுவே போதும்" என்றார் முத்தையா.

"மிகப்பெரிய நஷ்டம். அதனால்தான் உன் அப்பா மிகவும் இடிந்து போய் விட்டார்" என்றாள் கண்ணகி.

"ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாதிரி நஷ்டம். ஒரு.வருடம் மழையில்லாமல் பயிர் தீய்ந்துவிட்டது என்கிறீர்கள். சென்ற வருடம் அதிக மழையால் எல்லாம் அடித்துக்கொண்டு போய் மிகப்பெரிய இழப்பு. இந்த வருடம் கஜா புயல். காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தாற்போல் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதே போல்தான் ஏதாவது ஒரு நஷ்டம்" அங்கலாய்த்தான் செல்வம்.
"இது இயற்கையால் ஏற்பட்ட நஷ்டம். வேலை செய்பவர்களுக்குப் பணியில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் 'ஒர்க் ஹஸார்ட்' என்று சொல்கிறீர்கள் இல்லையா! அதுபோல்தான் இதுவும். உங்களுக்கு உங்கள் கம்பனியோ, அரசாங்கமோ இழப்பீடு தருகிறது. எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு உணவுப் பொட்டலமும், தண்ணீர் பாட்டிலும் யாரோ சில நல்லவர்களால் கிடைக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்" என்று வெறுப்புடன் கூறிச் சிரித்தார் முத்தையா.

"இவ்வளவு கஷ்டம் உங்களுக்குத் தேவையா?" செல்வம்.

"வேறு வழி? இயற்கையை எதிர்த்து நாம் என்ன செய்யமுடியும்?" முத்தையா.

"நாம் என்ன பெரிய டாட்டா பிர்லா குடும்பமா? இல்லை அம்பானி ஃபேமிலியா? இயற்கையை எதிர்த்துப் போராடுவதற்கு! பேசாமல் வீட்டு மனைகளாகப் போட்டு விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். நிம்மதியாக ஒரு அபார்ட்மென்ட் வாங்கி எந்தக் கஷ்டமுமில்லாமல் வாழலாம்" செல்வம்.

அதிர்ந்து போனார் முத்தையா. "உங்களுக்குச் சோறு போட்டு வளர்த்த மண் அது. வறுமை தெரியாமல், பட்டினி போடாமல் வழங்கிய அட்சய பாத்திரம் நம் பூமி. அதைப்போய் செங்கல்லிலும், கான்க்ரீட்டிலும் புதைக்கச் சொல்கிறாயா?" உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினார்.

"அப்பா, சென்ட்டிமென்டல் பேச்சு சோறு போடாது. நிலமையைப் புரிந்து கொண்டு காலத்திற்கேற்றாற் போல் புத்திசாலித்தனமாக வாழ வேண்டும்."

"இந்த காலத்துப் பிள்ளைகள் மனித தர்மத்தைப் புரிந்து கொண்டதைவிட பொருளாதாரத்தில் நன்கு தேர்ச்சிபெற்று இருக்கிறீர்கள். நிலம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அப்படியே செய்தால் சோற்றுக்குப் பதில் மண்ணும், செங்கல்லுமா சாப்பிட முடியும்? கறவை மாடு பால் கறப்பதை நிறுத்திவிட்டால் கசாப்புக் கடைக்கு விற்பது போல் இருக்கிறது நீ சொல்வது?" முத்தையா.

"அம்மா, அப்பா எப்படிப் பேசுகிறார் பாருங்கள்" என்றான் செல்வம்.

"நீ பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது. பெற்றோர்கள் வயதானால், எதற்கும் உதவ மாட்டார்கள் என்று ஏதாவது ஓர் அனாதை இல்லத்தில் சேர்ப்பதுபோல்" என்றாள் கண்ணகி.

செல்வம் ஒருகணம் பேசவில்லை. கண்கள் ஈரித்தன. மெல்லப் பேசினான். "அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். என் பேச்சு உங்களை இவ்வளவு புண்படுத்தும் என்று நினைக்கவில்லை. இந்த மண்ணின்மேல் உங்களுக்குள்ள பாசம் எனக்கு இவ்வளவு நாள் புரியவில்லை. என் தவறை நான் உணர்ந்து கொண்டேன்" என்றபடி அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான் செல்வம். அவனைக் கேட்காமலே கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

பானுமதி பார்த்தசாரதி
More

நீங்களுமா!
Share: 




© Copyright 2020 Tamilonline