|
கையிலங்கு பொற்கிண்ணம் |
|
- ஷான்|செப்டம்பர் 2018| |
|
|
|
|
மணிக்கட்டில் சிறிது தொட்டு மணி பார்த்தாள் யாழினி. ஆஹா, இன்னும் பதினைந்து நிமிடத்தில் அலுவலகத்தில் இருக்கவேண்டும். தன் வீட்டிலிருந்து நான்கு சிறு தெருக்கள் கடந்து, இரு, மூன்று நிறுத்தல் குறிகள் நின்று சென்று, நான்கைந்து பெரும் சாலைகளில் பறந்து ஒரு வழியாய் அலுவல் இடம் அடைந்தாள். தான் வழக்கமாக நிறுத்தும் இடம், இன்றும் காலியாகவே இருக்க, சடக்கென்று வளைத்துத் திருப்பி நிறுத்திவிட்டு, எடுத்தாள் ஓட்டம்.
நுழைவாயிலில் அடையாள அட்டை தேய்த்து, அடித்துப் பிடித்து மின்தூக்கியில் மிதந்து, பின்னும் சில படிகள் சடசடத்துக் கடந்து, தொப்பென்று தன் இருக்கையில் வந்து, 'ஸ்ஸப்பாஆஆஆஆ' என்று பெருமூச்சோடு சரிந்தாள். கைப்பை, ஊர்திச் சாவி, செல்பேசி, உணவுப் பொட்டலம், அனைத்தும் சரிந்தன மேசையில் யாழினியோடு!
'இன்னிக்காவது ஒரு நல்ல முடிவு தெரியவேண்டும். இத்தனை நாள் நான் பட்ட கடின உழைப்பெல்லாம் வீணாகிவிடக்கூடாது' என்று மனதினுள் வேண்டிக்கொண்டாள். அலுவலகம் வந்த பரபரப்பில், கழுத்து மணிகளோடு போட்டிபோட்டு முளைத்திருந்த வியர்வை மொட்டுகள் அறைக் குளுமையில் கரைய ஆரம்பித்தன. சற்று தன்னையும் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
புகுபதிகையில் கடவுச்சொல் தட்டிக் கணினியில் உள்நுழைந்தாள். சமீபத்திய மின்னஞ்சல்கள் எனச் சில சிறுபெட்டிகள் தோன்றி மறைந்தன. அவளது கவனம் அதிலில்லை என்பது அதிலிருந்தே தெரிந்தது. எங்கே அவற்றைப் பார்த்தால் கவனம் சிதறிவிடுமோ என்பதில் கவனமாய் அவற்றைத் தவிர்த்தாள்.
தான் எழுதிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு நிரலை, நேற்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். இரவெல்லாம் யோசித்து, தூக்கத்திலும், கனவிலும் இதே நினைவாய் இருந்ததில், கணிப்புநெறியை சிறிது மாற்றம் செய்ய யோசனை கூடியிருந்தததும் அவளுக்குச் சற்று உற்சாகம் தருவதாய் இருந்தது. மனதில் இருந்த, மாற்றம் செய்ய வேண்டிய எண்ணங்களை நிரலில் செலுத்தி, எந்திரத்தில் ஓடச் செய்ய, அவள் எதிர்பார்த்த வெளியீட்டை எந்திரமும் சொல்லியதில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் குதித்தாள்.
அதுவரையில் சடப்பொருளாக இருந்த எந்திரம் செயற்கை அறிவினில் கற்க ஆரம்பித்திருந்தது. சிங்கத்தின் படத்தைச் செலுத்தி இது என்ன என்றாள், சிங்கம் என்றது. ரோஜாப்பூ படத்தைச் செலுத்தி, இது என்ன என்றாள். பூ என்று பொதுவாகச் சொல்லாமல் ரோஜாப்பூ என்றது. மேலும் மேலும் சில சொற்களையும், படங்களையும் செலுத்தி, எந்திரத்திற்குப் பயிற்சி அளித்தாள் தன் நிரலின் மூலம். எந்திரம் அதுவரையில் கற்றதை, மீண்டும் ஓரிரு முறை சரிபார்த்துக் கொண்டாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்த யாழியின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ!
கைபேசியில் தொடுதிரை தடவி, நரேனை அழைத்தாள். "ம் சொல்லு, என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே, டேய்ய்ய்ய்ய், நான் கண்டுபுடிச்சிட்டேன், என் நிரலி மூலம் எந்திரம் கற்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாள்தான், பாரு நான் எந்த நிலைக்குப் போறேன்னு" என்று அடுக்கினாள்.
"ரொம்ப சந்தோசம். உன் நிரல் வேற என்னெல்லாம் பண்ணும்?" என்றான் குறும்பாய்.
சந்தோசத்தின் எல்லையில் இருந்தவளை இந்த ஒரு வாக்கியம் அதல பாதாளத்துக்குத் தள்ளியது.
மேலும், "உன் நிரல், நீ எப்பல்லாம் என்னக் கூப்பிடுவனு கணிச்சு சொல்லுமா?" என்று கேட்க நினைத்தவன், கேட்டால் விளையும் பயனை எண்ணி, எண்ணத்தோடு நிறுத்திக்கொண்டான். "ஹலோ, ஹலோ' என்றான். பதிலில்லை. இதுக்கெல்லாமா கோபித்துக்கொள்வது என்று, திரையைப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அழைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.
'அப்படி கேட்டிருக்கக் கூடாது, மன்னித்துக்கொள்' என்று குறுஞ்செய்தி அனுப்பினான் கையோடு.
அதல பாதாளத்தில் விழுந்துவிடாது பூலோகத்திலேயே இருந்த யாழினிக்கு அது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. 'இவன் எப்பவும் இப்படித்தான், அடுத்து என்ன செய்யலாம்?' என அவள் மனத்திரையில் ஓர் ஓட்டம். பரவலாக யோசித்தாள்.
உட்செலுத்தும் உள்ளீட்டைச் சேமிக்க, பிரித்து ஆராய, முடிவெடுக்க, எடுத்த முடிவைச் சரிபார்க்க, சரிபார்த்த முடிவை வெளிச்சொல்ல என வெட்டுக்கூறுகள் எடுத்த அடிகள், எண்ணியதைத் தந்ததில் மெத்த மகிழ்ச்சி அடைந்தாள்.
*****
என்றுமில்லாத மௌனத்தில் இருந்தது வீடு, நரேன் உள் நுழைகையில். வழக்கம்போல் அவனுக்கு முந்தி வந்து விட்டிருந்தாள் யாழினி. எங்கே அவள் என நரேனின் விழிகள் தேடின யாழினியை. அறை அறையாய் அடிவைத்த நரேன், யாழினி அடுக்களையில் இருப்பதைக் கண்டான். விறுவிறுவென்று செல்லாமல், பூனைபோல் மெதுவே மெத்தனித்து, அவளை நெருங்கி அப்படியே அணைத்துக்கொண்டான். |
|
"ச்சீ, விடுடா, இந்த வயசுல இன்னுமா?" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
"வயசா? இதுவா? இதுக்கெல்லாம் வயசுண்டா…" என்று அவளை மடக்கினான்.
"என்ன இருந்தாலும், நான் அப்படி உன்னக் கேட்டிருக்கக் கூடாது" என்று நேரடியாய் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
"அதான், அப்பவே கேட்டுட்டியே, திரும்பவும் என்னவாம்!" என்று பிடி தளறாது அவனது பிடியில் தன்னை மேலும் இறுக்கிக் கொண்டாள்.
"சரி, ஒரு அடிப்படைக் கேள்வி! இப்ப, நீ என்னைப் பார்த்தவுடன் நாந்தான்னு உனக்குச் சொல்லித் தந்தது எது? உன் நிரலியா?" என்றான்.
இறுகிய அணைப்பில் சிறிது சிந்திக்க ஆரம்பித்தது யாழினியின் மனம்.
"ம்… ஆமால்ல, எப்படி?" என்று அவனையே திருப்பிக் கேட்டாள்.
"இந்த உலகைப் படைத்த ஒருவன், நம்மையும் படைத்து, நமக்குச் சில கருவி கரணங்களை இலவசமாகத் தந்து, பெறுதற்கு அரிய பிறவியாய் நம்மை பிறக்கச் செய்து..." என்று நரேன் முடிக்குமுன்.
"ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!" என்று பிடி விலகாது அவனது அணைப்பில் மேலும் தன்னை இறுக்கிக்கொண்டாள் யாழினி.
எங்கிருந்தோ காற்றில் ஒரு பாடல் தவழ்ந்து வந்தது...
மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ண மென்றலால் அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
ஷான் |
|
|
|
|
|
|
|
|