Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஊர் வாசனை!
குற்ற உணர்வு
- பத்மா|அக்டோபர் 2018|
Share:
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள் வாடிக்கையாக வாங்கும் ஒரு கட்டுடன் கூடுதலாக ஒரு கட்டுக் கீரையும் இருந்ததைப் பார்த்தேன்.

"வழக்கப்படி கூடையில் ஒரு பத்து ரூபாய் நோட்டுதானே வைத்தோம், எப்படி இரண்டு கட்டுப் போட்டாள்? ஒரே நாளில் விலை பாதியாகக் குறையுமா என்ன? எந்தப் பொருளும் விலை கூடினால் மறுபடி இறந்கியதாகச் சரித்திரமே கிடையாதே? புது நோட்டுகள், இரண்டு நோட்டுகளாக வைத்திருப்பேனோ?" யோசனையுடன் பர்சைச் சோதித்தேன்.

ஏற்கெனவே நான் எண்ணி வைத்திருந்த ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளில் ஒன்றுதான் குறைந்திருந்தது. தவறுதலாக சுப்பம்மா இரண்டு கட்டு போட்டிருக்கிறாள் என்பது புரிந்ததும், வியாபாரம் முடிந்து திரும்பும்போது வழக்கம்போல் குடிநீர் கேட்க வருவாள். அப்போது பத்து ரூபாய் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்த கணமே குரங்குமனம் வேறு கணக்குப் போட்டது. 'எத்தனையோ நாளாகக் கட்டு பத்துரூபாய் விலையில்தான் போட்டு வருகிறாள். தினசரி விலையா கேட்கிறோம். சின்னதோ பெரிசோ வாடைக்கும், கோடைக்கும் ஒரே விலை. இன்று எனக்கு ஒரு கட்டுக் கீரை அதிகமாகக் கிடைக்க வேண்டிய நாள். வந்து கேட்டால் கூடையில் ஒரு கட்டுதான் இருந்தது என்று அடித்துச் சொல்லிவிடலாம்' என்று என் செயலுக்கு நானே நியாயம் கற்பித்துக்கொண்டு வேலையைத் தொடர்ந்தேன்.

கீரையை நறுக்கும்போது சுப்பம்மாவின் எண்ணை காணாத பரட்டைத் தலையும், வெய்யலில் சுற்றி கன்றிக் காய்ந்த வியர்வை சொட்டும் முகமும் 'நீ செய்வது நியாயமான காரியமா? யோசித்துப்பார்' என்று என்னைக் கேட்பதுபோல் இருந்தது. "சே! இது என்ன தலைவலி, தப்பே பண்ணாதவர்கள் ஒரு சின்னத் தப்பு பண்ணினால் இப்படித்தான் நாக்கில் தைத்த முள்ளாய் உறுத்துமோ? கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர்கள், ஒன்றுக்குப் பத்தாய் கிம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த உறுத்தல் இருக்காதா? அல்லது தப்பே பழகிவிட்டால் அதுவே இயல்பாகி விடுமோ?"

பலவிதமான யோசனையுடன் சமையலை முடித்தபோது மகள் திவ்யா படிக்கும் பள்ளியிலிருந்து "திவ்யாவிற்கு உடல்நலம் சரியில்லை, வந்து கூட்டிப்போகவும்" என்று ஃபோன். 'என்ன ஆச்சு? காலையில் பள்ளிக்கு நன்றாகத்தானே போனாள்!' யோசனையுடன் அவசரத்திற்கு ஆட்டோ பிடித்து திவ்யாவைக் கூட்டிவந்தேன். வயிற்றுவலி. டாக்டரிடம் கூட்டிப் போனபோது ஊசிபோட்டு, “கஞ்சி மாதிரி திரவ ஆகாரம் மட்டும் போதும்" என்றார். மகள் கீரை நிறைய சாப்பிடவேண்டும் என்பதற்காக அவளுக்குப் பிடித்த மாதிரிப் பரம சிரத்தையுடன் சமைத்திருந்தேன். ஏன் இந்த நிலைமை?

மறுபடியும் மனதில் உறுத்தல். சுப்பம்மாவின் நினைவு. "வயிறு நனைய மழை வெய்யில் பார்க்காம கால் தேய நடந்து காசைக் கண்ணால் பார்க்கிறவங்க நாங்க. எங்களை ஏமாத்தினால் இரட்டிப்புச் செலவு கண்டிப்பாக வரும்" என்று சொல்வது போல் இருந்தது. இரட்டிப்புச் செலவா? டாக்டருக்குக் கொடுத்ததில் ஆறு மாதம் கீரை வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாம்.

மன உறுத்தலில் கணவருக்கு மதிய உணவு டப்பா கட்டும் விஷயத்தையே மறந்துவிட்டேன். அவசரமாக பேக் பண்ண ஆரம்பித்தபோது கணவரிடமிருந்து "கிளையண்ட் வந்திருப்பதால் லன்ச், டின்னர் இரண்டும் வெளியேதான், டப்பா கட்டவேண்டாம். டப்பாவாலாவிற்கு ஃபோன் பண்ணிச் சொலலிவிட்டேன்" என்று ஃபோன் கால்.
அன்றைய கீரைத் தயாரிப்பு அவருக்கு மிகவும் பிடித்த ஐட்டம். அவரும் சாப்பிடப்போவதில்லை. ஒரு தடவைகூட இப்படி நடந்ததில்லையே. கீரையை நினைக்கும்போதே சுப்பம்மா எதிரில் வந்து மிரட்டுவாளோ என்று பயந்தேன். சமைத்த பதார்த்தத்தை திரும்பிக்கூடப் பார்க்காமல் படுத்துவிட்டேன்.

"அம்மா மணி ஒன்பது ஆச்சு, பாட்டு க்ளாசுக்குப் போகணும்" பெண் எழுப்பிய பிறகுதான் நான் அதுவரை அநுபவித்த மனவேதனை அவ்வளவும் கனவு என்பது புரிந்தது.

முதல்நாள் இரவு படம் பார்த்துவிட்டு அதிகாலையில் அதிகப்படி கீரைக்கட்டுக்கான முடிவு எடுத்தபின் 'ஞாயிற்றுக்கிழமை தானே சிறு தூக்கம் போட்டுவிட்டு வேலைகளைத் தொடங்கலாம்' என்று எண்ணி படுத்தபின் ஏற்பட்ட கனவு. ஒரு சிறிய தவறு செய்ய நினைத்ததற்கே எத்தனை மனவேதனை! கோடி கோடியாக மோசடி செய்பவர்களுக்கும் குற்ற உணர்வு நிச்சயம் இருக்கும். அவர்களால் ஃபோட்டோவுக்குத்தான் சிரிக்கமுடியும் நல்லதோ கெட்டதோ மனதிற்குத் தெரியாமல் செய்ய முடியாது' என்று எனக்குள் பத்துத்தடவை சொல்லிவிட்டு என் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு என் இஷ்டதெய்வம் கணபதிக்கு பதினோரு தோப்புக்கரணம் போட்டேன்.

வியாபாரம் முடிந்து குடிக்கத் தண்ணீர் கேட்டு வந்த சுப்பம்மாவிடம் பத்து ரூபாயைக் கொடுத்தேன். "தாயி! ஒரு கட்டுக் காசு குறையுதேன்னு தவிச்சுப் போனேன். தூக்கக் கலக்கம். எங்கே அதிகப்படி போட்டேன்னு தெரியலை. மகராசி! புள்ளை, குட்டியோட நல்லா இருப்பே."

மன ஆழத்திலிருந்து அந்த ஏழை வாழ்த்தியபோது என்னுள் ஏற்பட்ட நிம்மதிதான் உண்மையான ஆனந்தம் என்று உணர்ந்தேன்.

பத்மா
More

ஊர் வாசனை!
Share: 
© Copyright 2020 Tamilonline