Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சிறுகதை
பொழுதுகள் விடியட்டும்!
ஒரு பனிநாள் விவாதங்கள்
- ஜெயா மாறன்|ஏப்ரல் 2018|
Share:
டிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை.

இளம்பச்சை இலை தளிர்த்து, பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி, கடைசியில் கருஞ்சிவப்பாகி அவை உதிர்ந்த துக்கத்தில் துறவுக்கோலம் பூண்ட மரங்களுக்கு, வானத்து தேவதைகள் வெள்ளிமணி மாலைசூட்டி அழகுபார்த்த நாள் அது. எதிர்பாராமல் வந்த பனிமழையால் பணிக்கும், பள்ளிக்கும் விடுமுறை. நீர்மழையைக் கண்டு ஓடியவரெல்லாம் பனிமழையில் குதித்தாடினர். செல்ஃபி அழகிகளை எல்லாம் ஒரேநாளில் தோற்கடித்து, உலக அழகிப் பட்டத்தை வென்றாள் இயற்கைக் கன்னி!

பனியே! நீ பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறாய்!
பந்து விளையாட்டுக்கும் புது அர்த்தம் தருகிறாய்!
பனி மனிதனை வீட்டு விருந்தாளி ஆக்குகிறாய்!
அதற்காக, இங்கேயே இருந்துவிடாதே.
இரண்டு நாளில் உருகிவிடு.

பிழைப்புக்குப் பணிசெய்ய வேண்டுமே!
ஒருமாதம் கழித்து மீண்டும் வா...
ஓடியாடிப் பந்து விளையாடலாம்!

என்று கவிதைகளும் காட்சிகளும் முகநூலை நிறைத்தன. ஆடிக் களித்து தங்களுக்கென ஒரு பனிமனிதனைச் செய்து, அதைக் கொஞ்சிவிட்டு, வெள்ளையடிக்கப்பட்ட இருட்டை ரசித்தபடி நித்யாவும், நரேனும் அவர்களின் மகன் கவினும் உறங்கிப் போயினர். விடிந்தும் இந்த வெள்ளை மழை தந்த கொள்ளையழகைக் காணத் தன் வண்ணக்கதிர்களை விரித்துக்கொண்டு, நீலவானத்தில் நான் நான் என வந்தது சூரியன். இப்படி ஜொலிக்கும் காலையைக் கண்டு விடுமுறையையும் மறந்து விழித்தபோதுதான், பனி சற்றும் உருகாமல் கட்டியாகிவிட்டது தெரிந்தது. இப்படியே விட்டால் வழுக்கிவிடும். காரைவேறு எடுக்கவேண்டி இருந்தது.

டிரைவ் வேயில் இருந்த பனியை வாரித் தள்ள இறங்கினான் கவின். பனிமனிதனை உருவாக்கும் போதிருந்த உற்சாகம் இப்போது இல்லாவிட்டாலும், எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கவின் செய்யும் வேலைகளில் இதுவும் ஒன்று. அப்பா நரேன் சிறிய உதவி செய்ய முன்வந்தால்கூட மறுத்துவிடுவான். தன்னால் முடியும் என்னும் பெரியமனிதத்தனம் வந்துவிடும்.

அரைமணியில் ஒரு காரை எடுக்குமளவுக்கு ஓடுதளம் சுத்தமாகி விட்டிருந்தது. வியர்த்தபடி உள்ளே வந்து சோஃபாவில் விழுந்தான். சற்று நேரம் கண்ணை மூடிக்கிடந்தான்.

அப்போதுதான்எதிர்வீட்டிலிருந்து ஸ்டீவன் தொலைபேசியில்அழைத்தார். நரேன் எடுத்துப் பேசினார். எதிர்வீட்டு ஸ்டீவனும் ரேச்சலும் வயதான தம்பதியர்.

கவின் பனியை வாரித் தள்ளுவதைப் பார்த்தவுடன் தங்களின் ஓடுதளத்தையும் சுத்தம் செய்யமுடியுமா என்று கேட்பது வழக்கம். "பார்த்தியா கவின், உனக்கு அதுக்குள்ள வாடிக்கையாளர் வந்தாச்சு" என்றார் நரேன், தொலைபேசியில் கையை வைத்து மறைத்தபடி.

"மிஸ்டர் ஸ்டீவன்தானே" என்றான் கவின். "ஆமாம். உனக்கு எவ்வளவு கூலி தரணும்னு கேக்குறார்" என்றார் நரேன்.

"20 டாலர்னு சொல்லுங்கப்பா. போன வருடம் அதான் தந்தார். ஆனால், கொஞ்ச நேரம் கழிச்சு செய்யுறேன்," என்றான் அலைபேசிக்குள் தலையை விட்டபடி.

அடுத்த ஒருமணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்தவன் கையிலிருந்த டாலர் நோட்டுகள் இரண்டையும் மேசையில் வைத்துவிட்டு மாடிக்குச் சென்றான். சமையலில் மூழ்கியிருந்த நித்யா, சிறிது நேரம் கழித்துத் தற்செயலாக மேசையின் மேல் பார்த்தாள். ஒரு 20 டாலர் நோட்டும்அதன்மேல் ஒரு10 டாலர் நோட்டுமாக, மொத்தம் 30 டாலர் இருந்தது. இருபதுதானே தருவதாகச் சொன்னார்! கவினை அழைத்து விசாரித்தாள். "கவின், $30 தந்திருக்காரே!" என்று நித்யா சொல்ல, "இல்லம்மா, 20 டாலர்தான் தந்தார்" என்றான் கவின்.

"நீதானே மேசையில் இந்த இரண்டு நோட்டுக்களையும் வச்ச?"

"ஆமாம்மா" என்றான் கவின்."

இதில ஒரு 20 டாலர் நோட்டும் ஒரு 10 டாலர் நோட்டும் இருக்கே!" என்று ஆச்சரியத்துடன் கேட்டவளுக்கு, "அப்படியா? நான் மேலே இருந்த 10 டாலர் நோட்டை மட்டும் பாத்துட்டு, கீழ இருந்ததும்10 டாலர் நோட்டுதான்னு நெனைச்சேன். நான் கவனிக்கலம்மா" என்று மேலேயிருந்தபடியே சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றுவிட்டான்.

இனி நித்யாவுக்கும் நரேனுக்குமான உரையாடல் -

"அப்ப 10 டாலர் லாபம்தான் அவனுக்கு."

"இருபதுன்னு சொல்லிட்டு ஏன் 30 குடுக்கணும்?"
"அவருடைய டிரைவ் வே ரொம்பப் பெரிசு. நிறைய வேலை. அதனால கூடக் குடுத்திருப்பார்."

"இவன் தெரியாம வாங்கிட்டு வந்த மாதிரி, அவரும் பாக்காமக் குடுத்திட்டாரோ என்னவோ?"

"10 டாலர்தானே, விடு."

"பத்துதான். உழைப்புக்கு குடுத்திருந்தா பிரச்சனை இல்லை. ஆனா, பாக்காம குடுத்திருந்தா?"

"அவரு கூப்பிட்டாரு, இவன் போய் வேலை செஞ்சான். ரொம்ப கஷ்டமான வேலை. அதனாலஅவரே கூடக் குடுத்திருக்கலாம். அவ்வளவுதான். இதைப் போய் பெரிசு படுத்திக்கிட்டு..."

"இல்ல. நமக்கு எதுக்கு மத்தவங்க பணம்?"

"இப்ப என்ன? இதைத் திருப்பிக் குடுத்துட்டா நிம்மதியா இருக்குமா? குடுத்துரலாம்." ஒருவழியாக இந்த விவாதம் முடியவும், கவின் குளித்துவிட்டுக் கீழே வரவும் சரியாக இருந்தது.

"கவின், 'நீங்க பத்து டாலர் கூடக் குடுத்திட்டீங்க'ன்னு சொல்லி, ஸ்டீவன் கிட்ட இதத் திருப்பிக் குடுத்திட்டு வந்திடு" என்றபடி, அவன் கையில் நோட்டை வைத்தாள் நித்யா.

அவனும் எதாவது விவாதம் செய்வான் என்று எதிர்பார்த்தவள் ஆச்சரியப்படும்படி, எதுவுமே பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு எதிர்வீட்டை நோக்கி ஓடினான் கவின்.

நேர்மையாக இருப்பது பிள்ளைகளுக்கு எளிமையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களுக்குத்தான் கடினமாக இருக்கிறது."

ஜெயாமாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

பொழுதுகள் விடியட்டும்!
Share: 




© Copyright 2020 Tamilonline