கங்கா ஜலம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
|
|
|
|
"ஏழே நாள்தான் நான் உயிரோட இருப்பேனா?"
"ஆமாம்டா"
கேட்டது நான். பதிலளித்தது ராமமூர்த்தி மாமா. அருகில் அம்மா, மஞ்சு, அப்பா, பாட்டி மற்றும் என் ஒரே மகள் சாரதா.
ஏழுநாளில் மரணம் என்று கேட்டு எல்லோரும் கண்ணீரோடு என்னை அணைத்துக் கூச்சலிட்டனர் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. மாறாக எல்லோரும் ஏதோ ஆஃப்கனிஸ்தானில் எவன் தலையிலோ குண்டு விழுந்ததுபோல் இருந்தனர்.
அதற்காக நாங்கள் ஏதோ முற்றும் துறந்த குடும்பம் என்று நினைத்தால், அதுவும் தவறு. இல்லை, இல்லை.. நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் லூசுக் குடும்பமும் இல்லை.
ஆனால், உங்களைக் குற்றம் சொல்லமாட்டேன். உங்களுக்கு ராமமூர்த்தி மாமாவைப் பற்றித் தெரியாது.
நாங்கள் கோயம்பத்தூர் துடியலூரில் மூன்று பெட்ரூமில் ஆறுபேர் வசிக்கும் சாதாரணர்கள். எங்கள் கதையை இன்று சொல்லத்தான் போகிறேன்.
எல்லாம் ஒரு தவளையில் ஆரம்பித்தது.
"எல்லாரும் காக்ரோச் தான்பா பண்ணறாங்க. நான் ஃப்ராக் பண்ணினா எக்ஸ்ட்ரா மார்க்ஸ் வரும்ப்பா."
மூன்று மாதத்திற்குமுன் சாரதா கேட்டாள். நான் ஒரு ஞாயிறு மதிய அரைத்தூக்கத்தில் "கண்டிப்பாடா.." என்று சொன்னேன். சொல்லித் தொலைத்தேன் என்றுதான் சொல்லவேண்டும். சொன்னதை மறந்து போனேன். மூன்று மாதமாக!
சாரதா 12வது படிக்கும் எங்கள் செல்லப்பெண். படிப்பில் மிக கெட்டிக்காரி. பி.காம். 5 வருடம் படித்த எனக்கு தப்பிப் பிறந்தவள் என்றே சொல்லவேண்டும். "ஏன் அவள் அம்மாவைப் போல் இருக்கக்கூடாதா?" என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.
எனக்கு உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உங்களுக்கு மஞ்சுவைப் பற்றி தெரியாது போலும். அவளுக்கு கால்குலேட்டரில் கூட இரண்டு எண்களைக் கூட்ட வராது.
திருமணம் ஆன புதிது "ஏன் இப்படி?" என்று கேட்டேன். அதற்கு அவள், "என்னை விடுங்கோ. என் தங்கைக்கு நான் பரவாயில்லை. அவளுக்கு அவளோட வயசுகூடச் சொல்லத் தெரியாது" என கண்களில் நீர்வரச் சத்தம்போட்டுச் சிரித்தாள்.
நான் ஆடிப்போய் அம்மாவிடம் முறையிட்டேன். அவள் "போடா. ஒரு வருஷம் போனா எல்லாம் சரி ஆயிடப்போறது" என்று சொல்லி நகர்ந்தாள். தீர்க்கதரிசி என் அம்மா.
ஒரு வருடத்தில் நான் மாறிப்போனேன். நானும் கண்களில் நீர்வரச் சிரிக்க ஆரம்பித்தேன்.
சாரதா எங்கள் இருவருக்கும் வந்த ஆச்சரியம். தான் என்ன படிக்க வேண்டும் என்பதைப் பெற்றோருக்குச் சொல்லும் பெண். "பயோ டெக்னாலஜி தான்பா எனக்கு இன்டரெஸ்ட்!"
விலங்கியல் பரிசோதனைக்குத் தவளை கேட்டாள். அதை உயிருடன் பிடித்து, பின்பு கூறு போடவேண்டும். தவளை கேட்டதை மூன்றுமாதம் மறந்தே போனேன்.
சனி இரவு அலுவலகம் முடித்துத் திரும்பும்போது ஏன் மறந்தேன் என்று தோன்றியது.
வீடு இரண்டாக இருந்தது.
நான் ஒருபுறம். அம்மாவும் மஞ்சுவும் மறுபுறம். இருவரும் என் மறதியை மிக ஆழமாக ஆராய்ந்தனர்.
பதினெட்டு வருடங்களில் நான் மறந்த அயிட்டங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினர். என் மகள் கண்ணீரோடு சோபாவில் குப்புறப் படுத்திருந்தாள். குலுங்கிக் குலுங்கி அழுகை. இதுதான் சாக்கு என இருவரும் என்னைப் பிரித்து ஆராய்ந்தனர்.
அம்மா, நான் உலகில் அதிபுத்திசாலி என்றும் இந்த 'பாழாய்ப் போன ஞாபகமறதியால்' நான் எல்லாவற்றையும் இழந்தேன் என்றும், இல்லையென்றால் என் திறமைக்கும் அறிவிற்கும் சுந்தர் பிச்சையைவிட உயர்ந்திருப்பேன் என்றும் கணித்தாள். கூடவே ஐஸ்வர்யா ராய் போல் ஒரு பெண் என்னைத் திருமணம் செய்திருப்பாள் என்றும் இடித்தாள்.
மஞ்சு, தன் குடும்பம் அறிவில் குறைந்தாலும் மனதில் பெரியவர்கள் என்றும், "மற்றவர்கள்" போல் கெட்ட எண்ணம் சிறிதும் இல்லாதவர்கள் என்றும் மறுதலித்தாள். தான் திருமணத்தினால் புதைகுழியில் தள்ளப்பட்டதாகவும், தன் பரம்பரையில் தான் மட்டும்தான் ஒரு ஸ்மார்ட் ஃபோனுக்குக்கூட வக்கில்லாத இடத்தில் வாக்கப்பட்டவள் என்றும் முறையிட்டாள்.
அம்மா உடனே, புகுந்தவீட்டில் தான் அனுபவித்த கஷ்டத்தின் முன் இது ஒன்றும் இல்லை என அப்பாவின் குடும்பத்தினரை ஏலம் போட்டாள்.
பாட்டி - அம்மாவின் தாய், "ஏன் குழந்தய எல்லாரும் வையறேள், சாமி அய்யர் வீதி பட்டர் மந்திரிச்சா ரெண்டே நாளில் எல்லாம் சரி ஆயிடும்" என்றாள்.
இதில் வினோதம் என்னவென்றால் பாட்டிக்கு 1988க்கு பின்பு உலகில் என்ன ஆனது என்பதே தெரியாது. செமன்டிக் டிமென்ஷியாவோடு 30 வருடங்களைக் கழித்து கொண்டிருக்கிறாள். பட்டர் காலமாகி 25 வருடங்கள் ஆனது, நாம் பழைய ஓட்டுவீட்டில் இல்லை என்பது என்று எதுவுமே ஞாபகமில்லை.
"அம்பித் தாத்தா பெரிய வேலையில இருந்தார் தெரியுமோ?" என்றாள் அம்மா. "அவர் பென்ஷனை வாங்கி எப்படி ஜம்முன்னு இருக்கா பார் என் அம்மா" என மஞ்சுவிடம் விலாவாரியாக ஆரம்பித்தாள். இருவரும் குடும்ப அரசியலில் அவரவர்களின் காய்களை அதிகவனமாக நகர்த்தினர்.
"அம்மா விடும்மா. அவர் என்ன கவர்னர் ஜெனெரலா, போஸ்ட் ஆபீஸ்ல சாதாரண வேலையிலதாம்மா இருந்தார்."
"போடா நோக்கு ஒண்ணும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அப்பாவை அப்படியே கொண்டிருக்கே."
தனக்குத்தான் அடுத்த அம்பு என அறிந்து அவசர அவசரமாக செருப்பு அணிந்துகொண்டு அப்பா நழுவுவதைக் கண்டுபிடித்து விட்டாள்.
"நீங்க இப்ப எங்க போறேள்?"
"வாக் போறேன். ரெண்டு நாள் ஆச்சு. அப்புறம் சுகர் ஜாஸ்தி ஆயிடும்" என்றார் அப்பா பரிதாபமாக
"நான் பேச ஆரம்பிச்ச உடனே உங்களுக்கு வாக் ஞாபகம் வந்துடுத்தோ?"
"சின்ன விஷயம். பிசியா இருந்துட்டேன். இப்ப என்ன ஆச்சுன்னு எல்லாரும் கூச்சல் போடறேள்? ஒரு தவளை பிடிக்கணும் அவ்வளவுதானே? சாரதா எப்படா சப்மிட் பண்ணனும்?"
"மண்டே மார்னிங்" என்று விசும்பிக்கொண்டே சொன்னாள் அவள்.
இரவு உணவு முடிந்தபின் ஃபிளாட் விட்டுக் கீழிறங்கினேன். வாட்ச்மேன் வண்ணத்திரை நடுப்பக்க நாயகியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
நெருங்கி "மாணிக்கம்" என்றேன்.
"என்ன சார் ஆச்சு? தண்ணி வரலியா?"
"அது இல்லை. ஒரு தவளை வேணும்."
"சரியா கேக்கலீங்க. இன்னொரு வாட்டி சொல்லுங்க."
"ஒரு தவளை வேணும்."
"எதுக்குங்க. எதாச்சி ஒடம்புக்கு சரி இல்லீங்களா?"
"சாராதாவோட ஸ்கூல் ப்ராஜெக்டுக்கு."
"ஒ. அதுக்கா. இங்க எப்பவாச்சி வருமுங்க வந்தா பிடிச்சுக் கொண்டாந்து தாரேன்."
"ராத்திரி வருமா. திங்கட்கிழமை காலையில சப்மிட் பண்ணனும்?"
"அது தெரியாதுங்களே. பொழுதன்னிக்கி வருமுங்களா?"
"வேற எங்க கிடைக்கும்?"
"முத்தண்ணன் கொளத்துல இருக்குமுங்க. உங்களுக்குப் புடிக்க வருமுங்களா?"
"தெரியல. போய் ட்ரை பண்றேன்."
"ஒரே இருட்டா இருக்குமுங்களே. பாத்துங்கண்ணா. சுடுகாடு வேற பக்கத்திலே இருக்கு" என எச்சரித்தான்.
வீடு திரும்பி ஒரு டார்ச், ஒரு பாலிதீன் பை, ஷூ, மிளகாய்த்தூள் மற்றும் ஒரு துண்டுடன் பைக்கில் புறப்பட்டேன்.
வாட்ச்மேன் மறுபடியும் "பாத்துங்கண்ணா..." என வழி அனுப்பி வைத்தார்.
தடாகம் சாலையில் 20 நிமிடப் பயணத்திற்குப் பின் ஒரு வழியாகக் குளம் வந்தது. பைக்கை நிறுத்திவிட்டுக் கரையை நோக்கி இறங்கினேன். நாற்றம் குடலைப் பிடுங்கியது. டார்ச் வெளிச்சத்தில் அருகில் கருப்புக்குளம். நான்கு சொறிநாய்கள் என்னை நெருங்கின.
"போ போ" என்று அதட்டினேன். ஆனால் அவை கவலைப்படாமல் என்னை பயமுறுத்தும்படி அருகில் நெருங்கின. கையில் இருந்த மிளகாய்த்தூளைக் கொஞ்சம் எடுத்து அவற்றின் முகத்தில் தூவினேன். அதைச் சற்றும் எதிர்பார்க்காத நாய்கள் "இவன் தீயோன்" என வாலைச் சுருட்டிப் பின்வாங்கின.
டார்ச் விளக்கின் ஒளியில், தரையில் தவளைகளைத் தேடினேன். மிகவும் சிரமப்பட்டு ஒன்றைப் பார்த்து விட்டேன். மெல்ல அதை நெருங்கிச் சரேலென்று பாலிதீன் பையால் பிடிக்கக் கையை இறக்கினேன். பளிச்சென்று சேறு என் முகத்தில், வாயில், தலையில் வாரி அடித்தது. கவனமாகப் பாலிதீன் பையைச் சோதித்தேன். தவளை இல்லை.
"சே"
அடுத்த 2 மணி நேரம் பிரயத்தனப்பட்டு சேற்றை மட்டும் சேகரித்து வீடு திரும்பினேன்.
கேட்டைத் திறந்த வாட்ச்மேன் "குளத்திலே குதிச்சுட்டீங்களா. பயங்கரமா நாறுது! தவளை கிடைச்சுதுங்களா?"
"இல்லை" என்றவாறே வீட்டுப் படி ஏறினேன்.
கதவைத் திறந்த மஞ்சு, "எங்க போனேள்! என்ன ஆச்சு? ஏன் இப்படிச் சேறு வாரி வந்திருக்கேள்?"
"கத்தாதே. தவளை பிடிக்கப் போனேன். சேறாயிடுத்து."
"அட ராமா. சாரதா கிட்டக் கெஞ்சி தவளை வேண்டாம்னு சொல்லி அவளும் சரின்னுட்டா. போய்க் குளிங்கோ. ஆமாம் தவளை எங்க?"
"கிடைக்கல."
"சரியாப் போச்சு நாளைக்கு ஒரு கரப்பு பிடிச்சுக் குடுங்கோ. முடியலன்னா சொல்லுங்கோ. நானே பிடிக்கிறேன்"
டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றேன். அப்போதுதான் அதைப் பார்த்தேன். சுவரில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
பிடிக்க நெருங்கினேன். சர்ரென்று பறந்தது. கையில் இருந்த டவலைக் காற்றில் சுழற்றி விட்டெறிந்தேன். அது தூங்கிக்கொண்டிருந்த சாரதா முகத்தில் போய் விழுந்தது. பறந்து வரும் கரப்பானைப் பார்த்த அவள் வீலென்று ரூமை விட்டு வெளியே ஓடினாள். மேலே பார்த்த நான், அது என் முகத்தை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். தடுப்பதற்காகக் கையை அனிச்சையாக வீசினேன்.
"ஹா.." என் மூக்குக் கண்ணாடி கை பட்டுக் கீழே விழுந்தது. நெற்றிப் பொட்டில் சுரீரென்று வலித்தது.
உள்ளே வந்த மஞ்சு "இன்னுமா குளிக்கலை? என்ன முகத்தில காயம்"
"கரப்பான் பிடிக்கப் பார்த்தேன். கண்ணாடி பட்டுக் காயம் ஆயிடுத்து."
அப்படிதான் நினைத்திருந்தேன் அதை ராமமூர்த்தி மாமா பார்க்கும் வரை.
ராமமூர்த்தி மாமா - அம்மாவின் ஒரே தம்பி.
எங்கள் வீட்டில் அசாதாரண விஷயங்களைச் சாதாரணமாக்குவதில் ராமமூர்த்தி மாமாவிற்குப் பெரும்பங்கு உண்டு. மாமா அரைலூஸா இல்லை அறிவுஜீவியா என நீயா நானா விவாதிக்கலாம்.
என் சிறுவயதில் தாழ்வாரத்தில் படித்துக் கொண்டிருந்தேன். காபி குடித்துக்கொண்டிருந்த மாமா "நாளைக்கு 5 மணிக்கு உலகம் அழிஞ்சிடும்" என்றார். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
கிளம்பும் முன் என் பாட்டியிடம் "அடுத்த வாரம் வரேன்" என்றார்.
"மாமா. நாளைக்கு உலகம் அழிஞ்சிடுமே. எப்படி அடுத்த வாரம் வருவேள்?"
"I am working on a balancing act. Don't Worry" என்று சென்றார்.
ஒரு முறை மாமாவை ஒரு மாதமாகக் காணவில்லை. திடீரென்று ஒரு நாள் வந்த மாமா 30 கிலோ குறைந்திருந்தார்.
அப்பா அவரிடம் "என்ன ஆச்சு. ஏன் இப்படி இளைச்சிட்டே.." |
|
"போலந்து போனேன். ஒரு ஹடயோகியைப் பார்க்க. வெஜிடேரியன் ஃபுட் கிடைக்கலை. தக்காளி மட்டும்தான் சாப்பிட்டேன்."
"ஒரு மாசமாவா?"
"Three times a day"
"என்ன பேத்தல் இது. நீ பொள்ளாச்சிகூடத் தாண்டினது இல்லை. போலாண்டாம்.. ஹடயோகியாம்..."
ஆனால் மாமா எதற்குமே மறுத்துப் பேசினது இல்லை. அவர் ஒரு புதிர்.
என்ன படித்தார்? எப்படி, எப்படிப் பல விஷயங்களை அறிந்தார்? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவரும் அவர் சொல்வதைச் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை.
அந்தப் புதிர்தான் கரப்பான் தழும்பை கவனித்தது
"என்னடா இது?"
"கண்ணாடி பட்டுக் காயமாயிடுத்து மாமா."
"எப்படி?"
"கரப்பான் பூச்சி பிடிக்கப்போனேன்."
"இது கண்ணாடி பட்டு ஆகல. That Cockroach bit you"
"அது கடிக்குமா?"
"இன்னும் ஒரு வாரம்தான் உனக்கு லைஃப். யூ ஆர் கோயிங் டு டை."
"ஏழே நாள்தான் நான் உயிரோட இருப்பேனா?"
"You will have a painful death."
"ஐயோ. என்ன மாமா பண்றது?"
"டேக் திஸ்" என்று ஒரு பொட்டலம் குடுத்தார். திறந்தேன் விபூதி.
போகும்முன் மாமா "ரெண்டு நாளில் நீலக்கலரில் சின்ன உருண்டை வாயிலெடுப்பாய்" என்று சொல்லிவிட்டுப் போனார்
மாமா போனபின்பு அப்பா என்னிடம் "அவன் சொல்றதை இக்னோர் பண்ணு. அவா குடும்பமே ஒருமாதிரி. பாட்டி, மாமா எல்லாம். ஆனா என் மாமனாருக்கு இவன் தேவலை."
"ஏன்?"
"இப்ப இருந்தா 'ட்ரம்ப்கூட பேசறேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ'ன்னுட்டு இரண்டு மணிநேரம் பாத்ரூம விட்டு வெளிய வரமாட்டார். இல்லைனா, ஒபாமா உப்புமா கேட்கிறான்னு தெருவில ஓடுவார்."
இரண்டு நாள் போனது. காலையில் குளிக்கும் போதுதான் கவனித்தேன். தரையில் இரண்டு சின்ன நீலக் கலர் உருண்டைகள். குனிந்து அதைக் கையில் எடுக்கும் முன்பு ஓட்டை நீருடன் மறைந்து போனது.
மாமாவிடம் செல் பேசினேன்.
"சரி மாமா. கரப்பான் பூச்சி கடிச்சு மனுஷா சாவாளா?"
"இது சாதாரண கரப்பான் இல்ல. Therea Peticarciana. They got alien traits"
"அப்படின்னா?"
"வேற்றுக் கிரகவாசிகள் இங்கேயே இருக்கா. மனுஷாளை பேலன்ஸ் பண்றதுக்கு. Nature's game."
"புரியலை மாமா."
"They are masquerading. You can't try to kill them. அப்படிப் பண்ணினா நாம காலி."
"?"
"ஆப்பிள் கேன்சருக்கு நல்லது. ஆனா ஆப்பிள் விதை சாப்பிட்டா கேன்சர்."
"இப்ப நான் என்ன மாமா பண்ணட்டும்?"
"நான் குடுத்த விபூதி சாப்பிடு. தர்ஸ்டே காலையிலே இரண்டு சேப்புக் கலர் பூச்சி வாயிலிருந்து வரும். அதை போட்டோ எடுத்து அனுப்பு"
"சரி மாமா."
"You Will die Thursday night" போனை கட் செய்தார்.
வியாழன் காலை பல் தேய்த்தவுடன் இரண்டு சிவப்புப் பூச்சிகளை வாஷ்பேஸினில் பார்த்தேன். யாரிடமும் சொல்லவில்லை. எல்லோரும் எனக்கும் கெளரவப் பட்டம் அளிப்பார்கள்.
வியாழன் இரவு நான் மரணிக்கும் இரவு. எனக்கும் மாமாவிற்கும் மட்டும் புரிந்த ரகசியம். எல்லோரும் தெருவின் சப்தம் குறைந்து, விளக்கு அணைக்கப்பட்டதும் உறங்கிபோனார்கள். நாளை காலைதான் இனி உதயம், என்னைத் தவிர.
நான் டிவியில் சேனல்களை மாற்றினேன். எதிலும் கவனம் இல்லை. பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஜெயலட்சுமி டீச்சர், சேட்டுப் பெண் சப்னா, தேங்காய் கிரியின் மரணம், திருமணம், சாரதா ஜனனம் என.
நீண்ட இரவுக்குப்பின் உறங்கிப் போனேன்.
"எழுந்திருங்கோ. மணி எட்டு ஆறது. இப்படியா வேஷ்டி அவிழ்ந்தது கூடத் தெரியாம பேன்னு தூங்குவா"
"அட.. நான் மரணிக்கவில்லை. எப்படி?"
மாமாவிற்கு செல் பேசினேன். "மாமா ஐ ஆம் அலைவ்."
"உடனே கோனியம்மன் கோவிலுக்கு வா"
"இன்னும் குளிக்கலை மாமா."
"பரவால்ல."
கோயிலுக்கு விரைந்தேன். மாமா வாசலில் காத்திருந்தார். என் முகத்தைச் சோதித்தார்.
"சிரி..."
சிரித்துக் காண்பித்தேன்.
"வலதுபக்கம் முகத்தைத் திருப்பி இருமிக் காண்பி"
செய்தேன்.
"அய்யோன்னு கத்து"
"மாமா எல்லாரும் பாக்கறா"
மாமா சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் என் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.
"ஐயோ"
"யூ ஆர் ஆல் செட்"
"மாமா.. அப்போ நான் சாகமாட்டேனா.."
"இல்லை. நான் உனக்கு ஆன்டிடோட் கொடுத்தேன். அது விபூதி இல்லை."
"ஏன் மாமா இப்படிப் பயப்பட வெச்சேள்!"
"அந்த மருந்து மரணபயத்தில்தான் வேலை செய்யும்"
சொல்லிவிட்டு மாமா 1C பஸ் ஏறிச் சென்றார்.
உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. எனக்கு மாமா அரைலூசாகத் தோன்றவில்லை.
கோகிரா |
|
|
More
கங்கா ஜலம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
|
|
|
|
|
|
|