Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
போன்சாய்
வானம்பாடிகள்
- ஹேமா ஜெய்|ஜூலை 2017|
Share:
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து சேர்ந்தாள் சுஜாதா. அப்போதுதான் நிலையத்துக்குள் வந்து நின்ற சேரன் எக்ஸ்பிரஸ் மஞ்சள் விளக்கைப் போட்டுக்கொண்டு நிலையத் தூணுடன் மெதுவாக அட்டாச் ஆகிக் கொண்டிருந்தது. "நல்லவேளை! இன்னிக்கு ட்ரெய்னே லேட் போல!" டென்ஷன் குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

"எங்க கவிதா? இன்னும் வரலியா?" சுற்றித் தேடியபடியே ரிசர்வேஷன் கோச்சை அடைய, ஒரு கரம் சுஜியின் தோளைத் தட்டியது. "எங்கடி பராக்கு பார்த்துகிட்டு நிக்குற!" கவிதாதான். "வந்துட்டியா? உன்னைக் காணாமேன்னு நான் அந்தப் பக்கம் பார்த்துட்டு இருக்கேன்" வாஞ்சையாகச் சிரித்த தோழியின் கரங்களைப் பற்றிக்கொண்ட சுஜி, "நீ எப்ப வந்த? நல்லா இருக்கியா? நாம பார்த்து ஆறு மாசத்துக்கு மேல இருக்காது?" என்றாள்.

"இருக்கும். ஒரே ஊர்ல இருக்கோம்னுதான் பேரு. எங்க பார்த்துக்க முடியுது? இந்தமாதிரி எப்பவாவது ஊருக்குப் போறப்ப ட்ரெய்ன்லதான் பாத்துக்க வேண்டியிருக்கு" கவிதா நொடிக்க, இருவரும் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள். கவியும் இதே சமயம் கோவை செல்லும் விஷயம் அறிந்து சுஜியே இருவருக்கும் டிக்கட் புக் செய்தாள். அதனால், பக்கத்துப் பக்கத்து இருக்கைகள்தான். நெடுநாள் கழித்துச் சந்தித்த தோழிகள் இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ட்ரெய்ன் புறப்பட்டது.

வண்டி வேகமெடுத்து பேசின் பிரிட்ஜை அடைய, பயணிகள் ஒவ்வொருவராக படுக்கையை விரித்தார்கள். நீண்டநாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் கவியும் சுஜியும் சொந்தக் கதை, ஊர்க்கதை, உலகக்கதை எனப் பேசினாலும், நாள் முழுதான அலுப்பில் இருவருமே களைத்துப் போயிருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேலே உட்கார முடியாமல், "சரி படுக்கலாம்பா" என்று தங்கள் பெர்த்தை விரித்துக் கொண்டார்கள்.

வண்டி பெரம்பூர் தாண்டியிருக்கும். திமுதிமுவென்று ஒரு கூட்டம் பெட்டிக்குள் நுழைந்தது. மூன்று ஆண்களும் நான்கு பெண்களுமாக முதுகில் கட்டிய பெரிய பெரிய மூட்டை முடிச்சுகளுடன் வந்தவர்கள், விளக்கைப் போட்டுவிட்டு ஒருவழியாக இடந்தேடி அமரும்வரை ஒரே களேபரம்தான். கிள்ளைமொழி பேசியதில் இருந்து தெரிந்தது மலையாள மாணவர்கள் என்று; அவர்களது சத்தத்தில் தூங்கிவிட்டவர்கள் எல்லாம் விழித்துக் கொண்டார்கள்.

சுஜியும் கவிதாவும் தங்கள் இருக்கைகளில் எழுந்து அமர்ந்து வேடிக்கை பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் அமைதியாகப் படுத்து விடுவார்கள் என்று பார்த்தால், அவர்களின் பேச்சும் அரட்டையும் தொடர்ந்துகொண்டே இருந்தன. பேச்சிலும் சிரிப்பிலும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டதிலும் அந்தப் பெட்டியே அதிர்ந்தது. முழுதாக பாஷை புரியாவிட்டாலும், இவர்களும் ரசித்தனர்.

ஆனாலும், எவ்வளவு நேரம்? பக்கத்துத் தடுப்பில் இருந்தவர்கள் எல்லாம் சிறிது பொழுதில் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட, இவர்கள் இருவரால் மட்டும் மீண்டும் தலைசாய்க்க முடியவில்லை. சுஜியின் கால்மாட்டில் உட்கார்ந்துகொண்டு எதிர்சீட்டை முழுதாக ஆக்கிரமித்தபடி அவர்கள் மும்முர அரட்டையில் இருக்க, அவள் ஒன்றும் பேசாமல் எழுந்து கவிதாவின் சீட்டில் வந்து அமர்ந்துகொண்டாள். நல்லவேளை! சைடு லோயர் என்பதால் தலை இடிக்காமல் இரண்டுபேரும் உட்காரமுடிந்தது.

தூக்கம் கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. கவிக்கு கழுத்தெல்லாம் வலித்தது. "என்ன சுஜி இது? மணி பன்னிரெண்டாச்சு. இதுங்க தூங்குற மாதிரியே தெரியல. முதுகெல்லாம் வலிக்குதுப்பா." அவள் உடலை முறித்துக் கொண்டாள். சுஜி சத்தமாகக் கொட்டாவி விட்டாள். இவர்களது உடல்மொழியை அந்த இளவட்டங்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ வீடியோவை கையில் இருந்த டேபில் ஓடவிட்டு வானரக்கூட்டம் போல ஒருவர்மேல் ஒருவர் ஈஷிக்கொண்டு பார்த்தனர்.

கவிதா இரண்டு முறை உச்சுக்கொட்டிப் பார்த்தாள். ஊஹும்... ஒன்றும் வேலைக்காகவில்லை. "பேசாம லைட்டை நிறுத்திடலாம்..." மெல்ல முணுமுணுத்த சுஜி விளக்கை அணைக்க, "அந்த லைட்டைக் கொஞ்சம் போடுங்க, ஆன்ட்டி" அதில் ஒரு பெண் தெளிவான தமிழில் இவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் அந்த திரைக்குள் முழுகினாள்.

இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கவிக்கு புறுபுறுவென்று கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. "என்ன புள்ளைங்களோ... கொஞ்சமாவது அடுத்தவங்க கஷ்டம் புரியுதா பாரு.. நட்டநடு ராத்திரிக்கு இப்படி ஒண்ணா உக்காந்து கதையடிச்சு உசுரை வாங்குதுங்க. இதுங்களுக்கு தூக்கம் வரலேன்னா நம்மளையும் தூங்கவிடாம. இதுல உன் சீட்ல வேற சட்டமா உக்காந்துக்குதுங்க," அவள் படபடவென்று பொரிய, "விடு கவி..." சுஜி சமாதானம் செய்தாள்.

கவி எகிற முற்படும்போதெல்லாம் "இரு, கொஞ்ச நேரத்துல அவங்களாவே படுத்துடுவாங்க. நாமளா எதுவும் சொல்லவேணாம்" என்று அவள் மீண்டும் மீண்டும் வலியுறுத்த, ஒரு கட்டத்தில் கவி ஆச்சர்யமானாள். "என்னடி இது? இவ்வளவு அமைதியா பேசுற? எதுக்கெடுத்தெல்லாம் பட்டாசு கணக்கா பொரிஞ்சு தள்ளுவ. இன்னிக்கு என்ன ஆச்சு?" கேலியாகக் கவி கேட்க, சுஜி அர்த்தபாவத்துடன் சிரித்தாள். "என்ன புன்னகை அரசி கணக்கா சிரிப்பு வேண்டிக்கிடக்கு? எனக்கு எரிச்சல் எரிச்சலா வருது" கவி முறைக்க, அதற்கும் முறுவலித்த சுஜிக்கு அப்படியே அதே சம்பவம் அச்சு மாறாமல் திரும்பவும் நடப்பது போலிருந்தது.

பத்து வருடம் இருக்குமா? இல்லை, மேலேயே. அப்போது சின்னவள் இரண்டு வயதுப் பூங்குழந்தை. இப்போது அவளே பள்ளிப்படிப்பை முடிக்கப் போகிறாள். பதினைந்து ஆண்டுகள் கடந்தாலும், இன்று நடந்ததுபோல அப்படியே நினைவில் இருக்கும் வகையில் அந்த நிகழ்வு ஆழமாகப் பதிந்திருந்தது மனதில். சந்தோசமான விஷயங்களைவிட, சங்கடமான எண்ணங்களை இந்த உள்ளம் மறப்பதில்லை போலும். ஒருபக்கம் வெட்கமும், இன்னொரு பக்கம் அசவுகரியமான அசட்டுச் சிரிப்பும் தொற்றிக்கொண்டன சுஜியின் முகத்தில்.

அப்போதும் இப்படித்தான். இரவுப்பயணம். இதைவிட நீண்ட பயணமும்கூட. இப்போது போல கையைக் காலை வீசிக்கொண்டு வந்தமாதிரி அல்லாமல் அப்போது நண்டும் சிண்டுமாகக் கையில் இரு குழந்தைகள். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட பைகளுடன் இரண்டு பெரிய பெட்டிகள் எனக் கையும் முதுகும் கொள்ளாத பொதி.

கல்கத்தாவுக்கு வேலை விஷயமாகச் செல்லும் ஸ்ரீதரின் ப்ரோக்ராமோடு ஊர் சுற்றிப் பார்க்கும் ஆவலில் இவளும் குழந்தைகளும் சேர்ந்துகொண்டார்கள். வேலையில் இருந்து திரும்பிவந்து இரவுக்கான உணவைத் தயாரித்து, குழந்தைகளை கிளப்பி, விட்டுப்போன சாமான்களை எடுத்துவைத்து, மூட்டை முடிச்சை ஒழுங்கு செய்து என முதுகு இரண்டாக பிளந்ததில் அவள் ஓய்ந்து போனாள்.

காரில் போனால் டிராஃபிக்கில் மாட்டிக் கொள்வோம் என எலக்ட்ரிக் ட்ரெய்னில் ஏறி, அந்த கூட்டத்தில் நசுங்கி கசங்கி, சென்ட்ரலுக்கு வந்து ஒரு வழியாக வண்டியைப் பிடிப்பதற்குள் 'இப்படி ஒரு பயணம் அவசியம்தானா?' என்று அவள் தனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தாள்.

சீட்டில் அமர்ந்ததும் 'ஹப்பாடா' என்று இருந்தது. இவர்களுடைய பெர்த் ஏரியாவில் வேறு யாரும் வந்திருக்கவில்லை. சாப்பாட்டு மூட்டையைப் பிரித்து பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டே பொறுமையாகச் சாப்பிட்டார்கள். அவசரமாக கிண்டிக் கொட்டியிருந்த காய்கறிக் கிச்சடிகூட அமிர்தமாக ருசித்தது.

ரொம்பநாள் கழித்து கணவர், குழந்தைகளுடன் விச்ராந்தியாக அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்ததில் அலுப்புக்கூட மறைந்து சுஜியின் மனதில் உற்சாகம் குமிழியிட்டது.

"அடிக்கடி இந்தமாதிரி வெளில வரணுங்க. ட்ராவல் பண்றத பசங்க எப்படி எஞ்சாய் பண்றாங்க, பாருங்க!" அவள் சொல்லி வாயைக்கூட மூடவில்லை. அதற்கு ஆப்பு வைப்பதுபோல திபுதிபுவென இளைஞர் கூட்டம் ஒன்று உள்ளே வந்தது. வட இந்திய மாணவர்கள் போல. இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள். கும்பலாக வந்தவர்கள் அவரவர் சீட்டைத் தேடி அமர்ந்தார்கள். இவர்கள் அவர்களை பார்த்து புன்னகைக்க, அவர்களும் புன்முறுவல் பூக்க, ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போனது.

ஸ்ரீதர் அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். வங்காளி மாணவர்கள் என்று தெரிந்ததில் அவன் அவர்களிடம் ஹிந்தியில் பேச, லேசான அறிமுகம் ஆனது. பிறகு தமக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். சுஜி தனக்கு தெரிந்த அரைகுறை மொழி அறிவில் அவர்கள் உரையாடலைப் புரிந்துகொள்ள முயற்சித்தாள். வேறென்ன செய்வது? அவர்களுடைய கலகல பேச்சுக்கு நடுவே இவர்கள் என்ன பேச என்று தெரியாமல் கம்மென்று உட்கார்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞர்கள் ஹிந்திக்கும் தடா போட்டு பெங்காலியில் பேசிக்கொள்ள இவர்கள் மௌனப்படம் பார்ப்பதுபோல அமர்ந்திருந்தார்கள். கொஞ்சநேரத்தில் தூக்கமும் வந்துவிட்டது.
பெர்த்தைப் போட்டு இவர்கள் படுத்துவிட, அந்த இளைஞர்கள் தூங்குவதாகத் தெரியவில்லை. விளக்கையும் போட்டுக்கொண்டு உரத்த குரலில் அரட்டை அடித்தார்கள். இவளுக்கு நல்ல நாளிலேயே சத்தம் இருந்தால் தூக்கம் வராது, சர்வ அமைதியாக இருக்க வேண்டும். ரயில் பயணத்தில் எதிர்பார்க்க முடியாது என்றாலும் கூட அந்த நடு இரவில் காச்மூச்சென்ற சத்தத்தில் தலையெல்லாம் இடித்தது.

பெர்த்தின் குறைவான அகலத்தில் குழந்தையையும் படுக்க வைத்து, கிடைத்த இடுக்கில் ஹாண்ட் பேகை இடுக்கிக் கொண்டு படுக்க மிகச் சிரமமாக இருந்தது. முகத்தில் அறைந்த விளக்கு வெளிச்சம் வேறு. சிறிது நேரத்துக்கு முன்பு போயிருந்த முதுகுவலி இப்போது திரும்பி வந்து உலுக்க, அவளால் சத்தியமாக முடியவில்லை. பக்கத்தில் அன்னிய ஆண்கள் விழித்தபடி இருக்க, திரும்பி நேராகப் படுக்கவும் சங்கடமாக இருந்தது. லேசாக அப்படியும் இப்படியும் புரள, துணி விலகிவிடுமோ என்ற அச்சம் வேறு. எதிர்ப்பக்கம் மேல்பெர்த்தில் படுத்திருக்கும் பையன் இங்கே பார்க்கிறானோ என்ற உறுத்தலும் சேர்ந்துகொள்ள, லேசாக மேலே நிமிர்ந்து நோட்டம் விட்டாள். அவன் பாவம் மும்முரமாக தன் சகாக்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

"இந்த பொம்பளப் புள்ளைங்களுக்காவது அறிவு இருக்கா? கொஞ்சம்கூட விவஸ்தை இல்லாம மேல விழுந்து விழுந்து பேசிக்கிட்டு. இதுங்க எப்படியோ போயி தொலையட்டும். லைட்டை நிறுத்திட்டு படுத்துத் தொலைக்குதுங்களா... சே..."

"ஏதாவது வேணுமா சுஜி...." இவள் ஆராட்டமாக இப்படியும் அப்படியுமாக திரும்பித் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்த ஸ்ரீதர் வினவ, "ஒரு மண்ணும் இல்ல. பேசாம தூங்கித் தொலைங்க," வள்ளென்று விழுந்தாள்.

"என்னடி ஆச்சு!" அவன் முணுமுணுத்து பாவமாகக் கேட்க, அவனை வெறுமனே முறைத்துவிட்டு எதிர்ப்பக்கம் திரும்பிக்கொண்டாள். எந்த நேரம் பொங்குமோ என்பதுபோல அவள் எரிச்சல் நொடிக்குநொடி ஏறிக்கொண்டே போக, அதற்கு தகுந்தாற்போல பக்கத்தில் பேச்சும் சிரிப்பும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டேதான் போனது. என்னவோ இன்று இரவில் பேசமுடியவில்லை என்றால் இனி எப்போதுமே முடியாது என்பதுபோல இரைந்து கொண்டிருந்த அவர்களைப் பார்த்தால் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

"எங்களைதான் மனுஷங்களா நினைக்கவே வேணாம். இந்த குழந்தைங்க தூங்குதுங்கன்னு கூடவா அறிவு வேலை செய்யாது" தனக்குள் பொருபொருத்துக் கொண்டிருந்தவள் மணியைப் பார்த்தாள். ஒன்றடிக்கப் பத்து நிமிடம்! "பேய்கூட இந்த நேரத்தில உறங்கியிருக்கும்" முணுமுணுப்போடு குழந்தையை மெதுவாக நகர்த்திவிட்டு எழுந்தவள், கையை எட்டி விளக்கை அணைத்தாள். விளக்கை நிறுத்தியதும் ஒரு கணம் பேச்சு நின்றது, சுவிட்ச் போட்டதுபோல... இவள் மனதுக்குள் மகிழ்ந்துகொள்ள, ஓரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம்தான். பிறகு, இருட்டிலும் அவர்களின் கதை தொடர்ந்தது.

பிரஷர் குக்கர் கணக்காகக் கொதித்துப் போயிருந்த சுஜி ஒரு கட்டத்தில் வெடித்துவிட்டாள். "ஹலோ பிரண்ட்ஸ்," வலக்கையை ஊன்றிக்கொண்டு தலையை உயர்த்தி எல்லோரையும் அழைக்க, அவர்கள் இவளை அந்த இருட்டில் தேடி உற்றுப் பார்த்தார்கள். அப்போதுதான் அசந்திருந்த ஸ்ரீதர்கூட எழுந்துவிட்டான். அவன் கீழே குனிந்து என்னவென்று அவளைக் கேட்க, சுஜி எங்கே அவனைப் பார்த்தாள்!

'சிங்கமொன்று புறப்பட்டது' என்கிற பிஜிஎம் ஒன்றுதான் ஒலிக்கவில்லை. "இப்ப மணி என்ன தெரியுமா நண்பர்களே?" என்று கனமான குரலில் ஆரம்பித்தவள், "இப்படி நட்டநடு ராத்திரியில் பேசி அடுத்தவங்களை தொந்தரவு பண்றீங்களே? உங்களுக்கே கொஞ்சமாவது சரியா இருக்கா? தயவுசெஞ்சு அமைதியா அவங்கங்க சீட்ல செட்டில் ஆனீங்கன்னா ஒரு நாலு மணி நேரம் நல்லா தூங்கிக்கிறோம்... என் பொண்ணைப் பாருங்க. இந்த சத்தத்துல விலுக்கு விலுக்குன்னு முழிச்சுக்குறா... ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க.." தெளிவான ஆங்கிலத்தில் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டாள்.

இவள் நடத்திய கதாகாலேட்சபத்தில் அவர்கள் வாயடைத்துப் போனார்கள். பின்-டிராப் சைலன்ஸ். ஒரு நொடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், ஒன்றுமே சொல்லாமல் பெர்த்தில் ஏறிப் படுத்துவிட்டார்கள். ஒரு இளைஞன் மட்டும் 'சாரி மேடம்...' என்றான்.

சுஜிக்கு உள்ளம் பெருமையில் பூரித்துப்போனது. என்னவோ ஐநா சபைக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிபெற்றது போல அவள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஸ்ரீதரைப் பார்க்க, அவன் சிறு சிரிப்பும் பெரு முறைப்புமாக இவளைப் பார்த்தான். "ஏன் இப்படி?" தன் தலையில் அவன் அடித்துக்கொள்ள, "சும்மா இருங்க.. இவங்களுக்கு எல்லாம் இப்படி சொன்னாதான் புத்தி வரும்," உதட்டசைவில் பதில் கொடுத்துவிட்டுத் திரும்பி கண்களை மூடிக்கொண்டாள்.

"ஹப்பா.. நல்லா தூங்கணும்..." இப்போது அவளால் கண்களை மட்டும்தான் இறுக மூடிக்கொள்ள முடிந்தது. ஆனால் மனசு கொஞ்சநஞ்ச அலுப்பில் இருந்தும் விழித்துக் கொண்டதுபோல முழுதாக விழித்துக்கொண்டது. சில நிமிடங்களுக்கு முன்பு இருந்த வெற்றி மனநிலை எல்லாம் கீழேபோக, உள்ளமெங்கும் நசநசவென்று ஒரு உறுத்தல். அதற்குப் பிறகு ஒரு பொட்டுகூட அவள் தூங்கவில்லை.

காலை எழுந்து அவர்கள் முகத்தை பார்க்கவே இவள் கூச, அந்தப் பசங்கள் இயல்பாகத்தான் இருந்தார்கள். தூங்கி எழுந்த குழந்தைகளிடம் விளையாடினார்கள். ஸ்ரீதரிடம் சகஜமாகப் பேசினார்கள். பிளாட்ஃபாரத்தில் இறங்கி ஓடிச்சென்று உணவு வாங்கி வரும்போது ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டார்கள். "இதைக் கொஞ்சம் பாஸ் பண்ணுங்களேன்..." ஜன்னல் வழியே இவள் கையிலும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அடுத்த நாள் இவர்களுடைய ஸ்டேஷனில் இறங்கும்போது இவர்களது லக்கேஜ்களை இறக்கி வைத்துப் புன்னகையுடன் வழியனுப்பினார்கள்.

இவளுக்குத்தான் அந்த நாள் முழுக்க சகஜமாகவே இருக்கமுடியாமல் குற்ற உணர்வு குறுகுறுத்தது. அதற்குப் பிறகு கல்கத்தாவை அரைகுறையாக இவர்கள் சுற்றிப்பார்த்ததும், ஒரு வாரம் கழித்து சளி, காய்ச்சலுடன் ஊர் திரும்பியதும் தனிக்கதை.

இத்தனை வருடங்களில் எத்தனையோ ஊர்களுக்குச் சென்று வந்திருப்பார்கள். எத்தனையோ ரயில் பயணம் செய்து இருக்கிறார்கள். பிளாட்ஃபார்மில் இறங்கிவிட்டால் முடிந்துவிடும் ரயில்சிநேகம் என்று சொல்வார்கள், ஆனால் கல்கத்தா டூர் போனதுமட்டும் கல்வெட்டாக அவள் மனதில் பதிந்து போயிருந்தது. அந்தப் பிரயாணத்தை அவளால் மறக்கவே முடியாது.

சிறு சிரிப்புடன் தன் நினைவுகளில் அவள் ஆழ்ந்திருக்க, "என்னடி எங்கயோ போயிட்ட! எந்த லோகத்துல இருக்க?" கவி முழங்கையைச் சுரண்டினாள். "திடீர்னு என்ன யோசனை?" அவள் துளைத்ததில், அந்தப் பயணத்தைப் பற்றிக் கவியிடம் பகிர்ந்துகொண்டாள்.

"பார்த்தியா? அந்தமாதிரி கத்தினாதான் இதுங்கல்லாம் அடங்குங்க போல. நீ சும்மா இரு. நான் சொல்றேன்." அருகில் அமர்ந்திருந்த இளவட்டம், இல்லை, இல்லை, இடைஞ்சல் வட்டத்தை கடுமையாக முறைத்தபடி கவி எரிச்சலாக, "விடுடி... போயிட்டு போட்டும்" சுஜி மீண்டும் தடுத்தாள்.

"நீ இன்னிக்கு எப்படி கோபப்படுறியோ அதே மாதிரிதான் அன்னிக்கு நானும் பயங்கரமா டென்ஷன் ஆயிட்டேன். ஆஃப்டர் ஆல் ஒரு ராத்திரி தானேன்னு நான் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாம்.. படபடன்னு பேசிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் எனக்கு கொஞ்சங்கூட மனசு சரியில்ல. நான் அப்படி கத்திப் பேசினதுக்கு அந்தப் பசங்க மரியாதை இல்லாம எதிர்த்துப் பேசியிருந்தா எவ்வளவு அசிங்கமாயிருக்கும்?"

"நாங்க அப்படிதான் வருவோம். என்ன வேணா பண்ணிக்கோன்னு சொல்லியிருந்தாங்கன்னா ரொம்ப அவமானமா போயிருக்கும். டிடிஆர், வாய் சண்டைன்னு வளர்ந்து பெரிய களேபரம் நடந்திருந்தாலும் ஆச்சர்யம் இல்ல. ஆனா அந்த மாதிரியெல்லாம் எதுவுமே பேசாம, ஒரு வார்த்தைகூட பதிலுக்கு ஆர்க்யு பண்ணாம, உடனே அமைதியானது எனக்கு ரொம்ப உறுத்தலாப் போச்சு.. ஸ்ரீதர்கிட்ட சொல்லி புலம்பினா அவரும் என்னைதான் திட்டிவிட்டாரு. 'என்னதான் அவங்க பேசிட்டே வந்தது நியுசென்ஸா இருந்தாலும், நீ அப்படி கத்திருக்கக்கூடாது. பாவம், சின்னப் பசங்கதானேன்னு உனக்கு பொறுமை இல்லையா'ன்னு. எனக்கு சரியான கோபம். முதல்ல அவருகிட்டயும் சண்டை தான் போட்டேன்."

"அதுக்கப்புறம் யோசிச்சுப் பாத்தப்ப, கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாமேன்னு தோணிச்சு. காலேஜ் முடிச்சு வீட்டுக்குப் போற பசங்க. எல்லாரும் ஒண்ணா இருக்கிற அந்த ஜர்னியை நல்லா என்ஜாய் பண்ணனும்னு நினைச்சிருப்பாங்க. அதுக்கப்புறம் அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியுமோ இல்லையோ. நான் அப்படி ரியாக்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னும் கொஞ்சநேரம் ஜாலியா பேசியிருப்பாங்க. நான் லூசுமாதிரி கோபத்துல கத்திட்டேன். நான் பண்பா, அமைதியான குரல்ல சொல்லியிருக்கலாம். அவங்களும் கேட்டு இருந்துருப்பாங்க."

"அந்தப் பசங்களுடைய ப்ரெஷியஸ் மொமொன்டை ஸ்பாயில் பண்ணின மாதிரி ஒரு உணர்வு. அதை நினைச்சு ரொம்பநாள் வருத்தப்பட்டு இருக்கேன்.. அதனாலதானோ என்னவோ, எப்போ இந்தமாதிரி காலேஜ் ஸ்டூடன்ட்ஸை ஒண்ணாப் பாத்தாலும், அதுதான் எனக்கு ஞாபகம் வரும்."

'இதற்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா?' என்கிற மாதிரி கவி பார்த்துக் கொண்டிருந்தாள். "நீயே பாரு... ஸ்கூல், காலேஜ்னு இருக்கிற வரைக்கும்தான் நம்மளால சுதந்திரமா இருக்க முடிஞ்சுது. நினைச்சப்ப பார்த்துக்கிட்டு, நினைச்சப்ப பேசிக்கிட்டுன்னு.. எப்ப வேணும்னாலும் வானத்தில பறந்து டான்ஸ் ஆடிட்டு போற வானம்பாடி மாதிரி. அதுக்கப்புறம் எங்க? நம்மளையே எடுத்துக்க, ஒரே ஊர்ல இருக்கோம்னுதான் பேரு. எப்பயோ ஒரு தடவை அத்தி பூத்த மாதிரி பார்த்துகிட்டாத்தான் உண்டு. வானம்பாடி கூட தனக்குன்னு ஒரு கூடு கட்டி அதுக்குள்ள தன்னை அடைச்சுக்கிற வரைக்கும் தான் டான்ஸ் ஆடுமோ என்னவோ! அந்தமாதிரி தானே கவி இந்த பசங்களும். இவங்க சந்தோசத்தை நாம ஏன் கெடுக்கணும்?"

சுஜி சொல்லச் சொல்ல, கவி பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். "ஆமா சுஜி. நீ சொல்லுறது ரொம்ப கரெக்ட். இந்த வயசுலதானே எந்தச் சுமையும் கவலையும் இல்லாம இருக்கமுடியும்? அப்புறம் நாள் ஆக ஆக, வேலை, கல்யாணம், குடும்பம்னு பாவம், இதுங்களும் பொதி சுமக்கத்தான் போகுதுங்க..." உணர்ந்து சொன்ன கவி பக்கத்திலிருந்த இளவட்டத்தைத் திரும்பிப் பார்த்தாள், இப்போது கண்களில் வாஞ்சையுடனும், சொல்ல விளங்கா பாசத்துடனும்.

"இதுங்களோட பேச்சையும் சிரிப்பையும் பார்த்தாலே நமக்கும் நாலு வயசு குறைஞ்சு போயிடும் போல இருக்கு, சுஜி... விடு, ஒருநாள் தூக்கம் கெட்டா ஒண்ணும் தப்பில்ல. நாமளும் கோயம்புத்தூர் வரைக்கும் அரட்டை அடிச்சிக்கிட்டே போலாம். எத்தனை வருஷத்து கதை இருக்கு" அவள் சுஜி பக்கம் திரும்பி அமர, சுஜியும் தனது கல்லூரிக் காலத்துக்கே திரும்பினாள்.

ஹேமா,
யூடா
More

போன்சாய்
Share: 
© Copyright 2020 Tamilonline