"எனக்கு என்னமோ பயமா இருக்குடா... 9/11 அந்த நாட்டுல நடந்து ஒரு வருஷம்கூட ஆகல, எங்கம்மா வேற எனக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாய்டுச்சுன்னு சொல்றாங்க. வெளிநாட்டு போலீஸ் அடியெல்லாம் வாங்கற அளவுக்கு எனக்கு சக்தி இல்லடா. நீ எடுத்த வீடியோ கேசட்ட பத்தரமா வெச்சுக்கோ. நம்ம அங்க போனவுடனே அவங்ககிட்ட போட்டு காமிச்சு நாம அப்பாவிங்கன்னு புரியவைக்கணும்" என்று இருவரும் தங்களை சிறை செல்லாமல் தப்பிக்கப் பலவித மாஸ்டர்பிளான்களைப் போட்டவாறு விடுமுறையைக் கழித்தனர். அந்த விடுமுறை அவர்களது வாழ்நாளில் வெகுநீண்டவிடுமுறையாக உணர்ந்தனர். நாள் ஒரு குழப்பமும் பொழுதொரு பீதியுமாய் அவர்களது 2012 விடுமுறை ஓடியது.
அவர்கள் இப்படிப் பரிதவிக்க என்ன காரணம்? சற்று முன்னே சென்று அலபாமாவில் சில வாரங்கள்ளுக்கு முந்தைய நிகழ்வுகளை அலசுவோம்!
*****
*** FBI வருவதற்கு 2 வாரம் முன்பாக ***
மாதவனின் அண்டைவீட்டில் வசிக்கும் அவனது மலேசிய நண்பன் வீரபத்ரன் ஒரு கேரக்டர். யாரும் பண்ணக்கூடாத செயல்களைச் செய்வதில் அவனுக்கு ஒரு அற்பசந்தோஷம். ஒருநாள் அவன் அலபாமா காட்டுப் பகுதிகளில் காரை ஓட்டிச்செல்ல, அங்கு ஒரு பெரிய மான் ஒன்று அடிபட்டு ரோட்டோரம் கிடந்தது. அவனும் அவன் நண்பர்களும் தாமே வேட்டையாடியது போல் அதன்முன் ஃபோட்டோ எடுக்கத் தொடங்கினர். பின்னணியில் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அணுசக்தித் தொழிற்சாலையைக் கவனிக்காதது அவர்கள் குற்றமில்லை! அங்கிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் பைனாகுலர்களை அவர்கள்மீது ஃபோகஸ் பண்ணத்துவங்கினர். அவர்கள் பார்வைக்கு யாரோ இரண்டு தீவிரவாதிகள் அவர்களது அணுசக்தி பவர்ப்ளாண்ட்டை விதவிதமாகப் போட்டோ எடுப்பது போலவே தோன்றியது. பறந்தன கால்கள் போலிசுக்கு. அன்றைக்கு வீரபத்ரன் எடுத்துச்சென்ற கார் மாதவனுடையது!
*** FBI வருவதற்கு 10 நாட்கள் முன்பாக ***
மாதவன் விடிய விடியக் கால்கடுக்க நின்று தாங்க்ஸ்கிவிங்கில் வாங்கிய கேம்கார்டரை உபயோகித்தே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான். மறுநாள் காலை 10 மணிக்கு ஃப்ளைட் பிடித்தாக வேண்டும். நண்பர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தானும் தன் தாந்தோணி நண்பர்களுமாய் சேர்த்து தெருத்தெருவாய் அந்த ஊரைக் கேம்கார்டரில் பதிவு செய்யத் துவங்கினர்.
"டேய், அந்த பெரிய ரெண்டு டவரை எடுடா... இந்தப் பக்கம் இருக்கற மாலை எடுக்காம வுட்டுடாத. எங்க வீட்ல யாருமே அமரிக்கா பார்த்ததில்ல. இதப் போட்டுக் காட்டி அவங்கள அசத்திடனும்" என்று நகரிலுள்ள அனைத்து அதி முக்கிய அம்சங்களையும் ஒன்றுவிடாமல் படம்பிடித்தனர். வீடு திரும்பும்போது மணி விடிகாலை 3. இவர்கள் ஊர் சுற்றிய நேரம் முழுக்க ஒரு போலிஸ் கார் அவர்களைப் பின்தொடர்ந்ததை அவர்கள் கவனிக்கவில்லை!
*** FBI வருவதற்கு 5 நாட்கள் முன்பாக ***
அடுத்த அத்தியாயம் இவர்கள் அந்தச் சின்ன ஏர்போர்ட்டில் அடித்த லூட்டி. மாதவனையும் சகாயத்தையும் வழியனுப்பச் சுமார் 40 பேர் கிளம்பிவந்தனர். எல்லார் கையிலும் புதிய டிஜிட்டல் கேமரா. அந்த ஏர்போர்ட்டை டிசைன் செய்த இஞ்சினியரைவிட பலவிதமான ஆங்கிள்களில் ஃபோட்டோகளை எடுத்தனர். அவர்கள் பேட்ச்சில் முதல் இரண்டு டிக்கெட்டுகள் இந்தியா செல்வதை ஒரு திருவிழாபோல் கொண்டாடினர். கேட்கவே வேண்டாம் - ஏர்போர்டில் இருந்த அனைவரது கவனத்தையும் இந்த கும்பல் கவர்ந்தது. "Officer, I am very suspicious about the happenings in the airport. I feel for my safety" என்று ஒரு 80 வயதுப் பாட்டி சந்தேகத்தைக் கிளப்ப, அந்தச் சின்ன ஊர் போலிசுக்கு சுமார் 20 கால்கள் அலபாமாவாசிகளிடமிருந்து பதட்டத்துடன் பறந்தன.
இதுவரை பிக்பாகெட், சிறு கொள்ளை போன்ற சில்லறை கேஸ்களையே பார்த்திருந்த அலபாமா போலிசுக்கு இது என்னமோ பெரிய லெவலில் பிளான் பண்ணுகிறமாதிரி தோன்றியது. நகரின் முக்கிய அடையாளங்கள், நியூக்ளியர் பவர் பிளான்ட் மற்றும் ஏர்போர்ட்டை விதவிதமாக ஃபோட்டோ எடுத்தவர்களை, அவர்கள் இதுவரை கண்டதில்லை. அதுவும் எல்லாம் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து நடப்பதை உணர்ந்து, 'இது என்னடா நம்ம சின்ன ஊருக்கு வந்த சோதனை' என்ற ரீதியில் தங்களது முதன்மை அதிகாரியிடம் ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர்.
அலபாமா போலீஸ் என்னமோ அல் கொய்தாவைப் பிடிப்பதைப்போல் பெருமிதத்தில் மிதந்தனர். அவர்கள் வியூகம் அமைத்திருப்பது அற்ப அமிஞ்சிக்கரை வாசிகளுக்கு என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அலபாமா போலீஸ் ஃபாலோ பண்ணும் இந்த அயனாவரம் அல்கொய்தா கும்பல் அவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்டமையால், அந்தக் 'கேஸை' FBI இடம் ஒப்படைத்தனர்.
FBIயும் அமெரிக்காவை மற்றொரு தாக்குதலில் இருந்து காப்பாற்ற தனது படையுடன் 'ஹரி' பட சுமோக்களைப்போல் கார்களில் மாதவனின் வீட்டில் களமிறங்கின.
*****
விசாரிக்கத் துவங்கின ஐந்தாவது நிமிடத்திலேயே இவர்கள் அல் கொய்தா அல்ல, அற்பப் பதர்கள்; பாம் வைப்பவர்கள் அல்ல, பாவப்பட்ட ஜந்துக்கள்; பயங்கரமானவர்கள் அல்ல, பவ்யமான மாணவர்கள் போன்ற விஷயங்கள் FBIக்கு புலப்பட்டு, தங்கள் நேரத்தை வீணடித்த அலபாமா போலிஸ் டிபார்ட்மண்டுக்கு டோஸ் விட்டது வேறு ஒரு கதை.
மாதவனையும் அவனது கும்பலையும் தங்களது டைரி குறிப்பிலிருந்து டக்கென்று நீக்கிவிட்டனர்!
ராமா கார்த்திகேயன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா