Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
நூல் தானம்
விசிறிவாழை
சாக்கடைப் பணம்
தோப்பாகும் தனி மரம்
- மாலதி தர்மலிங்கம்|ஏப்ரல் 2015|
Share:
கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்.


என்று பாடியவாறே முருகனை வேண்டித் திருநீறு அணிந்து அத்தைக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கி மாதினியாள் விரைந்தாள். தினமும் அத்தையிடம் கந்தசஷ்டி கவசம் படித்துக்காட்ட வேலைக்குப் போகுமுன் மருத்துவமனைக்குச் செல்வாள் மாதினியாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. அத்தையைக் காண மருத்துவமனைக்குச் சென்ற அவள், தன் அத்தையின் அருகே சக்கர நாற்காலியில் அமர்ந்த வயதான மாது ஒருவரைக் கண்டாள். "எப்படி இருக்கீங்க அத்தை?" என்ற மாதினியாளின் கேள்விக்கு, "என்னமோ தெரியல. நாளுக்கு நாள் உடம்பு மோசமாயிகிட்டே இருக்குற மாதிரி இருக்கு" என்று பதிலளித்தார்.

"அதெல்லாம் நீங்க நல்லாயிடுவீங்க" என்று திருநீறு பூசிவிட்டபின் கவசத்தைப் பாடத் தொடங்கினாள் மாதினியாள். படித்து முடித்ததும் அத்தை தன் பக்கத்தறை புதுத்தோழியை மாதினியாளுக்கு அறிமுகப்படுத்தினார். "மாதி, இவங்க பேரு மணி. ஆறு மாசமா இங்கதான் இருக்காங்களாம். அம்மா, நீங்க உங்க கதைய இவகிட்ட சொல்லுங்க. உதவி ஏதாவது செய்வா" என்று அவர்களை அறிமுகம் செய்துவைத்தார் அத்தை. "ம்ம்ம்.சொல்லுங்க ஆண்ட்டி. ஆறு மாசமா மருத்துவமனையில் இருக்கீங்கனு சொல்றீங்க. உங்கள பார்க்க யாருமே வரலையே. ஏன் ஆண்ட்டி?" என்று கேட்டாள் மாதினியாள்.

கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கிய அவர், "என் பேரு மணி. எனக்கு ஒரு பொண்ணும்மா. எங்க வீடு பத்துமலையிலே இருக்கு. இங்க எனக்கு யாரையும் தெரியாது. அதான் யாரும் வந்து என்னைப் பார்க்கல" என்று கூறினார். அதிர்ந்து போனாள் மாதினியாள். "பத்துமலையா? இங்கிருந்து ஏறக்குறைய 250 கிலோமீட்டர் இருக்குமே? நீங்க எப்படி இந்த மருத்துமனைக்கு வந்தீங்க? உங்க பொண்ணுக்குத் தெரியுமா நீங்க இங்க இருப்பது?" என்று மாதினியாள் கேட்டாள்.

"எம் பொண்ணுக்கு நான் இங்க இருப்பது தெரியாதுமா. நான் பத்துமலையிலே ஒரு வீட்டுல வேல செஞ்சிகிட்டு இருந்தேன். ஒரு நாளு வேலைக்குப் போக பஸ் ஸ்டாப்பில் நானும் என் கூட்டாளியும் நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ வேன்ல வந்த என் கூட்டாளியோட கூட்டாளி, ஒரு கட்டடத்த சுத்தம் செய்ற சின்ன வேல ஈப்போல இருக்கு (ஏறக்குறைய 200 கிலோ மீட்டர் தூரம்) 300 வெள்ளி கொடுப்போம். இன்றைக்கே திரும்பிடலாம். இன்னும் எங்களுக்கு ரெண்டு பேர் வேணும், வரீங்களான்னு கேட்டான். ஒரு நாளைக்கு 300 வெள்ளி கிடைக்குதே. அதான் இன்னைக்கே வீட்டுக்குத் திரும்பிடலாமே. என்ற நம்பிக்கையில நானும் என் கூட்டாளியும் அவனோட கிளம்பினோம். ஈப்போவில வேல முடிஞ்சதும் எங்கள அவன் வீட்டுக்கு அனுப்பல. ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டு போய் இன்னும் ஒருவாரம் கழிச்சுதான் பத்துமலைக்குப் போவோம், அதுவரை இங்கேயே இருங்கனு சொல்லிட்டான். நான் பொண்ணுக்கிட்ட சொல்லாம வந்துட்டோமேனு நினைச்சி எப்படியாவது தப்பிச்சு வீட்டுக்குப் போய்டலாம்னு ஜன்னல் வழியே குதிச்சேன். குதிச்ச வேகத்திலே என் கால் எலும்பு ஒடஞ்சிடுச்சி. என் பத்துமலையில் இருந்து கூட்டிட்டு வந்தவன் என்னைக் கொண்டு போய் ஈப்போ மருத்துவமனையில் சேர்த்துட்டான். சேர்த்தவன் என்னை வந்து பார்க்கவேயில்லை. ரொம்ப நாளா அங்கேயே இருந்தேன். என்னை யாரும் வந்து கூட்டிட்டு போகாததால என்னை இந்த மருத்துவமனைக்கு அனுப்பிட்டாங்க. இதாம்மா நடந்தது. அம்மா, என்னை எப்படியாவது என் பொண்ணுகூட சேர்த்து வச்சுடுமா" என்று முடித்தார் மணி ஆண்ட்டி.

"என்ன கதை இது, நம்பும்படி இல்லையே. வேலக்கு போனாங்களாம். அப்புறம் யாரோ ஏமாத்தி அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்களாம். அப்புறம் தப்பிக்கும்போது கால் உடஞ்சிடுச்சாமே. இந்த ஆண்ட்டி சொல்றது உண்மையா இருக்குமோ. எனக்கென்னவோ குடும்பத்தில் பிரச்சனை வேண்டாமுனு பெத்த பொண்ணே மருத்துவமனைக்கு அனுப்பிடுச்சோனு இருக்கு. பார்க்கவும் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாத மாதிரிதான் இருக்கு" என்று மனதுக்குள் மணி ஆண்ட்டியைப்பற்றி தவறாகவே எண்ணத் தோன்றியது மாதினியாளுக்கு. "ஏதாவது செய்யேன் மாதி" என்ற அத்தையைப் பார்த்தவாறே "சரி ஆண்ட்டி. உங்க அடையாள அட்டையைக் கொடுங்க. அதுல முகவரி இருக்கும். அதை வைச்சி ஏதாவது செய்ய முடியுதானு பார்ப்போம்" என்றாள் மாதினி.
ஆண்ட்டி கொடுத்த அடையாள அட்டையைப் பார்த்த மாதினியாளுக்கு மீண்டும் அதிர்ச்சி. ஓர் ஆணுடைய அடையாள அட்டை மணி ஆண்ட்டி வைத்திருந்தார்., "இந்த ஆண்ட்டி ஏன் ஒரு ஆணோட அடையாள அட்டையை வைத்துள்ளார்? கணவருடையதோ? ம்ம்ம்ம். கண்டிப்பா இவங்க கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவங்கதான் போலிருக்கு. கணவருடைய அடையாள அட்டையை வைத்திருக்கிறாரோ? சரி, நமக்கு வேண்டியது முகவரிதானே அதைமட்டும் எழுதிக்கொள்வோம்" என்று எண்ணியவாறு அதிலிருந்த முகவரியை எழுதிகொண்டாள்.

சிறிதுநேரம் அத்தையுடன் அரட்டை அடித்தபின் மாதினி வீடு திரும்பினாள். மணி ஆண்ட்டியின் ஞாபகம் வந்தது. உடனே, பத்துமலையில் வசிக்கும் தன் தோழன் செல்வனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மணி ஆண்ட்டியின் முகவரியைக் கொடுத்து விசாரிக்கக் கூறினாள். அன்று மாலை செல்வன் மணி ஆண்ட்டி கூறியது உண்மைதான் என்றும் ஆண்ட்டியின் மகள் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும், மாதினியின் தொலைபேசி எண்ணை ஆண்ட்டி மகளிடம் தந்துவிட்டதாகவும் கூறினான். மாதினியாள் தன் தோழனுக்கு நன்றி தெரிவித்தபின் மணி ஆண்ட்டி மகளின் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

சற்று நேரத்தில் மணி ஆண்ட்டியின் மகள் கூப்பிட்டார். அவரின் கரகரப்பான குரல் அழுது முடித்ததைப் பறைசாற்றியது. தன் முகவரியைத் தந்த மாதினி மறுநாள் அவருக்காக காத்திருந்தாள். அதிகாலையிலேயே ஆண்ட்டி மகளின் அழைப்பு அவரின் அன்பைக் காட்டியது. மருத்துவமனையின் வாயிலில் காத்திருந்த மணி ஆண்ட்டி மகளையும் அவர் குடும்பத்தினரையும் ஆண்ட்டியைக் காண அழைத்துச் சென்றாள் மாதினி.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த மணி ஆண்ட்டியை, "பாட்டி!" என்றழைத்தவாறு இறுகக் கட்டிக்கொண்டாள் அவரது பேத்தி. அங்கே யாருக்குமே பேச நா எழவில்லை. கண்ணீர் போராட்டத்திற்குப் பிறகு மணி ஆண்ட்டியின் மகள், "ஏம்மா. இப்படி செஞ்சே? உங்களுக்கு நாங்க என்ன குறை வச்சோம்? எதுக்கு நீங்க 250 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலைக்குப் போகணும்? இப்படி கால ஒடச்சிக்கிட்டு யாரும் இல்லாத அனாதை மாதிரி இங்க கிடக்கணும்? யாரும்மா உன் முடிய இப்படி ஆம்பிள மாதிரி வெட்டுனது?" என்று தனது ஆற்றாமையை வெளியிட்டார்.

"அம்மா. பாட்டி கால சாமி ஒடச்சிடுச்சி. இனிமே நம்பள விட்டு பாட்டி எங்கும் போகமுடியாது" என்று கூறி மகிழ்ந்தாள் பேத்தி. ஆண்ட்டிக்குப் பேச முடியவில்லை. மாதினியாளின் கையைப் பிடித்தவர் விடவே இல்லை. "தாயீ. நீ யாரு பெத்த பிள்ளையோ. உன் குடும்பத்தோட நீ ஆயுசு முழுக்க இருக்கணும். அனாதையா கிடந்த என்னை என் குடும்பத்தோட சேர்த்த புண்ணியம் உனக்கு ஏழு ஜென்மத்துக்கும் இருக்கும்" என்று நா தழுதழுக்கக் கூறினார். மணி ஆண்ட்டியின் மகளும் மருத்துவமனைப் பத்திரங்களில் கையொப்பமிட்டு அவரை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.

மணி ஆண்ட்டியின் மகளைத் தனியே அழைத்த மாதினி, "உங்க அம்மாவைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்த பின்னும் அவங்க ஏன் உங்க அம்மாவைத் தேடல? உங்க அம்மா வேற கையில யாரோ ஓர் ஆணோட அடையாள அட்டைய வச்சிக்கிட்டு இருக்காங்க? இப்படி மத்தவங்க அடையாள அட்டையை வச்சிக்கிட்டு இருப்பது தப்பு. தயவுசெய்து அந்த அடையாள அட்டையைக் காவல் நிலையத்தில் கொடுத்திடுங்க, சரியா?" என்று கூறினாள்.

ஆண்ட்டியின் மகள், "அக்கா, ரொம்ப நாளா நாங்க மறந்திருந்த ஒரு விஷயத்தை நீங்க ஞாபகப்படுத்திட்டிங்க. நீங்க சொல்றமாதிரி அது யாரோடையோ அடையாள அட்டை இல்ல. அது அவுங்களோடதுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா? நீங்க நினைக்கிறது சரிதான். அவுங்க உண்மையா பெண்ணில்லாமல் இருக்கலாம். ஆனா, என்னை அவசர உறவின் காரணமாக பெற்றுவிட்டுப் பின் குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்ற தாய் என்ற பேயைவிட நிச்சயம் இவுங்க நல்லவங்கதான். குப்பைத்தொட்டியில் இருந்து என்னை எடுத்து வளர்த்திருக்காங்க. குழந்தையில் இருந்தே அவங்கள நான் இப்படிதான் பார்த்தேன். அவுங்க உண்மைப் பெயர்கூட மறந்து போச்சு. அதனால காவல்நிலையத்தில்கூட அவுங்களோட மணி என்ற பெயரைத்தான் கொடுத்திருந்தேன். ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்திருப்பார்கள் காவல் அதிகாரிகள். பெயரளவில் மட்டும் ஆணாக இருக்கும் என் அம்மா ரொம்ப நல்லவங்க. ஒரு ஆணுக்குப் பெண் உணர்வு அதிகமாகி, அந்த உணர்வுசெய்த கோளாறினால் என் "அம்மாவை" அவுங்க குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் ஒருவகை ஊனம்தான். குரோமோசம் செய்த கோளாறின் காரணமாக ஏற்படுகின்ற ஊனம். யார் அவங்கள ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நானும் என் கணவரும் பிள்ளைகளும் நிச்சயம் கைவிடமாட்டோம். குப்பையில் கிடந்த என்னை எடுத்து, வளர்த்து, படிக்க வச்சி, சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்படி ஒரு வாழ்க்கைத் துணையையும் திருமணம் செஞ்சு வச்சி அனாதையான எனக்கும் ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த என் அம்மா எனக்கு நிச்சயம் தெய்வம்தான்" என்று கூறி முடித்தபோது மாதினியாளுக்கு, திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த அம்மையப்பராகத்தான் 'மணி ஆண்ட்டி' காட்சியளித்தார்.

மாலதி தர்மலிங்கம்
More

நூல் தானம்
விசிறிவாழை
சாக்கடைப் பணம்
Share: 




© Copyright 2020 Tamilonline