நெஞ்சத்துக் கோடாமை
|
|
|
|
|
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள்.
"ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள். அப்படியே ஓடிவிடலாமா என்ற அளவிற்கு வெட்கம் தின்றது சௌம்யாவை.
"ஊஹூ" என்று விசில் அடித்து அனைவரும் கிண்டல் செய்தனர்.
"சூப்பரா இருக்கு அம்மா" என்ற சானவி, சௌம்யாவின் ஒன்பது வயதுப் பெண்.
"ரொம்ப க்யூட்டா இருக்கும்மா" இது சௌம்யாவின் ஆறு வயதுப் பையன் ஹரி.
"காலேஜ் பொண்ணு மாதிரி இருக்கு" என்று கேலி செய்தார் கணவர் ராகவன்.
அப்படி என்னதான் செய்தாள் சௌம்யா? எல்லாம் ஒரு பத்துநாள் முன்னாடி ஆரம்பிச்சது. ராகவன்தான் கேட்டார், "ஹே சௌமி, இந்த வருஷம் உன் பர்த்டேக்கு என்ன பண்ணலாம்?"
"ஒண்ணும் வேண்டாம்."
"ஹே இரு. இது உனக்கு முப்பதாவது பர்த்டே இல்ல, ரொம்ப ஸ்பெஷல்!"
"முப்பது வயசு ஆச்சேன்னு எனக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. நீங்க வேற..."
"ஏதாவது வாங்கிக்கோயேன். என்ன வேணும், சொல்லு வாங்கித் தரேன்".
ராகவனின் கேள்விக்கு ரொம்ப நேரம் அமைதியாக இருந்துவிட்டு அப்புறம் சௌம்யா, "எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை" என்றாள்.
"சொல்லு, ஜமாய்ச்சுடலாம்!"
"சின்ன வயசுலேந்து எனக்கு அந்த ஆசை உண்டு. அம்மா, பாட்டி எல்லோரும் திட்டுவாளேன்னு நான் பண்ணிண்டதில்லை."
"ஐயோ இதென்ன இவ்ளோ பெரிய பீடிகை?".
ரொம்ப மெதுவாக சௌம்யா தான் ஆசைப்படறதைச் சொல்ல, "ப்பூ இவ்ளோதானா. தாராளமா பண்ணிக்கோ. நன்னா இருக்கும் உனக்கு."
"நிஜமாவா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் சௌம்யா. நீங்க கல்யாணம் ஆன புதுசுல இப்படி இருந்தாதான் பிடிக்கும்னு சொல்லல?" |
|
"அதெல்லாம் பத்து வருஷம் முன்னாடி. ஒரு தடவை பண்ணிக்கோ எப்படி இருக்குன்னு பார்க்கலாம். பிடிக்கலன்னா அடுத்த தடவை பண்ண வேண்டாம். இப்ப போய் பண்ணிக்கோ" பத்து நாளா ரொம்ப யோசித்து யோசித்து, சானவி, ஹரி கூட "பண்ணிக்கோம்மான்னு" நச்சரிக்க, சரின்னு இன்னிக்கு தைரியமா போய் பண்ணிக்கொண்டு வந்து நின்றாள் சௌம்யா.
எல்லோரும் சூப்பர் சூப்பர்னு சொல்ல, வேகமாக பாத்ரூம் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ள ஓடினாள் சௌம்யா. கண்ணாடியில் பாப் செய்து கத்தரித்த தனது புதிய தோற்றத்தைக் கண்டு ஓவென்று அழத் தொடங்கினாள்.
பின்னாடி வந்த ராகவன், "அடச்சீ என்ன குழந்தை மாதிரி!"
"என்னோட நீளத் தலைமுடி போய்டுத்தே. அம்மா பாட்டி எல்லாம் பார்த்தா திட்டுவாளே. நம்ம கல்யாணத்தப்ப கூட நீங்க சொன்னேள், உங்களுக்கு நீளப்பின்னல்தான் பிடிக்கும்னு. கல்யாணத்தன்னிக்கு நான் சவுரிகூட வெச்சுக்கல. இடுப்புவரைக்கும் வந்த குஞ்சலம் என்னோட அடர்த்தியான பின்னல்தான். பாட்டி சீயக்காய் போட்டு தேச்சுத் தேச்சு குளிப்பாட்டுவா. என்ன பாத்தா திட்டப் போறா" என்று புலம்பியபடி ஓவென்று அழுதாள் சௌம்யா.
"அடச்சீ சௌம்யா, நீயே ரெண்டு பேருக்கு அம்மா. இன்னும் பாட்டிக்கு, அம்மாக்கு பயப்படாதே. கல்யாணமாகி, அமெரிக்கா வந்து பத்து வருஷம் ஆச்சு, இந்த ஊர் பொம்மனாட்டி எல்லாம் என்னென்னவோ பண்ணிக்கறா. ஒரு பாப் கட் பண்ணதுக்கு ஏன் இப்படி பயப்படற? பிடிக்கலன்னா திருப்பி வளர்த்துக்கோ. எனக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப க்யூட்டா இருக்கு" என்று சமாதானம் சொன்னார் ராகவன்.
*****
இதோ ஒரு மாசம் ஆச்சு. பாட்டி, அம்மா வெப் சாட் வரச் சொல்லும் போதெல்லாம் ஏதேதோ வேலை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாள். அதற்குள் அவளுடைய பாப் கட் அவளுக்கே பிடித்து, பழகிப் போனது. இந்த மாற்றம் அழகானதுபோல் தெரிந்தது. இருந்தாலும் பாட்டி, அம்மாவிடம் மறைப்பது குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்று மதியம் சானவியின் பிரெண்ட் வீட்டில் ஒரு பர்த்டே பார்ட்டி இருக்கவே, அவளைக் கூட்டிக்கொண்டு சௌம்யா சென்றாள். பிறந்தநாள் கொண்டாடும் பெண் திடீரென்று தன்னுடைய தலைமுடியை நிறம் மாற்றி டை செய்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் தாயார், "இவர்கள் கிளாஸ்ல இது ஒரு புதுப் பழக்கம் இப்போ. எல்லோரும் பத்தாவது பர்த்டேக்கு கலர்கலரா டை பண்ணிக்கறது. இதெல்லாம் செய்யாதேன்னு சொன்னாலும் கேக்கறதில்லை" என்றாள்.
உள்ளே சானவி பேசிக்கொண்டு இருந்தாள். "ஹே திஸ் இஸ் கூல் யா. ஐ லைக் யுவர் கலர். நான்கூட ப்ளூ கலர் பண்ணிக்கப் போறேன்." "ப்ளூ வில் லுக் குட் ஃபார் யு. எங்கம்மா பிரவுன் கலர் வேண்டாம்னு ஒரே படுத்தல். வில் யுவர் மாம் பி ஓகே ஃபார் ப்ளூ?" "எங்கம்மாகூட, ஷி கட் ஹர் ஹேர். கொஞ்ச நாளைக்கு என்னோட ப்ளூ ஹேர் பிடிக்காது. அப்புறம் ஷி ஹாஸ் டு பி ஓகே. எங்கம்மாவே எங்க பாட்டிகிட்டே ஏமாத்தித் திருட்டுத்தனம் பண்றா. நானும் கொஞ்சம் திருட்டுத்தனமா கலர் பண்ணிட்டு அப்புறமா சொல்லப்போறேன்."
அந்தப் பக்கம் நடந்த சௌம்யாவின் காதில் எல்லாம் தெளிவாக விழுந்தது. வீட்டிற்கு சானவியுடன் அமைதியாக திரும்பிய சௌம்யா, நேராக வெப் சாட் லாகின் செய்தாள். ஊருக்கு ஃபோன் செய்தாள். "சௌமி குட்டி எப்படி இருக்க?" என்று திரையில் தெரிந்த பாட்டி, அம்மா அனைவரிடமும் "ரொம்ப நாளா ஆசையா இருந்ததுன்னு நான் என்னோட ஹேர் கட் பண்ணிண்டேன். அதை இத்தனை நாளா உங்ககிட்ட மறைச்சது தப்புதான். சாரி” என்று சானவியின் முன்னாலேயே மன்னிப்புக் கேட்டாள் சௌம்யா.
லக்ஷ்மி சுப்பிரமணியன், மின்னசோடா |
|
|
More
நெஞ்சத்துக் கோடாமை
|
|
|
|
|
|
|