|
|
என் பிரியமுள்ள அம்மாவுக்கு,
அன்பு மகள் எழுதுகிறேன். அப்பா எப்படி இருக்கிறார்? பாவம்... நான் கடைசியா பார்த்தபோது பலஹீனமா இருந்தார்... எல்லாம் என்னால்தான்... என் கல்யாணத்துக்கு கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் திணறிண்டு இருக்காரு... என்பதை நினைக்கையில் எனக்கு என்னவோ செய்கிறது.
அம்மா இந்த கடிதம் எழுத நான் பட்டபாடு கடவுளுக்குத்தான் தெரியும். ராத்திரி எல்லோ ரும் தூங்கின பிற்பாடு பயந்து பயந்து எழுதினது. அதுவும் எல்லா வீட்டு வேலைகளையும் முடிச்ச பிறகுதான் இதை எழுதவே செய்கிறேன். நான் தினமும் வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கவே 12 மணி ஆயிடும்!
அம்மா உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
என் மர மண்டைக்கு படிப்பே ஏறலே... எனக்குப் படிக்க வேண்டும் என்கிற அக்கரையும் இல்லை. எனக்குப் படிப்பு சொல்லித்தர நீ பட்ட கஷ்டத்தை இந்த ஒரு கடிதத்தில் சொல்லி மாளாது. படிப்பை விடு! ஆனால் நீ என்னை கட்டாயப்படுத்தி வித விதமா சமையல் பண்ணக் கத்துக் கொடுத்தியே அது ஞாபகமிருக்கிறதா? நானும் அந்த நேரத்திலே உன்னை திட்டிண்டே சமையல் கத்துண்டேன். அம்மா... நீ கத்துக் கொடுத்த அந்த சமையல் கலை தான் இப்போது என்னை காப்பாத்திண்டு வர்றது...
எப்படின்னு கேக்கறயா?
அம்மா, உனக்குத்தான் நல்லாத் தெரியுமே... என் கணவரோட அண்ணன் மனைவி கமலா ஒரு டாக்டருன்னு... ஒரு துரும்பகூட அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ நகர்த்திக்கூட வைக்கமாட்டா! ஏன்? எங்க மாமனார் மாமியாரைக்கூட மதிக்கமாட்டா! என்கிட்டே முகம் கொடுத்து பேசமாட்டா காரியம் இருந்தால் ஒழிய!
என் கணவர் என்னை காதலிச்சு நாம ஏழையா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒத்தக்கால்ல நின்று என்னைக் கல்யாணம் பண்ணின்டவர்தான்.
நீயும் அப்பாவும், "அவங்க பெரிய பணக் காரங்க... நமக்கு இதெல்லாம் ஒத்து வருமா. இந்தக் கல்யாணம் வேண்டாம்னு" என்னிடம் செல்லிப் பார்த்தீங்க.. |
|
ஆனால் வழக்கம் போல இந்த மரமண்டைக்கு இந்தப் புத்திமதியும் ஏறலை. நான்தான் கேட்கலை... கல்யாணம் ஆன புதுசிலே 'தங்கம் தங்கம்னு' சுத்தி சுத்தி வருவார். இப்போ நான் வெறும் பித்தளை ஆகிவிட்டேன் அவருக்கு. பணம் இருக்கிற திமிர்லே வேலைக்குக்கூடப் போறதில்லை அதனால் கமலாவுக்கு என் கணவர் மேலே கொஞ்சமில்லை ரெம்பவே இளக்காரம். இதைப் பற்றி கேள்விப்பட்டிருந்தும் என் கணவரோட அண்ணன் தன் மனைவியை ஒண்ணும் சொல்றதில்லை... அவ டாக்டர்ன்னு பெருமை...
என்னாலயும் எதுவும் கேட்க முடியலை. ஆனால் அம்மா, நான் உருப்படியாக செய்யறது நல்லா சமையல் பண்றதுதான். சாப்பிடற டயத்துக்கு எல்லோரும் டின்னர் டேபிளுக்கு வந்திடுவாங்க. ஒவ்வொரு வேளைக்கும் புதுசு புதுசா சமைக்கணும். சமைக்கறதோடு மட்டு மல்லாமல் நான்தான் பரிமாறணும். 'ஆகா...ஆகா' ன்னு புகழுவா! அப்புறம் சாப்பிட்ட தட்டைக் கூடக் கழுவாம அப்படியே வச்சுட்டுப் போயிடுவாங்க! 'வீட்லேதானே இருக்கே'ன்னு வேலைக் காரியை நிறுத்திட்டாங்க. எல்லா வேலையும் நான்தான் செய்யறேன். நான்தான் அங்க இப்ப வேலைக்காரி.
கமலா பலதடவை ரொம்ப லேட்டா வருவா. லேட்டா வந்தாலும் சூடாத்தான் அவ சாப் பிடனும் என்பதில் ரெம்ப தெளிவாக இருப்பாள். அதற்காகவே அவளுக்கு தனியா சூடா சமைக்கணும். இல்லாட்டா தட்டை தூக்கி எறிவா... கத்துவா. அப்ப்போ திடுதிடுப்புன்னு அவங்க டாக்டர் பிரன்ட்ஸ்ஸை வேறு சாப்பிட கூட்டிண்டு வந்துடுவா. இத்தனை பேரைக் கூப்பிட்டு வருகிறேன் என்று போன்கூட பண்ணமாட்டா! அரக்கப்பரக்க சமைச்சு அவளைக் கவனிக்கற தோடு மட்டுமல்லாமல், அவாளையும் கவனிக் கணும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலயும் ஒரு அல்ப சந்தோஷம் என்னன்னா அவா என் சமையலை புகழுவா, எப்படி பண்றதுன்னு கேப்பா. அதுதான்! ஆனா கமலா அவா கேட்டா தான் என்னை அவாகிட்டே அறிமுகப்படுத்துவா... அதுவும் வேண்டாவெறுப்பா.
எல்லோருக்கும் சமைச்சுப் பரிமாறுகிற எனக்குச் சில ராத்திரி எனக்கு சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இருக்காது. வெறும் தண்ணீர் குடிச்சிட்டு தூங்கிடுவேன்.
அம்மா! உனக்கு ரொம்ப தேங்க்ஸ். என்னை கட்டாயப்படுத்தி விதவிதமா சமையல் பண்ணச் சொல்லிக் கொடுத்தே. உன் கணவர் குடும்பத் துக்கு நன்றாகக் கவனிச்சு சமைச்சு போட்டத்தான் நீ அங்கே ராணி மாதிரி இருக்கலாம்ன்னு சொன்னே! அது பலிச்சுப் போச்சும்மா...
நான் பேருக்குத் தான் மருமகள்... ஆனால் நல்ல வேளை சமையல் அறைக்கு நான்தான் ராணி... அவ்வளவுதான். நான் இவ்வளவு நன்றாக சமைக்கலேன்னா எப்பவோ என்னை விரட்டி யடிச்சுருப்பாங்க தெரியுமா?
அம்மா, இந்த லெட்டரை அப்பாகிட்டே காட்டாதே... கிழிச்சு போட்டுவிடு... வருத்தப் படாதே... இங்கே வராதே... உன் மானத்தை பந்தாக்கி விளையாடிடுவாங்க!
உன் அன்புள்ள, சமையல் அறை ராணி
ஹெர்கூலிஸ் சுந்தரம் |
|
|
|
|
|
|
|