Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சிறுகதை
சிகரத்தை நோக்கி....
- மனுபாரதி|டிசம்பர் 2001|
Share:
அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது.

இரயில் வந்து சேர இன்னும் நேரமிருந்தது. ஸ்விஸ் இரயில்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வந்துவிடும் என்பது அவளது இரண்டு மாத வாசத்தில் உணர்ந்து ஆச்சர்யப்பட்ட விஷயம். அவளைத் தவிர யாருமே இல்லாமல் அந்தத் தடமே வெறிச்சோடிப் போயி ருந்தது.

அவள் உதட்டில் திடீரென ஒரு விரக்திச் சிரிப்பு. அவளுடைய வாழ்க்கையும் வெறிச்சோடிப் போய் விடக் கூடாது என்பதில் அவளது தந்தைக்குத் தான் எத்தனை அக்கறை! எத்தனையோ முறை அவரின் வற்புறுத்தலுக்கும் கெஞ்சலுக்கும் மௌனத்தைத் தான் பதிலாகக் கொடுத்திருக்கிறாள். எல்லைமீறிய வெறுப்பில் சில சமயம் "அக்காவுக்கு ஆனாப்போல எனக்கும் ஆவணுமின்னு ஆசைப்படுறீங்களா?" என்று கேட்டுப் புண்படுத்தியிருக்கிறாள்.

அப்பாவிற்கு உலகத்தில் இருப்பவர்கள் எல்லாரு மே நல்லவர்கள். கெட்டவர்களையெல்லாம் கதை களிலும் திரைப்படங்களிலும்தான் பார்க்கலாம். யாரையும் நம்பிவிடும் குணம். யாராவது ஏமாற்றி விட்டாலும் பெரிதும் பொருட்படுத்தாத வெகுளி மனிதர். யோசிக்க யோசிக்க அவள் மனதில் அப்பாவின் உருவம் வந்து நின்றது. அவளாக உருவாக்கி வைத்த அப்பாவின் ஓவிய உருவம். அப்பாவின் உருவமற்ற குணவெளிப்பாடுகள் எல்லாம் எப்படியோ ஓர் உருக்கொண்டு அங்கங்களாகிவிட்ட உருவம்.

'இன்டர்லாக்கென்' என்றெழுதிய பெயர்ப்பலகை யைப் பார்த்தாள். அதன் கீழ் தொங்கிக் கொண்டி ருந்த கடிகாரத்திலிருந்து 'டிக் டிக்' சத்தம். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. அவள் அந்த வினாடி முள்ளையே சில கணங்கள் பார்த்தாள். அதன் முனையில் ஓர் அலையும் தூரிகையைக் கட்டி விட்டால் அதிலிருந்து பிறக்கும் ஓவியத்தைக் கற்பனை செய்து பார்த்தாள். நடுங்கும் முள் முனையால் ஒழுங்கற்ற ஒரு வட்டத்தைத் தான் வரையமுடிந்தது. வட்டம் முழுமையடையும்போது மீண்டும் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வி பிறந்தது.

ஒலிபெருக்கியில் இரயில் இன்னும் ஓரிரு நிமிடங் களில் வந்துவிடும் என்று அறிவித்தார்கள். ஜெனிவா விலிருந்து வரும் வண்டி. தயாரானாள். முன்பே பார்த்ததில்லை. புகைப்படமும் வந்து சேரவில்லை. பரிசுப்பொருளைத் திறந்து பார்க்கும் ஆவல். மின்னஞ்சலில் சிவப்பு நிற முழுக்கைச் சட்டை அணிந்து வருவதாகச் சொல்லியிருந்தான்.

புள்ளியாய் தூரத்தில் தெரிந்து பின்பு மெல்ல மெல்ல மரவட்டை போல் பெரிதாகிக்கொண்டு வந்தது சிவப்பு நிற வண்டி. நிலையத்துள் வந்து நின்றவுடன் நிலையமே சிவந்து போனது போல் தோன்றியது அவளுக்கு. கதவுகள் திறந்து கொண்டன. எந்தப் பெட்டியில் என்று குறிப்பாகச் சொல்லவில்லை. எல்லா வாயில்களை நோக்கியும் அவள் கண்கள் சுழன்றன.இரயிலிலிருந்து இறங்கிய நிறைய ஸ்விஸ் மக்களால் அந்த இடமே கூட்டமானது. முதுகில் ஒரு பையை மாட்டியபடி சிலர். குழந்தைகளைக் கண்காணித்து விரட்டியபடி சிலர். மலையேறும் உபகரணங்களுடன் சிலர். ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைகள் பற்றிய புத்தகத்தைக் கைகளில் அடக்கியபடி சிலர்.

கூட்டம் அவளைக் கடந்து போக ஆரம்பித்தது. அதில் ஓர் இந்தியக் குடும்பம் தென்பட்டது. அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு அவர்கள் சிரிக்கவில்லை. அவளை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்துக்கொண்டு நடந்தார்கள். இரண்டு இந்திய (அல்லது இலங்கை) இளைஞர்கள் கடந்து போனார் கள். யாரும் சிவப்புச் சட்டை போடவில்லை. சிறிது நேரம் கடந்து போவோர்களையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அறையில் மாட்டப் பட்டிருக்கும் ஓவியம் மனத்துள் வந்து போனது. ஒரு பெரும் புல்வெளி மேடு. வலது ஓரத்தில் மேலே ஒரு சிறு கூரை வீடு. பொன் மாலைக்கதிர்களினால் எங்கும் ஆரஞ்சு வண்ணம். இடது ஒரத்தில் மேட்டின் கீழ் ஓர் ஒற்றை மரம். அந்தியொளியில் மயங்கி அசையாமல் சிலையாய் நிற்கும் மரம். தன்னந் தனியே....

நினைவு கலையும்பொழுது கடைசிப் பெட்டி யிலிருந்து இந்தியனைப் போல இருந்தவன் இறங்கி னான். சிவப்பு முழுக்கைச் சட்டை போட்டிருந்தான்.

ஆள் நெட்டையாக உயரமாக இருந்தான். பழுப்பு நிற தேகம். நீளமுகம் கிட்டே வர வர தெளிவாகத் தெரிந்தது. மீசையில்லை. கண்ணுக்குள் பதியும் ஆடி (contact lens) அணிந்திருந்தான். நெற்றியின் இடது ஓரத்தில் ஓர் அம்மைத் தழும்பு தெரிந்தது. கண்களில் கேள்விக்குறி.

"நீங்க... சித்ரா....?"

ஆமாம் என்று தலையாட்டினாள்.

"அப்போ திவாகர்..?"

"எஸ். ஹலோ, எப்படி இருக்கீங்க?", என்றபடி புன்முறுவலித்தான். மெல்லிய பதற்றம் அவனிடம் தெரிந்தது.

"நல்லா இருக்கேன். நீங்க..? பிராயணம் எப்படி?"

"·பைன். ஒண்ணும் சிரமமா தெரியலீங்க!"

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தான். இரண்டு முறை எச்சில் விழுங்கினான். தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டான். அவன் சொல்லவந்தது எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. அவன் மனம் துடைத்த வைத்தக் கரும்பலகையாய் நின்றது.

அவனுக்கு முன்நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருப்பதை அவள் கவனித்தாள். சிறிது நேரம் அமைதியாக நடந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தார்கள்.

"ஜெனிவானில உங்க கான்பரென்ஸ் எப்படி நடந்திச்சு? நீங்க உங்க ஆராய்ச்சி பத்திப் பேசினீங்களா?"

அவனிடம் ஒரு நிம்மதி தெரிந்தது.

"நல்லா நடந்திச்சுங்க. மூணு நாளு போனதே தெரியல."

அவனே தொடர்ந்தான், "என்ன மாதிரி கம்பெனி ஆளுங்களத் தவிர நிறைய காலேஜ் ப்ரொபசருங்க வந்திருந்தாங்க. என்னோட ஆராய்ச்சி முடிவுக்கு ஒண்ணும் எதிர்ப்பெல்லாம் இல்ல. ஒண்ணு இரண்டு பேர் கேள்வி கேட்டாங்க. மத்தபடி வெற்றின்னு சொல்லலாம்."

அதுவரை கேட்டுக்கொண்டு வந்தவள், "ம்.. எங்கப்பா சொல்லியிருக்காரு, நீங்க படிப்புலேயும் வேலையிலேயும் ரொம்ப கெட்டிக்காரருன்னு."

திடீர் புகழ்ச்சியில் அவன் திக்குமுக்காடினான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெட்கப் பட்டான்.

அவள் மனத்து ஓவியன் மெல்லிய கோடுகள் போடத் தொடங்கினான். நீள முகம். நெற்றியில் தழும்பு. மெல்லிய பதட்டம்...

"அவர் அழகுன்னு சொல்லிடமுடியாது. சுமாரா இருப்பார்..", அம்மாவின் எச்சரிக்கையை நினைத்து அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவள் அம்மாவிற்கு முக அழகு மிக முக்கியம். அதற்குப் பின் தான் மற்ற தெல்லாம். இயல்பிலேயே தான் அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அம்மாவிடம் இருந்தது. அதுதான் அழகிற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வைக்கிறதா? அழகு என்பது புறத்தே இல்லையம்மா. அவரவர் பார்வையைப் பொறுத்தது. என் மனதில் இருக்கும் உன் உருவம் என்றும் மாறாத அழகுதான்.

என் கவலையெல்லாம் கல்யாண மாப்பிள்ளையின் அழகைப் பற்றியல்ல. கல்யாணம் என்ற அமைப்பைப் பற்றியே எனக்குக் கேள்விகள் இருக்கின்றன.இதைச் சொன்னால் இவன் பயந்துவிடுவானோ? இந்தச் சந்திப்பின் முடிவில் உனக்கோ/எனக்கோ என்னையோ/உன்னையோ பிடிக்காமல் போய் விடலாம். அதற்கான திறந்த மனமும் தெளிவும் உன்னிடம் இருக்கிறதா? 'தெரிந்து கொண்டவர் களாகப்' பிரிந்துவிட வேண்டும். சம்மதமா?

அவன் "பசிக்கிறது" என்றான்.

"நம்ம ப்ளான் என்ன?" என்று கேட்டாள்.

"யுங்·ப்ரௌ சிகரத்துல என்ன சாப்பிட கிடைக்கு மின்னு தெரில, உங்களுக்கும் பசிக்குதுன்னா இங்க சாப்பிட்டு அப்புறம் மேல போலாமா?"

சரியென்று தலையசைத்தாள்.

மரவீடு போலிருந்த அந்த ஸ்விஸ் ரெஸ்டாரெண்டில் இருக்கைகளைச் சுற்றிலும் (நிஜமான) சிவப்பு நிறப் பூக்களால் அலங்கரித்திருந்தார்கள். அவளுக்கு சில நாட்களாக ஸ்விஸ்ஸில் இருப்பதால் அந்த "எங்கும் ரத்தச் சிவப்பு நிறப்பூக்கள் அலங்காரம்" பழகி விட்டிருந்தது. கண்ணில் அடிக்க வரும் இதை அவன் கண்டுகொண்டதாக அவளுக்குத் தெரியவில்லை. எந்த பாதிப்புமின்றி இருந்தான்.

உணவுக்குச் சொல்லிவிட்டபின் இவள் அவனது மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் பற்றியும் அதில் அவனது வடிவமைப்பாளன் வேலை பற்றியும் கேள்விகள் கேட்டாள். தன்னுடைய வேலையின் நிரந்தர தன்மை பற்றிய கேள்விகளாக அவற்றை எடுத்துக்கொண்டானோ, என்னவோ, அவனது பதிலில் எச்சரிக்கை தெரிந்தது.

அவனும் பதிலுக்கு அவளது ப்ராஜெக்ட் பற்றி கேட்டான். எந்த பாங்கிற்கு சா·ப்ட்வேர் எழுது கிறாள். இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன. இதற்கப்புறம் இந்தியாதானா போன்ற மேம்போக் கான கேள்விகள்.

உணவு உண்ணும்பொழுது கேட்டாள், "உங்களுக்கு இந்த ஜோசியம், பொருத்தம் பாக்குறது, ஜாதகம் இது மாதிரி விசயத்துலலாம் நம்பிக்கை இருக்குங்களா?"

அவன் புதிராகப் பார்த்தான்.

கேட்டிருக்கக்கூடாதோ என்று யோசித்தாள். என்ன சொல்வது என்று யோசிக்கிறானா? இந்தச் சந்திப்பின் அடிப்படையையே கேள்வி கேட்டு விட்டேனா?

"ஏன் கேக்கறீங்க? எனக்குப் புரியல.."

என்ன பதிலை நான் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறானோ? எனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக என் தலைமுறையின் ஒரு பிரஜையாகிய இவனுக்கும் இருக்கக்கூடாது என்று நான் எதிர்பார்ப்பது நியாயமா?

"சொல்லுங்களேன். உங்க அபிப்ராயத்த தெரிஞ்சுக்கத்தான்.."

"எங்க அப்பா அம்மாவுக்கு என்னிக்குமே நம்பிக்கை இருந்ததில்ல. எங்க அத்தைக்கு ரொம்ப உண்டு. என்ன வளர்த்ததுல இந்த மூணு பேருக்கும் பங்கு உண்டு. அதுனால நான் இந்த விசயத்துல கொஞ்சம் குழம்பியிருக்கேன். ஒரேடியா நம்பமாட்டேன்னு ஒதுக்கி வைக்க முடியல. நம்பறேன்னும் சொல்லற திக்கில்ல. நீங்க எப்படி?"

அவளுக்குச் சிரிப்பு வந்தது, "இப்படியும் சொல்லாம அப்படியும் சொல்லாம நடுவுல நின்னுட்டீங்க."

"உண்மையத்தான் சொல்றேன். எங்கத்தைப் பார்த்துச் சொன்ன சம்பந்தம்தான் இது."

மேலும் புரியவைக்கவேண்டும் என்பது போல அவளது பார்வை இருந்தது.

"இந்தக் கல்யாணச் சந்தையில ஜாதகம் பார்த்துப் பொருந்தினாத்தான் முதலடி எடுத்து வைக்கறாங்க. அவங்களையும் ஒண்ணும் சொல்ல முடியாது. கண்ணமூடிக்கிட்டு எங்கிருந்து தொடங்கறதுன்னு தெரியாம முழிக்கறப்போ, ஜாதகம் ஜோசியமுன்னு ஒரு சாஸ்திரத்த வச்சி தேர்ந்தெடுக்கிறது தப்பில்லை இல்லையா? இதே காரணத்துக்காகத்தான் எங்கப்பா என் ஜாதகத்தயும் கணிச்சு வச்சாங்க...மனசில்லாம தான்"

"ஜோசியமும் ஒரு அறிவியல் சாஸ்திரம்னு சொல்றீங்க அப்போ?"

"கண்டிப்பா. ஆயிரம் வருசங்களா தொடர்ந்து வர்ற விசயம் முழுக்கப் பொய்யா இருக்கும்னு ஒதுக்கித் தள்ளமுடியாது. அதைப் படிச்சவங்க வேணா தப்பும் தவறுமா கடைபிடிச்சிருக்கலாம். அதுனால தரம் குறைஞ்சிருக்கலாம்னு நான் நினைக்கிறேன்"

"உங்க அனுமானம் சரியா இருக்கலாம். நான் மறுக்கல. இன்னிக்கு இருக்கற நிலைமையில எனக்கு ஜோசியமும் கண்ண மூடிக்கிட்டு தேர்ந்தெடுக்கறதும் ஒண்ணுன்னுதான் தோணுது."

சிறிது யோசித்தவன், "அது உங்க அபிப்ராயம்." என்றான்.

சமரசம் செய்து வைக்க முயல்கிறானா? அவனது கருத்தை விட்டுக்கொடுக்கவில்லை. என்னையும் மாற்ற முயலவில்லை. அவள் மனத்து ஓவியன் அவனது உருவத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான்.

சிவப்பு வண்ண இரயில் தனது பல்சக்கரத்தால் தண்டவாளத்தைக் கவ்வியபடி பச்சை மலைகளுக் கிடையே புகுந்து மேலேறிக்கொண்டிருந்தது. ஜன்னலின் இருபுறமும் புல்வெளி மேடுகள். நெடிய ஊசியிலை மரங்கள். இங்கொன்றும் அங்கொன்று மாய் அடர்த்திக் குறைவான வீடுகள். வீடுகளின் வெளிச்சுவர்களில் தொங்கும் பூந்தொட்டிகளில் அதே சிவப்பு நிறப்பூக்கள். மேயும் கொழுத்த மாடுகளின் கழுத்திலிருந்து 'கிணிங் கிணிங்' என்ற மணிச்சத்தம். சூழ்நிலையின் ரம்மியம் அவளது உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையைத் தோற்று வித்தது. தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அவர்களைத் தவிர வயதான ஒரு தம்பதி ஒரு குழந்தையுடன் அந்தப் பெட்டியில் இருந்தார்கள். மற்றபடி பெட்டி காலி யாகத்தான் இருந்தது.

கோடிட்டச் சிரிப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் பார்வை தூரத்தில், மிக உயரத்தில், புகை போல தெரிந்த வெண்பனிச் சிகரங்களில் நிலைகுத்தி யிருந்தது.

"உங்களுக்கும் இயற்கையழகு ரொம்ப பிடிக்குமா திவாகர்?"

ஒரிரு வினாடிகள் ஏதோ யோசித்தான்.

"பிடிக்குமான்னு சொல்லத் தெரில. ஆனா.."

மேலே சொல்லுங்கள் என்றாள் கண்களில்.

யோசித்தான்.

"அங்க விர்ஜீனியாவுல கார் எடுத்துக்கிட்டு ரொம்ப தூரம் சில சமயம் சும்மாவே போறதுண்டு. அப்படி போறச்சே ஒரு ஸ்ட்ரெச்சுல முழுக்கக் காட்டு பாதையா இருக்கும், அதுக்கு நடுவுல அதுவும் இலையுதிர்காலத்துல ஒரு விதமான அமைதிய அனுபவிச்சுருக்கேன். நம்ம மனசு நமக்கு அடங்கி... வார்த்தைல சொல்லத் தெரில."

"அது மாதிரி உணர்வுதான் இயற்கையப் பிடிச்சுப் போறதுன்னா எனக்கும் இயற்கையழகு பிடிக்கும்னு சொல்லலாம்." என்றான். சிறிது இடைவெளிவிட்டு "உங்களுக்கும்னு கேட்டீங்க. அப்போ உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?" என்று கேள்வியாகக் கேட்டான்.

ஆமாம் என்று தலையாட்டினாள். ஜன்னலுக்கு வெளியே புல் நிரம்பிய மேடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊதா மற்றும் சிவப்புப் பூக்கள் சிரித்தன. அவள் பேச ஆரம்பித்தாள்.

"எங்க வீட்டுல, அங்க காஞ்சிவரத்துல பெரிய டிசம்பர் பூத்தோட்டம் இருக்கு. மார்கழி மாசக் காலையில தோட்டமே ஊதா நீலத்துல பூத்து நிக்கும். பாத்துக்கிட்டே இருக்கலாம் போல கொள்ள அழகா இருக்கும். அகலமான அந்த டிசம்பர் இலைங்கள சேர்த்து வச்சி தேன்சிட்டுக்குருவிங்க கூடு கட்டும். அதோட சத்தமே விடியக்காத்தால எழுப்பி விட்டு ரும்."

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"தோட்டத்துக்கு நடுவுல ஒரு மரத்திண்ணை இருக்கு. மார்ச்சுல வேலியோர வேப்ப மரத்துலேந்து மதியான குளிர் காத்து ஜிலு ஜிலுன்னு வரும். அப்ப அந்த மரமே வெள்ளை வெள்ளையா நரைமுடிமாதிரி பூத்துக் கொட்டும். இன்னிக்கும் ஊருக்குப் போனா நிறைய நேரம் உக்காரத்தோணும் அங்க."

பதில் எதுவும் சொல்லாமல் அவளையே பேச விட்டான்.

"கோவில் தெப்பக்குளத்துல வெயில் இறங்கற நேரத்துல தட்டு மாதிரி மிதக்கற பச்சை இலைங் களுக்கு நடுவுல நிமிர்ந்து நிக்கற அல்லியையும், தாமரையையும், கூட்டமா நீந்தற குட்டி மீனுங் களையும் கீழ்ப்படியில உக்காந்துக்கிட்டு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். நேரம் போறதே தெரியாது."

அவள் பேசப் பேச அவனது நெற்றிப்புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்ந்தன.

"என்ன அப்பிடி பாக்குறீங்க?"

"உங்கள மாதிரி எனக்கு வர்ணிச்சு விளக்கிச் சொல்லத்தெரியாதுங்க." என்றான்.

இவன் சராசரி ஆண்மகனோ என்றவளுக்குத் தோன்றும்பொழுது அந்த வயதான தம்பதியர் இவர்களிடம் வந்து அவர்களை ஒரு புகைப்படம் எடுக்க முடியுமா என்று கேட்டார்கள். இன்னும் சிறிது நேரத்தில் எய்கர் மலைச் சிகரம் நன்றாகத் தெரியும் என்றார் அந்தத் தாத்தா. சரி என்றான் ஆங்கிலத்தில். அவர்கள் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தங்களை டச் நாட்டினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். அறுபது அறுபத்தி யைந்து வயது சொல்லலாம். தங்கள் பேரக்குழந்தை ஆடமிற்காக இந்தமுறை யுங்ப்ரௌவிற்குப் போவ தாகச் சொன்னார். அவள் அந்தக் குழந்தையை வாவென்று கூப்பிட்டாள். துருதுருவென்று அலையும் கண்களுடன் இருந்த அது ஒரிரு நொடிகள் நிதானித்து அவளையே பார்த்தது. தன் பாட்டியின் கையை இறுகப் பற்றிக்கொண்டது. கிட்டே வரவில்லை. தனது மாநிறத் தோலும், கருப்பு முடியும் அதற்கு வித்தியாசமாகப் படலாம் என்று நினைத்தாள்.

அவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து நீட்டிக் கூப்பிட்டான். அவனையும் அதையும் உற்று பார்த்ததே தவிர அருகே வரவில்லை. அதற்குள் அந்தச் சிகரம் ஜன்னலில் தெரிய ஆரம்பித்தது. அவன் தயாரானான். அவர்கள் இருவரும் குழந்தையை அணைத்துக்கொண்டனர். அவன் இப்படி கொஞ்சம் அப்படி கொஞ்சம் நகரச்சொல்லி முடிவில் படமெடுத்துக் கொடுத்தான். நன்றி சொல்லிவிட்டு அவர்கள் சென்று அமர்ந்துகொண்டனர்.

அந்தப் பாட்டியும் தாத்தாவும் விடாமல் கைகோர்த்துக்கொண்டிருந்தது அவள் கண்ணில் மட்டும் பட்டது.

உலகம் முழுவதும் ஆணும் பெணும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். குடும்பம் அமைத்துக் கொள்கிறார் கள். தங்கள் சந்ததியினருக்கும் அதையே கற்பிக் கிறார்கள்.பேரன் பேத்தி எடுக்கிறார்கள். வாழையடி வாழையாக முடிவில்லாத தொடர் வம்சவிருத்தி. இந்தத் தொடர்ச்சியில்தான் ஒரு பாதுகாப்புணர்வை அடைகிறார்களோ? நூற்றாண்டுகளாய் இதே.... அவள் மலைத்துப் போனாள்.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றான்.

"ஒண்ணுமில்ல." சொல்லலாமா? வேண்டாம்.

"ஆமாம்.. ·போட்டோ எடுத்தீங்களே, ·போட் டோ எடுக்கறது உங்களுக்கு விருப்பமான விசயமா?"

"இல்லைங்க. ஏதோ சுமாரா எடுக்க வரும். அவ்வளவுதான். அது ஒரு தனி கலைங்க, அதுக்குன்னு நேரம் ஒதுக்கி கத்துக்கணும்"

"அப்ப உங்க பொழுதுபோக்கு என்னங்க திவாகர்?"

கொஞ்சம் யோசித்தான்.

"ஸ்விம்மிங் (நீச்ச்ல்), ஹைக்கிங் (மலையேற்றம்), ஸ்கீயிங் (பனிச்சறுக்கு) இதெல்லாம் நேரம் கிடைச்சப்போ செய்வேன். புராண கதைங்க, சென், மித்தாலஜி புஸ்தகங்க லைப்ரரி போனா படிப்பேன். செஸ் போட்டிங்க டீவியில பார்ப்பேன். நீங்க சொல்லுங்க..."

"ம்ம்.. எனக்குப் பெயிண்டிங் சேகரிக்கறது, காட்சியகங்களுக்குப் போறது, இதுதான் பெரிய பொழுதுபோக்கு."

"நீங்க படம் எழுதுவீங்களா?"

"இல்லைங்க. ரசிக்கறதோட சரி."

என்னைப் பற்றிச் சொல்வதற்காக அவனைக் கேட்டு என்னைத் திருப்பிக் கேட்கவைக்கிறேனா? அபத்த மாகப்பட்டது. முக்கியமான விஷயத்துக்கு எப்போது வரப்போகிறாய் என்றவள் மனம் கேட்டது.

இன்னும் சிறிது நேரம் அமைதியாகக் கழிந்தது.

"அமெரிக்காவுல உங்க கம்பெனிக்கு ப்ராஞ்சு ஆபீஸ் ஏதாவது இருக்குங்களா சித்ரா?"

"ப்ராஞ்சுன்னு இல்லை. ஆனா நிறைய க்லையண்ட்ஸ் இருக்காங்க."

"இல்ல.. நீங்க அங்க வந்தா உங்க கம்பெனி யிலேயே வேலையத் தொடர வாய்ப்பிருக்கா?"

"அது பத்திக் கவலை இல்லைங்க. கிடைக்கும்." என்றாள்.

அங்கே சென்றால்தானே.. இன்னும் கேள்வியாகத் தான் அது இருக்கிறது.

"திவாகர், என்னோட அக்கா விவாகரத்து ஆனவங்கன்னு சொன்னாங்களா?" எதிர்பாராத தருணமொன்றில் கேட்டாள்.

அவன் ஐயத்துடன் அவளைப் பார்த்தான்.

"எங்கப்பா சொன்னார்." என்றான். அவன் தொனி யிலேயே அதற்கென்ன இப்பொழுது என்ற கேள்வி தொக்கி நின்றது.

"அதுக்கப்புறம் எனக்குக் கல்யாணம், குடும்பம் இதுலலாம் இருந்த நம்பிக்கை ரொம்ப அடிபட்டுப் போச்சுன்னு சொன்னா உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்குமா?"

தைரியமாகவே சொல்லிவிட்டாள். அவன் கண்களில் அதிர்வு தெரிந்தது. சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

"அப்போ..", எச்சில் முழுங்கினான்.

"அப்போ.. இந்தச் சந்திப்பு..?"

"நான் ஜெனிவாவிலேந்து வந்து உங்கள..." அதற்கு மேல் அவனால் பேச இயலவில்லை. அவன் கண்களில் நிராகரிப்பின் வலி தெரிந்தது. கவலையானான்.

"எங்க அக்காவும் அப்பாவும் ரொம்ப வற்புறுத்தினது னால இதுக்கு ஒத்துக்கிட்டேன்.."

அவளே தொடர்ந்தாள், "எங்கக்கா கல்யாணமாகி ஆஸ்திரேலியா போன முதல் மாசத்திலேந்து ஆரம்பிச்சுது அழுகையும் சோகமும். ரெண்டு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுருக்கா. இத்தனைக்கும் அவ தன்னோட கல்லூரியல படிச்சவனத் தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க குடும்பமே , அவங்க பாட்டி உட்பட அங்க குடியுரிமை வாங்கிட்டவங்க. எங்கக்காவ ரொம்ப கஷ்டப்படுத்தி யிருக்காங்க. ·போன்ல எத்தன நாளு வந்துக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்கன்னு கெஞ்சியிருக்கா தெரியுங்களா?"

அவன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

"அப்பாவுக்கு உலகத்துல எல்லாரும் நல்லவங்க. 'நீதான் பாத்து நடந்துக்க வேணும்'- அப்படீன்னு புத்திமதி சொல்றாரு. வேலைக்குப் போயிட்டு ருந்தவள வீட்டோட, சமையலறையோட முடக்கிப் போட்டு... எல்லாருக்கும் வேலக்காரியாக்கி... ஒரு குழந்தை பெத்துக்கவிடாம... இப்படிப் பல கொடு மைங்க. சொல்லி முடியாதுங்க. கோர்ட்டுக்குப் போய் உறவ அறுத்துக்கிட்டு வந்தப்பிறவும் எத்தன மாசம் மூலையில மனசொடிஞ்சு கிடந்தா தெரியுங்களா?"

"சிலபேர் வெண்ணையா பழகறாங்க. பின்னாடி பச்சோந்தியா மாறிடறாங்க. எங்கக்கா புருசன் அந்த ஜாதி தான்."

"அந்த மாதிரி ஒரு குடும்பத்துக்குள்ள நான் மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவேன்னு யோசிச்சு யோசிச்சு ரொம்ப பயப்பட்டிருக்கேன் மனசுல. இப்போ உங்ககிட்ட சொல்றப்போவும் ஒரு பயம் வருது. அந்த மாதிரி மக்கள எதித்து ஒரு ஆவேசமும் வருது."

அவள் பேச பேச அவன் ஒரு சகஜ நிலைக்கு வந்து, ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தான்.

"என்னோட ·பிரண்ட் வித்யா... கல்யாணத்துக்கு முன்னாடி... கார்ப்பரேட் பார்ட்டிங்க, நிகழ்ச்சிங்க ளுக்கான காண்டிராக்ட் பிஸினெஸ்ல இருந்தா.. ரெண்டு பேரோட சேர்ந்து சொந்தமா பண்ணிட்டி ருந்தா. இன்னொரு பக்கம் சின்ன பசங்களுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுத்திட்டிருந்தா. இன்னிக்கு தோசைக்கு மாவரைச்சுகிட்டு, வேலைக்காரியோட சண்டை போட்டுக்கிட்டு, நாளைக்கு என்ன சமைக்கற துன்னு கவலைப் பட்டுக்கிட்டு, ....அவ புருசனோட உலகத்துல மனைவிங்கறவளுக்குன்னு தனியா ஆசை, விருப்பம், அடையாளமெலாம் கிடையாது. குடும்பத் துக்கான மொத்த பொறுப்பையும் சொமக்கற சுமைதாங்கி. ஒரே அடையாளம். அவ்வளவுதான்."

"இன்னி வரைக்கும் சந்தேகப்பட்டுக்கிட்டுருக்கற மாமாவோட எங்க மாமி, நாப்பத்தஞ்சு வயசாவுது, எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறாங்க."

"குடும்பம்கிறது என்னன்னு நினைக்கறீங்க? பரஸ்பரம் அன்பும், மதிப்பும், மரியாதையும் வெச்சி, எல்லாத்தையும் பகிர்ந்துகிட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கற அமைப்புன்னா... இல்லைங்க. ஏச்சும், பேச்சும், குத்தலும், திட்டும், சண்டையும், பழி வாங்கறதும் நிறைஞ்ச ஒரு கொடூர அமைப்பாத்தான் இருக்கு. அதுவும் பொண்ணா யிருந்தா எல்லாருக்கும் பொறுப்பாளியா, அடிமையா ஆக்கி நசுக்கற அமைப்பா இருக்கு."

"இவ்வளவையும் பக்கத்துல இருந்து பாத்தததுக் கப்பறம், எனக்கு எப்படி அதே மாதிரி ஒரு அமைப்புல போய் மாட்டிக்க ஆசை வரும்?"

அப்பொழுது ஏன் என்னை வரச்சொன்னாய் என்பது போல பார்த்தான்.

"இவ்வளவு கஷ்டமும் பட்டப் பிறவும் கூட எங்கக் காவ பாருங்க, கல்யாணம் பண்ணிக்கோன்னு எனக்கு புத்திமதி சொல்றா. இல்லாட்டி ஒண்டியா ஓரமா நிக்க வேண்டியதுதான்னு பயமுறுத்தறா. அப்பா அம்மாவும் இதே புத்திமதி."

"அவளுக்கு இப்படி ஆனது விதியாம். அதக் காரணம் காட்டி நான் கண்ண முட்டிக்கிட்டு சிறுபிள்ளைத் தனமா கல்யாணத்த எதிர்க்கிறேன்னு சொல்றாங்க."

"இந்த வித்யா... எப்பவாவது புலம்புவா... அதோட சரி. நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கிப்போறேன்னு பேச்சை உடனே மாத்திடுவா. கொஞ்ச நேரம்கூட பேசியிருக்கமாட்டோம். குழந்தை ஸ்கூலேந்து வந்துடும்மின்னு ஓடுவா."

அவன் என்ன சொல்வது என்று யோசிக்கையில் இரயில் வண்டி நின்றது.

வேறொரு ரயிலுக்கு மாறவேண்டும் என்று ஒலிபெருக்கியில் சொன்னார்கள். பேச்சை நிறுத்திவிட்டு இறங்கினார்கள்.

காற்றிலிருந்த அதீத குளிர்ச்சி மிக உயரத்திற்கு வந்துவிட்டதை அவர்களுக்கு உணர்த்தியது. இப்பொழுது சிகரங்கள் மிகத் தெளிவாகப் பெரியதாகத் தெரிந்தன. மேலிருந்து உருகி விழும் பனி நூலருவிகள் கூட கசியும் வெண்புகைக் கோடாய்த் தெரிந்தன. இவற்றைப் பார்த்தாலும் மௌனமாகத்தான் நடந்தாள் அவள். அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

அந்தக் குழந்தை ஓடிச் சென்று அடுத்த வண்டியில் ஏறியது. துரத்திக்கொண்டு ஓடினர் அந்தத் தம்பதி. நிதானமாகப் பின்தொடர்ந்து இவர்களும் ஏறினார் கள். இந்த முறை அவர்கள் வலது புற எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள். சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது.

இனி ஒரு மணி நேரத்திற்கும் மேல், மலையைக் குடைந்து போடப்பட்ட குகைப்பாதையில் தான் வண்டி போகும் என்றார் அந்தத் தாத்தா. இங்கிலாந் திலிருந்து வருகிறீர்களா என்றவர்களிடம் கேட்டார். தான் இங்கிலாந்தில் வேலை செய்த காலத்தில் இந்திய உணவு வகைகளை விரும்பி உண்டதைப் பற்றி பிரஸ்தாபித்தார். தன் மனைவிக்கு சமீபத்தில் இருதைய அறுவை சிகிச்சை நடந்தது என்று சம்பந்தமேயில்லாத தகவலைச் சொன்னார். அவரும் அவரது மனைவியும் 42 வருட மணவாழ்க்கையை நடத்தியாகிவிட்டது என்று பெருமை பேசினார். அவர் மனைவி சிறிது வெட்கமடைந்தார்கள். அந்தக் குழந்தை குறுக்கிட்டு ஜன்னலை நோக்கிக் கைகாண்பித்தது.

இப்பொழுது அந்த வெண்பனி முகடுகள் விஸ்வரூபமெடுத்து நின்றது போல் நன்றாகத் தெரிந்தன. வாவ் என்றவன் ஆச்சர்யப்பட்டான். அவளும் ஒரு நிமிடம் எல்லாவற்றையும் மறந்து அந்தப் பனிச்சிகரங்களைப் பார்த்தாள். அதன் பிரம்மாண் டத்தில் ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து லயித்தாள். அவனைப் பார்த்தபொழுது அவனும் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். "உங்கள மாதிரி எனக்கு வர்ணிச்சு விளக்கிச் சொல்லத் தெரியாதுங்க." என்றவன் சொன்னது அவள் ஞாபகத்திற்கு வந்தது. இயற்கையை வர்ணிக்கும் திறமை இருப்பதாக அதிகம் பறைசாற்றுகிறோமோ?

அதற்குள் சிகரங்கள் மறைந்து, இருட்டு குகைக்குள் இரயில் பயணிக்கத் தொடங்கியது. வெளியே அடர்ந்த கருமை. "மலை எங்கே? இனி எப்பொழுது வெளியே வரும்?" என்று அக்குழந்தை தன் பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவள் தான் தொடங்கினாள், "என்ன அப்புறம் நீங்க எதுவுமே சொல்லல?"

"ம்.... என்னால உங்க நிலமைய புரிஞ்சுக்க முடியுது." என்றுமட்டும் அவன் ஆமோதிப்பது போல் சொன்னான். இனி நமது சந்திப்பினால் என்ன பயன் என்ற விரக்தி தொனித்தது அந்தப் பதிலில்.

சட்டென்று அவளுக்கு ஏன் இந்த கல்யாண விஷயத்திற்கெல்லாம் ஒத்துக்கொண்டோம் என்று தோன்றிவிட்டது. யாரிடமோ எனது அபிப்ராயங்களை நியாயப்படுத்திக்கொண்டு... அப்பா மேலும் அக்கா மேலும் கோபம் கோபமாக வந்தது. அப்பாவும் அக்காவும் சொன்ன அறிவுரைகள் கரைந்து கொண்டே போயின. அலைபாய்ந்தபடி இருந்தது மனம். தன்னுடய அறைச்சுவற்றில் தொங்கும் ஒற்றை மர ஓவியம் ஞாபகம் வந்தது. அவளே அந்த ஒற்றை மரமாக மாறினாள். சூறைக்காற்றில் தலைவிரித் தாடும் மரமாக... எங்கோ ஆழமாக இழுத்து, எழும்பவிடாமல் அமிழ்த்தும் நீர்ச்சுழலில் சிக்கிச் சுற்றி... இல்லைஐஐஐ... என்னுள் ஆசை மிச்ச மிருக்கிறது. முழுகமாட்டேன். எழும்புவேன். நிதானத்திற்கு வந்தாள்.

"திவாகர், உங்கள ஒரு அந்தரங்கமான கேள்வி கேக்கலாமா?"

அவன் என்ன என்பது போல் பார்த்தான். அவள் முகம் கொந்தளித்து அடங்கியது போல் இருந்தது.

"உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் காதலிச்சு மனசு விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கன்னு எங்கக்கா சொன்னா. உண்மையா அது?"

"உண்மைதான்." என்றவன் சொன்ன தொனியில் இதுதானா என்ற கேள்வி வெளிப்பட்டது.

"அவங்க மனசு விரும்பிப் பண்ணிக்கிட்டப்போ நீங்க ஏன் அதுமாதிரி எதுவும் பண்ணிக்கல? இதுக்கு உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லன்னா சொல்லவேண்டாம்"

என்ன அர்த்தம் இந்தக் கேள்விக்கு என்பது போல பார்த்தான். சிறிது தாமதித்துச் சொன்னான், "இருவத்தியஞ்சு வயசு வரைக்கும் என்னோட கவனமெல்லாம் படிப்பு, ஆராய்ச்சின்னு வேற விசயத்துல முழுகிப் போச்சு. வேலைக்கு வந்து இரண்டு மூணு வருசம் கடுமையான உழைப்பு. காலம் போனதே தெரில. ஆனா ஏதோ ஒரு முழுமை இல்லைன்னு ஒரு நினைப்பு வர ஆரம்பிச்சுது. மெல்ல மெல்ல என் வாழ்க்கையில பெரிய காலியிடம் ஒண்ணு உருவாயிட்டிருக்கறத உணரும்போது வயசு முப்பது ஆயாச்சு."

"எந்தப் பொண்ணும் வந்து என்னப் பாத்து லவ் யூவும் சொல்லல. சொல்லியிருந்தா என் பாதையே மாறியிருக்குமோ என்னவோ. முன்னாடியெல்லாம் எங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு வற்புறுத் தியுருக்காங்க. தட்டிக் கழிச்சிக்கிட்டே வந்து இதோ இதுல முடிஞ்சிருக்கு. நமக்கு காதல்லாம் அமைய லீங்க"

எதையும் மறைக்காமல் பளிசென்று சொன்னதாகத் தோன்றியது அவளுக்கு.

"அமெரிக்காவில வேலை பாக்குறீங்க. டேட்டிங் மாதிரி எதுவும்...."

"டேட்டிங்கா?" சிரித்தான். கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்தது போலிருந்தான்.

"எனக்குத் தெரிஞ்சு ரொம்ப பசங்க ஒரு மாச லீவுல இந்தியாவுக்குப் போய் அப்பா அம்மா சம்மதத்தோட ஒரு பொண்ண நிச்சயம் பண்ணிட்டுத்தான் டேட்டிங் எல்லாம்.."

"அதுவும் தவிர, நம்ம பசங்க துணிஞ்சு டேட் பண்ண முன்வந்தாலும் அமெரிக்கப் பொண்ணுங்க முன் வரணுமே.."

"அது பொதுவா நடக்கறது. என்னைப் பொறுத்த வரை என்னைக் கட்டிக்கிறவளுக்குத் தமிழ் நல்லா பேசத் தெரியணும். என் மொழி பேசாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மையெல்லாம் இல்லை."

இந்தப் பதிலிலும் ஒரு நேர்மை புலப்பட்டது அவளுக்கு. மேலே என்ன கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள். இவனது பதில்களில் என் மனம் மாறப்போகிறதா என்ன?

அவள் எதிர் இருக்கையில் தூங்கும் அந்தக் குழந்தையைப் பார்த்தாள். ஓடி ஆடிய களைப்பாக இருக்கும். அந்தப் பாட்டி கூட தாத்தாவின் தோளில் சாய்ந்து கண்மூடியிருந்தார்.அவர்கள் இருவரின் கைகளும் கோர்த்தபடியே இருந்தன.

எதிராளியின் அடுத்த அடி என்ன என்று கணித்து விளையாடப்படும் செஸ் ஆட்டம் போல அவனுக்குத் தன் கேள்விகள் தோன்றுமோ? அவன் முகத்தில் படிக்கப் பார்த்தாள். அவன் ஏதோ யோசனையில்தான் ஆழ்ந்திருந்தான்.

அவள் பெருமூச்செறிந்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். அக்கா விவாகரத்தானவள் என்பதால் முதலடியிலேயே சம்பந்தத்தை முறித்துக் கொள்கிறார்கள் என்று அம்மா அடிக்கடி புலம்புவாள். அப்பொழுதெல்லாம் நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது முதல் முதலாக இவன்..

அவள் மனத்து ஓவியன் திவாகரின் படத்தைத் மெல்லத் தெளிவுபடுத்தத் தொடங்கினான்.

"உங்களப் பத்தி உங்களையே சொல்லச் சொன்னா எப்படிப்பட்டவர்னு சொல்வீங்க திவாகர்?"

"என்னங்க இப்படிக் கஷ்டமான கேள்வியெல்லாம் கேக்கறீங்க?" என்றுவிட்டு யோசித்தான்.

"என் கூடப் பழகினவங்க கிண்டலா சொல்லி யிருக்காங்க, 'நான் சுதந்திரமா தனிச்சு இயங்கற பிறவி'ன்னு. அதுதான் இப்ப ஞாபகம் வருது."

இன்னும் யோசித்தவன், "ஒரு விதத்துல அது உண்மைன்னு தோணுது. தனியா நிறைய விசயங்கள செய்யப் பிடிக்கும் எனக்கு. அதத்தான் சொல்லு றாங்கன்னு என் அனுமானம்."

அதையே தன்னிடம் கேட்பான் என்று கணித்தாள். ஆனால் அவன் கேட்கவில்லை. நானே என்னைப் பற்றி அதிகம் சொல்லிவிட்டேனோ, இனி கேட்க ஒன்று மேயில்லையோ?.

அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவானது. இதற்குள் என்னைப் பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லாம் வடிந்து நிஜம் மட்டும் அவனிடம் தங்கியிருக்கும்.

"யோசிச்சுப் பார்த்தா, நமக்கு அமையற உறவி லேயும் சரி, நாமே அமைச்சுக்கற உறவுலேயும் சரி, இன்னிக்கு இருக்கற மாதிரி என்னிக்கும் நல்லபடியா இருக்குமின்னு கட்டாயமா சொல்றதிக்கில்ல. யாருமே மாறலாமுன்னு தோணுது."

"எதிர்பார்ப்புக்கும் நிஜத்துக்கும் தூரம் அதிகமா யிட்டே வருது. அதுனால எல்லா உறவும் விரிசில் விடுது. உடைஞ்சும் போகப் பாக்குது. உடைஞ் சிடக்கூடாதேன்னு ஒரு நிர்பந்தத்துல பொய்யா ஒட்டிக்கிட்டு சகிச்சுக்கிட்டு நிறைய பேரு வாழ றாங்க."

அதுவரை மௌனமாக இருந்தவன் கேட்டான், "உங்க அக்கா உடைச்சிக்கிட்டு வந்துட்டாங்க சரி. அதவெச்சி... அதுமாதிரி சில பேருக்கு நடந்தத வெச்சி எல்லாத்தையும் அதே கோணத்துல ஏன் பாக்கறீங்க? பொதுவா எல்லாரும் அப்படித்தான்னு ஏன் ஒரு பெரிய பழியச் சுமத்தறீங்க?"

அவள் இதை எதிர்பார்க்கவில்லை. "நீங்களும் எங்க வீட்டுல பேசற மாதிரியே பேசறீங்க?" என்றாள் தன் ஓட்டிற்க்குள் புகுந்துகொண்டு.

"ஆனா, அதுதானே உண்மை. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன்."

என்ன என்பது போல பார்த்தாள். இவர்கள் எல்லாரும் ஒரே கூண்டுக்குள் நிற்பவர்கள் தான் என்பது ஏன் இன்னும் உங்களுக்குப் புரியவில்லை?

"நீங்க உங்க அக்கா விவாகரத்துனால ரொம்பவே பயந்துருக்கீங்க. மேலுக்கு வேணா நீங்க குடும்பம், கல்யாணத்துல அவநம்பிக்கை வச்சவங்களா பேச லாம். ஆனா, அடிப்படையில உங்க அக்காவுக்கு நல்ல மணவாழ்க்கை அமையலேன்னு ஒரு ஏக்கம் உங்க ஆழ்மனசுல இருக்கு. அவங்களுக்கு அது மறுக்கப் பட்டதுல உங்களுக்கு சமூகத்து மேல கோவம்." சொல்லிவிட்டு அவள் கண்களை நேராகப் பார்த்தான்.

என்ன இவன்? ஒரு சில மணி நேரத்திலேயே என் மனதைப் படித்தவன் போல அபிப்ராயம் சொல்கிறான். நிஜமாகவே நான் அப்படி ஏங்குகிறேனோ? அவளும் அவனையே உற்றுப் பார்த்தாள்.

திடீரென்று அறிவிப்பு ஒன்று அவர்கள் இரயிலில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்தியது. இன்னும் பத்து நிமிடத்தில் எய்கர் சிகரத்தை வண்டி அடையப்போவதாக அறிவித்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பாட்டியும் ஆடமும் விழித்துக் கொண்டனர்.

"இன்னும் சொல்லனுமின்னா குடும்பம்கிற அமைப்புல உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்குன்னு தோணுது. அதப் பொய்யா மறுத்து உங்கள நீங்களே ஏமாத்திக்கிறீங்கன்னு தோணுது. உங்களோட தனி அடையாளம் கல்யாணம் பண்ணிக் கிட்டா அழிஞ்சுடுமின்னும் பயம்."

நம்பமுடியாமல் அவனைப் பார்த்தாள். இவனால் என் மனதைப் படிக்கமுடிகிற அளவுக்கு நான் எல்லாவற் றையும் வெளிப்படுத்திவிட்டேனா? இவன் சொல்வது உண்மையா?

அவன் வைத்த கண் எடுக்காமல் அவளையே தியானித்துப் பார்த்தான்.

"இன்னும் என்ன தோணுது?" என்றாள்.
"உங்கள கல்யாணம் செய்துக்கணுமின்னு தோணுது." என்றான் அவளைக் கண்களில் நோக்கி.

அவளுக்குள் ஒரு அதிர்ச்சி அலை சட்டென்று எழும்பியது.

மௌனமாக சில நொடிகள் கழிந்தன. அவன் மேலும் தொடர்ந்தான்.

"உங்களோட பயத்தைப் பொய்யாக்கி விரட்டி, எல்லாரும் நீங்க நினைக்கறாப்பல இல்லன்னு நிரூபிக்கத் தோணுது. உங்கக் கைகளோட என் கையை உறுதியா பிணைச்சு நான் பக்க பலமா இருக்கேன்னு நம்பிக்கை கொடுக்கத் தோணுது."

பதில் எதிர்பார்த்தான். ஆனால் அவள் சொல்ல மாட்டாள் என்றும் அவனுக்குத் தோன்றியது.

அவளால் தன்னை நம்பமுடியவில்லை. எதிர்த்துக் கத்தாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக் கிறோமே..யாரிவன்? மூன்று மணி நேரம் முன்பு பரிச்சயமானவன். அதற்குள் என் வாழ்க்கையில் பங்கு கேட்கிறான். என்ன தைரியம்! அப்படியே அவன் சொல்வது உண்மையாக இருந்தாலும்... நோ...

வண்டி நின்றுவிட்டது. ஐந்து நிமிடம் நிற்கும் என்ற அறிவிப்பு வந்தது. சுற்றியுள்ள சிகரங்களை கண்ணாடி வழியாகப் பார்க்கலாம் என்றார்கள். இறங்கி நடக்க ஆரம்பித்தனர். அந்தக் குழந்தை இறங்கித் துள்ளி ஓடியது.

கைகோர்த்தபடி முன் செல்லும் அந்தத் தம்பதியரின் நடுவே நெருங்கிய அன்னியோன்யம் ஒன்று இழையோடிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது அவளால். தனக்கும் இதுபோல சாத்தியமா என்றவள் மனதின் ஒரு பகுதி கேட்டது.

ஓடிக்கொண்டிருந்த குழந்தை எதையோ கீழே தவறவிட்டான். அவன் எடுத்துக் கொடுத்தபொழுது வாங்க மறுத்து முன்பார்த்த அதே பார்வை பார்த்தான். "உன்னுடையதுதானே வாங்கிக்கொள்" என்றெல் லாம் மழலையில் சொல்லிப் பார்த்தான். ம்ஹ¥ம்.. ஒன்றும் பலிக்கவில்லை. அந்த தாத்தா தான் அவனிடமிருந்து வாங்கிக்கொடுத்தார். எல்லாருமாக நடந்து அந்தக் கண்ணாடிச் சுவற்றை அடைந்தார் கள். முட்டிக்கால் உயர சுவற்றிற்கு மேல் கண்ணாடி. கண்ணாடிக்கு வெளியே யுங்·ப்ரௌ சிகரத்தின் விஸ்வரூபம் மீண்டும். இந்த முறை மிகத் தெளிவாக, கம்பீரமாக நீல வானத்தை முட்டிக்கொண்டு நின்றி ருந்தது. சூரிய ஒளியில் மினுமினுக்கும் வெண்பனித் தோல் போர்த்தி.. அண்ணாந்து பார்த்தவர்கள் அதன் மேடுகளைத் தொடர்ந்து அப்படியே கீழே நோக்க,... அதள பாதாளத்தில் பூமி...

கீழே பார்த்த அந்தப் பாட்டி சட்டென்று நின்ற நிலையிலிருந்தே விழுந்துவிட்டார். தாத்தா பதறினார். நொடியில் அவன் என்ன நடக்கிறதென்று புரிந்துகொண்டான். சுற்றியிருந்த கூட்டத்தை நகர்ந்து காற்று விடச் சொன்னான். பாட்டியின் மூக்கில் கைவைத்துப் பார்த்தான். சுவாசம் இல்லை. இதய பகுதியில் கைவைத்துப் பார்த்தான். அதற்குள் ஒருவர் மருத்துவ உதவிக்குச் சொல்லப்போனார்.

சட்டென்று அவர்களின் மூக்கை இரு கைகளாலும் மூடினான். ஒரு நீண்ட மூச்சையிழுத்து அவர்களின் தலையைத் தூக்கி, வாயைத் திறந்து, தனது வாயை வைத்து பலம் கொண்ட மட்டும் ஊதினான். இன்னொருமுறையும் மூச்சிழுத்து ஊதினான். மார்பு ஒரே முறை ஏறி இறங்கியதே தவிர வேறு சலன மில்லை. அவன் எழுந்து அவர்களின் மார்புப் பகுதியில் கைகளால் ஊன்றி அழுத்தி அழுத்தி வேகமாக ஒரே கதியில் விடுவிக்கத் தொடங்கினான். ஒரு நிமிடத் தில் நூறு முறை இதைச் செய்திருப்பான். மீண்டும் அவரின் வாயில் ஊதினான். மார்பில் அழுத்தங்கள் கொடுத்தான்.

தாத்தாவும் அவளும் கலவரத்துடன் பார்த்தனர். தாத்தா அழுது விடுவார் போல ஆனார். குழந்தை புதிராகப் பார்த்தது.

இந்த முறை லேசான சலனம் தெரிந்தது. கைவைத்துப் பார்த்தபொழுது மூச்சுக்காற்று வர ஆரம்பித்தது. அவனது கண்களில் நம்பிக்கை ஒளி. காது வைத்துக் கேட்டபொழுது இதயத்துடிப்பு லேசாக இருந்தது. இவன் தனது உதவியைத் தொடர்ந்தான்.

"கவலைப்படாதீர்கள் அவர் சரியாகிக்கொண்டு வருகிறார்." என்றான்.

ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. மருத்துவர்கள் வரும்பொழுது நன்றாகவே மூச்சு விட்டார்.

அவர்கள் பரிசோதிக்கும்பொழுது அந்தக் குழந்தை "பாட்டிக்கு என்ன?" என்று மெல்ல மழலையில் கேட்டது.

"ஒன்றுமில்லை களைத்து விட்டார்கள். அவ்வளவு தான்." என்றவன் பதில் சொன்னான்.

"என்னைத் தலைமேல் தூக்கிவைத்துக் காட்டு கிறேன் என்றார்களே.. எழுந்திருங்கள் பாட்டி." என்றெழுப்பப் பார்த்தான். மருத்துவர்கள் அதனிடம் தொடவேண்டாம் என்று சொல்லிப்பார்த்தார்கள்.

அவன் "நான் காட்டுகிறேன் வருகிறாயா? என்று கூப்பிட்டான். ஒரு நொடி அவனை அதே பார்வை பார்த்தது. ஆனால் இந்தமுறை அது அவனிடம் வந்துவிட்டது. அவன் அதை வாரி எடுத்துத் தன் பின் கழுத்தில் அமர்த்திக் கொண்டான். "பயப்படாதீர்கள்" என்று அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு எதிர்புற காட்சியைக் காட்டக் கூட்டிப்போனான்.

அவர் மருத்துவர்களின் சில கேள்விகளுக்கு பதில் சொன்னார். பின் மருத்துவர்கள் பாட்டியைப் பரிசோதிக்க தொடங்கினர். அவள் அவருடன் நின்று கொண்டாள். அவளிடம் அவர் தன் வாழ்க்கையில், தன் குடும்பத்தில் தன் மனைவி வகிக்கும் இடத்தைச் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பற்றி மிகவும் மரியாதையாகப் பேசினார். திவாகர் அவளுடைய கணவனா என்று கேட்டார். நண்பன் என்றாள். கோடிமுறை நன்றி சொன்னார். "ஒன்றும் ஆகாது எல்லாம் சரியாகிவிடும்." என்றிவள் தன் பங்குக்குச் சொன்னாள்.

மருத்துவர்கள் இன்னொரு மாரடைப்பு என்றும் தப்பித்துவிட்டார் என்றும் சொன்னார்கள். மருத்துவ மனைக்குக் கூட்டிப்போக வேண்டும் என்றார்கள்.

இவள் சென்று திவாகரை அழைக்கப் போனாள்.

"என்ன செஞ்சீங்க? ஏதோ உயிர் காப்பு முதலுதவி மாதிரி இருந்திச்சு.."

"இத சி.பி.ஆர்ன்னு சொல்லுவாங்க. மாரடைப்பு வந்தவங்களுக்கான முதலுதவி. யூனிவர்சிட்டியில படிக்கறச்சே கத்துக்கிட்டது." என்றான்.

"வா பாட்டியப் பாக்கலாம்." என்று குழந்தையிடம் சொல்லிக்கூட்டி வந்தான்.

நல்ல சமயோஜிதம் என்றவளுக்குத் தோன்றியது.

கணங்களில் மாறும் மனிதர்கள். எதிர்பாராத தருணத்தில் சட்டென்று வெளிப்படும் பண்புகள். யாரையுமே முழுதாக மனதில் பிரதிபலிக்கமுடியாது என்று தோன்றியது அவளுக்கு. அவள் மனத்து ஓவியன் பொறுமையிழந்தவனாய் வரைந்தகொண்டிருக்கும் ஓவியத்தைத் திருத்தத் தொடங்கினான்.

குழந்தை, தாத்தா கூப்பிட்டபொழுது போக மறுத்தது. "உச்சிக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றாயே?" என்று சிணுங்கியது.

"உச்சிக்குத் தான் போகப்போகிறாய்.. பறந்து" என்று சமாதானம் சொன்னார். இவன் அதைத் தூக்கி தூரத்தில் தெரிந்த பெரிதாகச் சுற்றும் ராட்சத விசிறி ஹெலிகாப்டரைக் காண்பித்தான். கண்களில் ஆச்சர்யம் காட்டியது. வருகிறேன் என்றது தாத்தா விடம். பிறகு அது அவனையும் கூப்பிட்டது. அவன் இரயிலில் வருவதாகச் சொல்லிச் சமாதானப் படுத்தினான்.

அவர் அவனுக்குக் கண்கள் கலங்க நன்றி சொன்னார். அவனது முகவரி அட்டையை வாங்கிக் கொண்டு விடைபெற்றார். அந்தக் குழந்தை மீண்டும் சந்திப்போம் என்றது தனது மழலையில்.

தாமதமாக இரயில் வண்டி புறப்பட்டது. மேலே போய்ச் சேரும்வரை இருவரும் பேசிக்கொள்ள வில்லை. பயணம் நீண்டு கொண்டே போவதாக அவளுக்குத் தோன்றியது. வாழ்க்கை கூட முடிவுறாத இரயில் பயணமோ? இல்லை சென்று சேரும் சிகரமா?

இறங்கும்போது கேட்டான், "என்னோட முடிவப் பத்தி நீங்க இன்னும் எதுவும் சொல்லவே இல்லையே?"

"எனக்கு யோசிக்கணும்." என்றாள்.

நிதானமாக நடக்கையில், பாறைச்சுவர்களில் கைவைத்துப் பார்த்தாள். சிலீரென்று சில்லிட்டது. உச்சிக்கு வந்துவிட்டோம் என்பதைத் தட்பவெட்பம் உணர்த்தியது. நிலையத்தை ஒட்டிய கட்டடத்துள் நுழைந்து மேலேறி வெளியில் வந்தனர்.

வாவ் என்றான் அவன். எதிரே தெரிந்த சிகரம் வர்ணிக்கமுடியாத தூய்மையுடனும், அழகுடனும் இருந்தது. கடல் நீல ஆகாயம் பின்புலத்தில். மேகத்திற்கும் பனிப்போர்வைக்கும் வித்தியாசம் சொல்லமுடியாத நிற ஒற்றுமையுடன் சிகரம் வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரண்டு மலைத்தொடர்களுக்கிடையில் மௌனமாய் உறைந்த பனி நதி.

அவர்கள் நின்ற இடத்தில் கம்பித் தடுப்பு இருந்தது. இரண்டு பேர் முக்காலியில் நிழற்படக் கருவியை வைத்து இந்தக் காட்சியை படம்பிடிக்க முயன்று கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி தூரிகையால் இந்தக் காட்சியை வரைந்துகொண்டிருந்தாள்.

எல்லாவற்றையும் சில கணங்கள் மறந்து அவள் மிகுந்த பரவச நிலையில் இருந்தாள். அவனுடன் சேர்ந்து அந்தப் பனி நதியின் மூலப் பகுதிக்கு நடந்து சென்று இறங்கினாள்.

அவர்கள் நின்ற இடத்தில் எத்தனையோ பயணிகளின் பாதச்சுவடுகள். அழுக்கடைந்த பனி. பயணிகள் போக இயலாத இடங்களில் மட்டும் நிர்மலமான வெண்மை. மனிதர்களே தீண்டமுடியாத உயரத்தில், அந்தப்பனியைப் போல் நிர்மலமாய், உருகாமல், உடையாமல் என்றும் இருந்திட அவளுக்குள் ஓர் ஆசை பிறந்தது. அவனைப் பார்த்தாள். இயற்கைக்கு நடுவில் இதோ இருக் கிறான். அலைபாயாமல் அவன் மனம் இப்போது அடங்கியிருக்குமா? இல்லை எனது முடிவைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறானா? உற்றுப்பார்த்த பொழுது அவன் எந்தச் சலனமும் முகத்தில் காட்டாமல் அந்த முடிவற்ற உறைந்த பனிநதியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் போட்டிருந்த கம்பளி ஆடைகளைத் தாண்டிக் குளிர் நன்றாக உரைக்க ஆரம்பித்தது. கட்டடம் நோக்கி மீண்டும் நடந்தனர்.

"எத வச்சு நான் தான்னு முடிவு பண்ணீங்க?" என்று கேட்டாள்.

அவன் நின்றுவிட்டான். அவளும் நின்று திரும்பிப் பார்த்தாள். சூரிய ஒளியில் கண்கள் கூசியது.

அவனும் அவளையே பார்த்துவிட்டுச் சொன்னான், "தெரியல...."

"இப்படிச் சொன்னீங்கன்னா எப்படி?"

யோசித்தான். " எனக்குத் தெரிஞ்ச பெண்கள்லாம் எங்க அம்மாவும், அத்தையும்தான். நீங்க அவங்கள் லேந்து வித்தியாசப்படுறீங்க. சுயமா சிந்திக்கிறீங்க.. சொந்தக் கால்ல நிக்கிறீங்க..."

"ம்....வேற?"

"தனியா வேற தேசத்துக்கு வந்து வேல செய்ய றீங்க..."

"ஓவியம் சேக்கறீங்க.."

"இயற்கைய வர்ணிக்கிறீங்க...." கண் சிமிட்டினான்.

"ம்... என்கிட்ட இருக்கற நல்ல விசயத்தலாம் மட்டும் பாத்துருக்கீங்க" என்றாள்.

"ரொம்ப கவலையும் படறீங்க..." ஒரு சிறுமியைப் பார்ப்பது போலப் பார்த்தான்.

"மனுசங்கன்னா நல்லதும் கெட்டதும் இருக்கறது தானே. இன்னிக்கே எல்லாப் பக்கத்தையும் பாக்க முடியுமா? வாழ் நாள் முழுக்க எதுக்கு இருக்கு அப்போ?" என்றபடி புன்முறுவல் பூத்தான்.

"நான் முடியாதுன்னு ஒருவேளை சொன்னா...?"

அவன் அவளையே கவனித்துப் பார்த்தான். அந்த நொடியில் அவன் கண்கள் அவளது கண்களை ஊடுருவி ஆழமாகப் பார்த்து விலகின. சில மணி நேரச் சந்திப்பிற்குள் இருவரிடமுமே ஓர் எதிர்பார்ப்பு தோன்றிவிட்டிருந்ததை உணர்ந்து இருவரும் ஆச்சர்யப்பட்டார்கள். மீண்டும் மௌனம்.

அவளுக்கே பதில் தெரியும் என்றவன் சொல்வது போல் இருந்தது. அவளில்லாவிட்டால் இன்னொரு...

"உங்க மனசுல இருக்கற கேள்விக்கெல்லாம் இந்த மாதிரி சந்திப்பிலேயே பதில் கிடைச்சிடுமின்னு எதிர்பாக்குறீங்களா?" என்று கேட்டுவிட்டு, பதில் எதிர்பார்க்காமல், ஒருமுறை கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துவிட்டு வந்த வழியே நதிமூலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

என்ன சொல்ல வருகிறான். வாழ்க்கையில் இதைவிட பெரிய கேள்விகள் காத்திருக்கின்றன என்கிறானா? ஒரு நிமிடம் பிரமித்தாள். அதற்குள் இவனிடம் எனக்கொரு ஈர்ப்பா? அவள் மேலே யோசிக்க விரும்பவில்லை. அவன் சென்ற திசைக்கு எதிர்புறமாக கட்டடத்தை நோக்கி நடந்தாள்.

அந்த ஓவியப் பெண்மணியைப் பார்த்ததும் நின்றுவிட்டாள். அந்த மலைத்தொடரையும், பனி நதியையும், நடுவே தெரியும் கரும்பாறைகளையும் அவள் தத்ரூபமாக படம் பிடித்திருந்தாள். இன்னும் மேல்பூச்சுகளைப் பூசி மெருகேற்றிக் கொண்டிருந் தாள்.

"நன்றாக வரைகிறீர்கள்." என்றாள் அவளிடம்.

"ஓ..நன்றி.." சினேகமாகச் சிரித்தாள் ஓவியப் பெண்மணி.

"எவ்வளவு நேரமாக வரைகிறீர்கள்?"

"நான்கு நாட்களாக.." என்று பதில் சொன்னாள்.

ஆச்சர்யப்பட்டாள். சிறிது நேரம் அவள் வரைவதையே பார்த்தாள்.

"நிமிடத்திற்கு நிமிடம் மேகம் நகர்கிறது. சூரிய ஒளியின் வீர்யம் சிலசமயம் அதிகமாக ஒளிர்கிறது. சிலசமயம் குறைந்து மங்குகிறது. மாறுகின்ற இந்தச் சூழலில் எப்படி வரைகிறீர்கள்?"

"கஷ்டம்தான். ஒன்று அதுவரை பார்த்ததை ஞாபகத் திலிருந்து எடுத்து வரைவேன். இல்லை அதே வெளிச்சம் வரும்வரை காத்திருப்பேன். என் கணிப்பையும் கூட சேர்த்துக்கொள்வேன்."

கொஞ்ச நேரம் அதையே வெறித்துப் பார்த்துவிட்டு, "என்னதான் நாம் முயன்றாலும் நிஜமான இயற்கை யழகை சிறைபிடிக்கமுடியுமா?" என்று கேட்டாள்.

இந்தக் கேள்வி அந்த ஓவியப்பெண்மணியின் ஆழத்தில் சென்று இறங்கியிருக்க வேண்டும். ஒரு நொடி வரைவதைவிட்டு இவளைத் திரும்பிப் பார்த்தாள்.

"உண்மைதான். நிஜ அழகிற்கு இந்தப் பிரதி யெல்லாம் சமம் இல்லைதான். ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்.."

"இப்படி வரைந்து பிரதியெடுக்க முயல்வதின் மூலம், இயற்கையின் அங்கங்களுடன் ஓர் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாக உணர்கிறேன். இந்த அந்தரங்கமான தொடர்பு இயற்கையை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த அனுபவத்தை என்னால் வார்த்தைகளில் விளக்க முடியாது. வரைந்து பார்த்தால்தான் தெரியும்." என்றாள்.

அவளுக்குச் சட்டென்று எல்லாமே தெளிவாகி

விட்டது என்று தோன்றியது. அவள் மனத்து ஓவியன் பயமுறுத்தும் பழைய ஓவியப் பிரதிகளைக் கிழித்தெறிந்தான். இனி தொடர்புகொள்ள வேண்டிய ஓவியத்திற்காக புதிய கித்தானை எடுத்துத் தயாரானான். இதற்கிடையில் அவள் அந்த நதிமூலப் பகுதியில் நின்றுகொண்டிருந்த திவாகரை மெல்ல அணுகி அவன் கைகளை எடுத்துத் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டாள்.

மனுபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline