|
|
|
அன்புள்ள சிநேகிதியே
என்னுடைய மாமனார் இரண்டு மாதங்களாக எங்களுடன் வந்து தங்கியிருக்கிறார். இந்தியாவில் பெரிய பதவியிலிருந்தவர். நல்ல பெயர், கௌரவம் இருந்தது. இப்போது பதவி ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தும் கன்ஸல்டன்சி அது, இது என்று மிகவும் பிஸி. தன்னுடைய தொழிலையே கவனித்துக் கொண்டு அதிலேயே திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். மனைவியை கவனிக்க நேரம் இருந்ததில்லை. என் மாமியார் மிகவும் நல்ல சுபாவம். அவருடைய திறமைகளை வெளிக் கொண்டு வராமலேயே என் மாமனார் வீட்டிலேயே இருத்தி, ஒரு குடும்பத் தலைவியாகவே வைத்து விட்டார். தலைவியாக என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் மாமனார் வைத்தது தான் சட்டம். மிக மிகக் கட்டுப்பாடானவர். எனக்குக் கல்யாணம் ஆகி வந்த புதிதில், என் மாமனாரை ‘ஏன் இப்படி அம்மாவை மட்டம் தட்டுகிறீர்கள்?' என்று கேட்கத் தோன்றும். ஆனால் பயம். அப்புறம் என் மாமியாரைக் கேட்டதில், 'அது அவருடைய பிறவிக் குணம். இதற்கு மேல் இவர் மாறி, நான் என்ன வாழ்க்கையில் சாதிக்கப் போகிறேன். நீ அவரிடம் எனக்காகச் சண்டை போட்டு உன்னுடைய இந்திய வருகையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே' என்று சொல்லிவிட்டார்.
| சுவாசக் காற்றையும், சூரிய வெளிச்சத்தையும் எப்படி நாம் எந்தவித நன்றி பாராட்டலும் இல்லாமல் அனுபவிக்கிறோமோ அதே போலத்தான் சில உறவுகளையும் நாம் நமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்கிறோம். | |
ஆறுமாதம் முன்பு என் மாமியார் மாரடைப்பால் மறைந்து போனார். யாருக்கும் எந்தச் சிரமமும் கொடுக்கவில்லை. மாமனாரை ஒரு மாறுதலுக்கு இங்கே வரவழைத்தோம். தனியாக அங்கே இருக்க வேண்டாம் என்று. அவரைப் பார்த்தவுடன் பெரிய அதிர்ச்சி எனக்கு. ஒரு பைத்தியக்காரன் போல் ஆகிவிட்டார். எப்போதும் என் மாமியார் நினைவுதான் - அவள் அப்படிச் செய்வாள், இப்படிச் செய்வாள் என்று. வீட்டிற்கு யார் வந்தாலும் என் மாமியாரைப் பற்றித்தான் பேச்சு. என் தோழிகள் எல்லோரும் 'உன் மாமியார் எவ்வளவு கொடுத்து வைத்தவர்; இவ்வளவு அன்பைப் பொழியும் கணவரைப் பெறுவதற்கு' என்று சொல்கிறார்கள். குற்ற உணர்ச்சியால்தான் இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எனக்கும் என் கணவருக்கும் புரிகிறது. ஆனால் இது ஒரு வரைமுறையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வர பயப்படும் அளவுக்குத் தன் மனைவியைப் பற்றி மட்டுமே பேசி போரடிக்கிறார். எனக்கும் பொறுமை குறைந்து கொண்டே வருகிறது. நான் என்ன செய்தால் நன்றாக இருக்கும்?
இப்படிக்கு .................. |
|
அன்புள்ள சிநேகிதியே,
சுவாசக் காற்றையும், சூரிய வெளிச்சத்தையும் எப்படி நாம் எந்தவித நன்றி பாராட்டலும் இல்லாமல் அனுபவிக்கிறோமோ அதே போலத்தான் சில உறவுகளையும் நாம் நமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்கிறோம். We take them for granted. ஒரு நொடி மூச்சுத் திணறல், ஒரு நொடி சூரிய அஸ்தமனத்தின் இருட்டு, ஒரு சொட்டு தாகம் தணிக்கும் நீர் - இவற்றின் அருமையை அவை இல்லாதபோதுதான் உணருகிறோம். உங்கள் மாமனார் போல் நிறையக் கணவர்கள், மனைவிகள் கூட உண்டு. இதையெல்லாம் காலம் கடந்தபின் விமர்சித்துப் பயனில்லை. இப்போது நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுதான். ஒரு தர்ம ஸ்தாபனத்தை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஒரு குறிப்பிட்ட வியாதியில் வருந்துபவர்களுக்கோ உதவி செய்யும் வகையில் நீங்களும் உங்கள் கணவரும் ஊக்கம் கொடுங்கள். உங்கள் மாமனாரின் குற்ற உணர்ச்சி, சமூகத்தில் நலிந்த யாருக்காவது பயனுள்ளதாக அமையட்டும். அப்போது அவருக்கு ஒரு இலக்குத் தெரியும். கொள்கை இருக்கும். அவருடைய தொழில் அனுபவமும் தேர்ச்சியும் இது போன்ற ஸ்தாபனங்களை வெற்றிகரமாக நடத்த உதவியாக இருக்கும். குற்ற உணர்ச்சியை மேலும் குத்திக் கிளறுவதில் ஏதும் பிரயோசனம் இல்லை என்று நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்கள். இதுதான் எனக்குத் தெரிந்த வழி.
வாழ்த்துக்கள்! சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|