|
|
அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு ஏற்பட்ட அனுபவம் போல வேறு யாருக்காவது உண்டா என்பது சந்தேகம். நான் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர். இந்தியாவில் படித்து முடித்து, நல்ல வேலையில் இருந்தேன். வாழ்க்கையில் ஏமாற்றம். வெறுத்துப் போய், இங்கே MS படிக்க வந்தேன். நல்ல வேலையும் கிடைத்துத் தங்கி விட்டேன்.
கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை விரும்பினேன். அவர் எனக்கு 2 வருடம் ஜூனியர். கிராமத்திலிருந்து வந்தவர். சீனியர்கள் 'rag' பண்ணும்போது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான் தனிப்பட்ட முறையில், வலுவில் சென்று உபதேசம் செய்து, திரும்பி கிராமத்திற்குப் போகாமல் தடுத்தேன். அந்தப் பழக்கம் தொடர்ந்து, காதலாக மாறியது. படிப்பில் ஜூனியராக இருந்தாலும் என்னை விட ஒரு வயது பெரியவர். நல்ல புத்திசாலி. மிகவும் நல்லவர். ஜாதி வித்தியாசம், ஜூனியர்-சீனியர் என்பதால், எங்கள் காதலை மிக ரகசியமாக வைத்துக் கொண்டிருந்தோம்.
நான் படிப்பை முடித்து, டெல்லிக்கு வந்தேன். அடிக்கடி வெளிநாடு பயணம். இருந்தும் போன், மின்னஞ்சல் தொடர்பு இருந்தது. ஒரு முறை 6 மாதம் 'assignment'ல் வெளிநாட்டில் இருந்தேன். அவர் படிப்பை முடித்து வேலை தேடும் சமயம். கொஞ்சம் கொஞ்சமாக மின்னஞ்சல் பதில்கள் குறைய ஆரம்பித்தது. போன் செய்தால் ஆள் இல்லை. மிகவும் குழம்பிப் போய்விட்டேன். திடீரென்று ஒரு மின்னஞ்சல் அவருடைய நெருங்கிய நண்பரிடமிருந்து: ''குடும்ப நிலைமை காரணமாகத் திருமணம் செய்து கொண்டு விட்டான். உங்களிடம் சொல்ல முடியாமல் அவன் கூசுவதால் நான் விஷயத்தை எழுதுகிறேன்.''
என்னுடைய அதிர்ச்சியும், ஏமாற்றமும் யாரிடம் சொல்லி அழ முடியும்? இந்தியாவிற்கு திரும்பிச் சென்றபோது அவர் சிங்கப்பூரில் இருப்பதாக கேள்விப் பட்டேன். உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கித் தவித்தேன். பெற்றோர்கள் திருமணப் பேச்சை எடுத்த போது, மேல்படிப்பு சாக்கில் அமெரிக்கா வந்து விட்டேன்.
எல்லாவற்றையும் சிறிது மறந்துதான் இருந்தேன். படிப்பு முடிந்து, இந்த நிரந்தர வேலைக்கு வந்த பிறகுதான் வாழ்க்கையின் தன்மை தெரிய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான் ஒரு போன் கால். 6 வருடம் கழித்தும், அந்தக் குரலை என்னால் மறக்க முடியவில்லை. 5-6 மாதம் கன்சல்டன்டாக வந்திருப்பதாகவும், நண்பர்களிடமிருந்து என் இடம் தெரிந்து கூப்பிட்டதாகச் சொன்னார். அழுகை, ஆத்திரம், கோபம், தாபம் எல்லாம் சேர்ந்து விளாசி எடுத்தேன். பொறுமையாக இருந்தார். தான் செய்த தவறை ஒத்துக் கொண்டார். தான் கோழையாக இருந்ததை நினைத்து அவமானப்பட்டார். எப்படியோ சமாதானம் ஆகி, மீண்டும் நண்பர்கள் ஆனோம்.
வேலையில் சொந்த மின்னஞ்சல், போன் கூடாது என்பதால் தினம் வீட்டிற்கு இரவு 7 மணிக்கு போன் செய்வார். இப்போதெல்லாம், எழுந்திருக்கும்போதே அந்த நேரத்தை நினைத்து மனதில் பரவசம். எல்லா விஷயமும் பேசுவோம். இப்போது நிறைய தன்னம்பிக்கை தெரிகிறது. ஆனால், குடும்பத்தைப் பற்றி மட்டும் பேசுவதைத் தவிர்த்தார். 3 வயதில் மகன் இருக்கிறான் என்று தெரிந்தது.
இன்னும் நாங்கள் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை. ஆயிரம் மைல் தள்ளி இருக்கிறோம். போன வாரம், கிறிஸ்துமஸ்/புது வருஷத்துக்காக ஒரு வாரம் எங்கேயாவது ஒன்றாகப் போய்விட்டு வரலாமா என்று கேட்டார். அப்போதுதான் ஒரு குழப்பம்; இந்த ஊர் வாழ்க்கை முறையைப் புரிந்து கொண்டாலும், இன்னும் உடல், மனக்கட்டுப்பாட்டுடன் இந்தியப் பெண்ணாகத்தான் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, திருமணமான, முன்னாள் காதலருடன் தனியாக ஒரு வாரம்?! அவரிடம் அதைப்பற்றி கேட்டே விட்டேன். மனைவி தன்னை சரியாகப் புரிந்து கொள்ளாதவளாக இருப்பதாகவும், அவளை விவாகரத்து செய்து, நாங்கள் மறுபடியும் ஒன்று சேர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக உணர்த்தினார்.
அவரை நான் உண்மையாகக் காதலிக்கிறேன். அவர் பொய் சொல்லும் வழக்கம் இல்லை. அவர் சொல்வதையெல்லாம் எனக்கு நம்ப வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அவரோடு உலகமெல்லாம் சுற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் நினைப்பது தவறா? அவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் விவாகரத்து செய்து கொண்டால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நானே வலுவில் போய் யாருடைய வாழ்க்கையிலும் புகுந்து, கெடுக்கவில்லையே. நான் சுயநலக்காரியா? எனக்கு வயது 30க்கு மேல் ஆகிவிட்டது. ஏமாற்றத்திலும், தனிமையிலும் 6 வருடங்கள் கழித்து விட்டேன். இப்போது வாழ ஆசைப்படுகிறேன். அது தவறா?
இப்படிக்கு. .................. |
|
அன்புள்ள,
சிக்கலான விஷயம். நீங்கள் நிறையச் சிந்திக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகள், ஆசாபாசங்கள் நியாயமானவை. சினிமாவில் வரும் 'வில்லி'யின் விஷமத்தனம் இங்கே இல்லை. உங்கள் வாழ்க்கையின் ஒழுக்கம் கண்டிப்பாகத் தெரிகிறது.
ஒரு கோழையைக் காதலிக்கக் கூடாது என்று எந்த நீதியும் கிடையாது. அவருடைய நல்ல குணம் உங்களை ஈர்த்திருக்கிறது. இது teen age காதலும் இல்லை. அவரை மீண்டும் நம்பலாமா, மறுபடியும் பழைய கதையாகிவிடுமோ என்ற சந்தேகங்களை நீங்களே உங்களுக்குள் ஆயிரம் முறை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆகவே, அவற்றை நான் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
நான் 5 முறைகளைக் குறிப்பிடுகிறேன். முயற்சி செய்து பாருங்கள். அப்புறம் உங்கள் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.
1. சீனியர் என்ற முறையில், நீங்கள் நல்ல நண்பராக முதலில் இருந்திருக்கிறீர்கள். 6 வருடங்கள் அவருடைய காதல் இல்லாமல், நீங்கள் வாழ்ந்து, முன்னேறியிருக்கிறீர்கள். ஆகவே, காதல் என்ற போர்வை இல்லாமல், உங்கள் நட்பை மட்டும் இருத்திக்கொண்டு, அரும்பும் ஆசைகளை வெட்டிக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். உண்மையான ஆண்-பெண் நட்பிலும் இன்பம் இருக்கிறது. அதை நட்பு அளவில் நிறுத்திக் கொள்ளும் ஒழுக்கம் உங்களிடம் நிச்சயம் உண்டு. (கல்யாணம் செய்து கொண்டு விட்டாரே, அம்மா!)
2. மனைவியிடம் உள்ள அபிப்ராய பேதம், விவாகரத்து பற்றிக் குறிப்பாகத்தான் உணர்த்தி யிருக்கிறார். விவாகரத்து பற்றி நினைக்கும் அளவுக்கு அந்தப் பெண் அவ்வளவு கொடுமையானவளா, இவர் அவ்வளவு நல்லவரா என்பதை நீங்கள் ஆராய்ந்து தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும். (இந்தியப் பண்பாட்டில் ஊறியிருக்கிறீர்களே! மனைவி 'காபி' கொடுக்கவில்லை. கணவர் 'Base Ball' பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் காரணங்களாக இருக்க முடியுமா, அம்மா!)
3. உங்கள் தொடர்பே உபதேசத்தில் ஆரம்பித்திருக்கிறது. ஆகவே, ஆசானாக இருந்து, அவர் குடும்ப வாழ்க்கையைச் செப்பனிட முடியுமா என்ற பாருங்கள். அவர் மேல் அதிக அன்பும் பாசமும் வைத்திருப்பதால், அவருடைய மகிழ்ச்சி எது, எதனால் என்று காதலி கோணத்திலிருந்து சிறிது மாறுபட்டு பாருங்கள். (இந்த ஊருக்குப் புதிதாக வந்திருப்பதால், அவரும் தனிமையின் காரணமாக உங்களுடன் தொடர்பை வைத்துக் கொண்டிருக்கிறாரோ? மழலை பேசும் மகன் இருக்கிறானே அம்மா! அவ்வளவு எளிதில் தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து விடுவாரா?)
4. ஒரு வாரம் பேசாமல் இருக்க முயற்சி செய்து பாருங்கள். இல்லை பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனம் முதலில் முரண்டு பிடிக்கும், பிறகு சமாதானத்திற்கு வரும். (கண்டிப்பாக நீங்கள் அனுபவித்த தனிமை இருக்காது. Because you are wanted)
5. உங்கள் அறிவுக்கும், பண்பாட்டுக்கும், இளமைக்கும், உங்களுக்கு எதிர்காலம் நீங்கள் விரும்பும்படி அமைய நிறைய வாய்ப்புகள் உண்டு. ஐயோ பஸ்ஸைத் தவற விட்டு விட்டோமே என்று வீட்டுக்குள் இருந்து கொண்டு சிலர் வருத்தப்படுவார்கள். உண்மையில், ஒரு 'Limousine' வெளியே அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அது போலத்தான் வாழ்க்கை.
உங்கள் நண்பர் ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டிருந்து உங்களைச் சந்திக்க முயற்சி செய்திருந்தால், அது வேறு விஷயம். இந்தக் கடிதமே கூட எழுதியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இப்போது, நீங்கள் நிறைய, I mean நிறைய, யோசிக்க வேண்டும்.
எந்த முடிவு எடுத்தாலும், அதன் பின் விளைவுகளையும் எதிர்பார்த்து, சமாளிக்கத் தயாராகுங்கள். இது உங்கள் வாழ்க்கை.
வாழ்த்துக்கள். அன்புடன் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|
|