Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
மனதில் சுமந்த குப்பை
- சித்ரா வைத்தீஸ்வரன்|நவம்பர் 2017|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
என் வாழ்க்கையில் நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன். இளவயதில் திருமணம். அப்பாவுக்குச் செல்லப்பெண். அமெரிக்காவிலிருந்து எஞ்சினியர் மாப்பிள்ளை. எனக்கு 18 வயதுதான் ஆகியிருந்தது. கல்லூரியில் முதல் வருடம். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு மிகவும் பெருமையோடு திருமணம் செய்துகொண்டேன். அப்பா வசதிக்குமீறி தடபுடலாக நடத்தி வைத்தார். என் அம்மாவுக்கும் எனக்கும் அவ்வளவு ஒத்துப்போகாது. நான் பிறந்த பிறகு அதிர்ஷ்டம் வந்தது என்று அப்பா மற்றவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு என்னைக் கொண்டாடினார். என் அக்காவுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பாக எனக்கு ஆகிவிட்டது. அம்மாவுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. மிகவும் சுயநலமாக இருந்திருக்கிறேன். அப்போது எனக்கு அதெல்லாம் புரியவில்லை. இங்கே வரப்போகும் சந்தோஷத்தில் தலைகால் தெரியாமல் ஆடியிருக்கிறேன். அப்போது புரியவில்லை. அந்த 18 வருடங்கள்தான் என்னுடைய அருமையான வாழ்க்கை.

இங்கே வந்தபிறகு எல்லாம் தலைகீழாகப் போனது. எனக்கும் என் கணவருக்கும் 10 வயது வித்தியாசம். முதலில் என்னை எப்போதும் ’அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே’ என்று கட்டளையிட்டுக் கொண்டே இருப்பார். எனக்கு அது பிடிக்கவில்லை. வீட்டுவேலை செய்யத் தெரியாது. அப்பாவுடன் ஃபோனில் பேச ஆசைப்படுவேன். எதற்குமே உரிமையில்லை. ஒருதடவை அவருக்குத் தெரியாமல் என் அப்பாவைக் கூப்பிட்டுப் பேசிவிட்டேன். அந்தக் கைக்குச் சூடு போட்டுவிட்டார். எப்போதும் அழுதுகொண்டே இருப்பேன். பேசுவதற்குப் பக்கத்தில் யாரும் இல்லை. இதற்கிடையில் நான் கர்ப்பம் ஆனேன். அந்த விஷயத்தை என் அப்பாவுக்குத் தெரிவிக்கும் சாக்கில் என் கஷ்டத்தையும் சொல்லி அழுதேன். அவரால் இங்கு வர முடியவில்லை.

இங்கு இருந்த ஒரு குடும்ப நண்பர் மூலமாக என்னை என் கணவரின் பிடியிலிருந்து மீட்கமுயன்றார். அந்த அங்கிள் நிறைய உதவினார். எப்படியோ ஒரு ஷெல்டரில் இருந்து என்னைப் பாதுகாத்துக்கொண்டு, டிவோர்ஸ் செய்துவிட்டு, என் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். கையில் மூன்றுமாதக் குழந்தையை வைத்துக்கொண்டு வேலையும் பார்த்துக்கொண்டு மாலையில் படித்து - Miserable days! திரும்பி இந்தியா போக வாய்ப்பே இல்லை. நான் மறுபடி அப்பாவைப் பார்க்க முடியவில்லை. ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார். அடிமேல் அடி. அம்மாவுடன் பேசினாலே அது விவாதத்தில்தான் முடிந்தது. ஆகவே பேசுவதையே நிறுத்து விட்டேன். என் கணவர் எனக்குச் செய்த கொடுமைகளை பிறரிடம் சொன்னபோதுதான், அவர் ஒரு sadist என்பது தெரிந்தது. ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தேன். தனி வாழ்க்கை - நான், என் மகன், என் வேலை, படிப்பு என்று பல வருடம் வாழ்ந்தேன். தனி வாழ்க்கையின் தொந்தரவுகளும் இருந்தன. நிறைய ஆண்கள் கழுகுகள்போல வட்டமிடுவார்கள். அந்தப் பாதுகாப்பின்மையை நினைத்துப் பல இரவுகள் தூங்காமல் பயந்துகொண்டே இருந்தேன்.

இதற்கிடையில் நான் வேலை பார்க்குமிடத்துக்கு ஓர் இந்திய இளைஞர் வந்தார். அவருக்குப் புது இடம். நான் கொஞ்சம் அவருக்கு ஆறுதலாக இருந்தேன். அப்படியே பழகிப்போய் எங்களுக்குள் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தாலும், அவர் தன் குடும்பத்தை எதிர்த்து என்னைத் திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், இந்தத் திருமணத்திலும் பிரச்சனை இல்லாமல் இல்லை. எப்படியோ சமாளித்து எல்லோரையும் கல்லூரிக்கு அனுப்பி, அவரவர்கள் தனியாக இருக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர் மூலமாக எனக்கு ஒரு பையன், அப்புறம் பெண். என்னுடைய இரண்டு பையன்களுமே என்னிடம் நெருக்கமாக இருந்தார்கள். என் கணவர் தன் பெண்ணுக்குத்தான் முதலிடம் கொடுப்பார். ஆரம்ப காலத்தில் இவர் தன் பையன், பெண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலாக வாங்கிக்கொண்டு வரும்போது நான் மிகவும் சண்டை போட்டிருக்கிறேன். இரண்டு பையன்களுக்குள் வித்தியாசம் பார்க்காமல் இருக்க அவரால் முடியவில்லை. ஆகவே பெண்ணை மட்டும் கவனித்துக் கொள்வார். நான் குறை சொல்லமுடியாது. நானும் அப்படித்தானே வளர்ந்தேன். நிறையப் பணப் பற்றாக்குறை, சமூகப் பிரச்சனைகள். எப்படியோ 30 வருடம் தள்ளியாகி விட்டது.

எல்லாரையும் போல வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கும் அருமையான நேரங்கள் என்று எதுவும் எனக்கு இல்லை. என்னுடைய பெண்ணும் சமீபத்தில் வேறு ஸ்டேட்டிற்குப் போய்விட்டாள். அதற்குப் பிறகு எங்கள் இரண்டு பேரையும் தனிமை வாட்டுகிறது. என் கணவர் வாரக்கடைசியில் எங்கேயாவது வெளியே கிளம்பிவிடுகிறார். நான் இப்போதெல்லாம் பழையதை நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அடிக்கடி அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். நம்ப மாட்டீர்கள். இந்தியாவிற்குப் போய் பல வருடம் ஆகிவிட்டது. உறவுக்காரர்கள் யார் யார் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் அம்மா, என் அக்காவுடன் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பழைய ஃபோன் நம்பர் மாறியிருக்கிறது. எப்படி இவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கிறேன் என்றும் நினைக்கிறேன். இப்போதெல்லாம் அடிக்கடி அழுகிறேன். முக்கியமாக என் பழைய கணவர் என்னை மிரட்டிய விதம், என்னை அடித்தது, சுவரில் என் தலையை நசுக்கியது என்றெல்லாம் இப்போது நடப்பதுபோல வலியை உணர்கிறேன். ‘கிறீச்’சென்று கத்துகிறேன். என் கணவரிடம் சொல்லப் பயமாக இருக்கிறது. அவர் ஏதாவது கடுமையாகப் பேசி, என் நிலைமையை மோசமாக்கி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. சைகாலஜிஸ்டிடம் போகுமளவுக்கு இது சீரியஸா, இல்லை நானே என்னைக் கண்ட்ரோல் செய்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. உங்கள் உதவியை எதிர்பார்க்கிறேன். கடவுள் ஏன் என்னை இப்படி அவதிப்பட வைக்கிறார்?

இப்படிக்கு
...................
அன்புள்ள சிநேகிதியே,
சராசரி வாழ்க்கை நிலைமையைவிட உங்களுடையது மிகவும் பிரச்சனையுள்ளதாக அமைந்திருக்கிறது, வருத்தமாக இருக்கிறது. ஆனால், அத்தனை சோதனைகளையும் தாண்டி, நீங்கள் ஒரு படித்த விவேகமுள்ள மனைவியாக, பொறுப்புள்ள தாயாக இருந்து உங்கள் கடமையை நிறைவேற்றி உள்ளீர்கள். நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். உங்களுக்கே நீங்கள் ஒரு அவார்டு கொடுத்துக் கொள்ளுங்கள்.

கடல் அலைபோல ஒரு பிரச்சனை மேல் இன்னொன்று வந்துகொண்டே இருந்தும், survival-க்காக நீங்கள் உங்களுக்குள் பாரத்தை அழுத்தி அழுத்தி வைத்தபடி வெளிச்சுமையை இறக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். ஒரு காலகட்டத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களும், வயதால் ஏற்படும் தள்ளாமையும் உள்மனதை உலுக்கி உங்களுக்குள் இருந்த குப்பையை வெளியில் தள்ளப் பார்க்கின்றன. அது உங்கள் தவறில்லை. உங்கள் வயது சரியாகத் தெரியவில்லை. ஒரு 50-55க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். Menopause காலத்தின் விளைவாக இருக்கலாம். உங்கள் தனிமை உங்களுக்கு நிறைய நேரத்தைக் கொடுத்து, பழைய புத்தகங்கள், பழைய சினிமாக்களைப் பார்க்க விரும்புவதுபோல பழைய நினைவுகளில் உங்களைக் கொண்டு தள்ளி, அதிலிருந்து விடுபட முடியாமல் நீங்கள் அவதிப்படலாம். குழந்தைகளும் வீட்டைவிட்டுப் போய் கணவரும் உங்களுடன் நேரம் கழிக்காமல் இருப்பது உங்களுக்குள் ஒரு வெறுமையை ஏற்படுத்தியதன் விளைவாக இருக்கலாம்.

உங்களை நீங்களே வேறு மனிதராக நினைத்து, எதனால், ஏனிந்த மனச்சோர்வு என்று கேள்வி கேட்டுக்கொண்டால் அந்தக் கேள்வியிலேயே பதிலும் கிடைத்துவிடும். அதில் கிடைக்கும் மனத்தெளிவு உங்களுக்கு சுயநம்பிக்கையை உண்டுபண்ணும். ஆக்கபூர்வமான வேலையில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பழைய நினைவுகளைத் திரும்பி வரவிட மாட்டீர்கள்.

நீங்கள் அனுபவித்த கஷ்டத்தைவிட வேறென்ன புதிதாக வந்துவிடப் போகிறது. எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமை பெற்றுவிட்டீர்கள். பழைய நினைவுகளையே garbage ஆக நினைத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஏன் சுமக்கிறீர்கள்? தள்ளிவிட முடியவில்லை என்று நினைக்காதீர்கள். உடலால் செய்வது போல மனதால் செய்வது ஒரு கலை. கற்றுக்கொண்டால் மனநிம்மதி உடனே கிடைக்கும். உங்கள் அழுகை, பயம் எல்லாம் மிகவும் அதிகமாகப் போனால், medical intervention is better. That is your call.

வாழ்த்துக்கள்,
சித்ரா வைத்தீஸ்வரன்,
தொடர்புக்கு: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline