|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே:
ஒரு நல்ல காரியம் செய்து முடிக்கிறோம் என்ற நினைப்பில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். நாங்கள் இந்த இடத்துக்குப் புதிதாக வந்தபோது, 5 வருடங்களுக்கு முன்னால், என் கணவர் காலையில் வேலைக்குப் போய்விட்டால் இரவு வருவதற்கு 9, 10 மணியாகி விடும். எனக்கு work permit கிடையாது. மிகவும் போர் அடிக்கும். அப்போது இந்தப் பையனை ஒரு பார்ட்டியில் சந்தித்தோம். M.S. செய்துவிட்டு வேலைக்கு அலையாய் அலைந்து கொண்டிருந்தான். என் கணவரும் தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னதால் அடிக்கடி போன் செய்வான்.
ஒருமுறை என் கணவர் வேலை சம்பந்தமாக ஐரோப்பாவுக்குப் போக வேண்டியிருந்தது. என் அம்மா அப்போது கனடாவில் அண்ணாவுடன் இருந்து கொண்டிருந்தார். எனக்குத் தனியாக இருக்க பயமாக இருந்ததால், அம்மாவை வந்து இருக்கச் சொன்னேன். ஏர்போர்ட்டிலிருந்து அம்மாவை அழைத்து வரக்கூட ஆள் இல்லை. இந்த நண்பன்தான் உதவி செய்தான். என் கணவர் அப்படி இப்படி என்று திரும்பி வர இரண்டு மாதம் ஆகிவிட்டது. இவன்தான் எனக்கும் அம்மாவுக்கும் துணையாக இருந்து என் கணவரின் காரை ஓட்டி எங்களுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தான். வீட்டில் ஒரு சகோதரன் போலப் பழகிவிட்டான். என் அம்மா கூட அவனுக்கு வேலை கிடைக்க எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டாள். எப்படியோ, ஒரு அருமையான வேலை கிடைத்து, என் கணவர் வருவதற்கு முன்பே அவன் கிளம்பிப் போய்விட்டான். இருந்தாலும் நட்பு நீடித்தது.
போன வருடம் இந்தியாவில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவருடைய பெண்ணுக்கு இவனை மிகவும் ரெகமண்ட் செய்து, கல்யாணமும் நன்றாக நடந்தது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் முதலில் கொஞ்சம் ஸ்டேடஸ் பார்த்தனர். அப்புறம் நான் ஓஹோ என்று இந்தப் பையன் புகழ் பாட அவர்கள் சம்மதித்து திருமணமும் கிராண்ட் ஆக நடந்தது. நாங்கள் போக முடியவில்லை.
| போன வாரம் இந்தியாவில் இருக்கும் என் அம்மாவுக்குப் போன் பேசும்போது அந்த அதிர்ச்சி நியூஸ் கிடைத்தது. திருமணம் விவாகரத்தில் முடியப் போகிறதாம். எனக்கு எந்த விஷயமும் தெரியாது. | |
கல்யாணம் முடிந்தபிறகு எனக்கு விவரமாக எல்லா செய்தியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். போட்டோஸ் எதிர்பார்த்தேன். ஒன்றும் இல்லை. ஓரிரண்டு முறை போன் செய்தேன். ஈமெயில் அனுப்பினேன். என் கணவர், "ஏன் அவனைத் தொந்தரவு செய்கிறாய். கல்யாணம் ஆன குஷியில் இருப்பான்" என்று சொல்ல நானும் அதை அப்படியே விட்டு விட்டேன்.
போன வாரம் தான் இந்தியாவில் இருக்கும் என் அம்மாவுக்குப் போன் பேசும்போது அந்த அதிர்ச்சி நியூஸ் கிடைத்தது. திருமணம் விவாகரத்தில் முடியப் போகிறதாம். எனக்கு எந்த விஷயமும் தெரியாது. எனக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு போன் செய்தேன். அவர் மிகவும் 'சுருக்’ என்று பேசினார். ‘பிறரை நம்பி நாங்கள் முட்டாள்தனமாக முடிவு எடுத்து விட்டோம். அவதிப்படுகிறோம்’ என்று சொல்லி முடித்து வைத்துவிட்டார். இந்தப் பையனுக்குப் போன் செய்தால் பல தடவைகளுக்குப் பிறகு அவனே கூப்பிட்டான். நிறையச் சொல்லவில்லையென்றாலும் நல்லகாலம் என் மீது எந்தக் குறையும் சொல்லவில்லை. திருமணம் ஆன இரண்டு தினங்களிலேயே பிரச்சனை வந்திருக்கிறது அவர்களுக்குள். அந்தப் பெண் மிகவும் திமிராகப் பேசியிருக்கிறாள். இவனைக் கொஞ்சங்கூட மதிக்கவில்லை. "அந்தக் குடும்பத்தினரே மிகவும் ‘Show Off' ஆக இருந்தனர். 'Skype'ல் பார்த்தோம். பேசினோம். அப்போது ஒன்றும் தெரியவில்லை. நேரில் பார்த்துப் பழகும் போதுதான் ‘இது சரிவரப் போவதில்லை’ என்று உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அதுபோலவே ஆகிவிட்டது” என்று அவன் விரக்தியாகப் பேசினான்.
எங்கே தவறு நிகழ்ந்தது என்று யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால் எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. அந்தப் பெண்ணையும் எனக்கு நன்றாகத் தெரியும். மனது மிகவும் பாரமாக இருக்கிறது. முன்னாடியே தெரிந்திருந்தால் இருவரிடம் பேசிப்பார்த்து இந்த விவாக ரத்தைத் தவிர்த்திருக்கலாமே! ஏன் இரண்டு பக்கமும் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. இந்த லட்சணத்தில் நான் இதை ஒரு சக்சஸ் ஸ்டோரி என்று என்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டு, இன்னும் வேறு யாருக்கோ சீரியஸாக மேட்ச் மேக்கிங் செய்து கொண்டிருந்தேன். இந்த விஷயம் தெரிந்தவுடன் என் கசினைக் கூப்பிட்டு நான் இனிமேல் எந்த விவகாரத்திலேயும் ஈடுபடப் போவதில்லை என்று சொன்னால், “நான் அப்படியெல்லாம் உன்னைத் தப்பாகப் பேச மாட்டேன். ஆகவே, என் பெண்ணுக்கு வரன் பார்ப்பதை விட்டுவிடாதே” என்று என்னிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். நாம் எதுவும் எதிர்பார்க்காமல் பிறருக்கு நல்லது செய்ய முனைந்தால், ஏன் இப்படி வீண் பழி?
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதிக்கு:
உங்களுடைய கடைசி வரியிலேயே உங்கள் கேள்விக்கு பதிலும் அடங்கி விடுகிறது. நாம் ஏதாவது எதிர்பார்த்துச் செய்யும்போது, அந்தச் செயலுக்குரிய லாபத்தை/நன்மையை அடைந்து விடுவதால் அங்கே குற்ற உணர்ச்சி அதிகம் இருக்காது. ஏனென்றால் அது ஒரு கமர்ஷியல் ட்ரான்சாக்ஷன். ஆனால், இங்கே நம்பிக்கையை ஆதாரமாக வைத்து நல்ல எண்ணத்துடன் ஒரு செயலில் ஈடுபடும்போது, அங்கே இழப்புகளைச் சந்திப்பவர்களுக்கு, அதை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர்கள் மேல் நம்பிக்கை குறைந்து விடுகிறது. சமூகத்தில் யார் எந்த நல்ல காரியம் செய்தாலும், எங்கோ ஒரு ரூபத்தில், ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு வீண் பழி சிறிதளவாவது இருக்கத்தான் செய்யும். எப்போதுமே எந்தச் சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலே பிறரிடம் நிறை கண்டுபிடிப்பவர்கள் குறைவாகவும், குறை கண்டுபிடிப்பவர் நிறையவும்தான் இருப்பார்கள்.
நீங்கள் ஒரு நல்ல எண்ணத்தில்தான் இரண்டு பேரின் வாழ்க்கையை இணைக்கப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ததால் அந்த இரண்டு குடும்பங்களும் உங்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பையோ, ஏமாற்றத்தையோ காட்ட விரும்பவில்லை. உடனே அவர்கள் உங்களிடம் கூப்பிட்டுச் சண்டை போட்டிருந்தால் இந்தக் குற்ற உணர்ச்சி இருக்காது. தற்காப்பு உணர்ச்சிதான் இருக்கும். எல்லோருக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற சமூகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதுபோன்று அவ்வப்போது ஏதேனும் ஏற்படலாம். எல்லாம் நல்லவிதமாக எப்போதும் அமையும் என்று சொல்ல வாய்ப்பில்லை. உங்கள் போக்கை நீங்கள் மாற்றிக் கொள்ளவும் முடியாது. சிறிதுநாள் குற்ற உணர்ச்சி இருக்கும். ஆனால் அது இருக்க வேண்டிய அவசியமில்லை. வயதில் முதிர்ந்தவர்கள் எடுத்த முடிவு. Just let go.
இன்னொரு முறை யாரேனும் இது போன்ற உதவி கேட்டால் கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். உங்களால் சுயநலமாக ஒதுங்கி இருக்க முடியாது. அது உங்கள் personality. மணப்பொருத்தம் மட்டும் அல்ல, எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும்.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|