|
எங்கிருந்தோ வந்த விதை |
|
- ராஜேஷ்|பிப்ரவரி 2021| |
|
|
|
|
அத்தியாயம் - 2 அருணால் பள்ளிக்குச் சீக்கிரம் போகமுடியாமல் போனது. எல்லாம் அம்மா செய்த வேலை என்று அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
சைக்கிளை நிறுத்திவிட்டு லாக்கர் இருக்குமிடம் நோக்கி ஓடினான். லாக்கரில் நண்பி சாராவின் பிறந்தநாளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசை எடுப்பதற்காக அவசரமாகப் பூட்டைத் திறந்தான்.
பரிசைக் காணவில்லை! ஒரு வாரம் முன்புதான் அவன் அவளுக்காகத் தானே S-A-R-A-H என்று எழுத்துக்களால் செய்த, அழகான கை வளையம் ஒன்றை அதில் வைத்தான். அதைக் காணோம். அவனுக்கு பக் என்றிருந்தது.
பயம் கலந்த அழுகை வந்தது. பள்ளிக்கூட மணியும் அடித்தது. படாரென்று லாக்கர் கதைவை மூடினான். திரும்பிப் பார்த்தால் பின்னால் மிக அருகில் சாரா நின்று கொண்டிருந்தாள்.
பலவீனமான குரலில் "சாரா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றான். அவள் கண்களைப் பார்த்து அவனால் பேசமுடியவில்லை.
"அருண், பிறந்தநாள் பரிசு எங்கே?" என்று எடுத்தவுடன் கேட்டாள். குரலில் அதிகாரத் தொனி இருந்தது.
"லன்ச் டயத்துல காட்டறேன்" என்று சொல்லி, வகுப்பறை பக்கமாக ஓடினான். சாராவும் வேறுவழி இன்றி, பின்னாலேயே ஓடினாள்.
"நீ மட்டும் பொய் சொன்ன…" சாராவின் குரலில் ஒரு மிரட்டல் இருந்தது.
அருண் எங்கே அடி விழுமோ என்ற பயத்தில் இன்னும் வேகமாக ஓடினான்.
"லன்ச் போது கொடுக்கலேன்னா உன்னை கொன்னு போட்டிருவேன்" என்று கத்திக்கொண்டே அருணோடு சாராவும் மூச்சு இரைக்க வகுப்புக்குள் நுழைந்தாள்.
வகுப்பு நடக்கும்போது அவன் பரிசைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். லாக்கரில்தான் பரிசை வைத்தோமா என்று சந்தேகமும் வந்தது.
"சாரா என்னைத் திட்டப்போறா. சாரா என்னைத் திட்டப்போறா" என்று முனகிக்கொண்டே வகுப்பில் கவனமின்றி உட்கார்ந்திருந்தான்.
ஓரக்கண்ணால் சாராவை அவ்வப்போது நோட்டம் விட்டான். அவளோ வகுப்பில் மிகவும் கவனமாக இருந்தாள். ஒருமுறை இவன் பார்வை பட்டபோதும், அவள் கண்டுகொள்ளாமல் திரும்பிக் கொண்டாள்.
காலைநேர வகுப்புகள் முடிந்து மதிய உணவுக்கு மணி அடித்தது. அருண் மீண்டும் லாக்கருக்குப் போனான். லாக்கரைத் திறந்து சாராவிற்காகத் தானே செய்த வளையம் எங்காவது இடுக்கில் சிக்கிக்கொண்டு இருக்கிறதோ என்று பார்த்தான். எங்கும் அகப்படவில்லை.
சாப்பிடும் இடத்திற்குப் போய், சாராவின் கண்ணில் படாமல் உட்கார்ந்தான். அவள் எங்கே தன்னைத் தேடி வரப்போகிறாளோ என்று பயந்தபடி தலையைக் குனிந்தபடி சாப்பிட ஆரம்பித்தான். சற்றுத் தொலைவில் ஒரே சிரிப்பலை எழுந்தது. என்னவென்று மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். சாராவைச் சுற்றிப் பல நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு அவளோடு பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். சாரா அருண் பார்த்ததைக் கவனித்துவிட்டாள். அருண் தலையைக் குனிந்து கொண்டான்.
சாரா கோபமான முகத்துடன் எழுந்தாள். சாராவை உசுப்பேற்ற, "சாரா…சாரா" என்று சுற்றியிருந்த மாணவர்கள் சத்தம் போட்டனர். அவள் ஒரே பாய்ச்சலில் அருண் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
"ஹை சாரா. பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று அருண் முனகினான்.
சாரா கையை நீட்டியபடி "எங்கே என்னோட பரிசு? மத்தியானம் கொடுக்கிறேன்னு சொன்னியே? எங்கே?"
"அது வந்து… அது வந்து…"
"எது வந்து? எனக்குப் பொய் சொன்னா பிடிக்காதுன்னு தெரியுமில்ல? ஏன் காலைல என்கிட்ட பொய் சொன்ன?"
அருணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "நான் சத்தியமா லாக்கர்லதான் வச்சேன். அது ஒரு beads கை வளையம். அதுல உன் பெயர் இருக்கும்."
"அப்படியா? பொய் சொல்லாதே" சாரா சத்தமாகப் பேசினாள். அதில் திடீரென்று அங்கு நிசப்தம் உண்டானது.
"அய்யோ பாவம் மாட்டிக்கிட்டான்" என்று ஃப்ராங்க் சீண்டினான்.
"நான் உன்கிட்ட பொய் சொல்வேனா சாரா?" |
|
"அதானே, அப்ப மத்தவங்ககிட்ட பொய் சொல்லுவியா?" என்று ஃப்ராங்க் நடுவில் புகுந்து நாரதர் கலகம் செய்தான். அருணுக்கு எரிச்சலாக வந்தது.
"என்ன அருண், ஃப்ராங்க் சொல்றது சரிதானா?" சாராவின் கேள்வி அருணைத் திக்குமுக்காட வைத்தது.
தலைக்குமேலே போய்விட்டது, இனிமேல் சாராவை சமாதானப்படுத்த முடியாது என்று எண்ணிய அருண், மணி எப்படா அடிக்கும் ஓடிப் போய்விடலாம் என்று இருந்தான்.
"சாரா, அருண் பாவம். அவனை விட்டுரு" என்று ஃப்ராங்க் பொய்யான நமட்டுச் சிரிப்புடன் அருணுக்கு வக்காலத்து வாங்கினான்.
உணவு வேளை முடிந்து மணி அடித்தது. சாரா அருணை முறைத்துப் பார்த்துவிட்டு, வகுப்பை நோக்கி நடந்தாள். ஃப்ராங்க் அவள் கூடவே சென்றான்.
மதிய வகுப்பில் பொறியில் சிக்கிய எலிபோலத் தவித்தான். தன்னுடைய உயிர் நண்பி சாராவை இப்படி ஏமாறச் செய்துவிட்டோமே என்று வருந்தினான். அவள் என்னவெல்லாம் பிறந்தநாள் பரிசுகள் கொடுத்திருக்கிறாள்!
"சாரா, மன்னித்து விடு. நான் உண்மையிலேயே கை வளையம் ஒண்ணு உனக்காகப் பண்ணினேன், பொய்யில்லை" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
பள்ளி முடியும் மணி அடித்தது. எப்போதும்போல அருணுக்காகக் காத்திருக்காமல் சாரா கடகடவென்று பையை எடுத்துக்கொண்டு வகுப்பைவிட்டு வெளியே போனாள்.
அருண் வேகமாக அவளிடம் பேச ஓடினான். "சாரா, தயவுசெய்து நில்லு."
"என்ன?"
"உண்மைதான் சொல்றேன், நான் உனக்காக ஒரு கை வளையம் பண்ணினேன்."
அதற்குள் ஃப்ராங்க் வந்து சேர்ந்தான். அருணுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. "ஃப்ராங்க், நாங்க பேசிக்கிட்டு இருக்கோம், நீ கொஞ்சம் ஒதுங்கியிருக்க முடியுமா?" என்று எரிச்சலோடு சொன்னான்.
"அருண், நீ தப்பு பண்ணிட்டு அவன்மேல ஏன் எரிஞ்சு விழற? அவன் எனக்குக் கொடுத்த பரிசை பாக்கிறயா?" தீடீரென்று சாராவின் குரலில் ஒரு சீண்டல். அவள் கையைக் காட்டினாள். அதில் அருண் அவளுக்காகச் செய்த வளையம் இருந்தது. ஓவென்று சாராவும் ஃப்ராங்கும் சிரித்தார்கள்.
"அட லூசே, உன் லாக்கருக்குக் கீழே விழுந்திருக்கு போல. ஃப்ராங்க்தான் பத்திரமா எங்கிட்ட கொடுத்தான். நாங்க ரெண்டு பேரும் உன்னை ஒரு கலக்கு கலக்கிட்டோம் பாத்தியா?" என்று சாரா அருணைப் பிரியத்துடன் அணைத்துக் கொண்டாள்.
"அப்ப எனக்கு return gift?" அருண் ஏக்கத்தோடு கேட்டான்.
"நாளைக்குப் பாரு நண்பா, உன்னை ஒரு கலக்கு கலக்கறேன்" என்றாள்.
"அய்யோ வேண்டாம்பா உங்க சமாச்சாரம்" என்று அருண் பொய்யாக அலறிக்கொண்டு ஓடினான்.
(தொடரும்)
ராஜேஷ் |
|
|
|
|
|
|
|