|
எங்கிருந்தோ வந்த விதை |
|
- ராஜேஷ்|மார்ச் 2021| |
|
|
|
|
அத்தியாயம் - 3 அருண் பள்ளிலிருந்து வந்து வீட்டுக்குள் விசில் அடித்துக்கொண்டே நுழைந்தான். அன்று பள்ளியில் நடந்த நாடகத்தைப்பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அம்மாவும் சற்று முன்னர்தான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். அருணின் துள்ளலைக் கண்டவுடன் அம்மாவுக்குக் கொஞ்சம் ஆர்வம் வந்தது.
"என்ன அருண், ஒரே விசில் சத்தம். பள்ளிக்கூடத்துல ஏதாவது விசேஷமா?"
அருண் விசில் அடித்தபடித் தனது பைக்கட்டை சாப்பாட்டு மேஜைமீது வைத்தான். ஒழுங்காகத் தன்னுடைய சாப்பாட்டு டப்பாவைப் பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டான். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று தேடினான்.
"பசிக்குது அம்மா. ஏதாவது நொறுக்குத்தீனி இருக்கா?"
கீதா சமையலறைக்குள் வந்தார். ஒரு டப்பாவிலிருந்து அருணுக்குத் தின்பண்டம் எடுத்துக் கொடுத்தார்.
"அம்மா, இன்னிக்கு சாராவை ஒரு கலக்கு கலக்கிட்டேன். அவ நான் கொடுத்த சர்ப்ரைஸ்ல அப்படியே அசந்து போயிட்டா. சந்தோஷத்துல அப்படியே கண்ணீர் வந்துருச்சு அவளுக்கு, தெரியுமா?"
"அப்படியா!" கீதா சந்தோஷம் கலந்த ஆச்சரியத்தோடு கேட்டார். "அப்படி என்ன ஆச்சரியப்படுத்தினே, நான் தெரிஞ்சுக்கலாமா?"
அருண் நன்றாகக் கதை விட்டான். ஒரு ஹீரோபோலப் பேசினான். கீதாவும் கொஞ்சம்கூடச் சந்தேகப்படாமல் கேட்டுக்கொண்டார்.
"அம்மா, அந்த கிறுக்கு ஃப்ராங்க் ஏதாவது உளறிடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளை, ஏதும் குழப்படி பண்ணலை."
"அருண், நீ உண்மையிலேயே சாராவுக்கு கைவளையம் செஞ்சு கொடுத்தியா? எங்க கத்துக்கிட்ட? படே ஆளா ஆயிட்டயே?"
"அம்மா, நான் யூடியூப் வீடியோ ஒண்ணு பார்த்தேன். அவ்ளோதான். அப்படியே பண்ணிட்டேன். நாளைக்கு சாரா எனக்கு ரிடர்ன் கிஃப்ட் கொண்டுவரப் போறா. நான் கொடுத்த பரிசுமாதிரி இருக்குமான்னு தெரியல. ஆனாலும், மேட்ச் பண்ணுவான்னு நினைக்கிறேன். பாக்கலாம். I presume, she is as creative as I am."
அன்றைய தினம் வெகு வேகமாக நகர்ந்தது. வீட்டுப்பாடம் எல்லாம் அம்மா சொல்லாமலேயே கடகடவென்று முடித்தான். இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு, சீக்கிரமே தூங்கப் போய்விட்டான்.
★★★★★
மறுநாள் காலையில் எழுந்து உற்சாகத்தோடு அருண் செயல்பட்டான். அம்மா அவனை வந்து எழுப்ப வேண்டியிருக்கவில்லை. அலாரம் ஒருமுறை அடித்தவுடன் எழுந்து கொண்டான். கீதாவும் 'அடடா தினமும் இப்படியே இருக்கக்கூடாதா!' என்று நினைத்துக் கொண்டார்.
பள்ளிக்கூடத்திற்கு வெகு சீக்கிரமாகவே கிளம்பிச் சென்றான்.
பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் சாரா கண்ணில் படுகிறாளா என்று தேடினான். சாரா அருணைப் பார்த்தவுடன் ஒரு எட்டில் ஓடிவந்தாள்.
"அருண், குட் மார்னிங். எப்படி இருக்கே?" சாரா மிகவும் உற்சாகத்தோடு கேட்டாள்.
"சாரா, எங்கே என்னோட ரிடர்ன் கிஃப்ட்?" அருண் கொஞ்சங்கூடத் தாமதிக்காமல் கேட்டான். அவனை என்ன பாடு படுத்திவிட்டாள் அவள் நேற்று! அதற்கு பழி வாங்கவேண்டாமா, பின்னே?
"அதானே பாத்தேன், அருணா கொக்கா" என்று சிரித்துக்கொண்டே சொன்ன சாரா, "இதோ வரேன்" என்று சொல்லிவிட்டு அவளது பை இருக்கும் இடத்திற்கு ஓடினாள்.
சில வினாடிகளில் சாரா ஒரு அழகான ரோஜா மலர்க்கொத்து ஒன்றை அருணுக்குக் கொடுத்தாள். அதில் இருந்த ரோஜாவில் மிக வித்தியாசமான நிறங்கள் இருந்தன. அந்த மாதிரிப் பலநிறம் கொண்ட ரோஜாவை அருண் பார்த்ததே இல்லை. ஒரே ரோஜா ஏழு நிறங்களில் இருந்தது. இயற்கையில் இப்படியும் ஒரு அதிசயம் உண்டா என்று வியந்தான்.
சாரா கொடுத்த மலர்க்கொத்தை கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அருண், அப்பிடியே கப்சிப் ஆயிட்ட? இந்த ரோஜாக்கள பாத்து அசந்திட்டயா?"
"வாவ்! சாரா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே. Such a wonderful collection of flowers! நான் உனக்கு ஏதோ ரொம்ப ஸ்பெஷலா கொடுத்ததா நெனச்சேன். நீ பலபடி மேலே போயிட்ட."
"நண்பா, இதுல என்ன போட்டி! எனக்கு உன்னோட படைப்பாற்றல் ரொம்ப நல்லா இருந்தது. நானும் உன்னை மாதிரியே செய்யணும்னு இப்படி செஞ்சேன். அவ்வளவுதான்."
அருண் கேள்வி கேட்குமுன், சாரா விளக்கம் கொடுத்தாள். பள்ளி மணி அடிக்க இன்னும் பல நிமிடங்கள் இருந்ததால், இருவரும் பள்ளி வளாகத்தில் ஒரு ஓரத்தில் போய் பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தார்கள். மற்ற மாணவர்கள் கரேமுரே என்று கத்திக்கொண்டு விளையாடினார்கள்.
"அருண், எங்க வீட்டுப் பின்பக்கத்துல ஒரு வாரம் முன்னாடி திடீர்னு ஒரு நாளைக்கு ஒரு ரோஜாச் செடி முளைச்சிருந்தது. எங்க வீட்டுல ஏதும் செடி வந்து நான் பார்த்ததே இல்ல. உனக்குதான் தெரியுமே, நம்ப ஊரப்பத்தி. எங்கப்பாவும் ஆச்சரியப்பட்டாரு ரோஜாச் செடியப் பாத்து."
"அப்புறம்?"
"செடி வேகமா வளர்ந்து பூக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்த ரோஜாப் பூவின் நிறங்களப் பார்த்ததும் அசந்து போய்ட்டோம்."
"ஏதோ மாயாஜாலம் மாதிரி இருக்கு. நம்பவே முடியல," என்றான் அருண்.
"எங்களாலும்தான் அருண். எங்கப்பா பத்திதான் உனக்குத் தெரியுமே. ஆராய்ச்சி பண்ணித் தள்ளிட்டாரு. அவருக்கே ஒண்ணும் விளங்கல. ஏதோ ஹைப்ரிட் போல இருக்கு. பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இல்ல?"
அருணும் சாராவும் ரோஜாக்களின் அழகை பார்த்துப் பார்த்து பிரமித்தனர். அருண் அந்த ரோஜாக் கொத்தை முகர்ந்தான். அதில் இருந்த வாசனையும் அற்புதமாக இருந்தது.
அதற்குள் அங்கே ஒரு கூட்டமே கூடிவிட்டது. சிலர் அருணின் கையில் இருந்த மலர்க்கொத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். சாராவுக்கு ஒரே பெருமை.
"சாரா, எனக்கும் இந்த மாதிரி ரோஜா ஒண்ணு கொடேன்" என்று அருகில் நின்ற நண்பி ஒருத்தி கேட்டாள்.
"சாரா, எனக்கும் வேணுமாக்கும்" என்று இன்னொருவன் கேட்டான்.
சாரா ஒரு நமட்டுச் சிரிப்போடு அங்கிருந்து அருணோடு நழுவினாள்.
போகிற போக்கில் அருண், "சாரா, நீ ஒரு மலர்க்கொத்து விற்பனை பண்ணி, நம்ப பள்ளிக்கூடத்திற்கு ஒரு நிதி சேர்க்கலாமே?" என்று ஒரு ஐடியா கொடுத்தான்.
அந்த ஐடியாவில் இருந்த ஆபத்தை அவன் அப்போது அறியவில்லை.
(தொடரும்) |
|
ராஜேஷ் |
|
|
|
|
|
|
|