|
எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை |
|
- ராஜேஷ், Anh Tran|டிசம்பர் 2017| |
|
|
|
|
அத்தியாயம் 2
அக்டோபர் வந்தால் அருணுக்கு ஜலதோஷ காலம்தான். டாண் என்று அது வந்துவிடும். அந்த வருடமும் எந்த மாற்றமும் இல்லை. கீதாவுக்கு அக்டோபர் என்றாலே ரமேஷின் பிறந்தநாள், அதன் பின்னர் ஒருமாத ஜலதோஷப் போராட்டம் என்று பொருள்.
"அச்சூ! அச்சூ!" அருணின் தும்மல் கேட்டது.
"கண்ணா, ஏதாவது மருந்து குடுக்கவா? ரொம்ப தும்மற போலிருக்கே?" என்று கீதா கேட்டார். அருணிடம் இருந்து பதில் இல்லை.
"அருண், பதில் சொல்லு" மீண்டும் கேட்டார்.
"என்ன?" ஜலதோஷக் குரலில் பதில் வந்தது. "என்னம்மா கேட்டீங்க?"
"மருந்து ஏதாவது குடுக்கவா?"
"ம்ம்ம்... வேண்டாம்மா." அருணின் பதில் கேட்டு கீதா அதிர்ச்சி அடையவில்லை. ஏதாவது நல்ல காரணம் இருக்கக்கூடும் என்று நம்பினார். என்ன இருந்தாலும் தன் மகன் அல்லவா? தன்னைப் போலத்தான் இருப்பான் என நினைத்தார்.
"ஏன் வேண்டாம்னு சொல்ற? அப்புறம் எப்படி இந்தத் தும்மல் சரியாகும்?"
எங்கே ஜலதோஷத்தினால் காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயம் கீதாவுக்கு. கொஞ்சம் அதிகமாகத் தும்மினாலே பள்ளிக்கூடத்தில் 24 மணி நேரம் க்வாரன்டைன் என்று சொல்லிவிடுவார்கள். சிலசமயம், காய்ச்சல் வந்தால் 48 மணி நேரம்கூட க்வாரன்டைன் ஆகிவிடும். அதிலும், அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாமல் குழந்தைகள் வீட்டில் ஒருநாள் இருக்கவேண்டிய நிலைமை வந்தால், பெற்றோர்களுக்குச் சிரமம்தான்.
"கண்ணா, கொஞ்சம் சிரமம் பாக்காம மருந்து சாப்பிடு" கீதா மெதுவாக வற்புறுத்தினார்.
"அம்மா, நான் இந்தத் தடவை எந்த மருந்தும் சாப்பிடப் போறதில்லை."
"அப்படின்னா?"
"இயற்கை மருத்துவம் முயற்சி பண்ணலாம்னு இருக்கேன். ஆவி பிடிக்கப் போறேன்."
கீதாவுக்கு ஒரு பக்கம் கேட்கச் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம், எங்கே அருணுக்கு உடம்பு சரியாகத் தாமதமாகி, அதனால் பள்ளிக்கூடத்திலிருந்து க்வாரன்டைன் ஆகிவிடுவானோ என்று பயந்தார்.
"கொஞ்சம் வென்னீரில் மருந்து போடட்டுமா? அதோடு சேர்ந்து ஆவி பிடியேன்?"
"இல்லை அம்மா, வெறும் நீராவி போதும். எல்லாம் தன்னால சரியாயிடும்." தன் தலையைத் தொட்டுக்கொண்டே, "Power of positive thinking. அச்சூ!" என்றான்.
கீதா, மேற்கொண்டு ஏதும் பேசாமல், சமையலறைக்குள் சென்று ஆவி (steam) பிடிப்பதற்கு உண்டான வேலையைத் தொடங்கினார்.
"அம்மா, ஒண்ணு கவனிச்சீங்களா?" அருணின் குரல் லிவிங் ரூமில் இருந்து கேட்டது.
"கண்ணா, இங்க பக்கத்துல வந்து பேசேன். காதுல சரியா விழல."
அருண் சமையலறைப் பக்கமாக வந்தான்.
"என்ன சொன்ன?"
"அம்மா, எங்க வகுப்புல எல்லோருக்கும் ஒரே மாதிரி ஜலதோஷம் வருது. வந்து கொஞ்ச நாளைக்கு எல்லோரும் கஷ்டப்படறோம். அதுக்கப்புறம், சரியா போயிடுது. இது என்னமோ திரும்பத் திரும்ப ஒரேமாதிரி நடக்கறாப்பல இருக்கம்மா. அது எப்படிம்மா சொல்லி வச்சாப்போல ஆகும்?"
அருணின் கேள்விக்கு கீதாவிடம் பதில் இல்லை. அந்தக் கேள்வி அவரைச் சிந்தனையில் ஆழ்த்தியது.
"அம்மா, இதுவும் ஹோர்ஷியானா நிறுவனத்தோட ஒரு விசித்திர விளையாட்டா இருக்குமா?"
ஹோர்ஷியானா என்ற பெயரைக் கேட்டதும் கீதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அருணை பயம் கலந்த சந்தேகத்தோடு பார்த்தார்.
"அம்மா, நல்லா யோசிச்சுப் பாருங்க, நம்ம ஊர்ல ஹோர்ஷியானா தயாரிக்கிற மருந்து தவிர வேற எதுவுமே கிடைக்காது. அவங்க அதுல ஏதாவது தில்லுமுல்லு பண்ண வாய்ப்பு இருக்குமா? யோசிச்சுப் பாருங்க. அவங்க மருந்துகளைத் தான் திருப்பித் திருப்பி வாங்க வேண்டியிருக்கு."
அருணின் 'சதிவேலை' யூகத்தைக் கேட்டவுடன் கீதாவிற்கு பக் பக்கென்று இருந்தது. இவன் ஏதோ சொல்லப் போய், மீண்டும் ஏதாவது வம்பில் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று தோன்றியது. இன்னும் ஒரு முறை ஹோர்ஷியானா நிறுவனத்தின் அதிபர் டேவிட் ராப்ளேயை சந்திப்பது என்றால், அது ஒரு பெரிய தண்டனை என்று நினைத்தார்.
"அம்மா, ஹோர்ஷியானா பெயரைச் சொன்னவுடனே பயந்துட்டீங்களா?" |
|
கீதா மெதுவாகத் தலையசைத்தார். அருணுக்கு அம்மாவின் தயக்கம் புரிந்தது. அம்மாவைச் செல்லமாக கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தான்.
"சாரிம்மா, உங்களுக்காகக் கொஞ்சம் மருந்து சேர்த்துக்கறேன். அந்த வேப்பரைசரை வென்னீரில் போடுங்க அம்மா."
ஆவி பிடித்தபடியே, "அப்புறம் அம்மா, நாங்க இந்த வாரம் பள்ளிக்கூடத்தோட ஃபீல்டு ட்ரிப் போகப் போறோம். அதுக்குள்ள இந்த ஜலதோஷத்தைச் சரி பண்ணனும். இல்லைன்னா, என்னை விட்டுட்டுப் போயிடுவாங்க."
"Wow! Field Trip? எங்க போறீங்கப்பா?"
"எங்கே, யூகியுங்க பாக்கலாம்?" என்று அம்மாவைச் சீண்டினான். கீதா தனக்குத் தோன்றிய எல்லா இடங்களையும் சொன்னார். எல்லாமே தப்பு என்றான் அருண்.
"சரி, நீயே சொல்லிடேன்" என்றார் கீதா.
"Pueblo Del Indegna.”
அருண் வேண்டுமென்றே மெதுவான குரலில் சொல்லிவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அம்மாவின் பதில் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்போடு அவரைப் பார்த்தான். அருண் சொன்னது கீதாவுக்கு விளங்கச் சில நொடிகள் ஆயின. அருண் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கீதாவுக்கு அருண் சொன்ன பதில் திடீரென்று ஒரு புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அருண் எதிர்பார்த்தபடியே அவரது முகத்தில் அது தெரிந்தது.
"Did you just say, PUEBLO DEL INDEGNA?” என்று ஒரு குழந்தையைப் போலே துள்ளலோடு கேட்டார்.
"ஆமாம்மா."
Pueblo Del Indegna என்னும் ஒரு குட்டி மலைகிராமம். எர்த்தாம்டன் நகரிலிருந்து சற்றுத் தொலைவில், பூர்வகுடியினர் (natives) வசிக்கும் இடம். அங்கே வேறு எவருக்கும் நுழையக் கட்டுப்பாடுகள் இருந்தன. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் அங்கே போய்ப் பார்க்கவேண்டும் என்று கீதாவுக்கு ஆசையிருந்தது.
"எப்படி? எப்படி அருண், உங்க வகுப்புக்கு அனுமதி கிடைச்சது? நான் எவ்வளவு முயற்சி பண்ணிருக்கேன் தெரியுமா அங்கே போறதுக்கு? லக்கி பாய். நீ நிஜமாவே அதிர்ஷ்டக்காரன் தான்.”
"அம்மா, என் வகுப்பு ஆசிரியை, திருமதி. ரிட்ஜ் தனது தொடர்புகள் மூலமா இந்த அனுமதி வாங்கிக் கொடுத்திருக்காங்க."
"Parent volunteers யாராவது வரணுமா?"
கீதா கேட்டது அருணுக்குச் சிரிப்பாக வந்தது. அம்மாவின் ஏக்கம் அவனுக்குப் புரிந்தது. "இல்லை அம்மா, திருமதி. ரிட்ஜ், திருமதி. மெடோஸ், பள்ளிக்கூட பஸ் டிரைவர் அவ்வளோதான். வேற பெரியவங்க யாருக்கும் அங்க வர அனுமதி கிடைக்கல."
"அப்ப, கேமரா கொண்டு போயி படம் எடுக்கறியா? எனக்கு நேர்ல போக முடியாட்டினாலும் படமாவது பார்த்து சந்தோஷப்படுவேன்."
"இல்லை அம்மா. கேமரா, செல்ஃபோன் எதுவுமே கொண்டு போக அனுமதி கிடையாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க."
கீதா, அருணை செல்லமாக தட்டியபடி, "Your experience there is, mine too. I am happy for you. வா, நம்ப உன்னோட ஜலதோஷத்தை அதுக்குள்ள சரி பண்ணப் பார்க்கலாம்."
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|