|
எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 3) |
|
- ராஜேஷ், Anh Tran|ஜனவரி 2018| |
|
|
|
|
அருண் ஃபீல்டு ட்ரிப் போகும் நாள் நெருங்கிக்கொண்டே வந்தது, ஆனால் ஜலதோஷம் குறையவில்லை. எவ்வளவோ வைத்தியம் செய்தும் பயனில்லை. அருணின் வகுப்பாசிரியை திருமதி ரிட்ஜ்யாருக்காவது காய்ச்சல் இருந்தால், கண்டிப்பாக வீட்டிலேயே உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதை நினைக்கவே அருணுக்கு திக்திக்கென்று இருந்தது.
"கண்ணா, இன்னும் சரியாகல போலிருக்கே?" கீதா அக்கறை கலந்த வருத்தத்தோடு கேட்டார். அம்மாவின் அக்கறை அருணுக்குப் புரிந்தது. இருந்தாலும் அடக்கமுடியாமல் அழுகை வந்தது.
"அம்மா, நான் அந்தப் பழங்குடி கிராமத்துக்குப் போயே ஆகணும். ரொம்ப வருஷம் கழிச்சு அங்கே நுழைய அனுமதி கொடுத்திருக்காங்க. இந்த வாய்ப்பை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதம்மா." சொல்லும்போதே அருணுக்கு அடக்கமுடியாமல் அழுகை வந்தது.
"கவலைப்படாதே கண்ணா, இன்னும் இரண்டு நாள் இருக்கே. அதுக்குள்ளே சரியாயாயிடும்." ஏதாவது மருந்தைக் கொடுத்து அருணின் ஜலதோஷத்தைச் சரியாக்கி விடலாம் என்று தோன்றியது. ஹோர்ஷியானா மாதிரி நிறுவனங்கள் இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களை எப்படித் தனக்கு லாபம் வரும்படிச் செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டார். வேறு வழியே இல்லாவிட்டால் மருந்துக் கடையில் கிடைக்கும் மருந்துகளைக் கன்னாபின்னா என்று வாங்கிச் சாப்பிடும்படி ஆகிவிடுகிறது. ஃபீல்டு ட்ரிப் போகமுடியாவிட்டால் அருணால் அந்தத் துக்கத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது என்று அவருக்குத் தெரியும். இரவு படுக்கும் முன்னர் கொஞ்சம் ஆவி பிடிக்க அருணைக் கூப்பிட்டார்.
"கண்ணா, கொஞ்சம் ஆவி பிடிச்சுட்டு படுத்துக்கறியா?"
அருணின் தும்மலும் இருமலும் கேட்டது. ஆனால் பதில் ஏதும் வரவில்லை. அவனது அறைக்குப் போனார். வழியில் கணவர் ரமேஷ் என்ன செய்கிறார் என்று ஒரு நோட்டம் விட்டார். அவரோ ஒன்றுமே தெரியாதவர்போல நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அருண் அருகே சென்று அவனைத் தொட்டுப் பார்த்தார். உடம்பு சூடாக இல்லை. கீதாவின் மனம் கொஞ்சம் நிம்மதி ஆனது.
"அப்பாடா, காய்ச்சல் இல்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். அம்மாவின் கை பட்டவுடன் அருண் விழித்துப் பார்த்தான்.
"என்னம்மா?"
"சாரிப்பா, எழுப்பி விட்டுட்டேனா?"
"இல்லைம்மா, பரவாயில்லை."
"எப்படி இருக்கப்பா? இன்னும் இருமல் இருக்குபோல இருக்கே?"
அருண் கண்களை மெதுவாக மூடித்திறந்து ஆமோதித்தான்.
"நாளைக்கு ராத்திரிக்குள்ளே சரியாகணுமே" என்றார் கீதா.
"நாளை ராத்திரிகூட இல்லைம்மா, காலைல பள்ளிக்கூடம் போகும்போதே எனக்கு இருமல் நிக்கலேன்னா என்னை திருமதி ரிட்ஜ் கூட்டிட்டுப் போகமாட்டாங்க."
"ஏன் இந்த தடவை இவ்வளவு கண்டிப்பு?"
"அம்மா, அந்த Pueblo Del Indegna கிராமத்துல இருக்கிற பழங்குடி மக்களுக்கு நம்மகிட்ட இருக்கும் கிருமிகள் எதுக்குமே தடுப்புச்சக்தி கிடையாது. சின்னக் காய்ச்சல்கூட அங்கே ஒரு தொற்றுக் காய்ச்சலா எல்லாருக்கும் பரவிடலாம். அதனால ரொம்ப முன்னெச்சரிக்கையா இருக்காங்க." |
|
"கொஞ்சம்கூட தடுப்புச்சக்தி கிடையாதா அந்த கிராம மக்களுக்கு?"
"ஆமாம்மா, அப்படித்தான் மிஸஸ் ரிட்ஜ் சொன்னாங்க. யோசிச்சுப் பார்த்தா, அமெரிக்காவிலே முதல்லே போன ஐரோப்பியர்கள் எவ்வளவு கிருமிகளைக் கொண்டுபோய் அங்கிருந்த பழங்குடியினரைப் பெரிய கஷ்டத்துக்கு உள்ளாக்கிருக்காங்க தெரியுமா? அந்தமாதிரி தற்செயலாகூட எதுவும் நடந்துறக் கூடாதுன்னுதான் இப்படி."
அருணின் உலகஞானம் கீதாவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மெதுவாக அவன் தலையை வருடினார்.
"எனக்கு அங்கே போயே ஆகணும். அதுக்காகச் சளி மருந்து எதுன்னாலும் எடுத்துக்கறேன் அம்மா," அருணின் பதில் கீதாவுக்குச் சற்று வியப்பாக இருந்தது. அவன் சொன்னது சரிதான் என்று பட்டது. வேகமாகச் சமையலறைக்குப் போய், மருந்து அலமாரியைத் திறந்தார். அங்கே ரமேஷ் வாங்கி வைத்திருந்த மருந்துகள் இருந்தன. நாலு விதமான இருமல் மாத்திரைகள், மூன்று விதமான காய்ச்சல் மாத்திரைகள் என்று கொட்டிக் கிடந்தன. தன்னையும், அருணையும் போலத் தனது கணவர் இல்லையே என்று வருத்தப்பட்டார். இருந்தாலும், அப்போதைக்கு அது உபயோகமாக இருந்தது.
ஆவி பிடிப்பதற்கான திரவமருந்தை எடுத்தார். தண்ணீரை அடுப்பில் கொதிக்கவைத்து, அருணைக் கூப்பிடத் திரும்பினார். அவர்பின்னால் அருண் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு பூச்சாண்டியைப் போல நிற்பதை பார்த்துத் திடுக்கிட்டார்.
"பயந்துட்டீங்களா அம்மா?"
"ஆமாம்," என்று சொல்லிச் சிரித்தார். "ஹாலோவீன் காஸ்ட்யூம் மாதிரி இருக்கு."
அதற்குள் தண்ணீர் கொதிக்கவே, அதில் மருந்தைச் சொட்டுச் சொட்டாக விட்டார்.
"ஹோர்ஷியானாவோட மருந்தா அம்மா?"
"ஆமாம்."
"நம்ம எல்லோரையும் அவங்களோட மருந்துகளுக்கு அடிமை ஆக்கிட்டாங்க, இல்லம்மா?"
கீதா, அருண் சொன்னதைக் கவனிக்காமல், அவன் முகத்தைக் கொதிக்கும் தண்ணீர்ப் பாத்திரத்தின் அருகே கொண்டுபோனார். அருண் ஆழமாக ஒரு மூச்சு இழுத்தான். மருந்து கலந்த ஆவி அவனது சுவாசப் பாதையில் சென்று நிவாரணம் கொடுத்தது.
"எப்படி இருக்கு, கண்ணா?"
மீண்டும் அவன் மூச்சை ஆழமாக இழுத்தான். அதற்குள் அலமாரியைத் திறந்து ஒரு களிம்பை எடுத்து அவனது சட்டையைச் சிறிது தூக்கி அவன் நெஞ்சில் தடவினார். ஆவி அவன் முகத்தில் பட்டு வியர்த்தது. ஒரு துண்டைக் கொடுத்து முகத்தை துடைத்துக்கொள்ளச் சொன்னார். ஆவி பிடித்துச் சிறிது நேரத்தில் படுத்துக்கொள்ள அறைக்குள் சென்றான் அருண்.
***** மறுநாள் காலையில் கீதாவுக்குச் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. அருண் எப்படி இருக்கிறான் என்று பார்ப்பதற்காக அவன் அறைக்குள் சென்றார். அங்கே கட்டிலில் அவனைக் காணவில்லை. குளியல் அறையிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்றார். உள்ளே அருண் பல் விளக்கிக் கொண்டிருந்தான்.
"அருண், எப்படிம்மா இருக்கு?"
மூச்சை நன்றாக இழுத்து உற்சாகத்தோடு, "பிரமாதமா இருக்கேன் அம்மா. பழங்குடியினர் ஊருக்குப் போக நான் தயார்” என்றான் அருண்.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|