|
|
|
|
ஒரு காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே மேய்வதற்காக வந்த ஒரு கழுதையுடன் அது நட்புப் பூண்டது. எப்படியாவது அந்தக் கழுதையைக் கொன்று தின்ன வேண்டும் என்பதுதான் நரியின் எண்ணமாக இருந்தது. சரியான நேரத்திற்காக அது காத்திருந்தது.
இரண்டும் தினந்தோறும் காட்டைச் சுற்றிச் சுற்றி வரும். காட்டில் புல் அதிகம் என்பதால் கழுதை உண்டு கொழுத்தது. உடல் பெருத்தது.
ஒருநாள் நரி, "கழுதையாரே, இப்படி காட்டையே சுற்றிச் சுற்றி வருகிறீரே, உமக்கு வீட்டு ஞாபகமே வரவில்லையா?" என்றது.
"வராமல் என்ன, வரும். கூடவே என் எசமான் என்னை அடித்துத் துரத்தியதும் ஞாபகத்துக்கு வரும். அதனால்தானே நான் இந்தக் காட்டிற்கே ஓடி வந்தேன்" என்றது கழுதை.
"ஏன் உன்னை அடித்துத் துரத்தினார் அவர்?"
"ஒருநாள் நான் வேலை செய்த அசதியில் அசந்து தூங்கிவிட்டேன். அப்போது ஒரு திருடன் வந்து மாடுகளை எல்லாம் திருடிக்கொண்டு போய் விட்டான். அந்த ஆத்திரத்தில் என்னைப் போட்டு அடித்துத் துரத்திவிட்டார் என் எசமான். நான் என்ன நாயா, தூங்காமல் விழித்திருந்து குரைத்து எல்லோரையும் எழுப்ப?"
"ஆமாம். இந்த மனிதர்களே, நன்றி கெட்டவர்கள்தான். அந்த எசமானை நீ பழிவாங்க வேண்டாமா?" |
|
"எதற்கு, என்னை இத்தனை காலம் அவர்தானே சாப்பாடு போட்டு வளர்த்தார். அதனால் எனக்கு அந்த எண்ணமில்லை" என்றது கழுதை.
"நீ ஒரு முட்டாள். அதனால்தான் உன்னை உன் எசமான் விரட்டி விட்டார். சரி, சரி. வா, என்னுடன்" என்று சொல்லி ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது நரி.
அங்கே வெள்ளரி, பூசணி என எல்லாம் நிறைய விளைந்திருந்தன. "ம்.. இவற்றை எல்லாம் சத்தம் போடாமல் சாப்பிட்டுவிட்டு வா.. நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்" என்றது நரி.
கழுதை இவற்றைத் தின்று கொண்டிருக்கும் போது ஊளையிட்டால் மக்கள் ஓடி வந்து கழுதையை நையப் புடைப்பர். அது இறந்துவிடும். பின்னர் அதைத் தின்னலாம் என மனதில் எண்ணியது வஞ்சக நரி. அசதியில் அப்படியே தூங்கிப்போனது.
கழுதை அந்தத் தோட்டத்தில் விளைந்திருந்ததை வயிறு புடைக்க உண்ட பின் உற்சாக மிகுதியில் பெருங்குரலெடுத்துக் கத்தியது. சப்தம் கேட்டு காவலுக்குப் படுத்திருந்த தோட்டக்காரன் எழுந்து கொண்டான். தன் கையில் உள்ள பெரிய கம்புடன் தேட ஆரம்பித்தான். கழுதை அருகே உள்ள புதருக்குள் ஒளிந்து கொண்டது.
சப்தம் கேட்டு விழித்த நரியோ, காவல்காரனைக் கண்டு பயந்து ஓடத் தொடங்கியது. நரியைப் பார்த்த காவல்காரன், "ஓ.. உன்னோட வேலைதானா, தூக்கக் கலக்கத்துல நான் கழுதைன்னு இல்ல நினைச்சேன்..." என்றவாறே தன் கையில் உள்ள கம்பை அதை நோக்கி வீசினான். நரி கம்பு பட்டுக் கீழே விழுந்து இறந்தது.
தப்பிப் பிழைத்த கழுதை, இனி உழைத்துச் சாப்பிடலாம் என்று நினைத்துப் பழைய எசமானன் வீட்டை நோக்கி நடந்தது.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|