|
|
|
பெருமாள் என்னும் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த பேராசைக்காரன். தன்னிடம் வேலை பார்த்தவர்களை அடிமைபோல நடத்துவான். பிறருக்கு கடன் கொடுத்து உதவுததைப்போல அவர்கள் சொத்தைக் கொள்ளை அடிப்பதும் அவனது வாடிக்கை. ஊர் மக்கள் அவனது அடியாள் பலத்துக்கு அஞ்சி வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை பக்கத்து ஊரைச் சேர்ந்த சோமு என்ற அப்பாவி ஒருவன் பெருமாளிடம் வேலைக்குச் சேர்ந்தான். பெருமாள் அவனைப் பலவாறாகக் கொடுமைப்படுத்தினான். சோமுவுக்குச் சரியாக உணவுகூடக் கொடுக்காமல் வேலை ஏவினான். அதனால் உடல் நலிவுற்ற சோமு வேலையை விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிட்டான்.
சோமுவுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் பெயர் ராமு. இருவரும் இரட்டைப் பிறவிகள். பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பர். சோமுவுக்கு நடந்த கொடுமையைக் கேள்விப்பட்ட ராமு சினம் கொண்டான். பெருமாளுக்குத் தகுந்த பாடம் புகட்ட எண்ணினான். அதற்குச் சரியான சமயத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
பக்கத்து ஊரில் திருவிழா வந்தது. அதற்கு பெருமாள்தான் தலைமை வகித்தான். அதை அறிந்த ராமு, ஒரு பெரிய ஜமீனைப்போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு அழகான சாரட்டில் திருவிழா நடக்கும் இடத்திற்குச் சென்று இறங்கினான். தனது பணத்தைப் பலவாறாகச் செலவழித்தான்.
ராமுவின் தோற்றத்தையும் ஆடம்பரத்தையும் பார்த்த பெருமாளுக்கு ஒரே ஆச்சரியமாகி விட்டது. அவனை தன்னிடம் அடிமையாக வேலை பார்த்த சோமுதான் என்று நினைத்தவன், ஒரு சாதாரண வேலைக்காரன் எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் பெரிய பணக்காரன் ஆனான் என்று திகைத்தான். ராமுவைச் சந்தித்து அதற்கான காரணத்தைக் கேட்டான். பெருமாளிடம் சோமுவைப் போலவே நடித்த ராமு, "எசமான்! அதுக்கெல்லாம் காரணம் ஒரு கிளிதாங்க. அதை ஒரு முனிவர் எனக்குக் கொடுத்தார். அந்தக் கிளி பேசும். புதையலை அடையாளம் காட்டும். என் வீட்டுக் கிணத்துல இருந்த புதையலை அது அடையாளம் காட்டிச்சு. அது மூலமாதான் நான் பணக்காரன் ஆனேன்!" என்றான்.
அதைக் கேட்ட பெருமாளுக்கு ஒரே ஆச்சரியம். எப்படியாவது அந்தக் கிளியைத் தனதாக்கிக் கொள்ள நினைத்தான். என்ன விலையானாலும் தான் வாங்கிக் கொள்வதாகச் சொன்னான். உடனே ராமுவும், "அதை யாருக்கும் நான் தர மாட்டேன். ஆனா, நீங்க எனக்கு எசமானா இருந்தவருங்கறதுனால பத்தாயிரம் பொன் கொடுத்தால் தருகிறேன்" என்றான். |
|
பேராசைப்பட்ட பெருமாளும் பத்தாயிரம் பொன் கொடுத்து அந்தக் கிளியை வாங்கிக் கொண்டான். ராமுவும் கூடவே அந்தக் கிளியுடன் பெருமாள் வீட்டிற்கு வந்து, கிளி மூலம் எப்படி புதையலை எடுப்பது என்று சொல்லிக் கொடுத்தான்.
"ஏ, கிளியே இந்த வீட்டுக் கிணற்றில் புதையல் இருக்கிறதா?" என்று கேட்டான் ராமு. கிளியும் ராமு பல மாதங்களாக முன்னரே பழக்கியிருந்தபடி, "ஆமாம், ஆமாம்" என்றது.
உடனே வேலையாட்களை விட்டுக் கிணற்றில் தேடிப் பார்க்கச் சொன்னான் பெருமாள். ராமு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் போட்டிருந்த நூறு வெள்ளி நாணயங்கள் கொண்ட பெட்டி கிடைத்தது. பெருமாளுக்கு ஒரே மகிழ்ச்சி. ராமுவுக்கு நன்றி கூறி அவனை கட்டிக்கொண்டான்.
மறுநாள் தனது அடியாட்களை அழைத்துக்கொண்டு கிளிக்கூண்டு அருகே வந்த பெருமாள், "ஏ, கிளியே தோட்டத்தில் புதையல் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"ஆமாம், ஆமாம்" என்றது கிளி.
"இந்த இடத்தில் இருக்குமா?" என்று கேட்டான் ஒரு மாமரத்தடியைச் சுட்டிக் காட்டி.
"ஆமாம், ஆமாம்" என்றது கிளி.
உடனே ஆட்களை விட்டு அந்த இடத்தில் தோண்டச் செய்தான் பெருமாள். பத்தடி வரை தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. ஒரு வேளை புதையல், தோண்டிய வேகத்தில் அருகில் எங்காவது நகர்ந்திருக்குமோ என்று நினைத்தவன் "பக்கத்தில் எங்காவது இருக்குமா?" என்று கிளியிடம் கேட்டான். கிளியும் "ஆமாம், ஆமாம்" என்றது. இப்படியே கிளியிடம் கேட்டுக் கேட்டு மாலை வரை பல இடங்களில் தோண்டியும் புதையல் அகப்படவில்லை.
பெருமாளுக்கு ஒரே கவலையாகி விட்டது. ஒருவேளை சோமு தன்னை ஏமாற்றி விட்டானோ என்று நினைத்தவன், "கிளியே, சோமு ஒரு வேளை என்னை ஏமாற்றத்தான் இப்படிப் பொய் சொன்னானா?" என்று கேட்டான். கிளியும் வழக்கம் போல அதற்குத் தெரிந்த "ஆமாம், ஆமாம்" என்பதையே பதிலாகச் சொன்னது.
"ஆ, அப்படியானால் நான் ஒரு முட்டாளா என்ன?" என்றான் பெருமாள் சினத்துடன் கூண்டைத் திறந்தபடி. "ஆமாம், ஆமாம்!" சொல்லிவிட்டுப் படபடவெனப் பறந்தோடியது கிளி.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|