|
|
|
ராமு, சோமு, மணி, கண்ணன் நான்கு பேரும் நண்பர்கள். நால்வரும் கூட்டாகப் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார்கள். நல்ல லாபம் கிட்டியது. ஆனால் அவர்களுக்கு ஒரேயொரு பிரச்சனைதான். எலிகள் பஞ்சு மூட்டைகளை கடித்துக் குதறி நாசமாக்கி வந்தன.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
அதனால் எலிகளை ஒழிக்கப் பூனை ஒன்றை வளர்க்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி பூனை வந்தது. எலித்தொல்லை குறைந்து, லாபம் அதிகரித்தது. அவர்களுக்குப் பூனையின் மீது அன்பு அதிகமாகிவிட்டது. பூனையின் கால்களை அழகுபடுத்த வேண்டும் என்று நண்பர்கள் நினைத்தனர். ராமு, வெள்ளிக் கொலுசு போட வேண்டும் என்றான். சோமுவோ, தங்கத்தில் போடலாம் என்றான். கண்ணன், கொலுசு வேண்டாம், தண்டை போடலாமே என்றான். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆளுக்கு ஒரு காலில் தமக்குப் பிடித்த அணிகலன் ஒன்றை அணிவித்து அழகு பார்த்தனர்.
ஒருநாள் பூனை 'மியாவ், மியாவ்' என்று கத்தியபடி நொண்டிக்கொண்டு வந்தது. அதன் ஒரு காலில் அடிபட்டிருந்தது. அதைப் பார்த்த ராமு, "கண்ணா, உனக்குச் சொந்தமான காலில் அடி பட்டுவிட்டது. உடனடியாக அதற்கு மருந்து போட்டுக் குணப்படுத்து" என்று கூறினான். கண்ணனும், அந்தக் காலில் கற்பூரத் தைலம் தடவிக் கட்டுப் போட்டான். பூனையும் நொண்டி நொண்டி நடந்து போனது.
இரவு நேரத்தில் யதேச்சையாகப் பூனை எரிந்து கொண்டிருந்த விளக்கின் பக்கம் சென்றது. கற்பூர எண்ணெய் தடவியிருந்த காலில் உடனே தீப்பிடித்து விட்டது. மிரண்டு போன பூனை அங்கும் இங்கும் தாவி. ஓடவே, பல பஞ்சுப் பொதிகள் எரிந்து நாசமாகின. பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
சினம் கொண்ட நண்பர்கள், கண்ணனின் செய்கையால்தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது, அவன்தான் இதை ஈடுசெய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் கண்ணனோ தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், பூனை செய்த செயலுக்கு தன்னைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும் சொன்னான். நண்பர்கள் ஒப்புக் கொள்ளததால், மரியாதை ராமனின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அவர் சிக்கலான வழக்குகளில் கூட சரியான தீர்ப்பைச் சொல்லும் நுண்ணறிவு வாய்ந்தவர். |
|
அவர்கள் மூவரும் கூறியதைக் கேட்ட மரியாதை ராமன், "நண்பர்களே, கண்ணனுக்குச் சொந்தமான காலினால் விபத்து ஏற்பட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அந்தக் காலில் அடிபட்டிருந்ததால் பூனையால் அதைக் கொண்டு ஓடவோ, நடக்கவோ முடிந்திருக்காது இல்லையா?. தீ பற்றிக் கொண்டவுடன் பூனை மற்ற மூன்று கால்களைப் பயன்படுத்தித்தான் ஓடியிருக்க முடியும். அதன் மூலம்தான் தீ பரவி நஷ்டம் ஏற்பட்டது என்பதால், அவற்றுக்குச் சொந்தமான நீங்கள் மூவரும்தான் நஷ்டத்துக்கு முழுமையான பொறுப்பேற்க வேண்டும்" என்று தீர்ப்புக் கூறினார்.
இதில் தவறு எங்கே நடந்தது குழந்தைகளே? யோசியுங்கள், அடுத்த மாதம் சந்திக்கலாம்.
அன்புடன் சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|