Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
சொக்க வைத்த சானியா
- சேசி|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeஉச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. புழுக்கம் தாங்க முடியவில்லை. ஆனாலும் சுமார் 20,000 பேர் "சானியா! சானியா!" என்று கூச்சலிடுகின்றனர். விசில்கள் பறக்கின்றன. இடம் ஆர்தர் ஆஷ் டென்னிஸ் அரங்கம், ·ப்ளஷிங் மெடோஸ், நியூ யார்க்.

உலகிலேயே மிகப் பெரிய டென்னிஸ் அரங்கம் சானியா மிர்ஸா விளையாடுவதைப் பார்க்க வந்த அமெரிக்க இந்தியர்களின் ஆரவாரத்தில் அதிர்கிறது. கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றான யு.எஸ். ஓபன் - 4வது சுற்று. சானியாவை எதிர்த்து ஆடுபவர் 2004-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் - டென்னிஸில் உலகத்தில் இரண்டாவது இடத்திலிருக்கும் மரியா ஷரப்போவா (இவர் தற்போது முதலிடம்!). எதிராளியோ, அரங்கமோ சானியாவைப் பாதித்ததாகத் தெரியவில்லை. தைரியமாக ஆடுகிறார். அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்திற்கும் கைதட்டிக் கூச்சலிட்டும், தவறவிட்ட பந்திற்கு 'ஓ!'வென்று வருந்தியும் ரசிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர். வழக்கமாக மாடல் அழகி மரியாவைப் பார்க்க, ஆதரிக்க வரும் கூட்டத்தின் குரல் சானியாவின் ஆதரவாளர் கூட்டத்துக்கு நடுவே எடுபடவில்லை.

அன்று சானியா வெற்றி பெறவில்லை. என்றாலும், 2005-ல் அவரது முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது. சென்ற ஆண்டு 326-ம் இடத்தில் இருந்தவர், இந்த ஆண்டின் துவக்கத்தில் 169-ம் இடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியன் ஓப்பனில் 3-வது சுற்றுவரை முன்னேறியது, ஹைதராபாத் ஓப்பனில் வெற்றி பெற்றது, யு.எஸ். ஓப்பனில் 4-வது சுற்றுவரை முன்னேறியது என்று பல வெற்றிகளால் 34-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்! இது பிரமிக்க வைக்கும் முன்னேற்றம். குறுகிய காலத்தில் டென்னிஸில் மகளிர் பிரிவில் 292 இடங்கள் முன்னேறியது வேறு எவரும் சாதிக்காத ஒன்று. இந்திய டென்னிஸ் வீராங்கனைகளில் முதல் 50, ஏன் முதல் 100க்குள், முன்னேறிய சாதனையும் சானியாவையே சேரும். மேலும் WTA பந்தயத்தில் (ஹைதராபாத் ஓப்பன்) வென்ற முதல் இந்தியப் பெண்ணும் சானியாதான்.

இவருக்கு வயது 18-தான் என்பது குறிப்பிடத்தக்கது. எழுபது, எண்பதுகளில் அமிர்தராஜ்களும், கிருஷ்ணன்களும் ஏற்படுத்திய பரபரப்பைவிட இவரது முன்னேற்றம் பல இளைஞர்களை டென்னிஸ் பக்கம் திருப்பியிருக்கிறது. அந்தக் காலத்தில் இல்லாத கேபிள் டிவியும், இண்டர்நெட்டும் ஒரு காரணம். இவரது வெற்றியால் ஊக்கம் கொண்டு இன்னும் பல சானியாக்கள் வரவேண்டும். உற்சாகக் குமிழியில் ஊசி ஏற்றுவது போல் ஒரு மதவாதக் குழு இவர் அணியும் உடையைக் குற்றம் கூறியது. நல்ல வேளையாக அது சுமுகமாகத் தீர்வாயிற்று.

ஸ்டான்·போர்ட் பல்கலைக் கழகத்தில் நடந்த Bank of the West டென்னிஸ் பந்தயத்தில் சானியா, வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடுவதை நேரில் பார்க்கும் போதுதான் இந்த முறை யு.எஸ். ஓப்பன் பார்க்கச் செல்ல வேண்டும் என்று முடி வெடுத்தேன். சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வராத வீரர்களை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஒரு காரணம்.

சூறாவளி கட்ரினா தாக்கிய அதே சமயத்தில்தான் யு.எஸ். ஓப்பனும் நடந்தது. ஆட்டத்தை ஒரு வேளை நிறுத்திவிடுவார் களோ என்ற சந்தேகத்துடன்தான் நியூ யார்க் சென்றேன். கட்ரினாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், நிதி திரட்டியும், அமெரிக்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும் துக்கம் தெரிவித் தாலும், Life goes on என்ற அமெரிக்க மரபுப்படி ஆட்டம் தொடர்ந்தது.

சானியாவின் சூறாவளி முன்னேற்றம் ஒருபுறமிருக்க, அமைதியாக மகேஷ் பூபதியும், டானியேலா ஹான்டுகோவாவும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு.எஸ். ஓப்பன் கோப்பையை வென்றனர். லியாண்டர் பேஸ், மார்ட்டினா நவ்ராட்டிலோவா ஜோடி காலிறுதிவரை முன்னேறினர். மார்ட்டினாவைப் பார்த்து 48 வயதிலும் இவ்வளவு அருமையாக விளையாடுகிறாரே என்று பிரமித்து, என்னுடைய பழக்கங்களையும் மாற்றி உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். அதை வெற்றிகரமாக அடுத்த 15 நிமிடங்கள் கடைப்பிடித்தேன், வெளியில் food court-ல் hot fudge sundae-ஐப் பார்க்கும் வரை!
இந்த வருட ஓப்பனில் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவர் ஜேம்ஸ் பிளேக். ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவரான இவர் சென்ற வருடம் டென்னிஸ் நெட் கட்டியிருக்கும் கம்பத்தில் மோதி கழுத்தெலும்பு முறிந்து ஒரு புறம் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டார். அதிலிருந்து மீண்டு விளையாட வந்ததே அதிசயம். எந்த கிராண்ட் ஸ்லாமிலும் இரண்டாவது சுற்றுக்கு மேல் முன்னேறியிராத இவர் அபாரமாக ஆடி, காலிறுதிவரை முன்னேறி ஆன்ட்ரே அகாசியிடம் தோற்றார் - அதுவும் மிக நெருக்கமான 5 செட்டுக் களில். பிளேக்கும், குத்துச் சண்டை வீரர் போல் குதித்து வரும் 19 வயதே ஆன ·ப்ரெஞ்சு ஓப்பன் சாம்பியன் நடாலும் ஆடிய மூன்றாம் சுற்று ஆட்டத்தை நேரில் பார்த்தேன். பிளேக்கின் நண்பர்கள் சிலர் நீல டி-ஷர்ட் அணிந்து ஒன்றாக அமர்ந்திருந்தனர்; J-block என்று தங்களை அழைத்துக் கொண்டனர். இவர்கள் ஆதரவும், மற்ற ரசிகர்களின் ஆதரவும் ப்ளேக்கிற்கு பெரும் உறுதுணையாக இருந்தது. யு.எஸ். ஓப்பன் கடைசி நாளன்று J-block T-shirt விற்றதாகப் படித்தேன்! இவரது ஆட்டத்தால் உந்தப்பட்டு அமெரிக்க இளைஞர் ராபி ஜெனப்ரியும் சிறப்பாக ஆடி அரையிறுதிவரை வந்தது மற்றொரு சிறப்பு.

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட வேண்டிய ராஜர் ·பெடரர் ஆட்டத்தையும் நேரில் காண வாய்ப்புக் கிடைத்தது. டிவியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்கும் போது அவர் டென்னிஸ் கோர்ட்டில் நகர்கிறாரா, அல்லது ஹோவர் விமானம் போல் மிதந்து செல்கிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவரை எதிர்த்து விளையாடும் எந்த ஆட்டக்காரரும் வேர்த்து விறுவிறுத்து விளையாடும் போது, இவர் மட்டும் ஜேம்ஸ்பாண்ட் போலச் சட்டை மடிப்பு கசங்காமல் இருப்பது அவரது எதிராளி களுக்கு எப்படி வெறுப்பேற்றும் என்று நினைத்துப் பாருங்கள்!

இவரை இறுதி ஆட்டத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஆன்ட்ரே அகாசிக்கு. 37 வயதில் இவரது கடின உழைப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. எட்டு கிராண்ட் ஸ்லாம்கள் வென்றிருக்கும் இவர் மேலும் ஒரு கிராண்ட் ஸ்லாமுக்காக ஏங்குகிறார். டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அவரது கனவு நனவாகுமா?

இந்த வருடம் 45 வயதுக்கு மேற்பட்ட சிறப்பு அழைப்பு ஆட்டக் காரர்களில் விஜய் அமிர்தராஜும் ஒருவர். அவரது ஆட்டத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆட்டமும், இது போன்ற சிறப்பு விருந்தினர் ஆட்டமும் அகால வேளைகளில் யாரும் பார்க்காத போது நடத்துவார்கள் என்று நினைக்கிறேன்!

இந்த வருட ஓப்பனின் மிகச் சிறந்த நகைச்சுவை ஆண்டி ராடிக்கை வைத்து அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் தயாரித்திருந்த 'மோஜோ' விளம்பரம்தான். அது என்ன மோஜோ என்கிறீர்களா? நீங்கள் மட்டு மில்லை நானும் அதே நிலைமையில்தான் இருக்கிறேன்! அதிலும் ராடிக் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாகத் தோற்றது இந்த விளம்பரத்தை ஒரு பெரிய ஜோக்காக மாற்றிவிட்டது. ஓப்பனில் திரும்பிய இடமெல்லாம் ராடிக்கின் விளம்பரம்தான் இருந்தது. அவரது தோல்விக்குப்பின் அவசரமாக அவரது டிவி விளம்பரங்களை மாற்றினார்கள் என்று கேள்விப் பட்டேன்.

யு.எஸ். ஓப்பனில் மிகவும் சுவையானது என்னவென்று கேட்கிறீர்களா? அங்கு food court-ல் இருந்த பல உணவகங்களில் டெல்லி எக்ஸ்பிரஸ் என்ற இந்திய உணவகம்தான். அதைவிடச் சுவையானது அந்தக் கூட்டத்தில் அவ்வப்போது கேட்ட தமிழ்க் குரல்கள்!

சேசி
Share: 




© Copyright 2020 Tamilonline