|
|
ஜனவரி 21, 2005. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரம். டென்னிஸ் அரங்கில் இறங்கி வருகிறார் வாட்டசாட்டமான, உருண்டு திரண்ட தசைப்பிடிப்பான தோள்கள் கொண்ட செரினா வில்லியம்ஸ். உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. ஆறுமுறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்.
அவரெதிரே நிற்பவர் சானியா மிர்ஸா. இந்தியப் பெண் டென்னிஸ் வீரர்களில் முதன்முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் மூன்றாவது சுற்றை எட்டியவர். அதுவே பெரிய சாதனைதான். சானியா 1-6, 4-6 என்ற செட் கணக்கில் செரினாவிடம் தோற்றுப் போனது இந்திய விளையாட்டு ரசிகர்களின் உற்சாகத்தை எந்த வகையிலும் மட்டுப்படுத்தவில்லை.
இதற்கு முன்பு 1998-இல் நிருபமா வைத்தியநாதன் இதே ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாவது சுற்றை எட்டியது தான் ஓர் இந்தியப் பெண் ஆட்டக்காரரின் அதிகபட்ச சாதனை. சானியா அதைக் கடந்துவிட்டார்.
சற்றே பூசிய உடலும், அழகான முகமும், குழந்தைச் சிரிப்பும் கொண்ட கொண்ட சானியாவுக்கு 18 வயதுதான். ஆனால் அவரிடம் உழைப்பும், சாதிக்கவேண்டும் என்ற திடமும், தன்னம்பிக்கையும் ஏராளமாக இருக்கின்றன. இதை நிரூபிக்கும் நாள் வெகு அருகிலே வந்தது.
·பெப்ருவரி 12, 2005 அன்று ஹைதரா பாதில் WTA பெண்கள் போட்டி வரிசையின் இறுதிச்சுற்று ஆட்டம். சானியா அங்கே உள்ளூர்க்காரர் வேறு. அவருக்கு எதிரே உக்ரேனியாவின் ஆல்யோனா பொண்டா ரெங்கோ. WTA வரிசையில் 9வது இடம் வகிக்கும் ஆல்யோனா எங்கே, 143ஆம் இடத்தில் இருக்கும் சானியா எங்கே! ஆனால் தொடை மற்றும் கணுக்கால் உள்காயங்களைப் பொருட்படுத்தாமல், மிகுந்த உறுதியோடு வெற்றிபெற்று, சாதனை படைத்தார் சானியா.
எந்த இந்தியப் பெண் வீரரும் சாதிக்காதது இது. ராமநாதன் கிருஷ்ணன் லண்டன் குவீன்ஸ் கிளப்பில் முதல் இந்தியராக கிராண்ட் ஸ்லாம் வெற்றிபெற்ற 46 ஆண்டுகளுக்குப் பின் வந்த அபூர்வ வெற்றியும் ஆகும் இது. இவருக்கு 140,000 டாலர் பரிசை ஈட்டித் தந்தது இந்த வெற்றி.
ஹைதராபாத் வெற்றி சானியா மிர்ஸாவை WTA வரிசைப் பட்டியலில் 134இலிருந்து 99வது இடத்துக்கு ஏற்றிவைத்தது. ஓர் இந்தியர்-ஆணானாலும் சரி, பெண்ணா னாலும் சரி-உலகத் தரப் பட்டியலில் 100 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை. ·பெப்ருவரி 21ஆம் தேதியன்று சானியா 98ஆம் இடத்தில் இருக்கிறார்.
"இந்த ஆண்டு முடியுமுன் முதல் 50 ஆட்டக்காரர் பட்டியலில் இடம் பிடிப்பதே" லட்சியம் என்கிறார் சானியா. செய்யக் கூடியவர்தான் என்கிறார்கள் நிருபமா வைத்தியநாதன், மகேஷ் பூபதி போன்ற வர்கள். இவரது மனத்திடம் அப்படிப்பட்டது.
மிக அழுத்தமான தருணங்களை இயல் பாகக் கையாள்வது இவரது நற்பண்பு என்கிறார்கள் இவரது ஆட்டத்தைப் பார்த்தவர்கள். செரீனா போன்ற ஆட்டக்காரர் தன் முன்னே நிற்பதைவிட அழுத்தமான தருணமா?
2003இல் விம்பிள்டன் சிறுமியர் இரட்டையர் பட்டத்தை வென்றார். அதற்குமுன் இந்திய டென்னிஸ் ஒருங்கிணைப்பின் (ITF) பெண்கள் பகுதிப் பட்டத்தை 12 முறை கைப்பற்றியிருக்கிறார். ஒரு சமயத்தில் போரிஸ் பெக்கருக்குப் பயிற்சியாளராக இருந்த பாப் ப்ரெட் இவருக்கு இப்போது உதவி வருகிறார். மிக வலுவான முன்கை (·போர்ஹாண்ட்) ஆட்டம் இவருடையது. ஆனாலும் அகற்ற வேண்டிய பலவீனங்கள் உள்ளன. அவற்றில் சில, சற்றே பலவீனமான இரண்டாவது செர்வ் மற்றும் உடல் பருமன்.
இதனிடையே சில அடிப்படைவாத முஸ்லீம்கள் சோனியா ஆட்டத்தின்போது அணியும் குட்டைப்பாவாடைக்கு ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. "மன்னிப்பும் இஸ்லாத்தின் ஒரு பகுதியல்லவா?" என்கிறார் பதிலுக்குத் தந்தை இம்ரான். ரம்ஜானுக்கு உபவாசம் இருக்கும், தொழுகை நடத்தும் தீவிர மதநம்பிக்கை கொண்ட குடும்பம் இம்ரானுடையது. அண்மையில் இவர் தன் மனைவியோடு ஹஜ் யாத்திரை சென்று வந்திருக்கிறார்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்குத் தனியார் நிறுவனங்கள் பொருள் உதவி செய்தன. "டென்னிஸைப் பொறுத்தவரை பயிற்சி மட்டுமல்ல, அவர் அணியும் ஷ¥ கூட மிக விலைகூடியதுதான்" என்கிறார் இம்ரான். இந்த வெற்றி சானியாவுக்கு அதிக ஆதரவைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்போது துபாய் ஓபன் போட்டியில் இவருக்கு Wild card (தொடக்க நிலைத் தகுதிச் சுற்றுக்களில் ஆடாமலே நுழைய) அனுமதி கொடுத்துள்ளனர். அந்தப் போட்டியில் சானியாவின் முன்னேற்றத்தை உலகெங்கிலுமிருந்து இந்தியர்கள் ஆவலோடு கவனிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
***** |
|
விளம்பர மாடல் சானியா
மும்பை விளம்பர உலகின் அற்புத மனிதராகக் கருதப்படும் அலீக் பாதாம்ஸீ சானியாவைப் பற்றி மிக நம்பிக்கை தெரிவிக்கிறார். "அழகு, நேர்த்தியான தோற்றம் இவற்றோடு சாதனையும் சேர்ந்து சானியாவை இளையதலை முறையின் முன்னோடியாக நிறுத்தி யுள்ளது. அவர் விளம்பர உலகின் கனவுப் பெண்" என்கிறார் பாதாம்ஸீ. முன்னரே சானியா ஓரிரு விளம்பரங்களில் வந்ததுண்டு.
"இருபது இருபத்திரண்டு விளம்பர வாய்ப்புக்கள் வந்துள்ளன. ஒன்றிரண்டைத் தான் சானியா ஏற்பாள். கவனத்தைச் சிதறடிக்காமல் மேற்கொண்டு டென்னிஸைக் கவனிப்பது அவளுக்கு முக்கியம்" என்கிறார் சானியாவின் தாயார் நஸீமா.
தவிர இப்போது மத்திய அரசின் குடும்பநலத்துறை இவரை 'பெண் குழந்தையைக் காப்பாற்று' விழிப்புணர்வுப் பிரச்சாரத் தூதுவராகத் தேர்ந்திருக்கிறது. இந்தப் பணிக்கு ஒரு முஸ்லிம் பெண்மணியை அரசு நியமித்தது இதுவே முதல் முறை என்பது முக்கிய விஷயம்.
மதுரபாரதி |
|
|
|
|
|
|
|