|
தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்! |
|
- அசோகன் பி.|ஏப்ரல் 2006| |
|
|
|
·பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், அதோடு தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளாலும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நிகழ ஆரம்பித்துள்ளன. 'தாராளமயமாக்கல்' இந்தியாவுக்கு மட்டுமன்றி, மற்ற நாட்டினருக்கும் ஒரு கடினமான சவாலாகத்தான் உள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவும், உலக வங்கியும் ஒருமித்துச் சொல்லிய பல மந்திரங்கள் அவ்வளவாகப் பயன்படாதவை என்ற தெளிவு வந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் சமநோக்குடைய பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறைகள் யாருக்கும் பிடிபடவில்லை. அமெரிக்காவோ வெளிநாடுகளின் முதலீடு என்ற மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிவிட்டது; விரைவில் 'டாட்காம்' போல இன்னொரு சோப்புக் குமிழி (வீடு கட்டுமானத் துறையில்) வெடிக்கப் போகிறது என்று பலரும் பயமுறுத்துகிறார்கள். அப்படியெல்லாம் நடக்காது என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் 'Readers Digest'இல் படித்தது நினவுக்கு வருகிறது: பொருளாதார வல்லுனர் என்பவர் யார்?
ஒரு பெரிய நீச்சல் குளம். அதில் நல்ல கும்பல். அளவுக்கு அதிகமான பேர் நீந்துவதும், மேலிருந்து நீரில் பாய்வதுமாக இருக்கிறார்கள். ஒரு மூலையில், அனைவருக்கும் முதுகைக் காட்டியவாறு, ஒருவர் தனக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கிறார் - 'இங்கே ஒரு விபத்து நடக்கப் போகிறது; நிச்சயம் நடக்கப் போகிறது' என்று. அவ்வாறே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததும் உயரமான மேடை மீதேறிப் பெருங்குரலில், 'இதைத்தான் நான் முன்னமே கணித்துச் சொன்னேன்' என்று அறைகூவுகிறார். சமீபத்தில், வேலையின் பொருட்டுப் பல நாட்டினருடன் பேச வேண்டியிருந்தது - பலருக்கு இந்தியர்கள் தங்களது நாட்டின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்ற கோபமும், எரிச்சலும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. பல நூறு மில்லியன் டாலர்கள் வருவாய் என்ற நிலையிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்பிலிருப்பவர் 'this is just cheap labour' என்று இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு செம்மையாகச் செய்து முடிக்கப் பட்ட ஒரு case study விவாதிக்கப் பட்டபோது சொன்னார். நான் வேடிக்கையாகச் சொன்னேன், 'விலையேற்றுவதற்கு எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை' என்று. எல்லோரும் சிரிக்க, பேச்சு வேறு திசைகளில் சென்றது. ஆனால் கூட்டத்தின் அமர்வு நேரம் முடிந்ததும், சிலர் வந்து இந்த மனப்பான்மை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும், இதேபோன்ற மற்ற வெளிப்பாடுகளின் தாக்கத்தைச் சந்திக்க இந்தியா எப்படித் தயார் செய்து கொண்டிருக்கிறது என்றும் பேசினார்கள். ஆங்கிலம் முக்கிய மொழியாக இல்லாத நாடுகளில் இருந்து வந்தவர்கள், எங்களுக்கு என்ன வழி என்று பேசினார்கள். மொத்தத்தில், நிறைய யோசித்து நிறையத் திட்டமிடவேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பி வந்தேன். |
|
இங்கிலாந்துக்கும், போர்ச்சுகலுக்கும் முதல் முறையாகச் சென்று வந்தேன். போர்ச்சுகலில் ஒரு கால்பந்து ஆட்டத்தைப் பார்த்தேன். வேறு ஒன்றுக்கும் நேரமில்லை. இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜுக்குச் சென்று பல நூறு ஆண்டு களுக்கு மேற்பட்ட கல்லூரிகள், வளாகங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. நியூட்டன் முதல் ஹாக்கிங்வரை என்று ஒரு சொற்றொடர் மனதில் ஓடியது. I felt very small and humble before the intellectual might the buildings represented to me. அதே நேரத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் களைக் கூட நம்மால் பராமரித்து வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் தெரியப் படுத்தமுடியவில்லை என்ற எண்ணம் வருத்தியது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள் மீண்டும் சந்திப்போம், பி. அசோகன் ஏப்ரல் 2006 |
|
|
|
|
|
|
|